மகாவிஷ்ணு -15
இராமர் அரியாசனத்தில் அமர்ந்தார். இலட்சுமணன், பரதன், சத்துருகனன் ஆகியோரின் துணை கொண்டு நாட்டை நன்கு ஆண்டு வரலானார். மக்கள் அவரது ஆட்சியில் சுக வாழ்வு வாழ்ந்தனர்.

ஒருநாள் காலை ஒரு கிராமத்தில்இருந்து ஒரு அந்தணன் இறந்து போன தன் ஐந்து வயது மகனின் உடலை எடுத்துக் கொண்டு வந்து இராமரின் அரண்மனை வாசலில் நின்று அழலானான். அவன் "என் ஒரே மகன் இறந்து விட்டான். இதற்குக் காரணம் இராமரின் ஆட்சி சரியாக நடக்காததேயாகும். இல்லாவிட்டால் இந்த மாதிரி அகால மரணம் ஏற்படுமா? என்று வெறுப்புடன் கூறினான்.

இதைக் கேட்ட இராமர் மிகவும் கவலை கொண்டார். உடனே தன் மந்திரிகளையும் வசிஷ்டர் முதலான பிராமண சிரேஷ்டர்களையும் சபைக்கு வரவழைத்து பிராமணச் சிறுவன் அகால மரணம் அடைந்தது பற்றிக் கூறினார். அப்போது அங்கு வந்த நாரதர் "இப்போது சம்புகன் என்ற தாழ் குலத்தவன் கடுந்தவம் புரிகிறான். அது தர்ம நியாயங்களுக்கு ஏற்றதாக இல்லை. அதனால்தான் பிராமணச் சிறுவன் இறந்தான்" என இராமரிடம் கூறினார்.

இராமரும் இலட்சுமணனிடம் "நீ போய் அந்த பிராமணனுக்கு ஆறுதல் கூறி அச்சிறுவனின் உடலை தைலங்கள் தடவி பத்திரமான இடத்தில் வை" எனக் கூறினார். பிறகு அவர் புஷ்பக விமானத்தில் ஏறி நாலா பக்கங்ளிலும் போய்த் தேடி முடிவில் தென் திசையில் ஒரு மனிதன் கடுந்தவம் புரிந்து கொண்டிருப்பதைக் கண்டார்.

 உடனே இராமர் விமானத்தை அங்கே இறக்கினார். அதிலிருந்து இறங்கி அவர் அம்மனிதனை அணுகித் தம் வாளால் அவனது தலையை வெட்டினார். வெட்டுண்ட சம்புகனின் தலையிலிருந்த கண்கள் இராமரைப் பார்த்து மகிழ்ந்தன. அத்தலையும் "மகானுபாவா! மரணம் என்பது மனிதனுக்கு ஏதாவது ஒரு விதத்தில் வரத்தான் வரும்.

நீங்கள் மன்னர். நாட்டின் தர்மத்தைக் காப்பவர். என் மரணத்திற்கு நீங்கள் ஒரு சாதனம். இதனால் உங்களை எந்தப் பாவமும் அணுகாது. நானும் விஷ்ணு லோகத்தை அடைவேன்" எனக் கூறிக் கண்களை மூடியது. சம்புகனின் மனைவியும் இராமரிடம் அவர் தம் கடமையையே செய்ததாகக் கூறித் தன் கணவனின் உடலோடு உடன்கட்டை ஏறினாள்.

விசுவாமித்திரர் ஒரு நாள் இராமரின் சபைக்கு வந்து அவரிடம் தன்னை அவமதித்த சகுந்தன் என்ற மன்னனை தண்டிக்குமாறு கூறினார். இராமரும் சகுந்தனைக் கொல்லக் கிளம்பிச் சென்றார். அனுமாரின் தாய் அஞ்சனாதேவி சகுந்தனுக்கு அபயம் அளித்தாள். அனுமார் தன் தாயாரின் வாக்கை நிலை நிறுத்த இராமரை எதிர்த்தவாறே இராமரது திவ்ய நாமங்களை உச்சரிக்கலானார். அதனால் இராமர் எய்த அம்புகள் எல்லாம் அனுமாரின் இதயத்துள் அடங்கின.

