இவனன்றோ வீரன்!

 

தன் முயற்சியில் சற்றும்தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலை  வீழ்த்தினான். பின்னர் அந்த உடலை சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும்போது,  அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, "மன்னா! எதற்காக உன்னை நீ இவ்வளவு  சிரமப்படுத்திக் கொள்கிறாய் என்று தெரியவில்லை.

புகழுக்காகவும், பெருமைக்காகவும்  இவ்வாறு செய்கிறாயா? யாருமே எதிர்பாராத முறையில் நடந்து கொள்வதன் மூலம், பிறர்  ஆச்சரியப்பட்டுத் தன்னைப் புகழ்வார்கள் என்று நினைத்து முறை தவறி நடப்பவர்களும்  உண்டு. உன்னைப் போல் சுதர்மன் என்ற ஒரு மன்னன் நீதிநெறி தவறாதவன் என்ற பெயர் பெற்றவன், அவனுடையகதையைக் கூறுகிறேன். கவனமாகக் கேள்!" என்று கதை சொல்லத் தொடங்கியது.

 பத்ரகிரியை ஆண்டுவந்த நரேந்திரவர்மன் நடுநிலை தவறாமல் நேர்மையாக ஆட்சி புரிந்து வந்தான். சகல வித செல்வங்களும் பெற்றிருந்தும், மழலைச் செல்வம் இல்லாத குறை அவனை வாட்டி வதைத்தது. ஒருமுறை அரண்மனைக்கு விஜயம் செய்த ஒரு முனிவர் மன்னனுடைய குறையை அறிந்து, அவனுக்கு மகிமை வாந்த ஒரு பழத்தை அளித்தார்.

அந்தப் பழத்தைப் பட்டத்து ராணி உண்டதும், ஓராண்டிலேயே ராஜ தம்பதிக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தனர். மூத்தவனுக்கு சுதர்மன் என்றும், இரண்டாமவனுக்கு சுசேனன் என்றும் பெயரிட்டு ராஜ தம்பதி இரு பிள்ளைகளையுசீராட்டி வளர்த்தனர்.  பால பருவம் அடைந்ததும், இருவருக்கும் குருகுலத்தில் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. மூத்தவன் சுதர்மன் ராஜநீதி, தர்ம சாஸ்திரங்கள் ஆகியவற்றைப் பயிலுவதில் ஆர்வம் காட்டினான். இளையவன் கத்திச் சண்டை, மல்யுத்தம் ஆகியவற்றில் ஆர்வம் காட்டினான்.

ஒவ்வோர் ஆண்டும் விஜயதசமியின்போது, விற்போர், கத்தி வீச்சு, மல்யுத்தம் ஆகிய போட்டிகள் நடைபெறுவதுண்டு. நாடெங்கிலும் உள்ள வீரர்கள் அவற்றில் பங்கேற்பது வழக்கம். தங்களுடைய திறமையை வெளிக்காட்டுபவர்களுக்கு மன்னர் பரிசுகள் வழங்குவார். இந்தப் போட்டிகளில் இளவரசர்கள் இருவருமே கலந்து கொள்வது வழக்கமாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் சுதர்மனும், சுசேனனும் போட்டி இடுகையில், சுசேனன்தான் வெற்றி பெறுவான். ஆனால், சுசேனன் தன் அண்ணன் என்று கூடப் பாராமல், வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் மோதுவான். இளையவன் சுசேனனின் போக்கு மன்னருக்குக் கவலையை உண்டாக்கியது.

சுதர்மனும், சுசேனனும் வளர்ந்து வாலிபப் பருவத்தை எட்டினர். வஜ்ரகிரி இளவரசியை சுதர்மனுக்கும், ரத்னகிரி இளவரசியை சுசேனனுக்கும் மன்னர் திருமணம் செய்து வைத்தார். தான் முதிய பருவம் எதிரியதால், ஆட்சிப் பொறுப்பை மூத்தவனிடம் ஒப்படைத்து விட்டு, தான் ஓய்வெடுத்துக் கொள்ள விரும்பிய மன்னர், தனது முடிவை குடும்பத்தினரிடமும், ராஜகுருவிடமும் தெரிவித்தார்.

