மன்னரும், திருடனும்

 

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின் கீழே இறங்கி அவன் அதை சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்தது "விக்கிரமா ஏதோ ஒரு காரணத்தால் யாரோ நீ அவமானப் படும் படி ஏதோ செய்திருக்கிறார்கள், அதில்இருந்து மீளவே நீ இவ்வாறு சிரமப்படுகிறாய் என்று தோன்றுகிறது. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் செயற்படுபவர்களுக்குக் கூட சில நேரங்களில் தோல்வி ஏற்படுகின்றன. அப்படி நன்மை செய்ய நினைத்து சங்கடத்துக்கு ஆளான பார்த்திப மன்னனின் கதையை உனக்கு இப்போது கூறுகிறேன் கவனமாகக் கேள்" என வேதாளம் கதை சொல்லத் தொடங்கியது.
 
 பார்த்திபன், மன்னர் சூரவர்மனின் ஒரே புதல்வன். சிறு பிராயத்தில் தயானந்த முனிவரின் குருகுலத்தில் சேர்ந்து பல ஆண்டுகள் பயின்று அனைத்து கலைகளும் கற்றுத் தேர்ந்தான். ஒருநாள் முனிவர் பார்த்திபனை அழைத்து "பார்த்திபா, நீ ஒரு புத்திசாலியான மாணவனாகவும் நேர்மையானவனாகவும் இத்தனை ஆண்டுகள் என்னிடம் பயின்றாய். கற்க வேண்டிய அனைத்தும் நீ கற்றுக் கொண்டு விட்டாய். நீ இனி உன் ராஜ்யத்திற்குத் திரும்பலாம். 

கல்வி என்பது ஒருத்தனுடையக் கண்களைப் போன்றது. அந்த அறிவுக் கண்களை நன்கு பயன்படுத்தி உன் தந்தைக்குப் பிறகு ராஜ்யப் பொறுப்பை ஏற்று நீ சீராக ஆட்சி செய்ய வேண்டும். உன்னுடைய குடிமக்களின் நலனைப் பேணி பாதுகாப்பதே உன் முக்கிய பொறுப்பு. உன் கீழே பணியாற்றுவோரை முழுதும்  நம்பாமல் நீயே நேராக மக்களின் குறைகளை அறிந்து கொண்டு அவற்றைத் தீர்க்க முயற்சி செய். மக்களுக்கு உதவி செய்வதே அரச லட்சணம். இத்தனை ஆண்டுகள் நீ கற்ற கல்வியின் நோக்கமே அதுதான் என்று எண்ணி செயற்படுவாய். இதுவே நீ எனக்குத் தரும் தட்சிணையாக இருக்கட்டும்" என்று அவனை வாழ்த்தி அனுப்பினார்.

குருகுலத்தில் கல்வி பயின்று திரும்பிய தன் புதல்வனைக் கண்டு மன்னர் சூரவர்மன் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். ஏற்கனவே திட்டமிட்டபடி பார்த்திபனுக்கு முடி சூட்டி விட்டு சூரவர்மன் ஓய்வெடுக்கத் தொடங்கினார். பார்த்திபனும் தன் நாட்டை திறம்பட ஆண்டு வந்தான். தயானந்த முனிவரின் கூற்றுக்கிணங்க, மக்களின் குறைகளை நேரடியாகக் கண்டு தீர்த்து வந்தான். ஒரு நாள் துணி வியாபாரி போல் வேடம் தரித்து பார்த்திபன் தலைநகரை விட்டுத் தனியே கிளம்பிச் சென்றான்.

தலைநகரின் எல்லையிலிருந்த நதியைக் கடந்து ஒரு கிராமத்தை நோக்கிச் செல்கையில் திடீரென "காப்பாற்றுங்கள், என் பிள்ளையைக் காப்பாற்றுங்கள்" என்று ஒரு கூக்குரல் கேட்டது. குரல் கேட்டுத் திரும்பிய பார்த்திபன் பாதை ஓரத்தில் ஓர் கிணற்றங்கரையில் ஒரு மனிதன் நின்று கொண்டு அவனைக் கூப்பிடுவதை உணர்ந்தான்.
 
 அந்த மனிதன் பார்த்திபனை நோக்கி ஓடி வந்து "ஐயா, என் குழந்தை அந்தக் கிணற்றுக்குள் விழுந்து விட்டது. எனக்கு கிணற்றில் இறங்கத் தெரியாது. தயவு செய்து என் குழந்தையை வெளியே எடுங்கள்" என்று அழுது கொண்டே கெஞ்சினான். உடனே துணி மூட்டையையும், உணவுப் பண்டங்களையும் கீழே வைத்து விட்டு, பார்த்திபன் சரசரவென்று கிணற்றுக்குள் இறங்கினான். ஆனால் அங்கு குழந்தை இருப்பதாகத் தெரியவில்லை. 

