நா... காக்க!

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு


 விளக்கம்: ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்திற்கு காரணமாகிவிடும்.”


  அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் நபர்களில் அரவிந்த் மிகக் கடுமையாகவும், திறமையாகவும் உழைப்பவன். இளைஞனான அரவிந்த் அந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்த போதிலும், பலரும் புகழும் படியாக தன் அலுவல்களைத் திறம்படச் செய்தான். மேலாளர் துரைசாமியே மனதிற்குள் அரவிந்தை பலமுறை வியந்து பாராட்டியிருக்கிறார். அவரது பேச்சு, வார்த்தைகள் கடுமையாக இருக்குமே தவிர, இயல்பாகவே துரைசாமி நல்ல மனிதர். அரவிந்தின் திறமை, உழைப்பு ஆகியவற்றால் கவரப்பட்டு, அந்த ஆண்டு அவரே அவனுக்கு பதவி உயர்வு தருவதாகத் திட்டம் போட்டிருந்தார்.


அவர் மனதில் இருந்ததைப் பற்றி அறியாத அரவிந்த் ஒருநாள் அ  லுவலகத்தில் அவரைத் தனியே சந்தித்துப் பேசினான்.
"சார், உங்களிடம் ஒரு விஷயம் பேச அனுமதிப்பீர்களா?"
"சொல் அரவிந்த், என்ன வேண்டும்?" என்று கேட்டார் மேலாளர்.
"நான் வேலைக்குச் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன..."
"ஆகட்டும். அதற்கென்ன இப்போது?"
"நான்..... எனக்கு...... பதவி உயர்வு பற்றி...."

தான் நினைத்துக் கொண்டிருந்ததை அரவிந்த் நேரிடையாகக் கேட்டதை அறிந்து துரைசாமி ஆச்சரியப்பட்டார். இருந்தாலும் தனது சுபாவப்படி அரவிந்திடம் கடுமையாகப் பேச ஆரம்பித்தார்.

'பதவி உயர்வு தரும் அளவுக்கு நீ என்ன சாதித்து விட்டாய்?" என்று கேட்டார். அரவிந்தின் இள ரத்தம் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சூடேறியது. சார், என்னுடைய திறமையும் உழைப்பும் உங்களுக்கே தெரியும்" என்று கூறினான் அரவிந்த்.

"அவற்றைக் குப்பையிலே போடு. அவற்றால் அலுவலகத்திற்கு என்ன லாபம்?" என்றார் துரைசாமி. இதை கேட்டதும் அரவிந்துக்கு ஏனோ அன்று சுர் எனக் கோபம் வந்தது.
"ஏன் லாபமில்லை? என்னுடைய உழைப்பை நன்றாக உறிஞ்சிவிட்டு ஏன் இப்போது இப்படிப் பேசுகிறீர்கள்?" என்று கோபத்தில் கத்தினான் அரவிந்த்.

தன்னைப் பற்றி அரவிந்த் இவ்வாறு நிதானம் தவறிக் கூறியதைக் கேட்டு துரைசாமியும் கோபம் அடைந்தார்.

"உன் போன்ற நாவடக்கம் இல்லாத ஆள் என் அலுவலகத்திற்குத் தேவையில்லை.உனக்கு பதவி உயர்வும் தர முடியாது, வேலையும்  கிடையாது. போ, வெளியே"என்று சீறி வெடித்தார்.

பாவம், அரவிந்த்! கோபத்தில் நிதானம் இழந்து, தான் பேசிய சில வார்த்தைகளால் தனக்கு வரவிருந்த அரியவாய்ப்பைத் தானே கெடுத்துக் கொண்டு தன் வேலையையும் இழந்து விட்டான்.


அதனால்தான் வள்ளுவர் அப்பொழுதே நாவை கட்டுப்படுத்தி வாழச் சொல்லியிருக்கிறார். 

0 comments:

Post a Comment