சசிகலா எடுத்த முடிவு

 

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிக் கொண்டு இருந்த உடலைக் கீழே வீழ்த்தினான். பிறகு அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் சேல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, "மன்னா! உன்னுடைய மன உறுதியைப் பாராட்டுகிறேன். உன் லட்சியத்தை நீ அடைய ஏடுத்துக்கொள்ளும் முயற்சிகளையும் பாராட்டுகிறேன். சிலர் ஏதோ ஒன்றை  அடைவதற்காகப் பாடுபட்டு, பின்னர் தவறான முடிவு எடுக்கின்றனர். சசிகலா என்ற பெண் அடைய நினைத்ததுஒன்று! ஆனால், அது நிறைவேறும் வேளையில் தவறாக ஒரு முடிவு எடுத்துவிட்டாள். 

 
 அவளுடைய கதையைக் கூறுகிறேன், கேள்" என்றது. ஜெகந்நாதபுரியில் ஜெகன் என்ற சிறுவன் வசித்து வந்தான். அவனுக்குக் கல்வி கற்க வேண்டும் என்ற தீவிர ஆர்வக்கோளாறினால், ஜெகன் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டான். மனம் போனபடி பல ஊர்களை சுற்றியபின் ஒருநாள் ஒரு ஊரில் ஆற்றங்கரையில் அமர்ந்து சிந்தனை செய்தான். அப்போது "ஐயோ! காப்பாற்றுங்கள்!" என்ற கூக்குரல் காதில் விழ, நிமிர்ந்து பார்த்தவனின் கண்களுக்கு ஆற்றில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் தென்பட்டான். உடனே, ஆற்றில் குதித்து நீச்சலடித்து அவனைக் காப்பாற்றி விட்டான்.

அந்தச் சிறுவன் பெயர் நவநீதன் என்றும், பள்ளியில் படித்து வந்த மாணவன் என்றும் அறிந்தான். படிப்பதில் விருப்பமற்ற அவனைப் பள்ளியில் சென்று படிக்கும்படி அவன் பெற்றோர் வற்புறுத்தினர். ஆனால், படிப்பு ஏறாததால் தினமும் குருவிடம் அடிவாங்க நேர்ந்தது. அதனால் வெறுப்புற்ற நவநீதன் ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு  செய்தான்.

ஆனால், குதித்தபின் மனம் மாறிக் கூச்சலிட ஜெகனால் காப்பாற்றப் பட்டான். தன்னைக் காப்பாற்றிய ஜெகனிடம் அவனுக்கு நன்றி விசுவாசம் ஏற்பட, அவனைத் தன் உயிர் நண்பனாக பாவிக்கத் தொடங்கினான். ஒருநாள் நவநீதன் ஜெகனிடம், "உனக்குப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளது. அதனால் நீ பள்ளியிலோ அல்லது தனியாக ஏதாவது ஓர் ஆசிரியரிடமோ கல்வி கற்பாய். அதற்கான பணத்தை நான் சம்பாதித்துத் தருகிறேன்" என்றான்.

அதைக் கேட்டு, ஜெகன் மகிழ்ச்சியில் மூழ்கினான். நவநீதனுடன் அவனுக்கு இருந்த நட்பு மேலும் ஆழமானது. பலவித இடங்களில் வேலை செய்து நவநீதன் சம்பாதித்துக் கொடுக்க, ஜெகன் ஆசிரியரிடம் தட்சிணை கொடுத்து நன்றாகக் கல்வி கற்றான். காலப்போக்கில் இருவரும் வளர்ந்து வாலிபர்கள் ஆயினர். ஒருநாள் அவன் நவநீதனிடம், "நான் கூடுபாய்தல் என்ற வித்தையை கற்க வேண்டும். அதற்கு நீ உதவி செய்வாயா?" என்று கேட்க, நவநீதனும் சம்மதித்தான்
 