 சில நாள்கள் கழித்து, சுசேனன் தன் மனைவியுடன் ரத்னகிரியை நோக்கிச் சென்றான். அங்கு அவனுடைய மாமனார் அவனுடைய மனத்தில் ஆட்சிப் பொறுப்பை அவனே அடைய வேண்டும் என்று தூண்டி விட்டார். ஊர் திரும்பிய சுசேனன் ராஜகுருவைத் தனிமையில் சந்தித்து, "சுதர்மனுக்கு முடிசூட்டப் போவதாக என் தந்தை அறிவித்திருக்கிறார். ஆனால், அவனைவிட நான்தான் போர் செய்வதில் வல்லவன். அதனால், ஆட்சி பீடத்தில் அமர நான்தான் தகுதியானவன். இதை மன்னரிடம் தெரிவியுங்கள்" என்றான்.

அதைக்கேட்டு திடுக்கிட்ட ராஜகுரு, "சுசேனா! நீ ஆசைப்படுவது சரியல்ல! நமது சம்பிரதாயப்படி மூத்த மகன்தான் சிம்மாசனத்தில் அமரத் தகுதியுள்ளவன். அதனால் உன் மனத்தில் தோன்றியுள்ள ஆசையை கிள்ளியெறிந்துவிடு!" என்றார்.

அது கேட்டு வெகுண்ட சுசேனன் "நான் ஆசைப்படுகிறேன் என்று சொல்லாதீர்கள். ஆட்சிப்பீடத்தில் அமருவது என்னுடைய உரிமை! சுதர்மனும், நானும் இரட்டைப் பிறவிகள். என்னைவிட சில நிமிடங்கள் முன்னால் பிறந்ததனால் அவன் மூத்தவனாகிவிட முடியாது. தவிர, அவனுக்குத் தெரிந்தது ராஜநீதியும், தர்மசாஸ்திரமுமே! அதற்கு அவன் வேண்டுமானால் மந்திரியாகலாம். ஆனால், அவன் கண்டிப்பாக முடிசூட்டிக்கொள்ள முடியாது!" என்று பொரிந்தான்.

தொடர்ந்து, "சரி! அப்படியானால் நீங்கள் ஒன்று செய்யுங்கள்! எங்கள் இருவருக்கும் ராஜ்யத்தை சமமாகப் பிரித்துக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்"  கூறிவிட்டு கோபத்துடன் சென்றான். உடனே ராஜகுரு விரைந்து சென்று மன்னரிடம் தெரிவிக்க, அவர், "ஆகா! நான் எது நடந்து விடுமோ என்று பயந்தேனோ, அது நடந்தே விட்டது.

ரத்னகிரி மன்னன் இருபத்தைந்து ஆண்டுகளாக நமது ராஜ்யத்தைக் கைப்பற்ற முயன்று வருகிறான். இப்போது அவனுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள நல்லவாப்பு கிடைத்து விட்டது. சுசேனனைத் திட்டமிட்டுத் தன் மாப்பிள்ளையாக்கிக் கொண்டு இப்போது அவனை ஆட்சி உரிமையைக் கேட்கத் தூண்டியிருக்கிறான். எது எப்படியிருந்தாலும், மூத்தவன் சுதர்மனுக்கு முடிசூட்டுவதை யாராலும் தடுக்க முடியாது" என்றார்.

அதன்படியே, சுசேனனுக்கு சேனாதிபதி பதவியளிக்கப்பட்டதும், அவன் அதை நிராகரித்துவிட்டான். அதனால் பழைய சேனாதிபதியின் மகன் சுரேந்திரன் சேனாதிபதியாக்கப்பட்டான். ஒரு சுப முகூர்த்தத்தில் மூத்தவன் சுதர்மனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெற்றது.

