மகாவிஷ்ணு - 16
கிருதயுகம் கழிந்து துவாபரயுகம் வந்த போது ராட்சசர்கள் ஏராளமாகத் தோன்றி அட்டூழியங்களைச் செய்து பூமிக்கு பாரமானார்கள். அப்போது பூமாதேவி விஷ்ணுவிடம் போய் முறையிட அவரும் கிருஷ்ணாவதாரம் எடுத்து அவர்களை அழிப்பதாகக் கூறினார்.

உக்கிரசேனனின் தம்பியின் மகள் தேவகி. யதுவம்ச மன்னனான வாசுதேவர் அவளை மணந்து கொண்டார். அவர்களைக் கம்சன் ரதத்தில் ஓட்டிச் சென்ற போது ஒரு அசரீர வாக்கு தேவகியின் எட்டாவது குழந்தையால் கம்சன் மடிவான் எனக் கூறியது.

கம்சன் உடனே தேவகியைக் கொல்லப் போகவே வாசுதேவர் குறுக்கிட்டு தேவகிக்குப் பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் அவனிடம் அவ்வப்போது கொடுத்து விடுவதாகக் கூறினார். அதுபோல அவர் அவளுக்குப் பிறந்த ஆறு குழந்தைகளைக் கொடுக்க கம்சன் அவற்றையெல்லாம் உடனுக்குஉடனேயே கொன்று வந்தான்.

தேவகி ஏழாவது முறை கர்ப்பவதிஆனாள். அவளது கருவில் விஷ்ணுவின் அம்சமான ஆதிசேஷன் குழந்தையாக இருந்தான். விஷ்ணு அந்த கர்ப்பத்தை தேவகியிடமிருந்து கோகுலத்திலுள்ள வாசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகிணிக்கு மாற்றி விட்டார். பின்னர் மாயாதேவியிடம் அவள் கோகுலத்தில் நந்தகோபரின் மனைவியான யசோதையின் மகளாகப் பிறக்க வேண்டுமெனக் கட்டளையிட்டார். இவ்விதமாக தேவகியின் ஏழாவது கர்ப்பம் தவறிப் போய்விட்டது. அவள் எட்டாவது தடவை கர்ப்பவதியனாதும் கம்சன் அவளையும் வாசுதேவரையும் சிறையில் அடைத்து விட்டான்.
 
 ஆவணி மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியன்று நள்ளிரவில் சிறைக் காவலாளிகள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது தேவகி அழகிய ஆண் குழந்தைகயைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தை தான் மகா விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர். அப்போது சிறைச்சாலையின் கதவுகள் தாமாகத் திறந்து  கொண்டன.

விஷ்ணுவின் கட்டளைப் படி வாசுதேவர் அக்குழந்தையை எடுத்துக் கொண்டு சிறைக்கு வெளியே போய் யமுனை நதியைக் கடந்து கோகுலத்தை அடைந்தார். அப்போது தான் அங்கு யசோதைக்கு மாயதேவி பெண் குழந்தையாகப் பிறந்திருந்தாள். அங்கும் யாவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். வாசுதேவர் தம் குழந்தையை யசோதையின் பக்கம் வைத்து விட்டு அவள் பெற்ற பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு மதுராபுரிக்குத் திரும்பி வந்து சிறைச் சாலைக்குள் புகுந்து கொண்டார்.

அப்போது அக்குழந்தை பலமாகக் கத்தவே கம்சன் ஓடி வந்து அதனைத் தூக்கிக் கொண்டு ஓடினான். அதனைக் கொல்ல அவன் உயரத் தூக்கிய போது அது சிரித்து "கம்சா! உன்னைக் கொல்லப் போகிறவன் பத்திரமாக ஓரிடத்தில் இருக்கிறான்" எனக் கூறிவிட்டு மறைந்தது.

கோகுலத்தில் யசோதைக்குக் கிருஷ்ணர் பிறந்தார் என்று எல்லாரும் மகிழ்ந்து பிறந்த தின விழா கொண்டாடினர்.