 பிறகு அதைப் பற்றிய விவரங்களை சேகரித்த ஜெகன் ஆதிமூலர் என்ற சித்தருக்கு அந்த வித்தை தெரியும் என்று அறிந்தான். இருவரும் அவரை நோக்கிச் சேன்றனர். ஒரு காட்டில் தனியாக ஆசிரமம் அமைத்து வசித்து வந்த ஆதிமூலரை அடைந்து அவர் பாதங்களில் விழுந்து வணங்கினர். பிறகு ஜெகன் தான் வந்த விஷயத்தைக் கூறி, தனக்கு அந்த அபூர்வ வித்தையைக் கற்றுத் தருமாறு கெஞ்சினான். ஆனால், அவர் மறுத்து விட்டார். ஜெகன்
போன்ற சாதாரண இளைஞர்களுக்கு அந்த வித்தை தெரிந்தால் அதை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்று எண்ணினார்.

அதனால் அந்த வித்தையை யாருக்கும் கற்றுக் கொடுக்கக் கூடாது என்றும் எண்ணினார்.உடனே ஜெகன் பணிவுடன், "சுவாமி! உங்களுக்குத் தெரிந்த அந்த அபூர்வ வித்தையைக் கற்கும் தகுதி எனக்கு இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், நாங்கள் இருவரும் வெகு தொலைவில் இருந்து வருகிறோம். ஆகையால் உங்களுடைய ஆசிரமத்தில் தங்கி உங்களுக்குப் பணிவிடை செய்வதற்கு அனுமதியுங்கள்" என்றான்.

அதற்கு ஆதிமூலர் பதில் சொல்லாததால் மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று பொருள் கொண்டு இருவரும் ஆசிரமத்திலேயே தங்கினர். அவருக்கு வேண்டிய பழம், மூலிகைகளைக் கொண்டு வருதல் சமையல் செய்தல், ஆசிரமத்தை சுத்தம் செய்தல் போன்ற சகல வேலைகளையும் தாங்களே செய்தனர். இவ்வாறு மூன்று மாதங்கள் சென்றன.

ஒருநாள் காலையில் இருவரையும் தன்னருகில் அழைத்த சித்தர், "என்னுடைய அந்திமக்காலம் நெருங்கி விட்டதை உணர்கிறேன். கூடுவிட்டு கூடுபாயும் வித்தை என்னுடன் மறைந்து விடுவதை நான் விரும்பவில்லை. அதனால் அந்த வித்தையை ஜெகனுக்கு கற்றுத் தருவதென்று தீர்மானித்து இருக்கிறேன். ஆனால், இந்த வித்தையை தவறான முறையில் ஜெகன் பயன்படுத்தாமல் தடுக்கும் பொறுப்பை நவநீதனிடம் ஒப்படைக்கப் போகிறேன்" என்றார்.பிறகு ஜெகனை அருகில் அழைத்து அவன் காதில் வித்தையின் மந்திரத்தை உபதேசம் செய்தார். பிறகு நவநீதனை அழைத்து அவனுடன் சிறிது நேரம் கழித்தார். 
 
 சற்று நேரத்திற்குப் பிறகு அவருடைய உடலில் இருந்து ஆவி பிரிந்தது. அவருடைய அந்திமக் கிரியைகளை ஜெகனும் நவநீதனும் செய்து முடித்த பின், தங்கள் ஊரை நோக்கிப் புறப்பட்டனர்.

வரும் வழியில் அவர்கள் ஹஸ்தினகிரி எனும் நகரத்தினை அடைந்த போது, அங்கே நகர மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கி இருந்தனர். ஹஸ்தினகிரியின் மன்னரான ராஜபூஷணத்தின் ஒரே மகனான சுதாமா ஒரு விபத்தில் அன்று இறந்து விட்டதுதான் நகரமக்களின் சோகத்திற்கு காரணமாகயிருந்தது. மன்னரும், ராணியும் அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் மயக்கம் அடைந்தனர்.

