மகாவிஷ்ணு -14


 

விபீஷணனும் இராவணனின் மனைவி மண்டோதரியும் கூறிய அறிவுரைகள் இராவணனின் காதில் ஏறவே இல்லை. சூர்ப்பணகைக்கு மானபங்கம் என்ற காரணத்திற்காக ஒருவரது மனைவியையே கவர்ந்து வந்து சிறைப்படுத்தியது எவ்வளவு கீழ்த்தரமான செயல் என்று அவர்கள் கூறினார்கள்.
ஆனால் இராவணனோ "இதெல்லாம் சொல்லிப் பயன் இல்லை. நான் ஒன்றும் இராமனிடம் சீதையை ஒப்படைத்து மன்னிப்பு கேட்கப் போவதில்லை. அவனால் ஆனதை செய்யட்டும்" என்றான்.

இராமரின் வானரப் படைத் திரண்டு வந்தது. சுக்Žவன், நீலன், அங்கதன், சுஷேணன், ஜாம்பவான் போன்ற மாவீரர்கள் இராமனின் படைத் தலைவர்களாக இருந்தனர். அனுமார் இராமரின் மெய்க்காவலாளி போல எப்போதும் இருந்து வந்தார். வானரர்கள் இலங்கைக்குப் போக பாலம் அமைத்தார்கள். நீலன் தான் இப்பணியினை முடித்தான்.
விபீஷணன் வான வீதி வழியே வந்து இராமரிடம் சரண் புகுந்தான். இராமர் அவனுக்கு அடைக்கலம் அளித்து அவனை இலங்கையின் மன்னனாக ஆக்குவதாக வாக்களித்தார்.

இராமர் வானரப் படைகளோடு இலங்கைக் கடற்கரையில் முகாமிட்டார். இலங்காபுரி உயரமான மலைச் சிகரத்தின் மீது நிர்மாணிக்கப் பட்டிருந்தது.
அங்கிருந்தபடியே இராவணன் இராமர் படைகள் முகாமிட்ட இடத்தைப் பார்த்தான். எங்கு பார்த்தாலும் எறும்புகள் போல சாரை சாரையாக வானரங்கள் இருந்தன. அங்கதன் வான வீதி வழியே சென்று இராவணனின் முன் நின்றான்.

 அவன் இராவணனிடம் "இராவணா! உன்னை என் தந்தை பொம்மை போலத் தன் வாலில் கட்டி நான் குழந்தையாக இருந்தபோது என் தொட்டிலுக்கு மேல் ஆட்டி விளையாட்டுக் காட்டினார். நீ என் தந்தை வாலியிடம் நடுநடுங்கியதைப் பல முறைகளில் கண்டு களித்தவன் நான். சிறு வயதிலிருந்தே உன்மீது எனக்கு இரக்கம். அதனால் இப்போது உனக்கு நல்லது சொல்ல வந்தேன். நீ இராமரைப் பகைத்துக் கொள்ளாதே. சீதையை அவரிடம் ஒப்படைத்து விட்டு உன் தவறுதலுக்காக மன்னிப்பைக் கேள்," என்றான்.
இராவணனுக்குக் கோபம் வந்துவிட்டது. தன் இடைவாளை உருவி அங்கதனைத் தாக்க அவன் முயன்றான். ஆனால் அங்கதன் தன் காலால் அவனது கிŽடத்தைத் தட்டிவிட்டு அவனைத் திகைக்குமாறு செய்து விட்டுத் திரும்பி வந்தான்.

வானரப் படை இலங்கையையே அதிரச் செய்தது. இராவணன் தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி அப்படைகளை அழிக்குமாறு கூறினான்.

கும்பகர்ணன் கடுந்தவம் புரிந்தான். அவன் என்றென்றும் அழியாதிருக்க பிரம்மாவிடம் நித்தியத்துவம் வரம் வேண்ட நினைத்தான். அப்போது சரஸ்வதிதேவி அவனது நாக்கில் புகுந்து அவனைக் குளற வைத்து நித்தியத்துவம் என்பதற்கு பதிலாக நித்திரைத்துவம் அதாவது தூங்கும் நிலை வேண்டும் என்று வரம் கேட்க வைத்து விட்டாள். அதன் பலனாக அவன் ஆறுமாத காலம் தூங்கி விட்டு எழுவான். அப்போது அவனுக்கு அகோரப் பசி எடுக்கும். அதனைத் தணிக்க தன் எதிரில் தென்பட்டதையெல்லாம் சாப்பிட்டு வயிறை நிரப்பிக் கொண்டு மீண்டும் தூங்கப்போய் விடுவான்!

அரைத்தூக்கத்தில் இருந்த கும்பகர்ணன் தன் முன் நின்ற இராவணனுக்குப் புத்திமதிகள் கூறிப்பார்த்தான். இராவணனோ "நீ போர் புரியப் போகிறாயா அல்லது விபீஷணன் போலத் துரோகம் செய்யப் போகிறாயா?" என்று கோபத்தோடு கேட்கவே கும்பகர்ணன் போர் புரியச் சென்றான்.
  கும்பகர்ணன் வானரர்களைப் பிடித்து விழுங்கலானான். அது கண்டு இராமரும் இலட்சுமணனும் கடுங்கோபம் கொண்டனர். போர் கடுமையாக நடந்தது. முடிவில் இராமர் எய்த ஒரு அம்பால் கும்பகர்ணன் மாண்டான்.
இதன் பின் இராட்சசப் படைத்தலைவர்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராகப் போர் புரிந்து இறந்தனர். இராவணணின் மகன் இந்திரஜித் இராமரை எதிர்க்க வந்தான்.