நாரதர் கம்சனிடம், "கம்சா! உன்னைக் கொல் விஷ்ணு பிறந்துவிட்டார். அதனால் ராட்சசர்களை அனுப்பி அவனைத் தேடி ஒழி" என்று கூறி விட்டுப் போனார். கம்சன் உக்கிரசேன மன்னனைச் சிறையில் அடைத்துவிட்டு தானே மதுராபுரி மன்னனானான்.


முதலில் சிறு குழந்தைகளை ஒழித்தால் அப்போதே பிறந்த கிருஷ்ணர் அழிவார் என நினைத்து அவன் பூதனை என்ற அரக்கியை அனுப்பினான். அவள் ஊர் ஊராகப் போய் சிறு குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதுபோல நடித்து அவற்றை கொன்று வந்தாள். கோகுலத்திற்கு வந்து அவள் கிருஷ்ணரைக் கொல்ல முயன்ற போது அவர் அவளைக் கொன்றார். 
 
 அதன்பின் சுழல் காற்றாக திருணவர்தனன், வண்டி சக்கரமாக உருண்டு வந்த சகடாசுரன் ஆகியோரையும் கிருஷ்ணர் கொன்றார். கிருஷ்ணர் தம் சகாக்களுடன் வீடு வீடாகப் போய் வெண்ணெய், தயிர் பால் முதலியவற்றைத் திருடித் தின்றார். அவரது விஷமம் சகியாது ஒரு நாள் யசோதை அவரை உரலில் கட்டி வைத்தாள். அவர் அந்தக் கல்லுரலை உருட்டி இழுத்து கொண்டு பெரிய மரங்களுக்கு இடையே போனார். உரலால் அந்தமரங்கள் இருந்த இரு கந்தர்வர்கள் சாபவிமோசனம் பெற்றனர்.

கிருஷ்ணன் மண்ணைத் தின்றார் என்று கூறி யசோதை வாயைத் திறந்து காட்டும்படிக் கூறவே அவரும் வாயைத் திறந்தார். அதில் ஏழு உலகங்களையும் கண்ட யசோதை திகைத்து ஆச்சரியப்பட்டுப் போனாள். கிருஷ்ணர் யமுனையில் இருந்த காளியன் என்ற ஐந்து தலைப்பாம்பின் மீது ஏறி நடனம் புரிந்து அதனைக் கொன்றார்.

கோகுலவாசிகளெல்லாம் பிருந்தாவனத்திற்குப் போய் கோவர்த்தன மலையை வணங்கினர். இதனால் இந்திரன் கோபம் கொண்டு பெருத்த மழையைப் பெய்வித்தான். கிருஷ்ணர் கோவர்த்தன கிரியைத் தம் சுண்டு விரலால் தூக்கிக் குடை போலப் பிடிக்க கோகுலவாசிகள் எல்லாம் அதன் கீழ் நின்று மழையில்இருந்து தப்ப இந்திரனின் கர்வம் ஒழிந்தது.

கிருஷ்ணரையும் பலராமனையும் கொல்வதற்காக கம்சர், தான் தனுர்யாகம் செய்வதாகக் கூறி அவர்களை மதுராபுரிக்கு வரவழைத்தான். அவர்களைக் கொல்ல கம்சன் செய்த முயற்சிகளையெல்லாம் அவர்கள் முறியடித்தார்கள். கிருஷ்ணன் கம்சனை சிம்மாசனத்தில்இருந்து அவனது தலை மயிரைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளி முஷ்டியால் குத்தியே கொன்றார்! தேவகியும் வாசுதேவரும் உக்கிரசேனனும் சிறையிலிருந்து விடுதலை அடைந்தனர். உக்கிரசேனன் மீண்டும் மன்னனானான்.