இதைக் கண்ட விசுவாமித்திரர் கோபத்தை விட்டு சகுந்தனை மன்னித்து அவனை ஆசீர்வதித்து விட்டுச் சென்றார்.

ஒரு நாளிரவு ஒரு நாய் இராமரின் படுக்கை அறை முன் வந்து குரைத்து நியாயம் வழங்க வேண்டியது. அவர் எழுந்து வந்து அதன் காயத்திலிருந்து வடிந்த ரத்ததைத் துடைத்தார். அதன் காயம் ஆறவே அதுவும் போய் விட்டது.
இப்படி யாவரும் இராமரது ஆட்சியில் சுகமாக இருக்கையில் ஒரு அற்பப்பயல் "பிறர் வீட்டில் இருந்த தன் மனைவியை இந்த இராமன், வெட்கமில்லாமல் தன் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறானே. என்ன தலைகுனிவான செயல்" எனக் கூறியது இராமருக்குத் தெரிந்தது. அவர் உடனே இலட்சுமணனிடம் சீதையைக் காட்டில் விட்டு வருமாறு கட்டளையிட்டார்.

 இலட்சுமணன் கோபத்தோடு "யாரோ ஒரு அற்பன் சொன்னதற்காக இப்படிச் செய்யலாமா?" எனவே இராமரும் "அவன் இதனை வெளிப்படையாகக் கூறினான். இது போன்ற எண்ணம் பலரது மனதில் தோன்றி இருக்கலாம். அவர்கள் கூறாமல் இருக்கலாம். ஆட்சியில் விருப்பு வெறுப்பு என இல்லாது சமநிலையில் இருக்க வேண்டும்" என்றார்.

முனிபத்தினிகளுடன் ஒரு சில நாட்கள் காலம் கழிக்க விரும்புவதாக கர்ப்பவதியான சீதை இராமரிடம் சில நாட்களுக்கு முன்தான் கூறி இருந்தாள். அதை நிறைவேற்றச் சொன்னதாக இராமர் கட்டளை இட்டார் என இலட்சுமணன் சீதையிடம் கூறி அவளைக் காட்டிற்குக் கொண்டு போய்விட்டு வந்தான்

சீதை இராமரது முடிவு கேட்டு திகைத்து விழுந்தாள். மயங்கி விழுந்த அவளை அங்கே ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்த வால்மீகி முனிவர் தம் குடிலுக்கு எடுத்துச் சென்றார். சீதையும் உரிய காலத்தில் லவன், குசன் என்ற இரு மைந்தர்களைப் பெற்றெடுத்தாள்.

அயோத்தியில் மழை பொய்த்தது. சரியான மழை இல்லாது பூமி பாளம் பாளமாக வெடிக்கலாயிற்று. இதனால் அசுவமேதயாகம் செய்யுமாறு இராமரிடம் பல பெரியோர்கள் யோசனை கூறினார்கள். தங்கத்தில் சீதையின் சிலையைச் செய்ததும் அருகில் வைத்துக் கொண்டு இராமர் அந்த யாகத்தைச் செய்யலானார். வால்மீகி முனிவர் தம் ஆசிரமத்தில் இருந்த லவனுக்கும் குசனுக்கும் இராமாயணத்தைச் சொல்லிக் கொடுத்து இசையோடு பாடப்
பழக்கி வந்தார். லவனும் குசனும் ஆசிரமத்தின் பக்கம் வந்த இராமரது அசுவமேதயாகக் குதிரையைப் பிடித்து கட்டினர். இதனால் இலட்சுமணன், பரதன், சத்துருகனன் ஆகியோர் அந்த இரு சிறுவர்களுடன் போரிட்டு நினைவிழந்து விழுந்தனர்.

