ஹேமச்சந்திரனின் முடிவு

      

தன் முயற்சியில் சற்றுந்தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர், அதை சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம் விக்கிரமனிடம், "மன்னா! உன்னைப் போல் பாடுபடுபவர்கள் எதைக்கண்டும், முக்கியமாக அழகானப் பெண்ணைக் கண்டு, சபலப்பட்டு சறுக்காமல் இருக்க வேண்டும். ஹேமச்சந்திரன் என்ற மன்னன் அஞ்சாநெஞ்சன்! மிகுந்த மனஉறுதி படைத்தவன். ஆனால், அவனுடைய வைராக்கியம் ஓர் அழகிய பெண்ணின் முன் சீர்குலைந்தது, அவன் கதையைக் கூறுகிறேன், கேள்" என்று கதை சொல்லலாயிற்று.
 
 மனோரதபுரியை ஆண்டு வந்த ஹேமச்சந்திரன் உறுதியானவன். எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் வளைந்து கொடுக்காமல் தன் கொள்கையைக் கடைப்பிடிப்பவன். ஒரு சமயத்தில் அவனுடைய ராஜ்யத்தில் கொள்ளையர்கள் தொல்லை ஏற்பட்டது.

வடவாக்னி என்பவன் தலைமையில் ஒரு பெரிய கொள்ளைக்காரர்கள் கூட்டம் செல்வர்கள், நடுத்தர மக்களின் வீடுகளை சூறையாடிக் கொள்ளையடிக்கத் தொடங்கியது. அவர்களுடைய அட்டகாசம் பல ஆண்டுகளாக தொடர்ந்து மன்னன் உடைய காவல்படையினரால் கொள்ளைக்காரர்களில் ஒருவனைக் கூடப் பிடிக்க இயலவில்லை. ஆகவே, மன்னன் ஹேமச்சந்திரன் தானே மாறுவேடம்அணிந்து தினமும் இரவு நேரங்களில் நகர்வலம் வந்தான்.

ஒருநாள், தலைநகரில் ஒரு பெரிய வியாபாரியின் வீட்டு வழியே மன்னன் தன் குதிரையில் சென்று கொண்டு இருந்தபோது, அந்த வீட்டிலிருந்து ‘திருடன்’ ‘திருடன்’ என்று கூக்குரல் கேட்டது. வீட்டின் மாடியிலிருந்து ஒரு நூலேணி தொங்க அதில் மூட்டை தூக்கியபடி ஒருவன் கீழே இறங்கினான். அதைப்பார்த்து விட்ட மன்னன் உருவிய வாளுடன் அவனைப் பிடிக்கத் தயாரானான்.


அதை கவனித்த அந்தத் திருடன், தொலைவில் யாரிடமோ "தலைவரே! இந்த மூட்டையை எடுத்துக் கொண்டு நீங்கள் தப்பிவிடுங்கள்" என்று குரல் கொடுத்துவிட்டு, மூட்டையைத் தூக்கி வீசினான். ‘அட! தலைவன் வடவாக்னி கீழேதான் நிற்கிறானா? முதலில் அவனைப் பிடிப்போம்’ என்று எண்ணிய மன்னன் குதிரையிலிருந்து இறங்கினான். உடனே, திருடன் மன்னனின் குதிரையில் தாவியேறி, மூட்டையையும் எடுத்துக்கொண்டு மின்னலா மறைந்தான்.

 தன்னை ஏமாற்றிவிட்டுச் சென்றது திருடர் தலைவன் வடவாக்னிதான் என்று தெரிந்துகொண்ட மன்னனுக்கு சினமுண்டாக, அவனை எப்படியும் பிடித்தே தீருவது என்று தீர்மானித்தான். சற்று நேரத்தில் அவனுடைய மெய்க்காப்பாளன் அங்கு வந்து செர, அவன் உடைய குதிரையில் தானேறி வடவாக்னி சென்ற திசையை நோக்கி வேகமாக விரைந்தான். வெகுதொலைவு சென்றதும், இனியும் அவனை ஓடவிடுவது விவேகமல்ல என்று நினைத்த மன்னன். அவன் மீது கத்தியை குறி வைத்து எறிந்தான். ஆனால், திடீரென குறுக்கே வந்த ஒரு கிராமத்துப் பெண் தன் கூடையைத் தூக்கிப் பிடித்து கத்தி வடவாக்னி மீது படாமல் தடுத்து விட்டாள்.

