சஞ்ஜீவனி மந்திரம்

 
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம், "மன்னா! எத்தகைய உலக ஷேமத்திற்காக நீ இத்தகைய சிரமங்களை மேற்கொள்கிறாய் என்று தெரியவில்லை! உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? பிறருக்கு நன்மை செய்வதையே தங்களது நோக்கமாகக் கொண்டுள்ள சிலர், அத்தகைய வாய்ப்புகள் வரும் போது திடீரென்று என்ன காரணத்தினாலோ நிலைதவறி அந்த வாய்ப்புகளை தங்கள் சுய நலத்திற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அப்படிப்பட்ட ஒருவனான மாதவனின் கதையை உனக்குக் கூறுகிறேன், கேள்" என்று கதை சொல்லலாயிற்று.
 
ரங்கபுரத்து ஜமீன்தார் கேசவன் தன் ஒரே மகனான ராகவனை மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்ததன் விளைவாக, சிறுபருவத்திலேயே அவன் பல கெட்டப் பழக்கங்களுக்கு அடிமையானான். ஜமீன்தார் எவ்வளவோ நயமாகச் சொல்லிப் பார்த்தும் அவன் திருந்தவில்லை. வளர்ந்ததும் அவனுக்குத் திருமணம் செய்து வைத்தால் பொறுப்பு வந்து திருந்தி விடுவான் என்று நினைத்த ஜமீன்தார், ஜானகி என்ற பெண்ணை அவனுக்கு மணமுடித்து வைத்தார்.
 
 ஆனால், திருமணமான பின்னரும் ராகவன் திருந்தவில்லை. அவனுடைய மனைவி தங்கமான பெண்ணாக இருந்தாள். கணவனை தெய்வமாக மதித்து, அவனுக்கு சேவைகள் புரிந்து வந்தாள்.
 
திருமணமாகிப் பத்து ஆண்டுகள் ஆகியும், ராகவன் தம்பதியினருக்குக் குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை. அந்த சமயம், ஒருநாள் தயானந்தா என்ற யோகி அந்த கிராமத்திற்கு வந்தார். அவரிடம் சென்று ஜமீன்தார் தன் மகனைப் பற்றிக் கூறி அவனுக்குப் புத்திரபாக்கியம் அளிக்குமாறு வேண்டினார். அதற்கு யோகி, "கெட்டப் பழக்கங்களுக்கு அடிமையான உன் மகன் இன்று நலமாக இருப்பதற்கு உன் மருமகள் ஜானகியின் கவனிப்பும், சேவைகளுமே காரணம்! அவளுக்குக் குழந்தை பிறந்தால், அதன்பிறகு அவளால் கணவனை இப்போது போல் கவனித்துக் கொள்ள முடியாது. அதனால், அவன் உடல் நலம் கெடுவான்!" என்றார். "ஐயோ! அப்படியானால் என் வமிசம் ராகவனோடு அழிந்து விடுமா? என்று கேசவன் கலவரத்தோடுக் கேட்டார். "அப்படியில்லை! வமிச விருத்தி ஆக வேண்டுமென்று நினைத்தால், நான் உன் பொருட்டுக் கடவுளை வேண்ட முடியும்" என்றார்.
 
அவர் சரியென்றதும், உடனே, யோகி ஒரு கொய்யாப்பழத்தை அவரிடம் தந்து, "இதை உன் மருமகளிடம் தின்னக் கொடு! உனக்குக் கட்டாயம் பேரன் பிறப்பான்!" என்று சொல்லி விட்டு விடை பெற்றார். 

மருமகள் ஜானகி அதை உண்ண, அடுத்த ஆண்டே அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்க, அதற்கு மாதவன் என்று பெயரிட்டனர். ராகவனும் தன் பிள்ளை முகங்கண்டு, தன் கெட்டப் பழக்கங்களை விடுத்துத் திருந்தலானான். ஆனால் அவனது கெட்டப் பழக்கங்களால் அவன் உடல் நலம் கெட ஆரம்பித்தது.
 