 
 தன் புதல்விகளாக ஆஸ்திபிராஸ்தி ஆகியவர்களை விதவைகளாக்கிய கிருஷ்ணர் மீது ஜராசந்தன் கடும் பகைமை கொண்டான். பெருத்த படையுடன் வந்து அவன் மதுராபுரியை முற்றுகையிட்டான். கிருஷ்ணர் ஜராசந்தனைத் தோற்றகடித்து விரட்டியடித்தார்.

அப்போது மிலேச்ச மன்னனான காலயவனனை ஜராசந்தன் ஏவி கிருஷ்ணனைத் தாக்கச் சொன்னான். கிருஷ்ணர் காலயவனனுக்கு அகப்படாமல் முசுகுந்தர் தவம் செய்யும் குகைக்குள் புகுந்து கொண்டார். கிருஷ்ணர் நுழைந்த குகைக்குள் காலயவனனும் நுழைந்தான். 

அங்கே இருந்த முசுகுந்தரை அவன் கிருஷ்ணன் என நினைத்துத் தன் காலால் உதைத்தான். தூக்கம் கலைந்த முசுகுந்தர் கண் விழித்துத் தம் எதிரே இருந்த காலயவனனைப் பார்க்கவே அவன் எரிந்து சாம்பலானான். கிருஷ்ணரும் முசுகுந்தருக்கு தரிசனம் தந்து அவரை பத்திரிகாசிரமத்திற்குப் போய்த் தவம் செய்து மோட்சம் அடையுமாறு கூறினார்.

ஜெயனும் விஜயனும் தம் மூன்றாவது பிறப்பில் கிருஷ்ணனின் எதிரிகளான சிசுபாலனாகவும் தந்த வக்திரனாகவும் பிறந்தனர். சேதி நாட்டு மன்னனின் மகனாக சிசுபாலன் பிறந்தான். அவன் பிறக்கும்போது நான்கு கைகளுடனும் மூன்று கண்களுடனும் இருந்தான். யாராவது அவனைத் தூக்கும்போது அவனது அதிகப்படியான இருகைகளும் கண்ணும் மறைந்தால் அவனால் சிசுபாலன் இறப்பான் என அசரீர வாக்கு கூறி இருந்தது. சிசுபாலனின் தாயார் தன் மகனை தன் அரண்மனைக்கு வந்தவர்களிடம் எல்லாம் கொடுத்துப் பார்த்தாள். அவள் கிருஷ்ணருக்கும் பலராமனுக்கும் அத்தை. அதனால் அவர்கள் தம் அத்தை வீட்டிற்குப் போன போது கிருஷ்ணரிடம் அவள் தன் மகனைக் கொடுத்தாள்.

 
 அப்போது சிசுபாலனின் அதிகப்படியான இரு கைகளும் ஒரு கண்ணும் மறைந்தன. சிசுபாலனின் தாயார் கிருஷ்ணரிடம் தன் மகன் செய்யும் நூறு தவறு களைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டினாள். கிருஷ்ணரும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தார்.

ஜராசந்தன் அடிக்கடி மது ராபுரியின் மீது படையெடுத்துப்போய் கிருஷ்ணரால் முறியடிக்கப்பட்டு விரட்டப்பட்டான். இப்படி அடிக்கடி தொல்லை வருவது கண்டு கிருஷ்ணர் சமுத்திரராஜனிடம் கேட்டு விசுவகர்மாவைக் கொண்டு துவாரகாபுரியை நிர்மாணித்தார். அதில் தம் ஆட்களையெல்லாம் குடிபுகும்படி அவர் செய்தார்.

ஜராசந்தன் கடைசி முயற்சியாக சிசுபாலன், தந்தவக்கிரன், பௌண்ட்ரகன், சால்வன் ஆகியோரின் உதவியோடு மதுராபுரியைத் தாக்கினான். அதற்கு முன்பே கிருஷ்ணர் அங்கிருந்தவர்களை எல்லாம் துவாரகைக்கு அனுப்பி விட்டார். பின்னர் அவரும் பலராமனும் பிரவர்ஷணகிரி மீது போய்த் தங்கினார்கள். ஜராசந்தன் அதனை முற்றுகை இட்டான். அம்மலைப்பகுதி முழுவதிலும் தீமூட்டினான். கிருஷ்ணரும் பலராமனும் ஆகாய வழியாய் துவாரகையை அடைந்தார்கள்.