உடனே நவநீதன் ஜெகனிடம், "நண்பா! நீ சுதாமாவின் உடலில் புகுந்து அவனை உயிர் பெற்றெழச் செய்வாய்" என்றான்."அதில் என்ன பயன்? நான் நிரந்தரமாக சுதாமாவின் உடலில் தங்க முடியாதே!" என்றான் ஜெகன்.

"ஒரு துயர சம்பவம் திடீரென நிகழும்போது அது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. அதனால்தான்  மன்னரும், ராணியும் மயக்கமடைந்து உள்ளனர். நீ சில ஆண்டுகள் உன் ஆவியை சுதாமாவின் உடலில் தக்க வைத்தால், என்றாவது ஒரு நாள் உண்மையறிந்தபின் சிறிது சிறிதாக மனத்தைத் தேற்றிக் கொள்வார்கள்"  எனறான் நவநீதன்.

அவன் உடனே தன் ஆவியை இறந்து கிடந்த சுதாமாவின் உடலில் புகுத்தி சுதாமாவை உயிர் பெறச் செய்தான். பிறகு நவநீதன் ஜெகனின் உடலைப் பத்திரமாக ஒரு மறைவான இடத்தில் ஒளித்து வைத்தான்.

இறந்து போனதாகக் கருதப்பட்ட சுதாமா திடீரென உயிர்பெற்று எழுந்ததும், மன்னரும், ராணியும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தனர்.

சுதாமாவின் உடலில் புகுந்தபின் ஜெகனின் குணங்களிலும், நடவடிக்கைகளிலும் மாற்றம்  ஏற்படத் தொடங்கின. அரை வயிறு உண்டு வாழ்ந்தவனுக்கு இப்போது அறுசுவை உணவு  கிடைத்தது. சுதாமா இறப்பதற்குமுன் ஒரு பிரபல வியாபாரியின் மகள் சசிகலாவிற்கும் அவனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.  முன்பு பேசிக் கொண்டபடி அவன் நவநீதனைச் சந்தித்தான். அப்போது நவநீதன் சுதாமாவின் உடலில் இருந்த ஜெகனிடம் தன் உடலுக்குத் திரும்பும்படிக் கூறினான்.
 
 "நான் ஏன் என் உடலில் புகவேண்டும்? நான் இந்த நாட்டுக்கு ராஜாவாக விரும்புகிறேன்"  என்று ஜெகன் மறுத்து விட்டான். சசிகலாவை மணம்புரிய மூன்று நாள்களே எஞ்சியிருக்கையில், ஒரு நாள் ஜெகன் ரதத்தை கண்மூடித்தனமான வேகத்தில் ராஜவீதியில் செலுத்தி, மன்னரின் தூரத்து உறவினர் மீது ரதத்தை மோதிக் கொன்றுவிட்டான்.

நீதி வழங்குவதில் மிகவும் நேர்மையான மன்னர் தன் மகனைக் கூண்டில் நிறுத்தி, விசாரணை செய்து, அவனைக் குற்றவாளி என்று முடிவானபின் சுதாமாவின் உடலைவிட்டு விலக இதுதான் சமயம் என்று கருதி உடனே தன் உயிரை சுதாமாவின் உடலில் இருந்து அகற்றினான். மீண்டும் தன் உடலில் புகுந்து கொள்ள அவன் விரும்பவில்லை.

