வெள்ளை யானையின் சக்தி

 

மகத நாட்டை விரூபசேனன் ஆண்ட போது போதிசத்வர் ஒரு யானையாகப் பிறந்தார். அந்த யானை தேவலோக யானை ஐராவதம் போல வெள்ளையாக இருந்தது. அதனால் மகத மன்னன் தன் பட்டத்து யானையாக அதனை வைத்துக் கொண்டான். ஒருமுறை ஏதோ ஒரு விழா நடக்க மகத நாடே தேவலோகம் போல அலங்கரிக்கப்பட்டது. தலைநகரில் பிரம்மாண்டமான ஊர்வலம் நடக்க ஏற்பாடாகியது. அதற்காகப் பட்டத்து யானை நன்கு அலங்கரிக்கப்பட்டது. வீரர்கள் யானையின் முன்னும் பின்னுமாக நடக்க, மகத மன்னன் அதன் மீது கம்பீரமாக அமர்ந்து சென்றான்.

வழி நெடுக்க மக்கள் கூடி “ஆகா! அந்த யானைதான் எவ்வளவு அழகாக இருக்கிறது! என்ன நடை! என்ன கம்பீரப் பார்வை!!” என்று அந்தப் பட்டத்து யானையைப் புகழ்ந்தார்கள்.
இப்படி யானையை மக்கள் புகழ்வது மன்னனுக்குப் பிடிக்கவில்லை. அவன் தன் மனதில் ‘நான் அரசன். எனக்கு இவர்கள் மரியாதை அளிக்காமல் இந்த யானைக்கு அளித்து அதனைப் புகழ்கிறார்களே. இந்த யானையை ஒழித்தால் தான் இவர்கள் என்னைப் புகழ்வார்கள்’ என்று தீர்மானித்துக் கொண்டான்.


அவன் யானைப்பாகனை அழைத்து “இந்தப் பட்டத்து யானை நன்கு பழக்கப்பட்டதுதானா?” என்று கேட்டான். அவனும் “இதனைப் பழக்கி இதன் மீது அம்பாரியை வைத்தவன் நானே” என்றான். மன்னரோ “இந்த யானை கட்டுக்கு அடங்காமல் இருக்கும் போலிருக்கிறது. இது நன்கு பழக்கப்பட்ட யானை என்பதில் எனக்குச் சந்தேகமே” என்றான். யானைப் பாகனும் “அப்படி எல்லாம் இல்லை” எனவே மன்னனும் “அப்படியானால் இதனைப் பரீட்சித்துப் பார்க்கலாம். உன்னால் இதை அந்த உயரமான மலை மீது ஏறச் செய்ய முடியுமா?” என்று கேட்டான்.


யானைப்பாகனும் “ஓ! முடியும்” என்று கூறி யானையை அம்மலை மீது போகவும் செய்து விட்டான். அரசனும் தன் சில ஆட்களோடு அந்த மலையின் உச்சிக்குப் போனான். ஓரிடத்தில் செங்குத்தான பாறையும் மேலே மிகச் சிறிய இடம் சமதளமாகவும் இருந்தது. மன்னன் யானையை அங்கே நிறுத்தச் சொல்லி யானைப் பாகனிடம் “எங்கே இதனை அந்த இடத்தில் மூன்று காலால் நிற்கச் செய் பார்க்கலாம்” என்றான். யானைப் பாகனும் யானையிடம் அவ்வாறு செய்யும்படிக் கூறவே அதுவும் அவ்வாறே செய்தது.  அரசனுக்கு யானையை எப்படியாவது கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் யானைப் பாகனிடம் “சரி, அதனை இப்போது அதன் இரு பின் கால்களால் நிற்கச் சொல்” என்றான். யானைப்பாகனும் யானையிடம் அரசனின் கட்டளையைக் கூறவே அதுவும் தன் பின் கால்கள் இரண்டால் மட்டும் நின்று காட்டியது. அடுத்து மன்னன் யானையை முன் கால்கள் இரண்டால் மட்டும் நிற்க வைக்கச் சொல்லவே, யானைப் பாகனும் சற்றுத் திகைத்து அரசனின் கட்டளையைக் கூறினான்.