சில நாள்கள் அமைதியாகக் கழிந்தன. மன்னர் எதிர்பார்த்ததுபோல் சுசேனன் தகராறு எதுவும் செய்யவில்லை. தன் மனைவியுடன் மீண்டும் ரத்னகிரிக்குச் சென்று விட்டான். ரத்னகிரி மன்னன் துர்ஜயன், அதாவது சுசேனனின் மாமனார் தன் மருமகனிடம், "உன் தந்தை நியாயமாக ஆட்சியை உனக்கு ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படிச் செய்யாமல் உனக்கு துரோகம் செய்து விட்டார். சரி, பரவாயில்லை.  உன்னை ரத்னகிரிக்கு ராஜாவாக ஆக்குகிறேன். விரைவிலேயே, சுதர்மனை ஒழித்துக் கட்டி விடுவோம். பிறகு, பத்ரகிரியையும் நீயே ஆளலாம்!" என்று நன்றாக தூபமிட்டார்.

அவ்வாறே, சுசேனனிடம் ரத்னகிரியின் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது. அடுத்து, சுதர்மனை அழித்து விட்டு, பத்ரகிரியை பிடிப்பது பற்றி மாமனாரும், மருமகனும் ஆலோசனை செய்தனர். பத்ரகிரி மன்னர் ஆட்சிப் பொறுப்பை மூத்தவன் சுதர்மனிடம் ஒப்படைத்தப்பின், தன் ராணியுடன் காசி யாத்திரைக்குக் கிளம்பினார். பத்ரகிரி மீது படைஎடுக்க அது சரியான சமயம் என்று சுசேனனுக்குத் தோன்றியது. ஆனால், பத்ரகிரியின் படைபலம் அதிகம் என்பதால் சுதர்மனை வஞ்சகமாகக் கொன்று விட்டால் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று திட்டம் இட்டனர்.

அந்த ஆண்டு விஜயதசமியின் போது, பத்ரகிரியின் வழக்கப்படி அரண்மனையில் போட்டிகள் நடைபெற்றன. அதுவே உற்ற தருணம் என்று கருதிய துர்ஜயனும், சுசேனனும் தங்களுடன் சில வீரர்களை அழைத்துக் கொண்டு, மாறுவேடம் அணிந்து, போட்டியில் பங்கேற்பவர்களைப் போல் அங்கு சென்றனர். போட்டி நடக்குமிடத்தை விட்டு,
அவர்கள் அனைவரும் அரண்மனைக்குள் புகுந்தனர்.

 அரண்மனை நந்தவனத்தில் சுதர்மனும், சேனாதிபதி சுரேந்திரனும் உரையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து, துர்ஜயனும், சுசேனனும், அவர்களுடைய ஆட்களும் சேடிகளுக்கு இடையே ஒளிந்தனர். உரையாடல் முடிந்தது. சுரேந்திரன் அவ்விடத்தை விட்டு அகன்றதும், தனியாக இருந்த சுதர்மனைக் கொல்ல அனைவரும் பாய்ந்து சென்றனர். அதற்குள் அவர்கள் காலடியோசை கேட்டுத் திரும்பிய சேனாதிபதி தன் மன்னருக்கு நேரவிருக்கும் ஆபத்தை உணர்ந்து கொண்டு, மிக வேகமாக ஓடி வந்து அவர்களைத் தடுக்க, சுதர்மன் மீது வீசிய வாள் சேனாதிபதியின் கையில் பாய, அவன் கீழே விழுந்தான். உடனே எச்சரிக்கையான சுதர்மன் மின்னலென ஓடி மறைந்து விட்டான்.

சுதர்மனைக் கொல்ல முயன்று தோல்வியுற்ற ஆத்திரத்தில் சுசேனன் அந்தப்புரத்தில் நுழைந்து அங்கிருந்த ராணி உட்பட அனைவரையும் கொல்ல முயன்றான். உடனே, அரண்மனை தலைமை சமையற்காரன் வல்லபன் அந்தப்புரத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு அவர்களுடன் சண்டையிட்டு  அந்தப்புரப் பெண்களைக் காப்பாற்றி விட்டான்.