களைத்துப் போன பார்த்திபன் கிணற்றுக்குள்ளிருந்து வெளியே வந்தால் அங்கே அந்த மனிதனையும் காணவில்லை தனது துணிமூட்டை உணவுப் பண்டங்களும் காணவில்லை. தன்னை அந்த மனிதன் ஏமாற்றி விட்டான். என்று பார்த்திபனுக்குப் புரிந்தது. அவன் மௌனமாக அரண்மனை திரும்பினான்.

இந்த நிகழ்ச்சி நடந்து சில நாட்களுக்குப் பிறகு, பார்த்திபன் ஒருநாள் சபையில் அமர்ந்து கொண்டுஇருக்கையில் அவனது வீரர்கள் ஒருவனின் கைகளைக் கட்டி இழுத்து வந்தனர். "அரசே, நகை வியாபாரி புண்ணிய கோடி வீட்டில் திருடும்போது இவனைக் கையும் களவுமாகப் பிடித்தோம்" என்றனர் அவனது வீரர்கள். அவன் வேறு யாருமில்லை. அன்று பார்த்திபனை ஏமாற்றித் திருடிய அதே ஆள்தான்.

"யாரங்கே! இவனை சிறையில் அடையுங்கள். நாளை விசாரணை செய்யலாம்" என்று பார்த்திபன் கூற அவனை வீரர்கள் இழுத்துச் சென்றனர். அன்றிரவு பார்த்திபன் அதே துணி வியாபாரி போல மீண்டும் வேடம் தரித்து சிறைச்சாலைக்குச் சென்று, அந்தத் திருடனை சந்தித்தான். மன்னர் என்று அறியாத அந்தத் திருடன் ஆச்சரியத்துடன், "அட, நீயும் என்னைப் போல் திருடனா?" என்று கேட்க பார்த்திபன் தன் வேடத்தைக் கலைத்தான்.
 
 மன்னரிடமே தன் கைவரிசையை காட்டியிருக்கிறோம் என்று அறிந்த அந்தத் திருடன் பயந்து நடுங்கினான்.
"அரசே, என்னை மன்னித்து விடுங்கள். தெரியாமல் அன்று தங்களை ஏமாற்றி தங்கள் உடமைகளையேத் திருடி விட்டேன். என்னை தண்டித்து விடாதீர்கள்" என்று கதறியழுதான்.

"உஷ்...! சத்தம் செய்யாதே" என்று அவனை எச்சரித்த பார்த்திபன், "குற்றம் செய்த நீ தண்டனையிலிருந்து தப்ப முடியாது. நாளை விசாரணைக்குப் பிறகு உனக்கு என்ன தண்டனை தருவது என்பதை முடிவு செய்வேன். ஆனால் நீ என்னிடமிருந்து திருடிய குற்றத்திற்காக உன்னை தண்டிக்க மாட்டேன். நீ அதைப் பற்றி வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது" என்று கூறி விட்டு பார்த்திபன் அரண்மனை திரும்பினான்.

மறுநாள் சபை கூடியது. திருடன் சிறையிலிருந்து விசாரணைக்காக அழைத்து வரப் பட்டான். அவனை நோக்கி பார்த்திபன் "நகை வியாபாரி புண்ணியகோடியின்  வீட்டில் நீ திருடியது உண்மையா?" என்றான். "ஆம் பிரபு" என்றான் திருடன்.

"இதுதான் உன் முதல் குற்றமா அல்லது உன்னுடைய தொழிலே திருடுவதுதானா?" என்றான் பார்த்திபன்.


"திருடுவது என் தொழில் இல்லை. மகாராஜா, தயவு செய்து நான் சொல்வது முழுவதையும் கேளுங்கள்" என்று தொடங்கிய அந்தத் திருடன், "நான் படித்தவன். வேலை தேட முயன்று கொண்டிருந்த போது, என் மீது திருடியதாக தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு நான் சிறையில் அடைக்கப்பட்டேன். செய்யாத குற்றத்திற்காக சிறை சென்று மீண்ட எனக்கு யாரும் வேலை தரவில்லை. வாழ்க்கையில் வெறுப்படைந்த நான் என் உயிரை மாய்த்துக் கொள்ள கிணற்றில் குதித்து விட எண்ணினேன். ஆனால் எனக்கு தைரியம் வரவில்லை. அந்த சமயம் அங்கே ஒரு மனிதன் பெரிய துணி மூட்டையுடன் வருவதைக் கண்டதும் திடீரென எனக்கு ஒரு விபŽத ஆசை ஏற்பட்டது. அவன் கையிலிருந்த மூட்டையைத் திருட நினைத்து என் குழந்தை கிணற்றில் விழுந்து விட்டதாக நாடகமாடி அந்த மூட்டையைத் திருடினேன்.