யானையும் அந்த அபாயகரமான இடத்தில் தன் முன்னங்கால்கள் இரண்டால் நின்றது. இதைக் கண்ட யாவரும் ‘ஆகா’ என வியந்து யானையைப் பாராட்டினார்கள். மன்னனுக்கோ ஒரே எரிச்சல். அவன் யானைப்பாகனிடம் “சரி. இப்போது அதை ஒற்றைக் காலால் நிற்கச் சொல்” என்றான். யானைப்பாகனுக்கு மன்னன் மனதில் என்ன நினைக்கிறான் என்பது தெரிந்து விட்டது.

யானையிடம் அரசனின் அந்தக் கட்டளையைக் கூறவே, யானையும் ஒற்றைக்காலால் நின்றது. அது கண்டு மன்னன் “இதெல்லாம் எந்த சாதாரண யானையும் செய்யும். ஆனால் இது தரையில் நடப்பது போல ஆகாயத்தில் நடக்க முடியுமா? அங்கே நடக்கச் சொல் பார்க்கலாம்” என்றான்.  யானைப்பாகனுக்கு அப்போது மன்னன் யானையைக் கொல்லவே விரும்புகிறான் என்பது உறுதியாகி விட்டது.

அவன் யானையிடம் அரசனின் கட்டளையைக் கூறி “உன் மதிப்பை அறியாத மூடன் இந்த மன்னன். நீ உன் மகத்தான சக்தியால் இவன் விரும்புவது போல ஆகாயத்தில் உயரக் கிளம்பி நடந்து காட்டு” என்றான். யானையும் கம்பீரமாக அந்த மலை உச்சி மீது நடந்து அங்கிருந்து ஆகாயத்திலும் தரை மீது நடப்பது போலவே நடந்து போகலாயிற்று.
 
அப்போது யானைப்பாகன் “மன்னனே! நீ இந்த யானையை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று முயன்றாய். ஆனால் இதன் மகத்தான சக்தியை அறியாத நீ அதனிடம் தோற்றுப் போனாய். அந்த யானை உன்னிடம் இருக்க தகுந்ததே அல்ல. வேறு நல்ல இடத்தில் இருக்க வேண்டியது. நீ இனி அதனை அடைய முடியாது. நானும் அந்த யானை செல்லும் இடத்திற்கே போகிறேன்” எனக் கூறிக் கிளம்பிப் போய் விட்டான்.

ஆகாயத்தில் நடந்து சென்ற யானை காசி நகரை அடைந்தது. அந்த நகர மக்கள் ஒரு யானை வான வீதியில் நடந்து வந்து தம் நகரில் இறங்குவதைக் கண்டனர். ஒரே உற்சாகத்துடன் அதனை அவர்கள் வரவேற்றார்கள். காசி மன்னனும் அந்த யானை முன் போய் கைகூப்பி நின்று “கஜராஜனே! வருக! வருக!! உம் வரவால் என் நாடே செழிப்புற்று சுகவாழ்வு பெறப் போகிறது” என்றான்.


இதே சமயம் அந்த யானையை மகத மன்னனிடம் இருந்து ஓட்டிய யானைப்பாகனும் வந்து சேர்ந்தான். அவன் காசி மன்னனிடம் யானையுடனும், அவனிடமும் மகத மன்னன் எவ்வாறு நடந்து கொண்டான் என்று நடந்த அனைத்தையும் கூறி அந்த யானையின் மகத்துவத்தை எடுத்துஉரைத்தான். காசி மன்னனும் அது போதிசத்வர் என அறிந்து தன் நாட்டை மூன்று பாகங்களாக்கி ஒரு பாகத்தை அந்த யானையின் ஆட்சியிலும் மற்றதை யானைப்பாகனின் ஆட்சியிலும் மூன்றாவது பகுதியைத் தானுமாக ஆட்சி புரிந்து வர ஏற்பாடு செய்தான். காசி நாடும் அந்த யானை வந்ததில் இருந்து சுகவாழ்வு பெற்றது.

0 comments:

Post a Comment