விதூஷகனின் பந்தயம்


 வெகு காலத்திற்கு முன் வினயராஜ் என்ற மன்னன் இருந்தான். சதுரங்கம் ஆடுவது என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவனுக்குச் சரிசமமாக உட்கார்ந்து விளையாட யாருக்கும் துணிச்சல் இல்லை. ஆனால் விதூஷகன் மாதவன் ஒருவன் தான் அந்த மன்னனோடு சகஜமாக சிரித்துப் பேசி சதுரங்கம் விளையாடி வந்தான். மன்னன் ஆட்டத்தில் பெருந்தொகைகளைப் பந்தயமாகக் கட்டித் தோற்றாலும் அது தனது விதூஷகனுக்குத் தானே போகிறது என்று திருப்தி அடைவான்.

 விதூஷகனால் சொற்ப தொகையையே பந்தயம் கட்ட முடியும். ஆயினும் மன்னன் அதற்கும் சம்மதித்து ஆட்டத்தைத் தொடங்குவான். அதற்குக் காரணம் விதூஷகன் எப்படி ஆடுகிறான் என்பதை கவனித்து அதைக் கற்று வந்தது தான்.

சதுரங்கம் ஆடும் போது தான் மன்னன் என்பதை மறந்து விடுவான். விதூஷகனும் தான் அவனிடம் பணிபுரிபவன் என்பதை மறந்து தனக்குச் சமமானவன் என்று எண்ணி பயமில்லாமல் விளையாடுவான். இதனால் விளையாட்டு சுவாரசியமாக இருக்கும்.

ஒருநாள் மன்னனும் விதூஷகனும் சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கும்போது விதூஷகனை அவசரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவனது தங்கை மோகினி அங்கு வந்தாள். மன்னன் அவளது அழகைக் கண்டு மலைத்துப் போனான். மறுநாள் மன்னன் விதூஷகனோடு சதுரங்கம் ஆட ஆரம்பிக்கும் போது அவனிடம் "மாதவா! இன்றைய ஆட்டத்தில் நீ உன் தங்கையைப் பந்தயமாக வை. நான் நம் நாட்டின் ஒரு பெரிய நகரத்தையே பந்தயமாக வைக்கிறேன். நீ வெற்றி பெற்றால் அந்நகரின் மன்னனாகி விடலாம். நான் வெற்றி பெற்றால் உன் தங்கையை மணந்து இந்த நாட்டின் ராணியாக்குகிறேன்" என்றான்.


 விதூஷகன் தான் சாமார்த்தியசாலி ஆயிற்றே. அவன் மன்னனிடம் "இதில் பந்தயப் பொருள்கள் சமமாக இல்லையே. நான் என் தங்கையைப் பந்தயமாக வைத்தால் நீங்களும் உங்கள் தங்கையைப் பந்தயமாக வைக்க வேண்டும் இதற்கு உமக்கு சம்மதமா?" என்று கேட்டான். மன்னனுக்கோ எப்படியாவது மோகினியை மணந்து கொண்டு விடவேண்டும் என்ற ஆசை. அதனால் அதற்குச் சம்மதித்தான்.

ஆட்டம் ஆரம்பமாகியது. அதில் வெற்றி பெற்று விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மன்னன் கவனமாக ஆட்டத்தை ஆடலானான். அவன் வெற்றியடைய இன்னும் ஒரு காயைச் சரியாக நகர்த்தினால் வெற்றி அடைந்து விடலாம். அந்த நிலையில் தான் மோகினியை அடைந்து விட்டதாகவே எண்ணி அவன் பூரித்துப் போய் கவனத்தைச் சிதறவிட்டான். அதனால் வெற்றி அவனுக்குக் கிடைக்கவில்லை. விதூஷகன் தான் வென்றான். அப்போது அவன் மன்னனிடம் "அரசே! நீங்கள் வாக்களித்தபடி உங்கள் தங்கையை எனக்குக் கொடுத்து மணம் செய்து வைக்க வேண்டும்" என்றான்.