அவளுடைய செய்கையினால் கோபங்கொண்ட மன்னன் குதிரையை நிறுத்தி, "முட்டாள் பெண்ணே! யார் நீ? உன் பெயர் என்ன? திருடனைக் கொல்லும் சமயத்தில் தடுத்து நிறுத்திவிட்டாயே!" என்று கத்தினான். அதிரூப சுந்தரியாகத் திகழ்ந்த அந்த மங்கை, "என் பெயர் ஜலஜா! அவன் திருடனாயிருந்தாலும் பின்புறமிருந்து கத்தியை எறிவது வடிகட்டிய கோழைத்தனம்!" என்றாள்.


"நான் யார் தெரியுமா? நான் இந்த நாட்டின் மன்னன்! " என்றான் மன்னன். "ஓகோ! மன்னன் ஒரு குற்றவாளியை விசாரிக்காமல் தானே தண்டனை தருவது எந்த தர்ம சாஸ்திரத்தைச் செர்ந்தது?" என்று ஜலஜா பதிலுக்கு கேள்வியை வீசினாள்.


தான் மன்னன் என்று தெரிந்தும் தன்னை மதிக்காமல் பேசும் அவளைக் கண்டு ஹேமச்சந்திரனுக்கு சினம் தலைக்கேறியது. அப்போதைக்குத் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அரண்மனை திரும்பினான்.
மறுநாள் அந்த கிராமத்திற்கு வந்த காவலர்கள் ஜலஜாவின் வீட்டுக்கு வந்து அவளைக் கைது செய்து, சபைக்கு அழைத்து வந்தனர். ஜலஜாவின் குற்றத்தை சபையோரிடம் விளக்கியபின், மன்னன் அவளை சிறையில் அடைக்க உத்தரவிட்டான்.

 
 வடவாக்னியை சிறைப் பிடித்த பின்னரே மறுவேலை பார்க்க வேண்டும் என மன்னன் தீவிரமாக இருந்தான். முதலில் அவன் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ள வேண்டும்எனத் தீர்மானித்தான். ஆகையால், காடுகளில் மாறுவேடம் அணிந்து சுற்றினான். ராஜ்யத்தின் மேற்கே மலைகள் சூழ்ந்த ஒரு கிராமத்தில் அவன் வசிக்கிறான் என்று தகவல் தெரிந்துகொண்டு, அங்கு சென்றான்.

அங்கு திடீரென ஜலஜாவைக் கண்டதும் மன்னன் திடுக்கிட்டான். உடனே பாய்ந்து சென்று அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு, "அடிப்பாவி! நீ எப்படி சிறையிலிருந்து தப்பினாய்?" என்று கர்ஜித்தான். ஆச்சரியத்துடன் அவனை உற்று நோக்கிய ஜலஜா. அவனை அடையாளம் கண்டு கொண்டபின், "மன்னா! சிறையிலிருப்பது என் சகோதரி ஜலஜா! நான் வனஜா! இருவரும் இரட்டையர்கள்.


அவள் அப்பாவி! நான் நேர்மாறானவள். அன்று திருடனை உங்களிடமிருந்து தப்புவித்தது நான்தான்! அவளை விடுவிக்க, திருடர் தலைவனைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டு உங்களுக்கு உதவ எண்ணினேன். இப்போது அவரைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு விட்டேன்" என்றாள்.

"வடவாக்னியை உனக்குத் தெரியுமா? அவனைப் பிடிக்க உதவி செய்வாயா?" என்று மன்னன் கேட்டான்.
"வடவாக்னியை யாராலும் இனி பிடிக்க முடியாது. ஏனெனில் வடவாக்னி இறந்து பல மாதங்களாகி விட்டன. இப்போது அவன் பெயரில் நடமாடுவது மற்றொருவர். ஆனால், அவர் தண்டனைக்குரியவர் அல்ல! மரியாதைக்குரியவர்!" என்றாள் வனஜா. "என்ன உளறுகிறா?" என்று மன்னன் சீறினான்.


"மன்னா, இதோ இந்த கிராமத்தைப் பாருங்கள்! மலைகளால் சூழப்பட்ட பைரவபுரி எனும் இந்தக் கிராமத்தில் பருவமழை பெய்வதில்லை. ஏன் எனில் இது மழைநிழல் பகுதியில் உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயம் செய்ய இயலாமல் பல தலைமுறைகளாக கஷ்டப்படுகின்றனர். மலைகளில் உற்பத்தி ஆகும் பைரவி ஆறு நீர்வீழ்ச்சியாக கீழே விழுகிறது. பின்னர், அது பைரவி என்ற பெயருடன் தென்புறமாகத் திரும்பிச் சென்று விடுகிறது.