இராவணன் தன் மகன் இராமரை வென்று வெற்றி மாலை சூடிவருவான் என எதிர்பார்த்தான். இந்திரஜித் மாயப் போர் புரிபவன். அவனைக் கொல்லக் கூடியவன் பதிநான்கு ஆண்டுகள் கடுமையாக பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு வாழ்ந்தவனே.

இந்திரஜித் சீதையைப் போன்ற உருவை உண்டாக்கி இராமர் பார்த்துக் கொண்டிருக்க அதனைக் கண்டதுண்டமாக வெட்டினான். இதனால் சீதையே ஒழிந்து விட்டாள் என் இராமர் எண்ண வேண்டும் என்பது அவனது நோக்கம். ஆனால் இலட்சுமணன் அது இந்திரஜித் செய்த மாயாஜால வித்தை என இராமரிடம் கூறிப் போர் களத்தில் அவனை எதிர்க்கச் சென்றான். இது போல இராவணன் இராமனின் உருவைச் செய்து வித்யுத் ஜிஹ்வன் என்பவனிடம் கொடுத்து அதன் தலையை வெட்டி ஈட்டியில் குத்தி உயர்த்திச் சீதைக்குக் காட்டுமாறு சொல்லி அனுப்பினான்.

சீதையோ "ஏன் இந்த மாயாஜால வித்தை எல்லாம்? இன்னும் சில நாட்களில் இராவணனுடைய தலைதான் உண்மையிலேயே இந்த மாதிரி ஈட்டி முனையில் குத்தி உயர்த்தப்பட இருக்கிறது" என்று கூறி அவனை அனுப்பினான்.

இந்திரஜித் மேகங்களிடையே மறைந்து இராமர் மீதும் இலட்சுமணன் மீதும் நாகாஸ்திரத்தை எய்தான். அப்போது கருடன் பறந்து வந்து பாம்புகளின் தலைகளை நசுக்கிக் கொன்று பாதுகாத்தான். சீதைக்கும் இராமருக்கும் பணி புரிந்து பதிநான்கு ஆண்டுகள் கடும் பிரம்மச்சரிய விரதத்தைக் கடைபிடித்த இலட்சுமணன் இந்திரஜித்தைக் கொல்லப் போகிறான் என விபீஷணன் கூறினான்.

 இந்திரஜித் ஒரு யாகம் செய்து கொண்டிருந்தான். அங்கு இலட்சுமணனும் அனுமாரும் விபீஷணனும் போய் கருப்பு ஆடு ஒன்றை பலிஇட்டு அவனது ஹோம குண்டத்தில் போட்டு யாகத்தைப் பாழாக்கினார்கள். அங்கு கடும் போர் மூண்டது. அதில் இலட்சுமணன் இந்திரஜித்தைக் கொன்றான்.

இது கண்டு இராவணன் கோபம் கொண்டு பாதாள இலங்கையின் அதிபதியான மஹிராவணனிடம் இராமனையும் இலட்சுமணனையும் காளிதேவிக்குப் பலியிடும்படிக் கூறினான். தூங்கிக் கொண்டிருந்த இராமரையும் இலட்சுமணனையும் மஹிராவணன் தன் மாயாஜாலத்தால் பொம்மைகளாக்கித் தூக்கிக் கொண்டு பாதாள இலங்கைக்குச் சென்றான். அங்கு காளி கோயிலில் பலி கொடுக்க அவர்களை அவன் தயாராக வைத்திருந்தான்.

அனுமார் பாதாள இலங்கைக்குப் போய் வாசலைக்காக்கும் மத்சவல்லவனுடன் போர் புரியலானார். அப்போது சுவர்ச்சயா தேவி அங்கு வந்து அவர்கள் இருவரும் தந்தையும் மகனுமாக உறவு கொண்டவர்கள் எனக்கூறி சண்டையை நிறுத்தினாள்.

அனுமார் சிறு உருவில் காளி கோயிலுக்குள் சென்றார். அங்குள்ள இராமரையும் இலட்சுமணரையும் விடுவித்து தன் தோள்களில் ஏற்றிக் கொண்டு வெளியே வந்தார். அவர்கள் இருவரும் மஹிராவணனுடன் போர் புரியலானார்கள்.

இராமரைத் தெய்வமாகப் போற்றி வணங்கும் சந்திரசேனையை மஹி ராவணன் சிறையில் அடைத்திருந்தான். அவளிடமிருந்து அனுமார் மஹிராவணன் உயிர் நிலை இரகசியத்தை அறிந்து கொண்டார். அதனை அவர் அழிக்கவே மஹிராவணன் இராமரின் அம்பினால் தாக்குண்டு இறந்து போனான். இராமர் சந்திரசேனைக்கு தத்துவ போதனை புரிந்து அவள் மறுபிறப்பில் விஷ்ணுவை அடைவாள் என ஆசீர்வதித்தார்.