அப்போது மன்னன் "என் தங்கையை உனக்கு மணம் செய்து வைப்பதா? அது முடியாதே. அவளுக்கு தான் ஏற்கனவே திருமணமாகிவிட்டதே. அவள் கணவன் இவ்வூரில் பிரபல வியாபாரி. உனக்கு மணம் செய்து வைக்க எனக்கு வேறு தங்கை யாரும் இல்லையே" என்றான். 

விதூஷகனோ "அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்கள் கொடுத்த வாக்கின்படி உங்கள் தங்கையை எனக்குக் கொடுத்தே ஆக வேண்டும்" என்றான். மன்னனும் சற்று யோசித்து "ஆம். நாளை என் தங்கை அரண்மனைக்கு வருகிறாள். அவளாக உன்னோடு செல்லச் சம்மதிக்க மாட்டாள். உனக்கு ஒருவாய்ப்பை அளிக்கிறேன். நீ என்ன செய்வாயோ ஏது செய்வாயோ எனக்குத் தெரியாது.
  உன் சாமர்த்தியத்தால் அவளை நீ உன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போ" என்றான். மறுநாள் மன்னனின் தங்கை அரண்மனைக்கு வந்தாள். அன்று மாலை மன்னன் அவளை அழைத்துக் கொண்டு ஆற்றங்கரையோரம் சென்றான். ஆற்றில் தாமரை மலர்கள் நிறைய இருந்தன. மன்னனின்  தங்கை கரையில் இருந்தபடியே எட்டி ஒரு தாமரை மலரைப் பறிக்க முயன்று தவறி ஆற்றில் விழுந்து விட்டாள். அதைக் கண்டும் மன்னன் அங்கிருந்து போய் விட்டான். 

முன்னேற்பாட்டின்படி விதூஷகன் குதிரை மீது அமர்ந்து அங்கு தயாராக இருந்தான். ஆற்றில் விழுந்த மன்னனின் தங்கை "என்னைக் காப்பாற்று அண்ணா!" என்று கத்தினாள்.
தன் அண்ணன் வராததால் அவள் "யாராவது என்னைக் காப்பாற்றுங்களேன்" என்று உரக்கக் கூவினாள். அப்போது விதூஷகன் குதிரையிலிருந்து இறங்கி ஆற்றில் குதித்து அவளது கையைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு கரைக்கு வந்தான். அவன் அவளிடம் "நான் உன் கையைப் பற்றித் தூக்கி வந்தேன். அதனால் நீ எனக்கு மனைவியாகி விட்டாய்" என்றான்.

அவளோ "என் பெயர் வனிதா. நான் இந்நாட்டு மன்னனின் தங்கை. ஏற்கனவே மணமானவள்" என்றாள். விதூஷகனோ "எல்லாம் என் வீட்டிற்குப் போய்ப் பேசிக் கொள்ளலாம். இங்கு உன்னைத் தனியே விட்டு விட்டுப் போக மாட்டேன்" என்று கூறி அவளைத் தன் குதிரை மீது ஏற்றி தானும் அதன் மீது அமர்ந்து தன் வீட்டிற்குக் கூட்டிச் சென்று அவளிடம் தான் யாரென்பதையும் விவரமாகக்  கூறினான். அதைக் கேட்ட வனிதா சற்று யோசித்து "என் அண்ணனின் வாக்கை நான் காப்பாற்ற வேண்டும். நான் இதே வீட்டில் இருக்கிறேன். வரும் பௌர்ணமியன்று நம் திருமணம் நடக்கட்டும்" என்றாள். விதூஷகனும் அதை நம்பினான். நேராகத் தன் கணவனின் வீட்டிற்கு வனிதா சென்று விட்டாள். அவள் கணவனும் அவள் அரண்மனையிலிருந்து தான் திரும்பி வந்திருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டான்.
 
