தர்மதாசின் சக்திகள்


 

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் சிரித்துக் கொண்டே "மன்னா, உன்னுடைய லட்சியத்தை அடைய நீ எடுத்துக் கொள்ளும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். ஆனால் உன்னுடைய கடும் முயற்சிகளால் உனக்கு இதுவரை ஏதாவது பலன் கிடைத்துள்ளதா என்று யோசித்துப் பார். நீ வீணாக ஏன் இவ்வாறு சிரமப்படுகிறாய்? உன்னைப் பார்த்தால் எனக்கு தர்மதாசின் கதை ஞாபகம் வருகிறது.  அவனுடைய கதையைக் கூறுகிறேன் கேள்" என்றது.

  ஸ்ரீ சைலம் என்ற ஊரில் வீரதாஸ் தனது புதல்வர்களான தர்மதாஸ், ராம்தாஸ், கிருஷ்ணதாஸ் ஆகியோருடன் வசித்து வந்தான். மூத்தவனான தர்மதாஸ் தனது தந்தையின் தொழிலான விவசாயத்தைச் செய்ய விரும்பவில்லை. குருகுலத்தில் சேர்ந்து கல்வி பயில விரும்பிய அவனுடைய ஆசையை, வீரதாஸ் ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டார். அதனால் கோபமடைந்த தர்மதாஸ் வீட்டைவிட்டு வெளியேறி வெளியூர் சென்று விட்டான். அவனுடைய மற்ற இரு புதல்வர்களும் தந்தையுடனே வசித்து வந்தனர்.

சில ஆண்டுகளுக்குப் பின், ஒரு கொடிய நோயினால் பீடிக்கப்பட்ட வீரதாஸ் பேசும் சக்தியை அறவே இழந்தான். மருத்துவ சிகிச்சைக்காக ஏராளமாகப் பணம் செலவழித்து அவனுடைய குடும்பம் கடனில் மூழ்கி மிகவும் சிரமப்பட்டது. கடனை அடைப்பதற்காக நிலம், நீச்சு, வீடு அனைத்தையும் விற்க வேண்டி வந்தது.

மூத்தவனான தர்மதாஸ் சர்வஸ்ரேயர் என்ற மிகப் புகழ்பெற்ற குருவிடம் கல்வி பயில அமர்ந்து, சகல சாஸ்திரங்களையும் கற்று, குருவிடமிருந்து பல அபூர்வ சக்திகளையும் பெற்று விட்டான். அவ்வாறு தான் பெற்ற சக்தியினால், தன் குடும்பத்தின் சங்கடமான நிலைமையை உணர்ந்து கொண்ட தர்மதாஸ் தனது குருவிடம் அனைத்தையும் கூறினான்.

 "உன்னுடைய படிப்பு முடிந்து போய் விட்டது. பல அபூர்வசக்திகளை என்னிடமிருந்து நீ அடைந்திருக்கிறாய். அவற்றைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வாய். ஆனால் நீ கற்ற வித்தைகள் உனது தாய் அவற்றைப் பயன்படுத்த அனுமதி கொடுத்தால் மட்டுமே, உன்னால் பிரயோகிக்க முடியும். தாயின் சம்மதத்துடன்தான் நீ உன் வீட்டை விட்டு, ஊரைவிட்டு வெளியேற முடியும். உன்னுடைய சக்திகள் யாவற்றையும் உன் சகோதரர்களில் ஒருவனுக்கு நீ அளிக்காதவரை உன்னால் அவர்களை விட முடியாது" என்று குரு அவனை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.
 