எதிர்பாராமல் நந்தவனத்திலும், அந்தப்புரத்திலும் பகைவர்கள் நுழைந்து தாக்கியதால், காவல் வீரர்களால் உடனே உதவிக்கு வர முடியவில்லை. தப்பியோடிய சுதர்மன் வீரர்களை அழைத்துக் கொண்டு வருவதற்குள், துர்ஜயனும், சுசேனனும் அந்தப்புரத்திலிருந்து தப்பி ஓடி விட்டனர். அவர்களைத் துரத்திய வீரர்களிடமிருந்து தப்பிக்கத் தலை தெறிக்க ஓடிய இருவரும் நதிக்குள் குதித்தனர். ஆனால், நதியின் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருவரும் உயிர் நீத்தனர்.

திடீரென ஏற்பட்ட அமர்க்களம் ஓய்ந்த பிறகு, மறுநாள் தசமியன்று, சுதர்மன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கிய பின், "நேற்று எதிர்பாராமல் பகைவர்கள் அரண்மனையில் புகுந்துத் தாக்கியதில், என் உயிரைக் காப்பாற்றிய சேனாதிபதிக்கு நன்றி கூற விரும்புகிறேன். அந்தப்புரத்தில் நுழைந்து ராஜகுலப் பெண்களைக் கொல்ல முயன்ற தீயவர்களை மிகவும் துணிச்சலுடன் எதிர்கொண்டு வீழ்த்திய நம் சமையற்காரர் வல்லபனின் வீரத்தை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. அவருக்குப் பரிசளிப்பதுடன், அவரை தளபதியாகவும் ஆக்குகிறேன்" என்றான். அதைக்கேட்டு அனைவரும் கை தட்டி மகிழ, சேனாதிபதி ஏமாற்றமடைந்தான்.

இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, "உயிர் போகும் அபாயத்தில் இருந்த சுதர்மனைக் காப்பாற்றியது சேனாதிபதி! அந்த முயற்சியில் அவர் உயிர் செல்லவிருந்தது. அதிர்ஷ்டவசமாக கையில் காயத்துடன் உயிர் தப்பினார். தன்னுடைய உயிரைக் காப்பாற்ற முயன்று தன் உயிரைப் பணயம் வைத்து உதவிய சேனாதிபதிக்கு பரிசளிக்காமல், ஒரு சமையற்காரனுக்குப் பரிசு அளித்தது எந்த விதத்தில் நியாயம்?

இது ஏன் என்று உனக்குத் தெரிந்தும் சொல்லாமல் இருந்தால், உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது வேதாளம். அதற்கு விக்கிரமன், "ஒருவனை சிறந்த வீரன் என்று நிர்ணயிப்பது அந்த சூழ்நிலையைப் பொறுத்தது. சேனாதிபதி செய்தது பாராட்டுக்குரிய விஷயமே! ஆனால், அவர் தனது கடமையைத்தான் செய்தார்.

அதுவும் பூரணமாக செய்யவில்லை. அவருடைய கட்டுக்காவல் சீராக இருந்திருந்தால், பகைவர்கள் அரண்மனைக்குள் நுழைந்திருக்கவே முடியாது. போர்க்கலையில் தேர்ந்த சேனாதிபதி விரைந்து வந்து மன்னரைக் காத்ததில் வியப்படைய ஏதுமில்லை. ஆனால், முறையாக ஆயுதமேந்தி போர் புரியத் தெரியாத சமையற்காரன் கையில் வாளேந்தி நூற்றுக்கணக்கான பகைவர்களைக் கொன்றது அசாத்திய வீரம்இல்லையா? அந்தப்புரப் பெண்களைக் காப்பாற்றி, நூற்றுக்கணக்கான பகைவர்களை வீழ்த்திய வல்லபன்தான் சிறந்த வீரன்! ஆகவே, பரிசும், பதவியும் கிடைத்தது சரியே!" என்றான்.

விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் தானிருக்கும் உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

 
வேதாளம் வரும்...

0 comments:

Post a Comment

Flag Counter