புதியதொரு சமுதாயம் படைப்போம்!

தனது தலையில் பல வண்ண மலர்களைச் சூட்டிக் கொண்டு மஞ்சுளா அழகு பார்த்தாள். சற்று நேரம் தனது அழகை ரசித்தபின், பூக்கோலம் போட ஆரம்பித்தாள். வண்ண மலர்களைக் கொண்ட கோலம் போடும் கலையை அந்த கிராமத்திற்கு அறிமுகப்படுத்தியதே அவள்தான்!
அதற்குத் தேவையான மலர்கள் அனைத்தும் அவளுடைய அழகிய தோட்டத்தில் உருவானவைதான்! அந்த கிராமத்தில் முதன்முதலாக பூக்கோலப் போட்டி நடக்கவிருந்தது. கர்நாடக மாநிலத்தின் மேற்கு கடற்கரையோரமாக இருந்த நாகின் கோப்பா என்ற விழாவின் பூக்கோலப் போட்டியில் பங்கு பெற்று இருந்த மஞ்சுளா மிகுந்த ஆர்வத்துடன் கோலமிடத் தொடங்கினாள்.
மலர்கள் என்றால் எப்போதுமே மஞ்சுளாவிற்கு மிகவும் பிடிக்கும். தன் தோட்டத்தில் பலவித வண்ண மலர்களைப் பயிரிட்டு மகிழ்ந்த அவளுக்கு, அந்த மலர்களைப் பயன்படுத்த நல்லதொரு வாய்ப்பு கிட்டியிருந்தது.
தனக்கு மட்டுமன்றி, தன் கிராமத்து மகளிரின் வாழ்க்கையிலும் மறுமலர்ச்சியை உண்டாக்கிய பாக்குல் என்ற நகரத்துப் பெண்மணியை நன்றியுடன் நினைவு கூர்ந்த மஞ்சுளா, மும்முரமாக கோலம் போட ஆரம்பித்தாள். ஒருநாள் நண்பகல் நேரம், அந்த கிராமத்து மகளிர் வயலில் வேலை செய்து விட்டு மதிய உணவிற்காக வீடு திரும்பியிருந்தனர்.
மஞ்சுளாவும் அவர்களுள் ஒருத்தி! அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே ஒரு செக்கு இருந்தது. கிராமத்தினர் சிலர் அதில் வேலை செய்து வந்தனர். செக்கினுள் கரும்புகளையிட்டு சக்கையாகக் கசக்கி சாறு பிழிவது அவர்களுடைய அன்றாட வேலை! கரும்புச்சாற்றைக் கொதிக்க வைத்து, வெல்லப்பாகு தயாரித்து, பீப்பாய்களில் நிரப்பப்படும்.

நாகின் கோப்பா கிராமத்தில் பழைய நாட்டுக் கரும்புகள் மட்டுமே பயிரிடப்பட்டு வந்தன. அந்த நாட்டுக் கரும்புகளில் எடுக்கப்படும் சாற்றில் இருந்து கிடைக்கும் சர்க்கரை குறைவு என்பதால், பெரிய ஆலைகள் அவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு சமயம், நகரத்திலிருந்து ஒரு பெண்மணி நாட்டுக் கரும்புகளைத் தேடி நாகின் கோப்பா கிராமத்திற்கே வந்திருந்தாள்.
பெரிய அளவில் சர்க்கரைக்காகப் பயிரிடப்படும் புதிய கரும்புகளை விட, நாட்டுக்கரும்புகளே சுவையாக இருப்பதாகக் கூறினார். அந்தப் பெண்மணி செக்குஆலையில் இருந்து சற்றுத் தொலைவில் இளைப்பாறிக் கொண்டிருந்த கிராமத்துப் பெண்களை அணுகினாள். தன் பெயர் பாக்குல் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் அவர்களிடம் உரையாடத் தொடங்கினார்.
கிராமப்புறங்களில் பழங்காலத்தில் பயிரிடப்பட்டு வந்த பயிர்களின் மேன்மைகளை விளக்கியவர், தற்போது அதிக உற்பத்தியைக் கருத்தில் கொண்டு, ரசாயன உரங்கள் போட்டு வளர்க்கப்படும் நவீனப் பயிர்களின் குறைபாடுகளைப் பற்றியும் விளக்கினார். அவர் ஏற்கெனவே ஒருமுறை அந்த கிராமத்திற்கு வந்திருப்பதாகக் கூறினார்.
தன்னுடைய முதல் சந்திப்பில் தனது பண்ணையில் பயிரிடப்படும் தாவரங்களைப் பற்றிய விவரங்களை அடுத்த முறை கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றிருந்தார். அன்று அவர் வந்திருந்தது இரண்டாம் முறை! கையில் ஒரு பையுடன் வந்திருந்தவர். அதனுள்ளிருந்தப் புகைப்படங்களை கூடியிருந்த கிராமத்துப் பெண்களுக்குக் காட்டினார்.
அவர் காட்டிய படங்களில் பலவிதமான மூலிகைகள், கிழங்கு வகைகள், காய்கள், பழமரங்கள், மலர்கள் இடம் பெற்றிருந்தன. அதைப் பார்த்த பெண்கள் பரபரப்படைந்தனர். "ஐயோ! ஈஸ்வரா!" என்று அங்கலாய்த்த வயதான கங்கம்மா, "இந்தக் குட்டிப் பாகற்காய்கள் இன்னும் கிடைக்கின்றனவா?" என்று கூறினாள்.
லாபத்தைக் கருத்தில் கொண்ட பல விவசாயிகள் அந்த வகைக் குட்டிப் பாகற்காய்களைப் பயிரிடுவதேயில்லை. "இந்தக் குட்டிப் பாகற்காய்கள் இன்றும் கிடைக்கின்றன. ஆனால் கடைகளில் அல்ல! விரும்பினால் உங்கள் தோட்டத்தில் நீங்களே பயிரிட முடியும்!" என்றார் பாக்குல்.

