காவல் பூதம்

 

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மேல் ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின் கீழ் இறங்கி அவன் அதை சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து, "மன்னா, உன் விடா முயற்சியைப் பார்த்தால் யாரோ சாது சந்நியாசிகள் சொன்னதைக் கேட்டு அதை முற்றிலும் நம்பி, அதை நிறைவேற்ற இவ்வாறு இரவும் பகலும் பாடுபடுகிறாயோ என்று சில சமயங்களில் தோன்றுகிறது. இப்படிப்பட்ட யோகிகள் சொல்லும் வார்த்தைகளின் உட்கருத்து என்னவென்று புரியாமல் தனது அழிவைத் தானே தேடிக் கொண்ட தேவநாதன் விஜயன் ஆகியோருடைய கதையைக் கூறுகிறேன். கவனமாகக் கேள்" என்று வேதாளம் கதை சொல்லலாயிற்று.

 பல ஆண்டுகளுக்கு முன், சுதர்சனம் என்ற ஒரு பணக்கார வியாபாரி இருந்தான். தனது திரண்ட செல்வத்தையெல்லாம் ஒரு கருவூலத்தில் பாதுகாப்பாக வைத்து, அதைக் காவல் காக்க தன் மனைவியின் தூரத்து உறவினனான விஜயனை நியமித்தான். அவன் நேர்மையாகப் பணி புரிகிறானா என்பதை அறிய அவன் மீது ஒரு கண் வைத்திருந்தான். இதைப்பற்றி அறியாத விஜயன், தினமும் தான் காவல் காக்கும் கருவூலத்திலிருந்தே சில பொற்காசுகளைத் திருடி வந்தான்.

சுதர்சனம் அதைப்பற்றி தன் மனைவியிடம் கூறினான். விஜயனை உடனே கண்டிக்கத் துடித்த மனைவியை சுதர்சனம் தடுத்து "நமது ஏராளமான செல்வத்தை நாமே தனியாகப் பாதுகாப்பது மிகவும் கடினம். வேறொரு நேர்மையான மனிதனைத் தேடுவதும் கடினம். அதற்கு பதில் விஜயனே அந்தப் பணியைத் தொடர்ந்து செய்யட்டும். நான் விஜயனைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறேன்" என்றான்.

விஜயன் தொடர்ந்து கஜானாவில்இருந்து பொற்காசுகளைத் திருடிக் கொண்டேயிருந்தான். நாளடைவில் அவன் இவ்வாறு திருடிச் சேர்த்தவற்றை இரு பானைகளில் நிரப்பி, கஜானா அறையின் பின்புறமுள்ள தோட்டத்தில் குழி தோண்டிப் புதைத்து வைத்து விட்டான். இந்தச் செய்கையும் சுதர்சனத்தின் கண் பார்வையிலிருந்து தப்பவில்லை. இனிமேலும் பொறுக்கக் கூடாது என்று கருதிய சுதர்சனம். விஜயனைக் கூப்பிட்டு கடுமையாகச் சாடினான். "நீ என் மனைவியுடைய உறவினன் என்பதால் உன்னிடம் இந்த வேலையை ஒப்படைத்தேன். ஆனால் நீ செல்வத்தை திருடி,  அதைப் பானைகளில் நிரப்பி தோட்டத்தில் புதைத்து வைத்திருக்கிறாய். உனக்கு என்ன தண்டனை விதிக்கலாம் என்று நீயே சொல்" என்று கோபித்துக் கொண்டான்.

 தனது திருட்டு வெளியானதால் விஜயன் பயந்து நடுங்கினான். உடனே தன் எசமானரின் கால்களில் விழுந்து, "நான் பெரிய தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சினான். உடனே சுதர்சனம், "உன்னை நான் மன்னித்து விடுகிறேன்" நீ திருடிய செல்வத்தையும் உனக்கே அளித்து விடுகிறேன். ஆனால் உன்னுடைய பணியின் நேர்மையையும் திறமையையும் சோதிக்க ஒரு சவால் விடுகிறேன். நீ பதுக்கி வைத்திருக்கும் என் பணத்தை நானே ஒரு வாரத்திற்குள் உனக்குத் தெரியாமல் திருடப் போகிறேன். உனது திறமையால் நான் திருடுவதைத் தடுத்து நிறுத்த முடியுமா பார். நீ தோற்றால், உன்னைக் கைது செய்து சிறையில் அடைக்கச் செய்வேன்" என்றான் சுதர்சனம்.