ஒருநாள் ஜமீன்தார் ஐந்து வயது நிரம்பியிருந்த தன் பேரனை அழைத்து, "குழந்தை! உன் அப்பா மிகவும் நல்லவர்தான் ஆனால் அவரது பழக்கங்கள் நல்லதல்ல. நீ அவரை நேசி ஆனால் பழக்கங்களை நேசிக்காதே" என்றார். அதற்கு மாதவன், "தாத்தா! அப்பா நோய்வாய்ப்பட்டு துன்பப்படுவதைப் பார்க்க என் மனது வேதனைப் படுகிறது. அவருடைய உடல் குணமாக என்னால் ஏதாவது செய்ய முடியுமா?" என்று கேட்டதும் நெகிழ்ந்து போன ஜமீன்தார், "என் கண்ணே! கடவுளைப் பிரார்த்தனை செய்! நிச்சயம் கடவுள் செவி சாய்ப்பார்!" என்றார்.
 
மாதவனும் தினமும் கடவுளைப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். பத்து ஆண்டுகள் சென்றன. ராகவனின் உடல்நலம் மோசமாகியதே தவிர குணமாகவேயில்லை. அப்போது, முன்பு கிராமத்திற்கு வந்த அதே யோகி தயானந்தா மீண்டும் அங்கு வந்தார். தனது அந்திமக் காலம் நெருங்கி விட்டதை உணர்ந்த அவர், தன் காலம் முடியும் முன், தனக்குத் தெரிந்த ஆன்மீக விஷயங்களை யாருக்காவது கற்றுத் தர விரும்பினார். அவருடைய ஞான திருஷ்டியில் மாதவன் அதற்குத் தகுதியானவன் என்று தெரிந்ததால் அவனைத் தேடி ரங்கபுரத்திற்கு வந்தார். யோகியை மாதவனும், அவனுடைய குடும்பத்தினரும் உபசாரம் செய்து வரவேற்றனர். தன் மனத்திலிருப்பதை யோகி மாதவனிடம் வெளியிட்டார்.
 
"சுவாமி! என் தந்தை குணமடையும் வரை என் மனம் வேறு எதிலும் நாட்டம் கொள்ளாது" என்றான் மாதவன்.
 
சற்றுநேரம் யோசித்த தயானந்தா, "சரி! அப்போது ஒன்றுசெய்! பத்ரிகாரண்யத்தில் உள்ள மகானந்தர் என்ற முனிவரை சந்திப்பாய்! அவருக்கு சில ஆண்டுகள் சேவை செய்து, அவரிடமிருந்து சஞ்ஜீவனி மந்திரத்தைக் கற்று வா! அதன் மூலம் உன் தந்தை குணமாவார்!" என்றார்.
 
உடனே, மாதவன் பத்ரிகாரண்யம் சென்று மகானந்தரை அடைந்து தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். முனிவரும் அவனைப் பற்றித் தெரிந்து கொண்டு, "மகனே! சஞ்ஜீவனி மந்திரத்தைக் கற்றுக் கொள்ள அசாத்திய உடலுழைப்பும், மன உறுதியும் தேவை! அது உன்னிடம் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும்" என்று மாதவனிடம் சில விரதங்கள் இருக்கும் படி கூறினார்.
 
முனிவர் கூறியபடி மாதவனும் விரதங்களைக் கடைப்பிடித்தான். அதை கண்டு மகிழ்ந்த மகானந்தர், ஒருநாள் "மகனே! இங்கிருந்து கிழக்குத் திசையில் கரடிக் குகை என்று ஒன்று உள்ளது. அங்கு சில மூலிகைச் செடிகள் காணப்படும். அவற்றை எடுத்து வா! அந்தக் குகையில் ஒரு மலைப்பாம்பு வசிக்கிறது! எச்சரிக்கை!" என்று செல்லி அனுப்பினார்.
 
