முன்கோபம் இருந்தால் கெட்டவனா?

குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.


  ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும். 


முத்து வேறொரு பள்ளியிலிருந்து மாற்றலாகி வந்த சிறுவன். அவன் சேர்ந்த சில நாட்களிலேயே, அவனது கடுமையாகப் பேசும் குணத்தையும் அவனது முரட்டுத்தனத்தையும் கண்ட அவன் வகுப்பு மாணவர்கள் அவனிடமிருந்து விலகத் தொடங்கினர். பாடங்களில் அவனுக்கு சந்தேசம் ஏற்பட்டாலோ, நோட்டு புத்தகங்கள் தேவைப்பட்டாலோ யாரும் தருவதில்லை. 


இப்படி அனைவரும் தன்னிடமிருந்து ஒதுங்கியிருந்து தன்னை ஒரு அன்னியனைப் போல் நடத்துவதைக் கண்டு முத்துவின் மனம் புண்பட்டது. அவன் வருத்தத்துடன் இருப்பதைக் கண்ட வகுப்பு ஆசிரியை அதற்கான காரணத்தை அவனிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டார். 


மறுநாள் வகுப்பில் ஆசிரியை மாணவர்களை நோக்கி, "நம் வகுப்பில் புதிதாகச் சேர்ந்துள்ள முத்துவிடம் யாரும் பழகுவதில்லையே...ஏன்?" என்று கேட்டதும் வகுப்பறையில் மவுனம் நிலவியது. ஒரே ஒரு மாணவன் மட்டும் எழுந்து நின்று, "முத்து ஒரு முரடன். அவனுக்கு நிறைய கோபம் வருகிறது. அதனால் எங்களுக்கு அவனைப் பிடிக்கவில்லை" என்றான். அதை அனைவரும் ஆமோதித்தனர்.



உடனே ஆசிரியர், "முத்துவைப் பற்றி உங்களைக் காட்டிலும் எனக்கு நன்றாகத் தெரியும். அவனிடமுள்ள ஒரே ஒரு குறைபாடு அவனது முன்கோபம் தான். ஆனால் அவனது உள்ளம் மிக மென்மையானது. பழைய பள்ளியில் தனது மதிய உணவை ஏழை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வது அவனது வழக்கம். யார் என்ன உதவி கேட்டாலும் தயங்காமல் செய்வான். நேர்மையானவன். பாடங்களை முறையாகப் பயின்று நல்ல மதிப்பெண்களைப் பெறுபவன். அவனது ஒரே ஒரு குறையை மட்டும் கண்ட நீங்கள், மற்ற குணங்களைப் பார்க்கவில்லை. இனியாவது அவனிடம் மனம் விட்டு பழகுங்கள்" என்று அறிவுரை கூறினார்.

இதுவரை முத்துவின் முன்கோப குணத்தை மட்டும் அறிந்த மாணவர்கள், அவனது நற்குணங்களை அறியாமல் போனதற்கு வருந்தி, அன்றிலிருந்து முத்துவிடன் நட்புடன் பழகத் தொடங்கினர்.


0 comments:

Post a Comment

Flag Counter