நன்றிதான் பெரிது!

 

மகதராஜ்யம் உன்னத நிலையில் இருந்த போது போதிசத்வர் ஒருமுறை பொக்கிஷ அதிகாரியாக இருந்தார் அவரது சொந்த சொத்தே எண்பது கோடி வராகன்கள். காசியில் ஸ்ரீவத்சன் என்ற வியாபாரி இருந்தான். அவனது சொத்தும் எண்பது கோடி வராகன்களுக்கும் மேலாக இருந்தது. போதிசத்வரும் ஸ்ரீவத்சனும் நண்பர்களாக இருந்தனர்.
வியாபாரத்தில் பெரும் நட்டம் ஏற்பட்டதால் ஸ்ரீவத்சன் மிகமிக ஏழையாகி விட்டான். அப்போது அவனுக்குத் தன் நண்பரான போதிசத்வரின் நினைவு வந்தது.


உடனே அவன் போதிசத்வரைக் கண்டு “என் நிலை மிக மோசமாகி விட்டது. நான் ஓட்டாண்டியாகி விட்டேன். இந்த நிலையில் எனக்கு உதவுபவர் உங்களைத் தவிர வேறு யாருமே இல்லை” என்றான். போதிசத்வரும் “ஸ்ரீவத்சா, கவலைப் படாதே. உனக்கு நிச்சயம் உதவி செய்கிறேன்” எனக் கூறித் தன் சொத்தில் பாதியை அதாவது நாற்பது கோடி வராகன்களை கொடுத்துத் தன் பணியாட்களில் பாதிப்பேரை அவனுடன் அனுப்பியும் வைத்தார்.

சில வருடங்களாயின. மகத நாட்டில் மாபெரும் கலகம் ஏற்பட்டது. அதில் போதிசத்வரின் சொத்தெல்லாம் பறிபோனதோடு அவரது உத்தியோகமும் போய் விட்டது. அவர் ஏழையாகி விட்டார். அப்போது அவருக்குக் காசி நகரிலுள்ள தம் நண்பன் ஸ்ரீவத்சனின் நினைவு வந்தது. எனவே தன் குடும்பத்தோடு அவர் காசிக்குச் சென்றார்.
காசி நகர எல்லையில் ஓரிடத்தில் தம் மனைவி மக்களை இருக்கச் சொல்லி விட்டு போதிசத்வர் ஸ்ரீவத்சனின் மாளிகையின் வாசலில் நின்று அங்கு, வாயில்காப்போனிடம் தான் இன்னாரென்றும் அவனது எஜமானனைக் காண வந்திருப்பதாகவும் கூறினார். வாயில் காப்போனும் “உள்ளே போய்ப் பாருங்கள்” என்றான்.  போதிசத்வர் உள்ளே சென்றதும் ஸ்ரீவத்சன் அவரைப் பார்த்து மரியாதை இல்லாமல் “என்னப்பா வேண்டும் உனக்கு?” என்று கேட்டான். அந்தத் தோரணையைக் கண்டு போதிசத்வர் தாழ்ந்த குரலில் “உங்களைக் காணவே வந்தேன்” என்றார்.

“சரி. இங்கே எதுவும் வசதிப்படாது. கொஞ்சம் அரிசி கொடுக்கச் சொல்கிறேன். அவ்வளவு தான் என்னால் முடியும்”  என்றான். மறு நிமிடம் ஒரு வேலையாள் கால்படி அரிசியைக் கொண்டு வந்து போதிசத்வரிடம் கொடுத்தான். அதனை வாங்கிக் கொண்டு அவர் தம் மனைவி மக்கள் இருந்த இடத்திற்குச் சென்றார். அவரது மனைவியும் “உங்கள் நண்பர் என்ன சொன்னார்? என்ன கொடுத்தார்?” என்று ஆவலுடன் விசாரித்தாள். போதிசத்வரும் “இதுதான் அவனால் உதவ முடியுமாம்” எனக் கூறிக் கால்படி அரிசியை அவளிடம் காட்டினார். “அவனிடமிருந்து இதை ஏன் வாங்கிக் கொண்டீர்கள்? அவனது முகத்திலேயே விட்டெறிந்து விட்டு வந்திருக்க வேண்டும்” என்றாள் அவர் மனைவி கோபத்தோடு.


போதிசத்வரும் கண்களில் பொங்கிய நீரை அடக்கியவாறே “என்னதான் இருந்தாலும் நண்பர்கள் ஒருவரை மற்றவர் பகைத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தான் எதுவும் பேசாமல் இதனை வாங்கிக் கொண்டேன்” என்றார். அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கையில் அவரிடம் முன்பு மகதத்தில் பணி புரிந்து தற்போது காசியில் ஸ்ரீவத்சனிடம் பணிபுரியும் ஒரு வேலையாள் அவ்வழியே வந்தான். அவன் தன் பழைய எஜமானனைக் கண்டு அவரது காலில் விழுந்து வணங்கி “ஐயா. தாங்கள் இங்கு இந்தக் கோலத்தில் வரக் காரணம் என்னவோ?” என்று கேட்டான்.

போதிசத்வரும் அதுவரை நடந்ததை எல்லாம் கூறவே அப்பணியாள் மிகவும் மனம் வருந்தி, போதிசத்வரையும் அவரது குடும்பத்தவரையும் தன் வீட்டிற்கு அழைத்துப் போனான். பிறகு தன் நண்பர்களான மற்ற பணியாட்களிடமும் போதிசத்வரைப் பற்றிக் கூறி ஸ்ரீவத்சன் அவரிடம் நன்றி கெட்ட விதமாக நடந்து கொண்டதையும் சொன்னான். அவர்களும் மனம் குமுறி காசி மன்னனிடம் போய்க் கூறினார்கள்.

காசி மன்னனும் போதிசத்வரை அழைத்து எல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டு, ஸ்ரீவத்சனை தர்பாருக்கு அழைத்து வரும்படிக் கட்டளை பிறப்பித்தான். வீரர்கள் அவனை அழைத்து வந்தனர். அவனிடம் காசி மன்னன் “இவரிடமிருந்து நீ பண உதவி பெற்றது உண்மையா? எவ்வளவு பெற்றாய்?” எனக் கடுமையான குரலில் கேட்டான். அரசன் கேட்ட விதத்தைக் கண்டு ஸ்ரீவத்சன் பயந்து “ஆமாம் இவரது சொத்தில் பாதியை எனக்குக் கொடுத்து உதவினார்” என்றான்.

காசி மன்னன் அப்போது “ஓ! பாதி சொத்தை வாங்கிக் கொண்ட நீ இவரை இப்படித் தான் மரியாதைக் குறைவாக நடத்துவதா?” என்றான். ஸ்ரீவத்சன் வெட்கித் தலை குனிந்து கொண்டான். மன்னன் ஸ்ரீவத்சன் சொத்து முழுவதையும் பறிமுதல் செய்து போதிசத்வருக்கு அதனைக் கொடுப்பதாகத் தீர்ப்புக் கூறினான்.


அப்போது போதிசத்வர் “பிறர் சொத்து எனக்கு வேண்டாம். நான் கொடுத்த நாற்பது கோடி வராகன்களை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்” என்றார். காசி மன்னனும் நாற்பது கோடி வராகன்களை ஸ்ரீவத்சனிடமிருந்து வாங்கிப் போதிசத்வரிடம் கொடுத்தார் போதிசத்வரும் தம் பணத்தை அடைந்து சுகமாக வாழ்ந்து வந்தார்.

 

0 comments:

Post a Comment