அந்த நாள் நினைவுகள்...



ரூய்கட் ஒரு சிறிய கிராமம்! ஒரு மாறுதலுக்காக மகாராஷ்டிராவிலுள்ள அந்த கிராமத்திற்குச் சென்றிருந்த நான், என் உறவினர் வீட்டில் தங்கிஇருந்தேன். கிராமத்தின் அமைதியான சூழ்நிலையினால் கவரப்பட்ட எனக்கு, கவிதை எழுத வேண்டும் என்று தோன்ற, உடனே நான் காலார நடந்து ஒரு பெரிய மரத்தின் அடியில் அமர்ந்து கவிதைக்கான வாசகங்களைக் கற்பனையில் தேடிக் கொண்டுஇருந்தேன். 

மனத்தில் தோன்றிய எண்ணங்களை வார்த்தைகளாக வடித்த பிறகு, வீடு திரும்ப நினைத்த போது, பக்கத்து வீட்டுப் பெண்மணியான ஜெயாவும், அவளுடைய பெண்ணும் இடுப்பிலும், தலையிலும் பானைகளைச் சுமந்து கொண்டு ஒற்றையடிப் பாதையில் ஆற்றை நோக்கிச் செல்வதைக் கவனித்தேன். ஆற்றுக்குத்தான் செல்ல வேண்டும். அவர்களைப் பின் தொடர்ந்து செல்ல வேண்டுமென எனக்குத் தோன்ற, உடனே அவ்வாறே செய்தேன்.

தில்லியில், என் வீட்டில் குழாயைத் திறந்தாலே தண்ணீர் வரும்! ஆனால், இங்கோ அதற்காக எத்தனை தூரம் தினமும் செல்ல வேண்டியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். இப்போதெல்லாம் ஆற்று நீர் சுத்தமாக இருப்பதில்லை. அப்படிஇருக்க, அதை எவ்வாறு குடிப்பதற்கும், சமையலுக்கும் பயன்படுத்துகின்றனர் என்ற சந்தேகம் எனக்குத் தோன்றியது. அவ்வாறு சிந்தனைகளில் மூழ்கியபடி நான் நடக்க, ஆறு வந்ததே தெரியவில்லை.
 
ஜெயாவின் பெண் ஆற்றில் இறங்கி, பானைகளை நிரப்ப, ஜெயா கரையிலேயே அமர்ந்து விட்டாள். இவள் தண்ணீர் பிடிக்கப் போவது இல்லையா என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போது, ஜெயா ஒரு விசித்தரமான காரியம் செய்தாள். கரையில் உட்கார்ந்தபடியே மணலைத் தோண்டத் தொடங்கினாள். சற்று நேரத்தில் ஊற்றுநீர் வர, அதைப் பானைகளில் நிரப்பினாள்.
 
நான் ஆற்றங்கரையை உற்று நோக்கிய போது அத்தகைய குழிகள் ஏராளமாக இருந்தன. ஆர்வத்தை அடக்க முடியாமல் நான் ஜெயாவிடம் அவள் என்ன செய்கிறாள் என்று கேட்க, அவள் ஆற்றங்கரையில் குழி தோண்டி ஊற்று நீரைப் பானைகளில் நிரப்புகிறேன் என்றாள். காரணம் கேட்க, குடிப்பதற்கும், சமையலுக்கும் உகந்தது ஊற்று நீர்தான் என்றாள்! அப்போதுதான் எனக்கு விஷயம் புரிந்தது. அசுத்தமான ஆற்றுநீர் அடிவழியாக ஊடுருவி அருகிலுள்ள ஆற்றங்கரைக்குப் பாயும்போது, அதிலுள்ள அசுத்தங்களை மணல் வடிகட்டி விடுகிறது. அதனால், ஆற்றுநீரைவிட ஊற்று நீர் ஓரளவு சுத்தமானது.
 
குடிப்பதற்கும், சமையலுக்கும் கிராமத்தினர் பயன்படுத்துகின்றனர் என்பது புரிந்தது.
 
வீட்டுக்கு அருகிலேயே கிணறு தோண்டினால், தினமும் நடக்கும் சிரமம் மிச்சமாகுமே என்று தோன்றியது. ஆனால், ஆற்றங்கரையில் கையால் தோண்டினாலே ஊற்று நீர் கிடைக்கும். ஆற்றிலிருந்து தொலைவில் உள்ள கிராமத்து வீடுகளில் மிக ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கும். ஒரு காலத்தில் கிணற்றில் தண்ணீர் இருந்திருக்கலாம்! இப்போது, கிணறு தோண்டினால் கூட தண்ணீர் கிடைக்குமா என்று சொல்ல முடியாத அளவிற்கு நிலம் வரண்டு விட்டது. அதன் முக்கியமான காரணம், கிராமத்தைச் சுற்றியிருந்த காடுகளில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதுதான்!
 
மரங்களை அப்படியே விட்டு வைத்திருந்தால் இந்த வறட்சி ஏற்பட்டிருக்காது. மழைத் தண்ணீர் வீணாகப் பாய்ந்து ஓடாமல், அவற்றை மரங்கள் தடுக்க, பூமி அதை உறிஞ்சி வைத்திருக்கும். சமீப காலமாக ரூய்கட்டில் கடும் வறட்சி நிலவுகிறதென்று உறவினர் கூறினார்.
 
மீண்டும் பழைய இடத்திற்குத் திரும்பி வந்து, அந்த மரத்தடியில் அமர்ந்து எண்ண அலைகளை ஓடவிட்டேன். காடுகளை அழிப்பதின் மூலம், மனிதகுலம் தன் அழிவுப் பாதையை நோக்கி அடிவைத்து நடக்கிறது என்பது தெளிவாகப் புரிந்தது. ஏதாவது மாய, மந்திரத்தினால் ரூய்கட் கிராமத்தின் வெட்டப்பட்ட மரங்கள் மீண்டும் தோன்றாதா என்று ஏங்கினேன்.
 
-காஞ்சி கோலி               

0 comments:

Post a Comment

Flag Counter