எசமான விசுவாசம்


 

ரங்கசாமி பெரிய நிலச் சுவான்தாராக இருந்தது மட்டுமல்லாமல் வியாபாரமும் செய்து வந்தார். தன் வேலைஆள்களை மிக அன்புடன் நடத்துவதில் ரங்கசாமிக்கு நிகர் யாரும்இல்லை என்று ஊரெங்கும் பேச்சாக இருந்தது. அவரிடத்தில் வேலை செய்ய ஊரிலுள்ள அனைவரும் போட்டியிட்டனர்.

பழனி அவரிடத்தில் வேலைபார்த்து வந்த விசுவாசமிக்க வேலைக்காரர்களில் தலைசிறந்தவன். பழனி அயலூரிலிருந்த தனது தம்பியுடன் சென்று அங்கேயே வசிக்க முடிவு செய்து, ரங்கசாமியிடம் அனுமதி கேட்டான். அவனுக்கு அனுமதி அளித்த ரங்கசாமி, அவனுடைய இடத்தில் முருகன் என்ற பெயர் கொண்ட, தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு ஆளை நியமிக்க எண்ணினார். ஆனால் அவருடைய மனைவி குறுக்கிட்டு, "இன்னொரு ஆளை நியமிக்கும் பொறுப்பை, என் தம்பி வீராசாமியிடம் விட்டு விடுங்கள்.  நல்ல வேலைக்காரனாகப் பார்த்து அவன் கொண்டு வருவான்," என்றாள். தனது தம்பியையும் உடனே அங்கு வரவழைத்தாள்.

அவளுடைய தம்பி வீராசாமி வீட்டிற்கு வந்ததும், ரங்கசாமியிடம், "எனக்கு ஹரி என்ற ஆளைத் தெரியும். அவன் பழனியை விட பல மடங்கு மேலானாவன்!" என்று சவடாலாகப் பேசினான்.

அதற்கு ரங்கசாமி தன் மைத்துனனை நோக்கி, "எந்த ஒரு ஆளையும் பணியில் நியமனம் செய்யுமுன், நான் அவனை பலமுறைகளில் சோதிப்பது வழக்கம். நான் வைத்த பல சோதனைகளிலும் தேறிய பழனி மிக நல்ல ஆள். அவனை நான் மிகவும் நேசிக்கிறேன். அவனுக்கு சமமாக குணங்கள் படைத்த தொழிலாளி கிடைப்பது அரிது" என்றார். அதன் பிறகு ரங்கசாமி பழனியைப் பற்றி விளக்கிக் கூறலானார்!

 
நகரத்திலுள்ள ரங்கசாமியின் ஜவுளிக்கடையில் பழனி வேலை செய்து வந்தான். அவனுடைய கடின உழைப்பினால் ஜவுளிக்கடை வியாபாரம் மிக நன்றாக நடந்து வந்தது. ரங்கசாமிக்கு நிறைய லாபமும் கிடைத்தது. பழனியின் திறமையையும், உழைப்பையும் கண்ட மற்ற வியாபாரிகள் அவனுக்கு நிறைய சம்பளம் தருவதாக ஆசைகாட்டி தங்களுடைய கடைகளுக்கு அழைத்தனர். ஆனால் பழனி அதற்கு இணங்கவில்லை. அவனை சோதிப்பதற்கு ரங்கசாமி தன் நண்பர் பாபுவை ஒருநாள் அவனிடம் அனுப்பினார்.
பழனியை சந்தித்த பாபு, "நான் ஒரு ஜவுளிக்கடை புதிதாக திறக்க விரும்புகிறேன். ரங்கசாமி உனக்கு தருவது ஆயிரம் ரூபாய் சம்பளம். நான் உனக்கு இரண்டாயிரம் தருவேன். என்னிடம் வந்து விடு!" என்று ஆசை காட்டினார்.

அதற்கு பழனி அமைதியாக, "ஐயா, இரண்டாயிரம் என்ன, மூவாயிரம் சம்பளம் தருவதாகக் கூறி பலர் என்னை அழைக்கின்றனர். ஆனால் நான் மறுத்து விட்டேன்," என்றான். "அப்படியா? நான் உனக்கு நான்காயிரம் தருகிறேன். உடனே என்னிடம் வந்து விடு!" என்றார்.
உடனே பழனி, "ஐயா, சம்பளத்தை விட என் எசமானரை நான் பெரிதாக மதிக்கிறேன். பணம் பெரிதல்ல எனக்கு! என் எசமானர் காட்டும் அன்புதான் பெரிது! எனக்கு பணம் தேவைப்பட்டால், என் எசமானர் தந்து உதவுவார்!" என்றான்.

பாபு திரும்பி வந்து பழனியின் விசுவாசத்தைப் பற்றி ரங்கசாமியிடம் எடுத்துரைத்தார். அதிலிருந்து அவருக்கு பழனியின் மீது அன்பும், நம்பிக்கையும் பல மடங்கு அதிகரித்தது. மறுநாளே திடீரென்று பழனிக்கு ஏராளமான தொகை தேவைப்பட்டது. தன்னுடைய சகோதரி திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த பழனியை, பிள்ளை வீட்டார் உடனடியாக ஆயிரம் ரூபாய் தரவேண்டி நச்சரித்தனர். பழனியிடம் பணம் இல்லாததால் அவன் தன் எசமானரிடம் பண உதவி கேட்டான்.

ரங்கசாமிக்கு மீண்டும் அவனை சோதிக்கத் தோன்றியது. உடனே அவர் பழனியிடம், "உனக்கு உதவி செய்ய என்னிடம் பணம் இல்லை. வேறு ஒரு ரகசியமான விஷயத்திற்காக ஆயிரம் ரூபாய் வைத்துள்ளேன். அதை உன்னிடம் தருகிறேன். ஆனால் அது உனக்கு அல்ல! அதை பத்திரமாக வைத்திருந்து, ஒரு மாதத்திற்குப் பின் திருப்பித் தருவாய்!" என்று கூறி ஆயிரம் ரூபாய் தந்தார்.