கிராமத்துப் பெண்களுக்குத் தெரிந்த பல்வேறு சாதிப் பாகற்காய்களை பாக்குல் குறிப்பிடச் சொன்னார். தங்களுக்குள் வெகுநேரம் விவாதம் செய்துவிட்டு, அவர்கள் சில சாதிகளைக் குறிப்பிட்டனர். அவை எட்டு சாதிகள் மட்டுமே! "பாகற்காயிலேயே இயற்கையான சாதிகள் எட்டு உள்ளன என்றால் மற்ற காய்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை இனங்கள் இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
லாபத்தை மட்டுமே கருதும் வியாபாரிகள் அதிக மகசூலைக் கொடுக்கும் சில இனங்களை மட்டுமே பயிரிடச் சொல்லி வாங்குகின்றனர். அவர்களை நம்பியிருக்காமல், உங்களுக்குத் தேவையானவற்றை நீங்களே உங்கள் தோட்டத்தில் பயிர்இட்டால் எத்தனை நன்றாக இருக்கும்?" என்ற பாக்குல், "உங்கள் தோட்டத்தில் விளையும் காய்கறிகளை சுவைத்து மகிழுங்கள்.
எஞ்சியவற்றை விற்று பணம்கூட சம்பாதிக்கலாம்!" என்றார். அவர் கூறியதைக் கேட்டு, கிராமத்துப் பெண்களிடையே உற்சாகமும், பரபரப்பும் ஏற்பட்டது. மஞ்சுளாவின் மனத்திலும் மாறுதல் ஏற்பட்டது. இயற்கை அளித்துள்ள பலவிதமான தாவரங்களையும் தன் வீட்டில் வளர்க்க வேண்டும் என்று எண்ணினாள்.
அவர்களுடைய உற்சாகத்தைக் கண்ட பாக்குல், "நீங்கள் ஒரு கூட்டுறவுச் சங்கம் அமைத்துக் கொள்ளலாமே! ஒவ்வொருவரும் தங்கள் தோட்டத்தில் உருவாகும் பயிர்களின் விதைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த முறையில் உங்களுக்கு ஒரே காயின் பல இனங்களின் விதைகள் கிடைக்கும்!" என்றார்.
அப்போது மஞ்சுளாவிற்கு ஓர் அபூர்வ யோசனை தோன்ற, அவள் "அக்கா! இப்படிச் செய்யலாமே! விதைத்திருவிழா என்ற ஒன்றைக் கொண்டாடலாம்! எங்கள் கிராமம் மட்டுமன்றி அக்கம்பக்கத்திலுள்ள கிராமங்களையும் பங்கேற்கச் செய்யலாம்! நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் தோட்டத்து விதைகளைப் பறிமாறிக் கொள்ள முன்வந்தால், ஒவ்வொருவருக்கும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப பலவிதமான விதைகள் கிடைக்கும்! 

அந்த விழாவின் போது, விளையாட்டு, பாட்டு, நடனம், பூக்கோலம் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்யலாம்!" என்றாள். பாக்குலின் கண்கள் வியப்பினால் விரிந்தன. "ஆகா! என்ன பிரமாதமான யோசனை?" என்று மஞ்சுளாவின் யோசனையை வரவேற்க, கூடியிருந்த அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்றனர். வயதான கங்கம்மா கூட இளமங்கை போல் உற்சாகத்துடன் "என்னால் நூற்றுக்கணக்கான விதைகளைக் கொண்டு வரமுடியும்!" என்று கூவினாள்.
"அந்த விழாவிற்கு உங்கள் குழந்தைகளையும் கட்டாயம் அழைத்து வாருங்கள். சிறு வயதிலேயே தோட்டம் வளர்க்கும் கலையில் அவர்களுக்கு ஆர்வமும், ஆழ்ந்த அறிவும் ஏற்பட வேண்டும்" என்றார் பாக்குல். இவ்வாறு தொடங்கிய அந்த விழாவில் பல கிராமத்தினர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
இளவயதில் தாங்கள் பார்த்து மகிழ்ந்து, பின்னர் நினைவிலிருந்தே அகன்ற பல தாவரங்களின் விதைகளைக் காணும் வாய்ப்பு பல முதியவர்களுக்குக் கிடைத்தது. மஞ்சுளா மிகுந்த ஆர்வத்துடன் தொடங்கிய பூக்கோலம் நிறைவு பெற்றது. நடுவர்களான பாக்குல், கங்கம்மா இருவரும் கோலப் போட்டியைப் பார்வையிட்டனர்.
இறுதியில், நடுவர்கள் தங்கள் தீர்ப்பை வழங்கும் நேரமும் வந்தது. "பூக்கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்... மஞ்சுளா!" என்று பாக்குல் அறிவித்ததும், கரகோஷம் விண்ணைப் பிளந்தது. மஞ்சுளா மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனாள். மேடைக்குச் சென்று பரிசை வாங்கிக் கொண்டு திரும்பிய மஞ்சுளா மனத்திற்குள் தன் ஆர்வத்திற்கு வடிகாலமாக அமைந்த தனது தோட்டத்தையும், அதற்குத் தூண்டுகோலாக இருந்த பாக்குலையும் வாழ்த்தினாள். 

0 comments:

Post a Comment