 பாதாள இலங்கைக்கு மத்சவல்லவனை அதிபதியாக்கி விட்டு இராமரும் இலட்சுமணரும் இலங்கை வந்து சேர்ந்தார்கள். தான் செய்த மாயா ஜாலங்கள் எல்லாம் பயனற்றுப் போனது கண்டு இராவணன் தன் கோரிக்கை நிறைவேற பாதாள அறையில் இருந்து யாகம் செய்யலானான். இதை விபீஷணன் இராமரிடம் தெரிவித்து அந்த யாகத்தை அழிக்க வழி கூறினான்.
அங்கதன் மறையும் மந்திரத்தை உச்சரித்து இராவணனின் மாளிகைக்குப் போய் மண்டோதரியின் தலைமயிரைப் பிடித்து இழுத்து வந்து இராவணன் முன் நிறுத்தினான். இதனால் கோபம் கொண்டு இராவணன் எழுந்து வரவே அந்த யாகம் பாதியில் நின்று விட்டது.

வேறு வழியின்றி இராவணன் இராமருடன் போர் புரிய வேண்டியதாயிற்று. தன் மகன் இந்திரஜித்தைக் கொன்ற இலட்சுமணனைக் கண்டதும் அவனுக்கு ஒரே ஆத்திரமாக இருந்தது. அவன் சக்தி ஆயுதத்தை இலட்சுமணன் மீது பிரயோகித்தான். அதனால் இலட்சுமணன் நினைவிழந்து விழுந்துவிட்டான்.
அனுமார் உடனே இமயமலைக்குப் போய் மறுநாள் விடிவதற்குள் அங்கிருந்து சஞ்சீவினி மலையைக் கொண்டு வந்து இலட்சுமணனின் மயக்கத்தைப் போக்கினார். இலட்சுமணன் மயக்கம் தெளிந்து எழுந்ததும் இராமரும் அவனுமாகச் சேர்ந்து இராவணனை எதிர்த்துப் போரிடலானார்கள்.

இந்திரன் இராமருக்கு உதவ தன் இரதத்தையும் தேரோட்டி மாதலியையும் அனுப்பினான். இராமருக்கும் இராவணனுக்குமிடையே கடும் போர் நிகழ்ந்தது. இராமர் இராவணனின் தலை ஒவ்வொன்றாக வெட்டி வீழ்த்தியும் அவை மீண்டும் முளைத்து வந்தது கண்டு திகைத்தார்.

இதை கண்டதும் வீபீஷணன் இராமனிடம் இராவணனின் வயிற்றிலுள்ள அமிர்த பாண்டம் பற்றிக் கூறி அதனை அடித்து உடைக்குமாறு சொன்னான். இராமர் பிரம்மாஸ்திரம் எய்து அதனைச் செய்து இராவணனை ஒழித்தார். இராவணனது உயிரற்ற உடல் கீழே விழுந்தது.

இராவணன் ஒழிந்தான். அதன்பிறகு அவன் தம்பி விபீஷணன் இலங்கையின் மன்னனாக ஆனான். சீதை அசோகவனத்திலிருந்து வந்தாள். இராமரும் "சீதையே! கொடியவனை தண்டித்து நான் நாட்டின் தர்மத்தை நிலை நாட்டினேன். இராவணன் உன்னைக் கவர்ந்து போய் இவ்வளவு நாட்களாக சிறை வைத்திருந்தான். அதனால் உன்னை நான் எவ்வாறு ஏற்று அயோத்திக்கு செல்ல முடியும்? இனி உன் இஷ்டம் எதுவோ அதன் படி செய்" என்றார்.
சீதை உடனே அங்கிருந்தவர்களிடம் தீ மூட்டி வளர்க்கும்படிச் சொன்னாள். பின்னர் அவள் இராமரது பாதங்களைத் தொட்டு வணங்கி அந்தத் தீயில் குதித்தாள். தீப்பிழம்புகள் உயரக் கிளம்பின. அத்தீயிலிருந்து அக்னி தேவன் தன் இருகைகளில் சீதையை ஏந்தி வந்து இராமரின் முன் நிறுத்தி "இராமா! சீதை பரிசுத்தமானவள். ஏற்றுக்கொள்" என்றான்.

அதே சமயம் தசரதர் சொர்க்கத்தில்இருந்து விமானத்தில் வந்து யாவரையும் பார்த்து அவர் இராமனிடம் "மகனே! இராமா!! அக்னி பŽட்சையில் சீதை தன் புனிதத் தன்மையை நிரூபித்து விட்டாள். நீ சீதையோடு அயோத்திக்கு சென்று நாட்டை நன்கு ஆண்டு வா" எனக் கூறினார். இராமர் புஷ்பக விமானத்தில் எல்லாரையும் ஏற்றிக் கொண்டு அயோத்தி போய்ச் சேர்ந்தார்.

 

0 comments:

Post a Comment