 ஸ்ரீசைலம் சென்று அடைந்த தர்மதாஸ், தனது தாய் தந்தைக்கு ஆறுதல் கூறினான். இளைய சகோதரன் ராமதாசுக்கு விவசாயத்தைப் பற்றி விரிவாகக் கற்றுக் கொடுத்து விவசாயத்தில் ஈடுபடுத்தினான். கடைசி சகோதரன் கிருஷ்ணதாசுக்கு வியாபார நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்து, ஒரு கடை வைத்து வியாபாரம் செய்ய உதவி செய்தான். அந்த ஆண்டு, ராமதாஸ் வயலில் அமோக விளைச்சல் உண்டானது. கிருஷ்ணதாஸ் வியாபாரத்தில் நல்ல லாபம் அடைந்தான். அவர்களுடைய குடும்பத்தின் பொருளாதார நிலை பெரிய முன்னேற்றத்தைக் கண்டது. ஊர்க்காரர்கள் அனைவரும் தர்மதாசின் அரிய சக்தி உள்ளன என்று பேசிக் கொண்டனர்.

ஒருநாள் அவனுடைய தாய் அவனிடம் "மகனே! நீ வீட்டை விட்டுச் சென்று அரிய சக்திகளைப் பெற்றிருக்கிறாய் அதை வைத்து  உன்னுடைய தந்தை இழந்த பேசும் சக்தியை மீண்டும் பெறச் செய்ய வேண்டும்" என்றாள். "அம்மா, தந்தையை மீண்டும் பேச வைக்க, மின்மினித் தீவில் உள்ள துளசி தேவை. ஆனால் என் குருவின் கட்டளைப்படி நான் நமது ஊரைவிட்டு ஒருமுறை வெளியேறினால், மீண்டும் திரும்பி வர முடியாது. ஆகவே என் தம்பி கிருஷ்ணதாஸ் என்னுடன் வரட்டும். செல்லும் வழியிலேயே என்னுடைய அபூர்வ சக்திகளை அவனுக்கு உணர்த்துவேன். அவனிடமே அந்த துளசியின் வேரைக் கொடுத்தனுப்புவேன்" என்றான்.

அதைக் கேட்ட அவன் தாய் "அப்படியா! மிகவும் மகிழ்ச்சி! கிருஷ்ணனை உன் கூட அழைத்துச் செல். தாயின் அன்பைவிட குருவின் கட்டளை பெரிதல்ல" என்றாள்.

பிறகு தர்மதாசும் கிருஷ்ணதாசும் துளசியைத் தேடிப் புறப்பட்டனர். கிருஷ்ணன் தன் அண்ணனிடம், "அண்ணா? உன்னிடம் அபூர்வசக்திகள் இருக்கிறது. ஏதாவது செய்து அவற்றை எனக்கும் கொடு" என்றான்.
அதற்கு தர்மதாஸ். "மின்மினி தீவிற்குப் போவதற்குள் உனக்கு என் சக்திகள் மீது நம்பிக்கை இருந்தால், அவை தானே உன்னை வந்து அடையும்" என்று சொன்னான்.
 
 இதற்குள் அங்கு ஒரு மாட்டு வண்டி வந்தது. வண்டிக்காரன் கருப்பன் தெரிந்தவன் ஆதலால் வண்டியை நிறுத்தினான். "தம்பி மூலிகையை எடுத்து வருவதற்கு நீ நடந்து தான் வரவேண்டும்" என்று கூறி தர்மதாஸ், வண்டியில் ஏறிச் சென்று விட்டான்.

நண்பகல் நேரம் வரை நடந்த கிருஷ்ணனுக்கு, திடீரென ஒரு மரத்தின் கீழ் தர்மதாஸ் அமர்ந்திருந்தது தென்பட்டது. களைத்துப் போன கிருஷ்ணதாசுக்கு மிகவும் பசித்தது. அப்போது அவர்கள் ஊரைச் சேர்ந்த பாபு அங்கே வந்து  எனக்கு மிகவும் பசிக்கிறது வாருங்கள். நாம் சேர்ந்து உண்ணலாம்" என்று அழைத்தான். அப்போது தர்மதாஸ், "தம்பி, துளசியைக் கொண்டு வரப் போகிறான் அதனால் அவன் உணவு உண்ணக் கூடாது. நான் மட்டும் உண்ணுகிறேன்" என்று பாபுவுடன் சேர்ந்து உண்டான்.

