கடல்கன்னியை சிறைவைத்த மன்னன்!

 

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அதை சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நீ அனுபவிக்க வேண்டிய ராஜபோகத்தைத் துறந்துவிட்டு, நிகழ்காலத்தை மட்டுமன்றி உன் எதிர்காலத்தையும் நீ வீணாக்கிக் கொண்டு இருக்கிறாய். உன்னைப் போல் பூஷணன் என்ற மன்னனும் தனக்குக் கிடைக்கவிருந்த ஐஸ்வரியங்களை தனது மதியீனத்தால் கை நழுவ விட்டான். அவன் கதையைக் கேள்!” என்று கதை சொல்லத் தொடங்கியது.

வராககிரி, கூர்மகிரி ஆகிய இரண்டும் அடுத்தடுத்த ராஜ்யங்கள். வராககிரியை ஆண்டு வந்த பூஷணன் நல்ல குணமுடையவன். ஆனால் கூர்மகிரி மன்னன் மணிதரனோ அதற்கு நேர்மாறானவன்! நிர்வாகத்தை மந்திரியிடம் ஒப்படைத்துவிட்டு, ராஜபோகத்தை அனுபவிப்பதிலேயே காலத்தைக் கழித்தான். 
 
 கூர்மகிரி ராஜ்யத்துக்கு உட்பட்ட கடற்கரையில் அமைந்திருந்த ரத்னகிரியில், ரசாமந்தன் என்ற இளம் வாலிபன் வசித்து வந்தான். அவனுடைய தந்தையான மணிகண்டன் மிகப் பெரிய வியாபாரி. அவர் திடீரென ஒருநாள் இறந்துபோக, அதுவரை தந்தையின் வியாபாரத்தில் கவனம் செலுத்தாத சாமந்தன் வியாபாரத்தைத் தொடர்ந்து செய்ய முடியாமல் திக்கு முக்காடிப் போனான். இதனால் பலத்த நட்டம் ஏற்பட்டது. கடன்காரர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு தொந்தரவு செய்ய, சாமந்தன் கவலையில் ஆழ்ந்தான்.

ஒருநாள் இரவு உறக்கம் பிடிக்காமல் கடற்கரையில் உலவிக் கொண்டிருக்கையில், திடீரென்ற ஓர் அற்புதக் காட்சி தென்பட்டது. கடலிலிருந்து அழகே உருவான ஓர் இளம்பெண் எழுந்து வந்தாள்.  அவள் சாமந்தனை நோக்கி வந்து, “நான் ஒரு கடற்கன்னி! என் பெயர் ஹிசிகா! நான் இந்தக் கடலுக்குள் பாதாள லோகத்தில் வசிப்பவள்.

எங்கள் உலகத்தில் வாழ்ந்து வரும் ஜலேந்திரன் என்ற வாலிபன் மீது நான் பிரியம் கொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக இருந்தோம். அதற்கு முன் அவன் பூலோகத்தில் உள்ள நகரங்களை ஒருமுறை சுற்றிப் பார்த்து விட்டு வருவதாகக் கூறிவிட்டு மூன்று மாதங்கள் முன் சென்றவன் இன்னும் திரும்பவில்லை. எனக்கும் பூலோகத்தைச் சுற்றிப் பார்க்க ஆசையாக இருக்கிறது. எனக்கு உதவி செய்வீர்களா?” என்றாள்.

“ஹிசிகா! தற்சமயம் நான் பெரிய சிக்கலில் மூழ்கியிருக்கிறேன். எனக்கு வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்ய பணம் தேவை! அதற்கு உன்னால் உதவி செய்ய முடியுமெனில், நானும் நீ கேட்பதை செய்வேன்” என்றான். உடனே ஹிசிகா கடலுள் மூழ்கிச் சென்று, விலையுயர்ந்த முத்துகளை அள்ளிக் கொண்டு வந்தாள். அவற்றைப் பெற்றுக் கொண்ட சாமந்தன், அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவளுக்குத் தங்குவதற்கு சகல வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தான்.