 
 அதில்இருந்த உணவுப் பண்டங்களை வயிறார சாப்பிட்டு, துணிகளை விற்றுப் பணமாக்கினேன். செய்யாத குற்றத்திற்காக என்னை எல்லாரும் திருடன் என்று நம்புகையில் நிஜமாகவே திருடனானால் என்ன தவறு என்று தோன்றியது. அதன்பிறகு தொடர்ந்து சில முறை திருடி, இப்போது அகப்பட்டுக் கொண்டேன்" என்றான்.

"உனக்கு இந்தத் தொழிலை விட்டுவிட்டு நேர்மையாக வாழ்க்கை நடத்த ஆசை உள்ளதா?" என்று பார்த்திபன் கேட்டான். "எனக்கு உழைத்துப் பிழைக்க ஒரு வேலை தேடிக் கொடுப்பீர்களானால் நான் இனி திருடவே மாட்டேன்" என்றான் திருடன்.

"சரி. நீ இதுவரை திருடிய பொருட்களை அதற்குரியவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிடு. உனக்கு ஒரு வேலை கிடைக்க நான் ஏற்பாடு செய்கிறேன். உன்னை மன்னித்து விடுகிறேன்" என்றான் பார்த்திபன்.

அவனுடைய தீர்ப்பைக் கேட்டு திருடனே ஆச்சரியப்பட்டுப் போனான் எனில் சபையோரைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.


இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, "விக்கிரமா! பார்த்திபனுடைய செயலைப் பார்த்தாயா? சிறையில் அந்தத் திருடனை சந்தித்த போது ‘குற்றம் செய்த நீ தண்டனையிலிருந்து தப்ப முடியாது’ என்று கூறியவன், மறுநாள் விசாரணைக்குப் பிறகு அந்தத் திருடனுக்கு தண்டனையே தரவில்லை. அவனை மன்னித்து விட்டான். இது மிகவும் ஆச்சரியமாக இல்லையா? அவனுக்கு தண்டனை அளித்தால் சபையில் எல்லார் முன்னிலையிலும் மன்னரே தன்னிடம் ஏமாந்து போனதைக் கூறி அவமானம் ஏற்படச் செய்வான் என்ற பயத்தினால்தான், அவனுக்கு தண்டனை தரவில்லை என்று தோன்றுகிறது.

தன்னையே ஏமாற்றத் துணிந்த ஒரு திருடனை மன்னிப்பது எந்த விதத்தில் நியாயம்? இதுதான் அரச லட்சணமா? இவ்வாறு ஒரு நாட்டு அரசனே செயற்பட்டால், நாட்டில் குற்றங்கள் பெருகி விடாதா? என்னுடைய சந்தேகங்களுக்கு விளக்கம் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால், உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது.

அதற்கு விக்கிரமன், "தண்டனையின் நோக்கம் என்ன? ஒருவனை மீண்டும் அந்தக் குற்றம் செய்யாதவாறு திருத்துவதுதான் ஆனால் அந்தத் திருடனுடைய வாக்குப்படி அவன் செய்த தவறுகளுக்காக வருந்துவதும் நேர்மையான வாழ்க்கை நடத்த அவன் தயாராக இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அப்படிப்பட்டவனை ஏன் தண்டிக்க வேண்டும்? தவிர, குற்றவாளியை குற்றம் புரியத் தூண்டியது எது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 

அந்தத் திருடன் இயற்கையிலே நல்லவன் என்பதும் வீண் பழியால் செய்யாத தவறுக்கு சிறைப் பட்டதால் அவன் வாழ்க்கை தடம் புரண்டதையும் அறிந்தான்.  ஆகவே தான் பார்த்திபன் அவனை மன்னித்தானே தவிர அவமானத்திற்கு பயந்து அல்ல. தான் ஏமாற்றப்பட்டது மக்களுக்குத் தெரிய வேண்டாம் என்று பார்த்திபன் ஏன் நினைத்தான் தெரியுமா? உதவி செய்யப்போய் ஏமாற்றப் பட்ட தன் கதை ஊருக்குத் தெரிந்தால் மக்களுக்கு பிறருக்கு உதவி செய்தால் தாங்களும் இவ்வாறு ஏமாறலாம் என்ற எண்ணம் தோன்றலாம். அவ்வாறு மக்கள் சிந்திக்கக் கூடாதே என்று நினைத்துத்தான்" என்றான்.
விக்கிரமனது சரியான பதிலால் அவன் மௌனம் கலையவே, அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரேக் கிளம்பிப் போய் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

 
வேதாளம் வரும்...

0 comments:

Post a Comment

Flag Counter