நாகர்கள் பகார் மரத்தை வெட்டுவதில்லை


 பாரதத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள நாகர்கள் பகார் மரத்தை மட்டும் வெட்டுவதில்லை. பகார் என்பது அடர்ந்த கிளைகளைக் கொண்ட ஆலமரத்தைப் போல் தோற்றமளிக்கும் ஒரு மரமாகும். இதையொட்டி ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.

ஒருமுறை நாகர் இனத்தைச் சேர்ந்த ஒரு வாலிபன் அடர்ந்த காட்டு வழியே சென்று கொண்டிருந்தான். அந்தக்காடு பெரிய மலைகளாலும், அடர்ந்து வளர்ந்த பெரிய மரங்களாலும் சூழப்பட்டிருந்தது. அந்தக் காட்டில் இரவு நேரத்தில் கொடிய பேய், பிசாசுகள் நடமாடுவது உண்டு. இந்தப் பேய்கள் மனிதனை முன்புறம் இருந்து தாக்குவதில்லை என்றும், பின்புறமாக வந்து அழுத்திப் பிடித்து கொன்று உண்டுவிடும் என்றும் கேள்விப்பட்டிருந்தான். சிறிது நேரத்தில் மாலை மங்கி, இரவு மெதுவாகப் பரவத் தொடங்கியது.

அந்தச் சமயம் திடீரென ஒரு சிறிய பேய் அவனைத் தாக்க முயற்சி செய்தது. ஆனால் சரியான நேரத்தில் அதைப் பார்த்துவிட்டதால், அந்த இளைஞன் அந்தப் பேயைத் தன் ஆயுதத்தால் தாக்கிக் கொன்று விட்டான். ஆனால் கொஞ்ச நேரத்தில் கும்மிருட்டு ஆகிவிடும் என்றும், பேய்களைத் தன்னால் இருட்டில் கண்டு பிடித்துத் தப்பிக்க முடியாது என்றும் தெரிந்து கொண்ட இளைஞன், ஏதாவது ஒரு பெரிய மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொண்டு இரவைக் கழிக்க எண்ணினான்.

 உடனே அருகிலிருந்த வெண்மை நிறத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த ஒரு பெரிய மரத்தை அணுகி இரவில் தங்க இடம் கேட்டான். ஆனால் அந்த மரம் அவனுக்கு இடம் தர மறுத்து விட்டது. பேய்கள் இரவில் நடமாடும் போது அவனை இந்த மரத்தில் பார்த்து விட்டால் அவை அவனை மட்டுமல்லாமல் மரத்தையும் நாசமாக்கி விடும் என்று அந்த மரம் பயப்பட்டது.
இவ்வாறு மரம் தனக்கு இடம் அளிக்க மறுத்ததை எண்ணி, இளைஞன் கவலையும், பயமும் அடைந்தான். மற்றொரு மரத்தை அடைந்து, "மரமே, எனக்கு இன்றுஇரவு தங்க இடம் தருவாயா? பேய்கள் என்னைக் கண்டால் சும்மா விடாது" என்று கெஞ்சினான். ஆனால் அந்த மரமும் "நாங்கள் மனிதர்களுக்கு உதவி செய்வதில்லை. நீ வேறிடம் பார்" என்று சொல்லி விட்டது.

இரவில் தங்க இடம் தேடி ஒவ்வொரு மரமாக முயற்சி செய்து கொண்டிருந்த இளைஞனை, ஒரு பகார் மரம் பார்த்து இரக்கம் கொண்டது. அவனைத் தன்னிடம் அழைத்து "என்னுடைய அடர்ந்த கிளைகளில் நீ மறைவாக உட்கார்ந்து கொண்டு இரவைக் கழிக்கலாம். அந்தப் பேய்களால் உன்னைப் பார்க்க முடியாது. சத்தம் செய்யாமல் மேலே ஏறி என்னிடம் ஒளிந்து கொள். பேய்கள் வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றது.

தனது நன்றியை அந்த மரத்துக்குத் தெரிவித்துவிட்டு, அந்த இளைஞன் அடர்ந்த மரக்கிளைகளுக்குள் ஒளிந்து கொண்டான். நடு இரவாகி விட்டது. காட்டிலுள்ள பூச்சிகள் சத்தமிடும் ஒலி மட்டும் கேட்டது. திடீரென பேய்கள் கும்பலாக அந்தப் பக்கம் வந்தன. "அவன் எங்கே? எங்கள் சகோதரனைக் கொன்ற அந்த மனிதன் எங்கே? அவனைக் கொல்ல வந்திருக்கிறோம்.
 அவன் மட்டும் கிடைத்தால் அவனை கண்ட துண்டமாக வெட்டி விடுவோம்," என்று ஆத்திரத்துடன் கத்திக் கொண்டே அந்த வாலிபனைத் தேட ஆரம்பித்தன. 

ஒவ்வொரு மூலையிலும் தேடியும் அவனைக் காண முடியாததால் அந்தப் பேய்களின் ஆர்ப்பாட்டமும் கூக்குரலும் அதிகரித்துக் கொண்டே போயின. அந்த சத்தத்தில் பூச்சிகளின் ஒலியும் காற்று வீசும் ஒலியும் அமுங்கிப் போயின.

 பேய்கள் இப்போது ஒவ்வொரு மரத்தையும் நோக்கி, "அவன் எங்கே?" என்று கேட்டன. மரங்கள் தனக்குத் தெரியாது என்று சொல்ல, கடைசியில் இளைஞன் ஒளிந்திருந்த பகார் மரத்தை அடைந்தன. "எங்கள் சகோதரனைக் கொன்ற அந்த மனிதன் எங்கே?" என்று பகார் மரத்தைக் கேட்க, "அவனை நான் பார்க்கவில்லை. அவன் காட்டில் வேறு எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறான்," என்று அந்த மரம் சொல்லிவிட்டது.

ஏமாற்றமடைந்த பேய்கள் இறுதியில் அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டன. மீண்டும் அந்தக் காட்டில் அமைதி நிலவியது. அபாயத்திலிருந்து தப்பித்துக் கொண்ட இளைஞன்,   "பகார் மரமே, நீ எனக்கு செய்த உதவியை நான் என்றென்றும் மறக்க மாட்டேன்," என்று சொல்லி அந்த மரத்தை அன்புடன் தழுவிக் கொண்டான். பிறகு பத்திரமாக வீடு திரும்பிய அந்த இளைஞன், தன் கிராமத்திலுள்ள அனைவருக்கும் தனக்கு நேரவிருந்த அபாயத்தையும் பகார் மரம் தன்னை எவ்வாறு காப்பாற்றியது என்பதையும் விவரித்தான். அவன் பத்திரமாகத் திரும்பி வந்த மகிழ்ச்சியில் கிராமத்து மக்கள் பெரிய விருந்தொன்று ஏற்பாடு செய்து தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். 

அந்த விருந்தில், தங்கள் கிராமத்து இளைஞனுக்கு பகார் மரம் செய்த பேருதவியைப் பாராட்டி, அன்றிலிருந்து பகார் மரத்தை வெட்டுவதில்லை என்று முடிவு செய்தார்கள். ஆகவேதான் இன்றும் நாகர்கள் பகார் மரத்தை மட்டும் வெட்டுவதில்லையாம்.

0 comments:

Post a Comment