 வனிதா தப்பிச் சென்று விட்டாள் என்று கண்ட விதூஷகன் நேரே அரண்மனைக்குப் போய் "வனிதா இங்கு வந்தாளா? அல்லது தன் கணவன் வீட்டிற்குப் போயிருக்கிறாளா?" என்று கேட்டான். மன்னனும் "அவள் இங்கே வரவில்லை. தன் கணவன் வீட்டிற்குத்தான் அவள் போயிருப்பாள். நீ அங்கே போய் அவளிடம் பேசி அழைத்துக் கொண்டு போ" என்றான். விதூஷகனும் வனிதாவின் வீட்டிற்குச் சென்றான். அங்கு அவளது கணவனைக் கண்டு விதூஷகன் நடந்ததை எல்லாம் சொல்லி வனிதாவை தன்னோடு அனுப்பி வைக்குமாறு கேட்டான்.

வனிதாவின் கணவனோ "வனிதாவைப் பந்தயம் வைக்க மன்னனுக்கு என்ன உரிமை உள்ளது? நீ அவளை அடைய வேண்டும் என்றால் என்னோடு வாட் போர் புரிந்து என்னை வெல்ல வேண்டும், தெரிந்ததா?" என்று கடும் குரலில் கூறினான். விதூஷகனோ "இது தானா? தாராளமாக நாம் இருவரும் வாட் போர் புரிவோம். அதில் வெற்றி பெறுபவர் வனிதாவை அடைய வேண்டும்" என்றான்.

அடுத்த நாள் விதூஷகனும் வனிதாவின் கணவனும் வாட் போர் புரிந்தார்கள். அதில் வனிதாவின் கணவன் கீழே விழவே அவனது வாள் இரண்டாக ஒடிந்து ஒரு பகுதி அவனது உடலில் குத்தியது. அதனால் அவன் இறந்து போனான். விதூஷகன் அப்போது திருமணம் பற்றி எதுவும் கூறவில்லை. ஏனெனில் வனிதா கணவனை இழந்த துயரத்தில் ஆழ்ந்திருந்தாள். அதனால் ஈமக்கிரியைகள் முடியட்டும், பிறகு பேசலாம் என்று எண்ணி அவன் எதுவும் சொல்லாமல் இருந்தான்.
 
 வனிதாவின் கணவனின் உடல் சிதை மீது வைக்கப்பட்டு நேருப்பு மூட்டப்பட்டது. வனிதா அதை ஏழு தடவைகள் சுற்றி வந்து நன்கு எரியும் நேருப்பில் குதித்து விட்டாள். அவளது உடல் கருகிப் போயிற்று. அதைக் கண்டு விதூஷகன் மாதவன் திகைத்துப் போனான். அவன் மனம் மிகவும் வேதனைப் பட்டது. அவன் வனிதாவை மிகவும் உயர்வாக இப்போது மதிக்கலானான். அவள் தன் கணவனுக்கு உண்மையான மனைவியாக இருந்தாள் என்பதை எண்ணி எண்ணிப் பெருமைப் பட்டான்.

அது மட்டுமல்ல, அவன் மனதில் தன்னால் தானே வனிதாவின் கணவன் உயிர் துறக்க வேண்டியதாயிற்று என்று எண்ணி கவலைப் பட்டான். அதனால் அவன் விரக்தி அடைந்து தலை நகரை விட்டே போய் விட்டான். சில நாட்கள் அங்கும் இங்கும் அலைந்த பின் ஓரிடத்தில் ஒரு சாதுவைக் கண்டான். அவரது அறிவுரைகளைக் கேட்ட பின் அவன் மனதில் அமைதி ஏற்பட்டது. 