அப்போது இராமர் அவர்களை எதிர்க்க வந்தார்.
லவனும் குசனும் தம் தாய் மீது ஆணையிட்டு இராமர் மீது அம்புகளை எய்யவே அவரும் நினைவிழந்து விழுந்தார். அது கேட்டு சீதை ஓடி வந்து இராமர், இலட்சுமணன், பரதன் ஆகியோரின் மயக்கத்தைப் போக்கினாள்.


 வால்மீகி முனிவர் சீதையையும் லவனையும் குசனையும் இராமரிடம் ஒப்படைத்தார். இராமர் சீதையுடன் அரியாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிந்தார். லவனுக்கும் குசனுக்கும் இளவரசுப் பட்டம் கட்டினார்.

சீதையோ தன் புனிதத்தன்மையை அயோத்தி மக்களுக்குக் காட்ட ஆகாயத்தை நோக்கி மழை பொழிய வேண்டும் எனக் கூறினாள். அடுத்த வினாடியே ஆகாயத்தில் மேகங்கள் நிறைந்து அடர் மழை பெய்தது!
அப்போது சீதை பூமாதேவியைப் பார்த்து "அம்மா! இனி எனக்கு இங்கு வேலை இல்லை. என்னை அழைத்துக் கொள்" என்றாள். மறுநிமிடம் தரை பிளந்து தங்க சிம்மாசனத்தில் அமர்ந்தவாறு பூமாதேவி உயர வந்தாள்.
அவள் சீதையைத் தன் பக்கத்தில் அந்த ஆசனத்தில் அமர்த்திக் கொண்டு மீண்டும் தரைக்குள் சென்று மறைந்தாள். பிளந்த தரை மூடி முன் போலாகிவிட்டது.

இராமர் சீதையை மீட்கத் தன் வில்லில் அம்பை வைக்கவே ஒரு அசŽர வாக்கு "இராமா! சீதை பூமாதேவியின் மகள். மகள் தாயை அடைந்து விட்டாள். அதனால் பூமியைப் பிளக்காதே" எனக் கூறியது. இராமர், லவனுடனும் குசனுடனும் சேர்ந்து ஆட்சி புரிந்து வரலானார். அப்போது ஒரு நாள் எமதர்மன் ஒரு பிராமணனின் வடிவில் வந்து "தேவ இரகசியம் ஒன்று தங்களுக்குத் தனிமையில் சொல்ல வேண்டும்.


 இலட்சுமணனைக் காவலாக வாசலில் நிறுத்தி யாரையும் உள்ளே வரவிடாமல் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். அப்படி அவன் யாரையாவது அனுமதித்தால் அவனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்" என்றான். இராமரும் அதற்கு இசைந்து இலட்சுமணனை வாசலில் காவலாக நிற்கச் சொல்லி அந்த பிராமணனிடம் தனிமையில் தேவ இரகசியம் கேட்கத் தயாரானார்.

எமதர்மனும் தன் உண்மை உருவில் இராமர் முன்வந்து, அவரிடம் "தாங்கள் எடுத்த அவதாரத்தின் வேலை முடிந்தது. இனி விஷ்ணுவாகி வைகுண்டம் செல்ல வேண்டும்" எனக் கூறினான்.

அப்போது துர்வாச முனிவர் இராமரைக் காண வந்தார். துர்வாச முனிவருக்கு இராமரைக் காண வழி விடாமல் இலட்சுமணன் குறுக்கே நிற்கவே அவர் "நான் இப்போதே இராமரைக் காண வேண்டும். எனக்கு வழி விடுகிறாயா அல்லது ரகு வம்சத்தையே சபிக்கட்டுமா?" என கோபக் கனல் பறக்கக் கேட்டார். இலட்சுமணன் துர்வாச முனிவரை உள்ளே செல்வதற்கு அனுமதி அளித்து விட்டு தான் சரயு நதிக்குப் போய் அதில் குதித்து உயிரை விட்டான்.
இதை அறிந்ததும் இராமர் பரத, சத்ருகனர் சூழ்ந்து வர சரயு நதிக்குச் சென்றார். அவரும் அந்த நதிக்குள் செல்ல பரதனும் சத்துருகனனும் அவரைப் பின்பற்றி நதிக்குள் சென்றனர்.