பக்கத்து கிராமத்தில் அன்றுதான் விபத்தில் உயிர் நீத்த சிவதத்தன் என்ற பணக்கார வியாபாரியின் உடலில் புகுந்து கொண்டான். தான் மணக்கவிருந்த சுதாமா தூக்கு மேடையில் தூக்கிலிடப்படுவதற்கு முன்னமே இறந்து போனதை எண்ணி சோக வெள்ளத்தில் மூழ்கினாள். தானும் உயிரை விட்டுவிடலாம் என்று அவள் நினைத்தபோது அவள் முன் தோன்றினான்

நவநீதன். நடந்தவற்றை அவளுக்கு விளக்கினான். "சசிகலா! நீ மணப்பதாக இருந்த சுதாமாவின் உடலில் ஜெகனின் ஆவிதான் இருந்தது.  இப்போதும் ஜெகன் இறக்கவில்லை. அவன் தன் உயிரை சிவதத்தன் உடலுக்குள்  செலுத்திவிட்டு, சிவதத்தனாக வாழ்கிறான்.

இவ்வாறு ஜெகன் வித்தையைத் தவறாகக்  பயன்படுத்தக்கூடாது என்று சந்தேகித்த சித்தர் அதைத் தடுக்க எனக்கு ஒரு மந்திரம் உபதேசம் செய்திருக்கிறார். நீ விரும்பினால் சிவதத்தனை மணம் புரியலாம். இல்லையேல் சித்தர் எனக்கு சொல்லிக் கொடுத்த மந்திரத்தினால், ஜெகனின் உயிரை சிவதத்தனிடம் இருந்து அகற்றி, அவனுடைய உடலிலே புகுத்த முடியும். அதன் பிறகு அவனால் கூடுவிட்டு கூடு பாய முடியாது. உன் முடிவு என்ன?" என்றான்.

அதற்கு சசிகலா, "ஜெகனின் உயிர் அவன் உடலிலே இருக்கட்டும். அதன்பிறகு அவனை நான் மணம் செய்து கொள்கிறேன்" என்றாள். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனைப் பார்த்து "மன்னா! பெண்புத்தி
பின்புத்தி என்பது எவ்வளவு சரியென்று பார்த்தாயா? சுதாமாவை விட்டு ஜெகனை மணம் புரிய சம்மதித்த சசிகலாவின் முடிவு முட்டாள்தனமாக இல்லையா?

ஜெகனின் சொந்த உடலிலேயே அவன் ஆவியை ஏன் புகுத்தச் சொன்னாள்? என் சந்தேகத்திற்கு பதில் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது.அதற்கு விக்கிரமன், "பணக்காரன் ஏழையாவதும், ஏழை பணக்காரன்ஆவதும் இயற்கை! சசிகலா ஐஸ்வரியத்தைப் பொருட்படுத்தவில்லை.

அவள் மணம் புரிய விருந்தது சுதாமாவின் உடலிலிருந்த ஜெகனைத்தான்! உடலைவிட மனிதனுக்கு உயிர்தான் பிரதானம்! அதனால் அவள் திருமணம் நடந்திருந்தாலும் உண்மையில் ஜெகன்தான் அவள் கணவனாக இருந்திருப்பான்.

ஜெகனுடைய ஆவி சுதாமாவின் உடலில் இருந்த போது, அவனுடைய எளிய குணங்கள் மாறி, அகம்பாவமும், திமிரும் உண்டாயின. ஆக, அவன் எந்த உடலில் புகுந்து கொள்கிறானோ அதற்கேற்ப அவனுடைய குணங்கள் மாறலாம். ஆனால், கனின் உடலிலேயே அவன் உயிர் தங்கினால், அவனுடைய அறிவும், நல்ல குணங்களும் மாறாது.

ஜெகனின் அறிவையும் நற்குணங்களையும் அவள் விரும்பியதால், ஜெகனின் சொந்த உடலிலேயே அவன் உயிர் இருப்பதை சரியென்று கருதி அவ்வாறு முடிவெடுத்தாள். அதனால் அவள் எடுத்த முடிவு சரியே" என்றான்.விக்கிரமனது பதிலினால் அவனுடைய மௌனம் கலைய வேதாளம் தான் புகுந்திருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

 
 
வேதாளம் வரும்...

0 comments:

Post a Comment

Flag Counter