மாதவன் அவ்வாறே கரடிக் குகைக்குச் சென்று மூலிகைகளைப் பறித்தான். அவனைக் கண்டதும் சுருண்டு படுத்திருந்த மலைப்பாம்பு அவனைப் பிடிக்க வந்தது. ஆனால், அதனிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் விரைவாகத் தன் வேலையை முடித்துக் கொண்டு திரும்பினான் மகானந்தர் அந்த மூலிகைகளை ஒரு கமண்டலத்தில் இட்டார்.
 
பிறகு, "இங்கிருந்து வடக்கில் பேய்காடு என்ற அடர்ந்த வனம் உள்ளது. வனத்தின் நடுவில் ஒரு மிகப் பெரிய ஆலமரம் உள்ளது. ஆலமரத்தின் நிழலில் சில அபூர்வ மூலிகைகள் உள்ளன. அவற்றை எடுத்து வா! அங்கு பிசாசுகள் உள்ளன! எச்சரிக்கை!" என்றார்.
 
உடனே, மாதவன் பேய்காட்டில் உள்ள ஆலமரத்தை அடைந்தான். அவன் சென்ற போது, ஆலமரத்தில் பிசாசுகள் கும்மாளமடித்துக் கொண்டு இருந்தன. பகலில் ஆடிப்பாடி ஆர்ப்பாட்டம் செய்த அவற்றின் கொண்டாட்டம் நடு இரவு வரைத் தொடர்ந்தது. பின்னர் அவை உறங்கத் தொடங்கியவுடன், சத்தமின்றி மூலிகைகளைப் பறித்துக் கொண்டு மாதவன் திரும்பினான். மகானந்தர், அந்த மூலிகைகளையும் அதே கமண்டலத்தில் போட்டார். 
 
 
அடுத்ததாக அவன் காட்டிலுள்ள முதலைக் குளத்திற்குச் சென்று, அங்கு நடமாடும் முதலைகளிடம் சிக்காமல், குளத்து நீரில் வளர்ந்திருந்த அவர் குறிப்பிட்ட சில மூலிகைகளையும் கொண்டு வந்தான். அவற்றையும் அவர் கமண்டலத்தில் இட்டார். பிறகு அதில் நீர் ஊற்றினார். அதன்பிறகு அவனை நோக்கி, "நீ சஞ்ஜீவனி மந்திரத்தைக் கற்கத் தகுதியானவன்தான்!" என்று சொல்லி அதை உபதேசம் செய்தார். பிறகு, "மகனே! இந்த கமண்டலத்திலுள்ள மூலிகை நீரை எடுத்துச் செல்! அதை உன் தந்தைக்குப் பருகக் கொடுத்து, சஞ்ஜீவனி மந்திரத்தை உச்சரிப்பாய்! உடனே, உன் தந்தை குணமாகி விடுவார். ஆனால், இதை ஒரேயொரு முறை ஒருவருக்குத்தான் உபயோகிக்க முடியும். அவருக்குப் பதிலாக, நீ அதை அருந்தினால் உனக்கு சம்பூர்ண ஞானம் உண்டாகும். அவை உலக நன்மைக்குப் பயன்படும்!" என்று கூறினார். "நன்றி, சுவாமி! ஆனால் இதை என் தந்தைக்குத்தான் பயன்படுத்துவதாக இருக்கிறேன்!" என்று கூறி அவரை வணங்கி மாதவன் விடை பெற, "நீ விரும்புவது கட்டாயம் நடக்கும்!" என்று அவர் அவனை வாழ்த்தினார்.
 
தன் வீட்டை அடையுமுன், யோகி தயானந்தாரிடம் சென்று அவருக்கு நன்றி கூற, அவர் "மாதவா! நீ வெற்றியுடன் திரும்பியது கண்டு மகிழ்ச்சி! நாளை சூரியோதயத்திற்குள் நான் இறந்து விடுவேன். ஆகையால் என்னிடம் இருந்து முடிந்தளவு நீ கற்றுக் கொள்" என்றார்.
 