சீதை வைகுண்டத்தில் இலட்சுமி தேவியாக சேஷசயனத்தில் அமர்ந்து இராமர் விஷ்ணுவாகி வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். பரதனும் சத்ருகனனும் சங்கு சக்கரங்களாக மாறிச் சென்றனர். இலட்சுமணன் தான் சேஷநாகமாக மாறி முன்பே சென்று இராமர் இருக்கச் சுருண்டு இருந்தார். இராமரும் தம் அவதாரத்தை முடித்து விஷ்ணுவாகி சேஷசயனத்தின் மீது அமர்ந்தார். இவ்வாறு சூத மகரிஷி இராமாவதாரம் பற்றிக் கூறி விட்டு கிருஷ்ணாவதாரம் பற்றி எடுத்துக் கூறலானார்.

ஒரு முறை சிவன் தன் பக்தர்களான ராட்சசப் பிரமுகர்களை விஷ்ணு அழிப்பது கண்டு கோபம் கொண்டு தன் கண்களிலிருந்து தீப்பொறி வரச்செய்து பலசாலியை உருவாக்கினார். பலத்த ஆயிரம் கவசங்களையும் சக்தி வாய்ந்த குண்டலங்களையும் கொண்ட அவன் "நான் பயங்கர ராட்சசன் மட்டுமல்ல. சிவனின் அம்சமும் கொண்டவன். அந்த விஷ்ணுவால் கூட என்னை ஒன்றும் செய்து விட முடியும்?" எனக் கர்ஜித்தவாறே அட்டூழியங்கள் புரியலானான்.
விஷ்ணு நர நாராயணன் என்ற இரு முனிவர்களாக அவதரித்தார். இருவரும் அந்த பலசாலியான சகஸ்ரகவசனைக் கொல்லும் சக்தி பெறத் தவம் செய்தனர்.

 இந்திரன் அவர்களது தவத்தைக் கலைக்க அப்சரப் பெண்களை அனுப்பினான். நாராயணன் தன் தொடையிலிருந்து ஊர்வசி பிறந்து வரச் செய்யவே ரம்பை முதலான அப்சரப் பெண்கள் அவளைக் கண்டு நடுங்கினார்கள். நாராயணன் அவர்களிடம் ஊர்வசியையும் தேவலோகத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கூறவே அவர்களும் அவளை அழைத்துச் சென்றனர்.

நாராயணனும் நரனும் தவம் செய்யும் போது முறை போட்டுக் காவல் புரிந்தார். அப்போது சகஸ்ரகவசனுடன் அவர்கள் ஆயிரம் வருடங்கள் போர் புரிந்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பது கவசங்களை அந்த ராட்சசன் உடலிலிருந்து அறுத்துத் தள்ளினார்கள்.

 ஒரே ஒரு கவசம் மிகுந்ததால் அந்த ராட்சசன் பயந்து ஓடி சூரியனில் ஒளிந்து கொண்டான். விஷ்ணுவும் "இவன் இப்போது பயந்து ஓடி விட்டான். போனால் போகட்டும் இது இவனைக் கொல்வதற்கான தருணம் அல்ல. அவனை சற்று விட்டுத்தான் பிடிக்க வேண்டும். பிற்காலத்தில் நான் கிருஷ்ணாவதாரம் எடுக்கப் போகிறேன். அவனை அந்தக் கிருஷ்ணாவதாரத்தின் போது ஒழித்து விடலாம்" எனத் தீர்மானித்துக் கொண்டார்.

 

0 comments:

Post a Comment