இந்த விஷயத்தை அறிந்த சுதர்சனத்தின் மனைவி, "அப்போதே அவனைக் கையும் களவுமாகப் பிடித்துஇருக்கலாம். அவன் இரண்டு பானை நிறைய திருடியவற்றை சேர்க்கும் வரை ஏன் விட்டு வைத்தீர்கள்?" "அப்படியில்லை. இப்போது இரண்டு பானை நிறைய பணம் திருடி விட்டான். அதை நான் திருடாமல் பாதுகாத்தால் அது அவனுக்கே சொந்தம் என்று ஆசை காட்டிஉள்ளேன். ஆகவே இத்தனைப் பணத்தைப் பாதுகாக்க வேண்டியாவது, இனிமேல் ஒழுங்காகப் பணியில் ஈடுபடுவான் என்று நினைக்கிறேன்" என்றான் சுதர்சனம்.

இதற்குள் நடந்த விஷயத்தைத் தன் மனைவியிடம் தெரிவித்த விஜயன், அவருடைய ஆலோசனையை நாடினான். அவள், "நமது கிராமத்து எல்லையில் உள்ள மலைக்குகையில் ஒரு சாமியார் இருக்கிறார். அவர் உதவியை நாடினால், இந்தப் பிரச்சினை தீரும்" என்றாள்.

உடனே விஜயனும் சாமியாரை சந்தித்து நடந்த விஷயங்களைக் கூறி யோசனை கேட்டான். அதற்கு அந்த சாமியார். "உனக்கு மந்திர விபூதி தருகிறேன். அதை அந்தப் பானைகள் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் தூவினால் அதன் பிறகு ஒரு வாரத்திற்கு அதை யாராலும் எடுக்க முடியாது. ஆனால் சுதர்சனத்தின் செல்வத்தை நீ இவ்வாறு ஒளித்து வைப்பதால் அந்தக் கொடிய பாவம் உன்னை வருத்தும். எது சரியென்று உனக்குத் தோன்றுகிறதோ, அதைச் செய்" என்றார்.

 அப்போதைக்கு அந்த செல்வத்தையும் அடைந்து, தன் வேலையும் தொடர்ந்தாலே போதும் என்று எண்ணிய விஜயன், பாவத்தைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. சாமியார் தந்த மந்திர விபூதியை வாங்கிச் சென்று பானைகள் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் தூவினான். இதனால் சுதர்சனத்தால் ஒரு வாரத்திற்குள் அந்தப் பானைகளையும் அவற்றிலுள்ள தன் பொற்காசுகளையும் எடுக்க முடியாமல் போயிற்று. ஒரு வாரமும்  கழிந்து விட்டது. சுதர்சனம் தன் நிபந்தனையில் தோல்வியுற்றான். ஆனால் விஜயன் உடல் எங்கும் எட்டாவது நாளே எரிச்சல் மூண்டது. பயந்து போன அவன் மீண்டும் அதே சாமியாரிடம் சென்றான்.

சாமியார் அவன் உடல் எரிச்சலைப் பற்றி அறிந்ததும், "அந்த நல்ல மனிதனின் செல்வத்தை நய வஞ்சகமாகத் திருடியதால் ஏற்பட்ட பாவம் உன்னை இப்போது பீடித்துள்ளது. ஆனால் இந்த எரிச்சலில்இருந்து விடுபடவேண்டுமானால் ஒரு பூதமாக மாறி அந்தப் புதையலைக் காத்து வா. இந்த ரகசியம் உன் மனைவிக்குக் கூடத் தெரிய வேண்டாம்" என்றார்.


தனது உடல் எரிச்சலைத் தாங்க முடியாத விஜயன் பூதமாக மாறுவதே மேல் என்று நினைத்தான். சாமியாரிடம், "சுவாமி நான் பூதமாக எத்தனை காலம் இருக்க வேண்டும்?" என்று கேட்டான். "இது உன்னுடைய தவறான செயலால் நிகழ்ந்தது. உன்னுடைய செய்கைக்காக இதை நீ அனுபவித்தேயாக வேண்டும். உன்னுடைய பொறுப்பை ஏற்க மற்றொரு பூதம் வந்தால், நீ சுய உருவம் பெறுவாய்" என்றார் சாமியார். வேறு வழியின்றி விஜயன் பூதமாக மாறினான். விஜயனின் மனைவி அந்தப் புதையலைத் தானே எடுத்துக் கொள்ள முயற்சித்தபோது ஒரு பூதம் அவளை பயமுறுத்த அவள் ஓடியே விட்டாள். அந்த பூதம் தன் கணவன் தான் என்று அவளுக்குத் தெரியவில்லை.

 விஜயனைக் காணாத அவன் மனைவி அந்த ஊரை விட்டேச் சென்று விட்டாள். ஆனால் சுதர்சனம் விஜயன் பணத்தோடு தலை மறைவாகி விட்டதாக எண்ணிக் கொண்டிருந்தான்.
பல ஆண்டுகள் கழிந்தன. அந்த கஜானா இருந்த இடம் மாறி விட்டது. அந்த இடத்தில் வேறு வீடு உருவாகி, அங்கு தேவநாதன் என்பவன் தன் குடும்பத்தினருடன் வசிக்கத் தொடங்கினான். தேவநாதன் ஒரு கஞ்சன். செலவாகுமே என்பதற்காகத் தன் பெண்ணுக்குத் திருமணம் செய்யாமலே காலம் கழித்தான். அவன் கஞ்சத்தனத்தைப் பொறுக்காத மகன் வீட்டை விட்டுப் போய்விட, அவன் மகள் தானே திருமணம் செய்து கொண்டு சென்றுவிட, அவன் மனைவி இறந்துவிட, தேவநாதன் தனி மனிதனான்.