பேச்சுவாக்கில் அவர் இறந்தவர்களைக் கூட உயிர்ப்பிக்க முடியும் என்று கூறினார். அதைக் கேட்ட மாதவனுக்கு இறந்து போன வனிதாவையும் அவளது கணவனையும் உயிர்ப்பித்து விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதனால் அது பற்றி அவன் அந்த சாதுவிடம் பல கேள்விகளைக் கேட்டான்.
அவரோ ஒரு குறிப்பிட்ட இடத்தைச் கூறி அங்குள்ளவர்களிடம் அத்தகைய சக்திஇருப்பதாக சொன்னார். அதை எப்படிக் கற்று அடைவது என்று அவன் கேட்கவே அவரும் "நீ அங்கே போய் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து அவர்களுக்குப் பணி புரிந்து அவர்களது நம்பிக்கையைப் பெற்றால் அவர்களிடமிருந்து அச்சக்தியை அடையும் வழியைத் தெரிந்து கொள்ளலாம்" என்றார் மாதவனும் பல நாட்கள் பயணம் செய்து அப்பகுதியை அடைந்தான். 

அங்கு சில பறவைகளைக் கொன்று அவற்றின் இறகுகளைப் பிய்த்து விட்டு மிகுந்த பகுதியை வேகவைத்து உண்டபின் தாம் பிய்த்து வைத்த இறகுகளையும் தோல்களையும் எடுத்துச் சேர்த்து வைத்து ஏதோ மந்திரத்தை உச்சரித்தார்கள்.

 அந்தப் பறவைகள் மீண்டும் உயிர் பெற்று பறந்து போயின. சாது கூறிய இடம் அதுவே என உறுதி செய்து கொண்டு அவன் அங்கேயே தங்கி அங்குள்ளவர்களுக்குப் பணி புரிந்து வந்தான். ஒருநாள் அவர்களிடம் இறந்த பறவைகளை எப்படி உயிர்ப்பிக்க முடிகிறது என்று கேட்டான். அவர்களும் அவனை ஒரு கிழவியிடம் அழைத்துப் போய் நல்லவனான அவனுக்கு மந்திரோபதேசம் செய்யும்படி வேண்டினார்கள். அவளும் அவனுக்கு மந்திரத்தைச் சொல்லி அதைப் பன்னிரெண்டு முறை சரியாகக் கூறி மனப்பாடம் செய்து கொள்ளச் செய்தாள்.

மாதவன் அதை நன்கு கற்றுக் கொண்ட பின் தன் நாட்டிற்குப் போய்த் தலை நகரை அடைந்தான். அங்கு வனிதாவும் அவள் கணவனும் எரிந்து கிடந்த இடத்தை அடைந்தான். அங்கு அவர்களது எலும்புகளைச் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றின் முன் அமர்ந்து அவன் தான் கற்ற மந்திரத்தை உச்சரித்தான் வனிதாவும் அவள் கணவனும் உயிர் பெற்று எழுந்து வந்தார்கள்.
அது கண்டு விதூஷகன் மாதவன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். வனிதாவின் கணவன் அவனிடம் "மாதவா! நீங்கள் வெற்றி பெற்றீர்கள். நீங்கள் வனிதாவை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றான். வனிதா அப்போது மௌனமாக நின்றாள். மாதவனோ அவளை ஏற்பதா அல்லது வேண்டாமா என்று யோசித்தவாறே இருந்தான்.

அப்போது அவன் முன்பு சந்தித்த சாது அங்கே வந்தார். அவர் மாதவன் தயக்கமாக இருந்ததைக் கண்டு "மாதவா! நீ இவளுக்கு உயிர் கொடுத்து மறுபிறப்பை அளித்தாய். அதனால் நீ இவளுக்குத் தந்தை. எனவே ஒரு தந்தையின் கடமையைச் செய்" என்று கூறினார்.

மாதவன் வனிதாவின் கரங்களைப் பிடித்து எடுத்து அவற்றை அவளது கணவனின் கைகளில் வைத்து விட்டு எதுவும் கூறாமல் அங்கிருந்து சென்றான். அவன் எங்கு சென்றான் என்று யாருக்குமே தெரியவில்லை!

0 comments:

Post a Comment

Flag Counter