 
 அந்த ஆற்றில் இருந்து கால்வாய் வெட்டி இந்தக் கிராமத்திற்கு நீர்ப்பாசன வசதி செய்வதால், வறண்டு இருக்கும் இந்த பைரவபுரி கிராமம் சொர்க்கபுரியாக மாறிவிடும். ஆனால், பாறைகள் நிறைந்த இந்த நிலப்பகுதியில் கால்வாய் தோண்டுவது மிகக் கடினமான காரியம்! அதற்கு நிறைய பொருட் செலவாகும். ஆனால், அதை செய்து முடித்தால் பைரவபுரியிலும் சுற்று வட்டார கிராமங்களிலும் வசிக்கும் ஒரு லட்சம் மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள்.

சிந்தாமணி என்ற பணக்கார வீட்டு வாலிபன் இந்த பொதுநலப் பணியை செய்ய முனைந்தான். தன் செல்வத்தை எல்லாம் செலவழித்தும், பாதிவேலைதான் செய்ய முடிந்தது. அவன் இப்போது ஆட்சி செய்துவரும் மன்னரிடம் உதவி கேட்டான்! உதவி கிட்டவில்லை. தன் உடைய பணி பாதியில் முடங்கியிருப்பதைக் காணப் பொறுக்காமல், சூழ்நிலையின் கட்டாயத்தினால் திருடனாக மாறிவிட்டான். வடவாக்னி இறந்ததும், சிந்தாமணி அவன் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு செல்வர் வீட்டில் கொள்ளை அடித்து முடங்கிப் போனப் பணிக்கு மீண்டும் உயிரூட்டினான். இன்னும் ஒரு வாரத்தில் அவருடைய உன்னதமான பணி நிறைவுறும். இப்போது சொல்லுங்கள். அத்தகைய மாவீரனின் உயிர் காத்தது தவறா?" என்றாள்.

நியாயத்தின் பிரதிநிதியாக தனக்கு நேர் நின்று அவனுக்காகப் பரிந்துபேசிய வனஜாவின் பேச்சும், தைரியமும், வனப்பும் மன்னனைக் காந்தம் போல் ஈர்த்தன. அவள் இடம் தன்னை முற்றுமா பறிகொடுத்த மன்னன் அக்கணமே, "சபாஷ்! நீ என்னை வென்று விட்டாய்.


நீ கூறியது உண்மையானால், அந்த பரோபகாரி சிந்தாமணியை என்னுடைய பிரதிநிதிஆக்கி அவனுடைய பணியை நிறைவேற்றுவதில் நானே உதவி செய்வேன். அதுமட்டுமல்ல! உன்னுடைய சம்மதத்துடன் உன்னை மணந்து கொள்ள விரும்புகிறேன்" என்று சொல்ல, வனஜா வெட்கித் தலைகுனிந்தாள்.

இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், "மன்னா! ஒரு பெண் எத்தனை உறுதி வாந்த மனத்தினனையும் சபலத்துக்கு ஆளாக்கி விடுவாள் என்பது புரிகிறதா? அவள் அழகில் மதிமயங்கிய மன்னன் திருடனை ராஜப் பிரதிநிதியாக்க முடிவு செய்ததுடன், அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொள்ளவும் முடிவு எடுத்தான். மன்னனின் இந்த மனமாற்றத்திற்குக் காரணம் வனஜாவின் அழகுதான் என்று சொல்கிறேன். என்னுடைய கருத்துக்கு மாறாக நீ ஏதாவது சொல்ல விரும்பி அதை சொல்லாமல் மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது.


அதற்கு விக்கிரமன், "நீதி என்பது குருட்டுத்தனமான விதிமுறைகள் அல்ல! ஒரு குற்றவாளியின் நோக்கத்தையறிந்து நியாயமாக செயற்படுவதுதான் நீதி சாஸ்திரத்தின் அழகு! சிந்தாமணி ஏன் கொள்ளையடித்தான் என்ற காரணத்தைப் புரிந்து கொண்டபின், மன்னனாக இருந்தும் தான் செய்யத் தவறிய ஒரு காரியத்தை தனி மனிதன் ஒருவன் மக்களின் நன்மைக்காகச் செய்தான் என்று அறிந்த தருணமே, மன்னன் தன் கருத்தை மாற்றிக் கொண்டான்.


வனஜாவின் அழகோ, பேச்சு சாமர்த்தியமோ அதற்குக் காரணமல்ல! அவளுடைய சொற்களில் இருந்த நியாயம்தான் அவனை மாற்றியது. ஆகவே, அவன் எடுத்த முடிவு சரியானதுதான்!" என்று பதில் கூறவும், அவன் மௌனம் கலைந்ததால், வேதாளம் தான் தங்கி இருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

   

வேதாளம் வரும்...

0 comments:

Post a Comment