பாபு விடைபெற்றுச் சென்றதும், தர்மதாஸ் "தம்பி, நான் உறங்கப் போகிறேன். தந்தைக்காக துளசி கொண்டு வரப்போகும் நீ உறங்கக் கூடாது. நீ விழித்திருப்பாய்" என்று சொல்லி தான் உறங்கி விட்டான். மறுநாள் இருவரும் எழுந்து சிறிது தூரம் சென்றதும் ஒரு பெரிய ஆறு குறுக்கிட்டது. "தம்பி அதோ பார்! அதுதான் மின்மினித் தீவு. அங்கேதான் நாம் தேடும் துளசி உள்ளது," என்று தர்மதாஸ் அறிவித்தான். அப்போது படகுக்கார சோமன் அவர்களிடம் வந்து, "நான் மின்மினித் தீவுக்கு போகிறேன். இருவரும் வேண்டுமானால் வரலாம்" என்றான்.

தர்மதாஸ் தன் தம்பியிடம், "அப்பாவின் பெயரைச் சொல்லி நீ ஆற்றில் குதித்து நீந்திச்செல். நான் உனக்காக அங்கு காத்திருக்கிறேன்" என்றான்.தன் அண்ணனின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் கிருஷ்ணதாசும் ஆற்றில் குதித்து நீந்திச் சென்றான். மின்மினித் தீவை அடைந்தவுடன், அவனுக்கு முன்பாகவே தர்மதாஸ் அங்கே இருந்தான். ஆனால் நீந்தி வந்ததால் கிருஷ்ணதாஸ் மிகவும் களைத்துப் போய் இருந்தான்.
கிருஷ்ணதாசின் களைப்பு தீர்ந்ததும் இருவரும் துளசி செடியைத் தேடிச் சென்றனர். சற்று தூரம் சென்றதும் ஒரு இடத்தில் அவர்கள் கிராமத்தைச் சேர்ந்த கோபி செடிக்காக மண்ணைத் தோண்டிக் கொண்டுஇருப்பதைக் கண்டனர். அவர்கள் அங்கு வந்திருக்கும் நோக்கத்தை அறிந்ததும் கடப்பாரையை அவர்களிடம் கொடுத்தான்.
 
 கிருஷ்ணதாஸ் அதை வாங்க முயலுகையில், "துளசி போன்ற புனிதமான செடியை கைகளினால்தான் பிடுங்க வேண்டும்" என்று தர்மதாஸ் கூறினான். சற்று தொலைவு நடந்ததும் துளசி செடிகள் தென்பட்டன. கைகள் வலித்தாலும் கிருஷ்ணதாஸ் தன் கைகளாலேயே அந்த செடியைப் பிடுங்கினான்.

அண்ணன் தன் தம்பியை பாராட்டியவாறு, "தந்தை மீதுள்ள பக்தி மிகவும் புனிதமானது. என்னிடம் சக்தி இருந்தால் இந்த நிமிடத்திலிருந்து அதில் பாதி உன்னுடையது. இனி நீ காற்றில் மிதந்து வீடு செல்லலாம்" என்றான். கிருஷ்ணன் பறக்க முயன்றான். ஆனால் முடியவில்லை.

"தம்பி. உன்னை என் சக்திகள் வந்து அடையவில்லை என்று தோன்றுகிறது. சரி, நீ வீட்டுக்கு நடந்து செல். நான் என் வழியே செல்கிறேன்" என்று கூறி தர்மதாஸ் அவனை விட்டுச் சென்று விட்டான்.

நடந்து சென்று வீட்டை அடைந்த கிருஷ்ணன், துளசியின் வேரினால் தன் தந்தையின் பேசும் சக்தியை மீளச் செய்தான். துளசிச் செடியை தான் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு வந்ததை தன் பெற்றோரிடம் பாபு, சோமன் மற்றும் கோபி சொன்னால் நன்றாக இருக்கும் என நினைத்து மறுநாள் மூவரையும் அழைத்து வந்தான். முதலில் சோமன் வீரதாசிடம், "உங்கள் மூத்த மகன் சாதாரண மனிதன் அல்ல. அவன் காற்றில் மிதப்பதை என் இரு கண்களால் பார்த்தேன்" என்றான்.