 முத்துகளை விற்று, அதில் வந்த பணத்தைக் கொண்டு நஷ்டத்தை சரிசெய்து, மீண்டும் வியாபாரத்தைத் தொடங்கினான். தன் வீட்டுப் பெண்களுடன் ஹிசிகாவை தினந்தோறும் நகரில் நிடைபெறும் இசை, நடன நிகழ்ச்சிகளுக்கு அனுப்பி வைத்தான். ஹிசிகா அவற்றைப் பார்த்து மிகவும் ரசித்தாள். ஒருநாள் ஹிசிகா சாமந்தன் வீட்டுப் பெண்களுடன் ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த போது, அதே நிகழ்ச்சிக்கு கூர்மகிரி மன்னன் மணிதரனும் வந்திருந்தான். அழகே உருவான ஹிசிகாவைக் கண்டதும் மன்னன் மயங்கிப் போனான்.

தன்னுடைய வீரர்களை அவளை அந்த இடத்திலேயே பலவந்தமாகப் பிடித்து, தன் அரண்மனைக்கு இழுத்து வரச் செய்தான். சாமந்தன் வீட்டுப் பெண்கள் சாமந்தனிடம் விஷயத்தைச் சொல்ல, செய்வதறியாமல் திகைத்துப் போய் அவன் சும்மாயிருந்து விட்டான். அரண்மனைக்கு இழுத்து வரப்பட்ட ஹிசிகாவிடம், “பெண்ணே! நீ யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் உன்னைக் கண்டவுடன் உன் அழகில் மதி மயங்கிப் போனேன். என்னைத் திருமணம் செய்து கொள்! உன்னை மகாராணியாக்குகிறேன்” என்றான் மணிதரன்.

“ராஜா! நான் ஒரு கடற்கன்னி! நான் எப்படி பூலோகவாசியைக் திருமணம் செய்து கொள்ள முடியும்? தவிர, நான் ஏற்கெனவே எங்கள் உலகத்தைச் சேர்ந்த ஜலேந்திரனை மணம் செய்து கொள்வதாக இருக்கிறேன். அதனால் என்னை விட்டு விடுங்கள்!” என்று கெஞ்சினாள். “உன்னிடம் என் மனத்தைப் பறி கொடுத்து விட்டேன். இனி உன்னை விடுவதாக இல்லை!” என்று கூறிவிட்டு, ஹிசிகாவின் மனம் மாறும் வரை அவளை அந்தப்புரத்தில் சிறை வைக்க உத்தரவிட்டான்.

அதற்குள், பூலோகத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்த ஜலேந்திரன் கடலுக்குத் திரும்பினான். அங்கு ஹிசிகாவைக் காணாமல் தேடிஅலைந்து, அவள் பூலோகத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, ரத்னகிரியில் அவளைத் தேடியலைந்தான். இறுதியில் சாமந்தன் மூலம் அவள் மன்னரின் அந்தப்புரத்தில் சிறைப்பட்டிருப்பதைத் தெரிந்து கொண்டு, அவன் மணிதரனை சந்தித்தான்.
 
 மன்னனிடம் ஹிசிகாவை விடுதலை செய்யுமாறு கெஞ்சினான். அவனுக்கு பதிலளிக்க விரும்பாமல் மணிதரன் தன் மந்திரியை நோக்கினான். மன்னனின் மனத்தைப் புரிந்து கொண்ட மந்திரி ஜலேந்திரனை நோக்கி, “ஜலேந்திரா! எங்கள் ராஜ்யத்தில் நிலத்தில் வசிப்பவர்களாயினும், கடலில் வசிப்பவர்களாயினும் அனைவரும் எங்கள் ராஜாவின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். அதனால் ஹிசிகா மன்னரின் உடைமை!” என்றார்.

“மந்திரியாரே! உங்கள் மன்னரின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் நாங்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் மன்னரேயானாலும், தனிப்பட்ட நபர்களின் அந்தரங்கத்தில் குறுக்கிட அவருக்கு அதிகாரமில்லை” என்றான்.
“வார்த்தையை அளந்து பேசு! உங்கள் அந்தரங்கத்தில் மன்னர் குறுக்கிடவில்லை. ஹிசிகா ஒரு குற்றவாளி! கடலில் வசிப்பவர்கள் பூலோகத்தில் மன்னரின் அனுமதியின்றி நுழையக் கூடாது. அதனால்தான் அவளை சிறை வைத்து இருக்கிறோம். அதே குற்றத்திற்காக உன்னையும் சிறைப்பிடிக்க முடியும். நீங்கள் தண்டனையிலிருந்து தப்ப வேண்டுமெனில் ஒரு நிபந்தனை உள்ளது” என்றார் மந்திரி.