கிருஷ்ணரும் பலராமரும் எரிந்துபோய் விட்டார்கள் என ஜராசந்தன் எண்ணி மகிழ்ந்தபோது அவரும் பலராமனும் பத்திரமாக துவாரகையில் இருக்கிறார்கள் எனக் கேட்டு திகைத்துப் போன்ன. சிசுபாலன் ஆத்திரம் கொண்டு மதுராபுரியை எரித்துச் சாம்பலாக்கினான். ஜராசந்தன் கப்பல்களில் வீரர்களை ஏற்றித் துவாரகாபுரியைத் தாக்க அனுப்பினான். அவை கடலில் மூழ்கிப் போயின. ஜராசந்தன் எதிர் முனையிலிருந்து எதுவும் செய்ய முடியாது பொறுமினான்.


லட்சுமிதேவி விதர்ப்ப மன்னனான பீஷ்மகனின் மகள் ருக்மிணி யாகப் பிறந்தாள். இளம் வயதில்இருந்தே அவள் கிருஷ்ணரையே தன் கணவராக மனதில் நினைத்துவிட்டாள். அவளை அவளது அண்ணன் ருக்மி சிசுபாலனுக்குக் கல்யாணம் செய்து கொடுக்க விரும்பினான். அதற்கான ஏற்பாடுகளையும் அவன் செய்யலானான்.

ருக்மிணி தன்னைக் காப்பாற்றி மணந்து கொள்ளுமாறு கிருஷ்ணருக்குச் செய்தி அனுப்பினாள். விவாகத்திற்கு முன் துர்கா பூஜை செய்துவிட்டு வருவதாக ருக்மிணி கூறி கோயிலுக்குப் போக கிருஷ்ணர் அவளைத் தன் தேரில் அமர்த்திக் கொண்டு துவாரகை நோக்கிச் சென்றார். ருக்மிணி சிசுபாலன் ஜராசந்தன் ஆகியோர் அவளைத் தடுக்க முயன்றார்கள். பலராமர் யாதவ வீரர்களோடு வந்து கிருஷ்ணருக்கு உதவி புரிந்தார்.

கிருஷ்ணர் வேகமாக சிசுபாலனை விரட்டினார். பலராமன் ஜராசந்தனை அடித்துத் துரத்தினான். ருக்மியும் என்ன செய்வதெனத் தெரியாது திகைத்து தோற்றான். அவனை கிருஷ்ணர் பிடித்து தலையை மொட்டையடித்து மீசையையும் எடுக்கச் செய்து அவமானப்படுத்தினார்.

துவாரகையில் கிருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் முறைப்படி விவாகம் சிறப்பாக நடைபெற்றது. இதற்குப்பின் கிருஷ்ணர் ஜாம்பவானின் புதல்வி ஜாம்பவதியை மணந்தார். சத்திரஜித் என்பவன் தன்னிடமிருந்த சியமந்தக மணியை கிருஷ்ணர் தான் திருடிக் கொண்டு போய் விட்டார் என்றான்.
கிருஷ்ணர் சியமந்தக மணியை தேடிக் கொண்டு வந்து சத்திரஜித்திடம் கொடுத்து அவனது மகளான சத்தியபாமாவை மணந்து கொண்டார். பின்னர் மித்திர விந்தை, காசிந்தி, லஷ்ணா, பத்திரா, முதலிய பெண்களையும் அவர் விவாகம் செய்து கொண்டு அஷ்ட மகிமை, சித்திகளை அடைந்து மகாபுருஷராக விளங்கி துவாரகையில் இருந்து ஆட்சி புரிந்தார்.

 

0 comments:

Post a Comment