மாதவனும் `சரி'யென்று கூற அவர் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். நள்ளிரவானதும் மாதவன், அவரிடம் "சுவாமி உங்களிடம் இருந்து அனைத்தையும் கற்க விரும்புகிறேன். அதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா!" என்று கேட்டான். அதற்கு அவர், "உன்னிடத்தில்உள்ள கமண்டல நீரை எனக்கு அருந்தக் கொடுத்து, சஞ்ஜீவனி மந்திரத்தை உச்சரித்தால், நான் பல ஆண்டுகள் வாழ்வேன்!" என்றார்.
 
உடனே மாதவன் கமண்டல நீரை அவருக்குஅளித்து, மந்திரம் ஓத, அவரும் புத்துயிர் பெற்றார்.
 
அவரிடம் இருந்து முழுவதையும் கற்றுக் கொண்டபின், ஊருக்குத் திரும்பிய மாதவனுக்கு ஒரு பேராச்சரியம் காத்திருந்தது. அவனுடைய தந்தை சஞ்ஜீவனி மந்திரத்தின் உதவிஇன்றியே பூரண குணம் அடைந்து இருந்தார்.
 
இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், "மன்னா! முனிவர் மாதவனிடம் அந்த மந்திரத்தை தனக்காகக் கூறினால் உலகிற்கு நன்மை உண்டாகும், என்று கூறியதும் அவன் அதற்கு மறுத்துவிட்டான். ஆனால் அதன்பிறகு அவன் தான் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அதைப் பயன்படுத்தினான். இது சுயநலமில்லாமல் வேறு என்ன? தயானந்தர் தந்திரமாக தனது ஆயுளை நீட்டிக் கொண்டார். சஞ்ஜீவனி மந்திரத்தை உபயோகிக்காமல் மாதவனின் தந்தை எவ்வாறு குணம்அடைந்தார்? எனது இந்த சந்தேகங்களுக்கு விடை தெரிந்து இருந்தும் பதில் கூறாமல் இருந்தால் உனது தலை வெடித்து சுக்கு நூறாகி விடும்" என்றது.
 
அதற்கு விக்கிரமன், "சஞ்ஜீவனி மந்திரத்தை தனக்காக உபயோகித்துக் கொள்ள மாட்டேன் என்று மாதவன் சத்தியம் செய்தது உண்மைதான். கடைசி வரை அவன் அதைத்தான் கடைப்பிடித்தான். ஆனால் தயானந்தரின் அறிவுரைக்குப் பின் சஞ்ஜீவனி மந்திரத்தை உலக நன்மைக்காகப் பயன்படுத்துவதே நல்லது என்று உணர்ந்து தயானந்தருக்காக உபயோகித்தான். இது சுயநலம் இல்லாததுதான். அதேபோல் தயானந்தர் மாதவனை தன் வசப்படுத்தி தனது ஆயுளைக் கூட்டிக் கொண்டார் என்று கூறுவதும் தவறு. ஏனென்றால் அவர் இறந்தபின்பும் அவரது ஞனத்தால் உலகத்திற்கு நன்மையே ஏற்படும். ராகவனின் உடல்நிலை முற்றிலும் குணமடைந்ததற்கான காரணம் அவனது மனைவியின் பதிவிரதைதான். அது மட்டும்அல்லாமல் மகானந்தர் மாதவனை "நீ விரும்புவது நடக்கும்" என்று வாழ்த்தினார். இதுவும் ராகவன் குணமடைய காரணமாகும்" என்றான்.
 
மன்னனின் மௌனம் கலைந்ததும் வேதாளம் தான் சுமந்து வந்த உடலுடன் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
 
 
 
வேதாளம் வரும்...

0 comments:

Post a Comment