ஓரு நாள் தனக்கு இலவசமாகக் கிடைத்த ஒரு மாம்பழத்தைத் தின்றுவிட்டு, அதன் கொட்டையை  தன் தோட்டத்தில் நட்டு வைக்க குழி தோண்டுகையில், பூமியில் இரு பானைகள் இருப்பதையும் அவற்றில் பொற்காசுகள் இருப்பதையும் கண்ட தேவநாதன் மகிழ்ச்சியில் பைத்தியம் பிடிக்கும் நிலையை எய்தினான். ஆனால் அவற்றை எடுக்க முயற்சித்ததும் திடீரென ஒரு பூதம் அவன் முன் தோன்றி பயமுறுத்தியது.

 பூதத்தைக் கண்ட தேவநாதன் சிறிதும் பயப்படவில்லை. அந்தச் செல்வம் தனக்கே சொந்தம் என்று பூதத்துடன் வாதம் புரியத் தொடங்கினான். உடனே விஜயனாகிய பூதம் அந்தப் புதையலின் கதையைக் கூறி, அந்தப் புதையலுக்கு சொந்தம் கொண்டாட விரும்பினால், தன்னைப்போல் பூதமாக மாறவேண்டும் என்றும், அதற்கு குகைக்குள் வசிக்கும் சாமியாரைக் காண வேண்டும் என்று சொன்னது.

புதையல் கிடைத்தால் போதும், பூதமானாலும் பரவாயில்லை என்று எண்ணிய தேவநாதன் அந்த சாமியாரை அடைந்தான். தேவநாதனின் பேராசையைக் கண்ட சாமியார், "பூதமானாலும் பரவாயில்லை, புதையல் வேண்டும் என்று நினைக்கும் உன் எண்ணம் நிறைவேறும். போய்வா" என்றார்.  விஜயனாகிய பூதத்திடம் தான் பூதமாக மாறுவதாகவும் சாமியாரின் ஆசீர்வாதத்துடன் வந்திருப்பதாகவும் தெரிவித்தான்.

உடனே பூதம் அந்தப் பானைகளை தேவநாதனிடம் ஒப்படைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக பூதம் விஜயனாக உருமாறியது. பொற்காசுகள் அனைத்தும் தனக்கே சொந்தம் என்ற மகிழ்ச்சியில் குதித்த தேவநாதன் திடீரெனத் தடுமாறி கீழே விழுந்து உயிர் துறந்தான்.
கதையை இந்த இடத்தில் நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, "மன்னா, அந்த சாமியார் செய்த காரியத்தைப் பார்த்தாயா? தேவநாதன் அவரிடம் சென்று அந்தப் புதையல் தனக்கு சொந்தமாக வேண்டும் என்று கெஞ்சிய போது உன் எண்ணம் நிறைவேறும் என்று சொன்னார் அல்லவா? ஏன் அதன்படி நடக்கவில்லை? தேவநாதன் ஏன் இறந்து போனான்? சாமியார் சொன்னதில் ஏதாவது உட்பொருள் இருந்ததா? என் சந்தேகங்களுக்கு விளக்கம் தெரிந்திருந்தும், நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகும்" என்றது.

அதற்கு விக்கிரமன், "தேவநாதன் மனித நேயமே துளிக்கூட இல்லாத அரக்கன். பணம் செலவாகுமே என்று தன் மகளுக்குத் திருமணமே செய்யாத கஞ்சன். தன் குடும்பத்தினர் அனைவரையும் இழந்தும் பணத்தின் மேலுள்ள ஆசை அவனுக்கு நீங்கவில்லை. புதையலைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பேராசை அவனைக் குருடனாக்கியது. பிறருடைய செல்வம் விஷம் போன்றது என்பதை உணராத தேவநாதன் புதையலை அடைவதை குறிக்கோளாக கொண்டிருந்தான். அதற்காக அவன் பூதமாகக் கூட மாறத் தயாரானான். அவ்வாறு புதையல் ஒன்றையே குறியாகக் கொண்ட தேவநாதனிடம் "உன் எண்ணம் நிறைவேறும்" என்று சாமியார் சொன்னது சரியே. அதில் தவறு எதுவுமில்லை, உட்பொருளும் இல்லை" என்றான்.
விக்கிரமனின் இந்த சரியான பதிலால் அவனுடைய மௌனம் கலையவே, அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிக் கொண்டது.வேதாளம் வரும்...

0 comments:

Post a Comment