“அந்த நிபந்தனை என்னவென்று சொல்லுங்கள்!” என்றான் ஜலேந்திரன். “கடலில் முத்துகளும், இரத்தினங்களும் மிகுந்துள்ளன என்பது உனக்குத் தெரியும். நீ எங்களுக்கு ஒரு லட்சம் இரத்தினக்கற்கள் கொண்டு வந்து கொடுத்தால், ஹிசிகா விடுதலை செய்யப்படுவாள்” என்றார் மந்திரி.

அதற்கு அவன் ஒப்புக் கொண்டு, கடலுக்குள் சென்று ஒரு லட்சம் இரத்தினக்கற்கள் சேகரித்துக் கொண்டு வந்து மணிதரனிடம் அளித்தான். ஆனால் அப்படியும் ராஜா ஹிசிகாவை விடுதலை செய்யவில்லை. மாறாக, இரத்தினக்கற்களை விற்ற பணத்தை தன் படை பலத்தைப் பெருக்கவும், ஏராளமான ஆயுதங்கள் வாங்கவும் செலவழித்தான்.
இந்த செய்தி ஒற்றர்களின் மூலம் வராககிரி மன்னன் பூஷணனை எட்டியது. உடனே பூஷணன் ஒரு பெரும் படையுடன் திடீரென கூர்மகிரியின் மீது படையெடுத்தான்.  கடுமையாக மூண்ட போரில் மணிதரன் கொல்லப்பட்டான். கூர்மகிரி பூஷணன் வசம் வந்தது.

சிறைப்பட்டிருந்த ஹிசிகாவை விடுதலை செய்த மன்னன் பூஷணன், ஜலேந்திரனை அழைத்து, “அன்பினால் இணைந்த உங்களை சேர்த்து வைக்க விரும்புகிறேன். நீங்கள் உங்கள் உலகத்திற்குச் செல்லுங்கள்” என்று கூறினான்.
மன்னன் பூஷணன் தங்களை என்ன செய்வானோ என்று கலங்கிய ஹிசிகாவிற்கும், ஜலேந்திரனுக்கும் அவனுடைய பெருந்தன்மை மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. “மகாராஜா! உங்கள் உதவிக்காக உங்களுக்கு எங்களால் முடிந்த அளவு முத்துகளும், இரத்தினமும் தரவிரும்புகிறோம்” என்றனர். அதைக் கேட்டுப் புன்னகைத்த பூஷணன், “நீங்கள் எனக்கு எதுவும் தர வேண்டாம். உங்கள் இருப்பிடத்திற்குச் சென்று வளமுடன் வாழங்கள்” என்று கூறி விடை கொடுத்தான்.

இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், விக்கிரமனை நோக்கி, "மன்னா! நீண்ட காலமாக கூர்மகிரி மன்னனான மணிதரனுடன் நட்புறவுடன் இருந்த பூஷணன் திடீரென மனம் மாறி, அவனுடன் போர் தொடுத்தது ஏன்? ஹிசிகாவை விடுதலை செய்தது ஏன்? ஹிசிகாவும், ஜலேந்திரனும் அவனுக்கு முத்துகளும், இரத்தினமும் தருவதாகக் கூறியபோது அவற்றை வேண்டாமெனக் கூறியது ஏன்?


தனக்குக் கிடைக்கவிருந்த செல்வத்தை வேண்டாமெனக் கூறியது அவனுடைய அசட்டுத்தனம் அல்லவா? என்னுடைய சந்தேகங்களுக்கு விளக்கம் தெரிந்துஇருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்குநூறாகும்" என்றது.
  

வேதாளம் வரும்...

0 comments:

Post a Comment

Flag Counter