 அதை எடுத்துக் கொண்டு பழனி வீடு திரும்புகையில், ரங்கசாமி ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்தபடி அவருடைய நண்பர் பாபு வழியில் பழனியை சந்தித்தார். "பழனி!
உனக்கு பணம் தேவை என்று அறிவேன். ரங்கசாமி உனக்கு உதவி செய்யவில்லை என்பதையும் நான் அறிவேன். என்னிடம் வேலை செய்ய வந்தால், உனக்கு உடனே ஆயிரம் ரூபாயும் நீ கேட்கும் சம்பளமும்
நான் உனக்கு தருவேன்" என்றார்.

அப்போதும் பழனி, "ஐயா! எனக்கு மிகப் பிரியமான எசமானரை விட்டு நான் வரமாட்டேன்!" என்று பிடிவாதம் பிடித்தான்.
மேற்கூறிய சம்பவங்களை ரங்கசாமி தன் மைத்துனனுக்கு விளக்க, அப்போதும் அவன் பழனி நம்பத் தயாராக இல்லை.
உடனே ரங்கசாமி, "நீ சிபாரிசு செய்யும் ஹரி நல்லவன் என்பது உனக்கு எப்படித் தெரியும்? அவனைப் பற்றி விசாரித்தாயா?" என்று கேட்டார்.
"ஆகா! அவன் மிகவும் நல்லவன்.  பொதுவாக, பெண்கள் தங்கள் கணவன்மார்களைப் பற்றி ஏதாவது புகார்
கூறிக் கொண்டேயிருப்பார்கள்.

என் மனைவி கூட இதற்கு விதி விலக்கல்ல. ஆனால் ஹரியின் மனைவி தான் செல்லுமிடமெல்லாம் தன் கணவனைப் பற்றிப் புகழ்ந்து கொண்டேயிருக்கிறாள். அதிலிருந்தே ஹரி நல்லவன் என்று நாம் தெரிந்து கொள்ளலாம்!" என்றான்.

ரங்கசாமிக்கு தன் மைத்துனனுடைய பதில் சரியாகப் படவில்லை.  அவர் பழனியை அது பற்றி கலந்துஆலோசித்தார். பழனி, "ஐயா, நாம் இருவரும் ஹரியின் வீட்டிற்கு அவன் இல்லாத சமயம் சென்று அவன் மனைவியிடம் பேச்சுக் கொடுத்து உண்மையை அறிவோம்!" என்றான்.
அதன்படியே இருவரும் ஹரியின் வீட்டிற்குச் சென்றனர். ஹரியின் மனைவியிடம் பழனி, "நான் ரங்கசாமி ஐயாவின் ஜவுளிக்கடையில் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன்.

தற்போது நான் அந்த வேலையை விட்டு விட்டு, அயலூர் செல்லப் போகிறேன். என்னிடத்தில் உங்கள் தூரத்து சொந்தக்காரனான முருகனை நியமிக்கலாம் என்று கருதுகிறார். முருகனைப் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்களேயானால், அவனைப் பற்றிக் கூறுங்கள்" என்று கேட்டான்.

உடனே ஹரியின் மனைவி, "ஐயோ! அந்த முருகனையா நீங்கள் வேலைக்கு அமர்த்தப் போகிறீர்கள்? அவன் ஒரு பெரிய குடிகாரன், போக்கிரி, திருடன்!" என்றாள்.

"உங்களுடைய யோசனைக்கு மிகவும் நன்றி!" என்று கூறி பழனி தன் எசமானரையும் அழைத்துக் கொண்டு திரும்பி விட்டான். "பார்த்தீர்களா? முருகனைப் பற்றி நமக்கு நன்றாகத் தெரிந்திருந்தால் அவள் கூறுவது பொய் என்று தெரிகிறது. அவளுடைய கணவன்தான் குடிகாரனாகவும், போக்கிரியாகவும் இருப்பான் என்று நினைக்கிறேன்" என்றான் பழனி.
"அது எப்படி கூறுகிறாய்?" என்று ரங்கசாமி கேட்க, "பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரரை நல்லவர்கள் யார் என்று கேட்டபோது அவர் எல்லாருமே நல்லவர்கள் என்றார். அதே கேள்வியை துரியோதனனிடம் கேட்டபோது எல்லாருமே கெட்டவர்கள் என்றான். அதுபோலத்தான் இருக்கிறது ஹரியின் மனைவி முருகனைப் பற்றிக் கூறுவது!" என்றான் பழனி. அவன் பேச்சைக் கேட்டு மகிழ்ந்த ரங்கசாமி, "அதிருக்கட்டும் பழனி! நீ பெரிய அறிவாளியாக இருந்தும், தனியாக ஏன் வியாபாரம் செய்ய முயற்சிக்கவில்லை?" என்று கேட்டார்.

அதற்கு பழனி, "ஐயா! உலகில் அறிவாளிகள் பலர் உள்ளனர். சிலர் வியாபாரம் செய்வதில் அறிவாளிகளாகத் திகழ்கின்றனர். என்னைப் போல் சிலர் நல்ல எசமானரைத் தேடி அவரிடம் வேலை செய்வதில் அறிவாளிகளாக விளங்குகின்றனர்" என்றான். பழனியின் விவேகத்தை ரங்கசாமி பாராட்டினார். அதன் பிறகு ஒரு வாரத்திற்குள் முருகனையே வேலையாளாக நியமித்தார்.

 

0 comments:

Post a Comment

Flag Counter