இதைக் கேட்டதும் கிருஷ்ணதாசிற்கு வியப்பாக இருந்தது. இதற்குள் பாபு, எனது உணவுப் பொட்டத்தில் பழைய சோறு மட்டுமே இருந்தது ஆனால் அதை அவிழ்த்ததும் அதில் சுவையான உணவுப் பண்டங்கள் இருந்தது என்று கூறினான்.  கிருஷ்ணன் ஆற்றில் நீந்திச் செல்கையில் தர்மதாஸ் படகில் செல்லாமல் ஆற்றின் நீர் மீது கால் வைத்து நடந்து போனதைத் தான் கண்டதாகவும், ஒரு பெரிய தவயோகியால் தான் இவ்வாறு செய்ய முடியும் என்றும் சோமன் கூறினான்.


 அப்படிப்பட்ட அபூர்வசக்திகள் தன் அண்ணனுக்கு இருந்ததாக அவர்கள் கூற தனக்கு மட்டும் அவை ஏன் புலப்படவில்லை என்று கிருஷ்ணதாஸ் வியந்தான். இதெல்லாம் தன்னிடம் உள்ள கர்வத்தினால் தான் என்று கிஷ்ணதாசுக்குத் தெரிந்தது. அவ்வாறு எண்ணத்தொடங்கிய உடனேயே, அவனிடம் சில அபூர்வசக்திகள் தோன்றின.

இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், "மன்னா! மற்றவர்களுக்குத் தெரிந்த தர்மதாசின் அபூர்வசக்திகள் கிருஷ்ணனுக்கு ஏன் புலப்படாமல் போயின? தர்மதாஸ் தனது வாக்குறுதியின் படி தனது அபூர்வசக்திகளைத் தன் தம்பிக்கு ஏன் செல்லும் வழியிலே அளிக்கவில்லை? அவன் தாய் அவனை மீண்டும் வீட்டுக்கு வரச் சொல்லி அழைத்தும், குருவின் கட்டளையை விட தாயின் அன்பு பெரிது என்று வலியுறுத்தியும் தர்மதாஸ் ஏன் வீடு திரும்பவில்லை? இவற்றுக்கு பதில் தெரிந்தும் கூறாவிட்டால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது.

அதற்கு விக்கிரமன் "தர்மதாஸ் தன் தம்பிக்கு தன்னுடைய சக்தியை கொடுக்க எண்ணினான் ஆனால் கிருஷ்ணதாசுக்கு தன் அண்ணனின் சக்திகள் மீது பூரண நம்பிக்கை இல்லை. துளசி செடியை எடுத்து வர தர்மதாசன் கிருஷ்ணதாசனை தேர்ந்தெடுத்தவுடன் அவன் மனதில் கர்வம் குடி கொண்டுவிட்டது. அதனால் தான் அவனால் தன் அண்ணனின் சக்தியை உணர முடியவில்லை. அவ்வாறு பூரண நம்பிக்கை இல்லாதவன் தன் சக்திகளைப் பெறுவதில், தர்மதாசுக்கும் விருப்பம் இல்லை.


எந்தத் தாயும் தன் பிள்ளை தன்னை விட்டுப் போக விரும்ப மாட்டான். அதுதான் பெற்றபாசம் ஆனால் தர்மதாஸ் வீட்டுப் பொறுப்பை முடித்தபின் உலக நண்மைக்காக கிளம்பிச் சென்றான். தாயின் எண்ணத்தை நிறைவேற்றாததை பெருங்குற்றமாக எண்ணக் கூடாது. ஏனெனில் அவனது எண்ணம் உயர்வானது என்றான்.

 விக்கிரமனது சரியான பதிலால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் தன்னை சுமந்து வந்த உடலுடன் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

 
 
வேதாளம் வரும்...

0 comments:

Post a Comment

Flag Counter