மகாவிஷ்ணு - 13


 

சுக்ரீவன் கிஷ்கிந்தையின் மன்னனானான். வாலியின் மகன் அங்கதனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிய பின் அவன் இராமரைப் பற்றி மறந்து சுகபோகங்களில் ஈடுபட்டு விட்டான். இது கண்டு இலட்சுமணன் கோபம் கொண்டு வில்லை எடுத்து வரவே அனுமார் சுக்ரீவனுக்கு அவனது கடமையை உணர்த்தினார். சுக்ரீவனும் சீதையைத் தேட வானரர்களை அனுப்பினான். 

அங்கதன், அனுமார், ஜாம்பவான் ஆகியோர் தென் திசையில் சென்றனர். அப்போது இராமர் அனுமாரிடம் தன் மோதிரத்தைக் கொடுத்து சீதையிடம் கொடுத்து வரும்படிக் கூறினார். 

தென் கடலை அடைந்த வானரர்களுக்கு "இராவணன் சீதையை எங்கே சிறை வைத்திருக்கிறான் என யோசித்துக் கொண்டுஇருக்கையில் ஜடாயுவின் அண்ணனான சம்பாதி மெதுவாக நடந்து அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தான். அவனுக்கு இறக்கைகள் இல்லை.

ஒருமுறை சம்பாதியும் ஜடாயுவும் சூரியனை முதலில் தொட்டு விட்டு வருவது யார் எனப் பந்தயம் போட்டார்கள். அதில் சம்பாதி பறந்து சூரியனை அணுக முயன்று தன் இறக்கைகளை பொசுக்கிக் கொண்டான்.
வானரர்களிடமிருந்து சம்பாதி நடந்ததை எல்லாம் தெரிந்து கொண்டு அங்கதனை தன் தோளின் மீது அமரச் செய்து உயரமான இடத்தில் நின்று இலங்கையைக் காட்டினான். பல நூறு மைல்கள் தூரத்தில் இலங்கை இருப்பதை அறிந்த வானரர்கள் மலைத்து நின்றார்கள்.

 ஜாம்பவான் அனுமாருக்கு அவரது சக்தியை எடுத்துக் கூறி அவரை இராமரது வேலையில் ஈடுபடக் கூறினார்.

 அனுமாரும் இராமரை தியானித்தவாறே ஆகாயத்தில் எம்பிக் கிளம்பிச் சென்றார். அவரது சக்தியைப் பரீட்சிக்க தேவர்கள் சரசாவை அனுப்பினார்கள். தேவ ஸ்திரீயான சரசா பயங்கர ராட்சசியாகி அனுமாரை எதிர்த்து நின்றாள். அனுமாரும் தன் உடலை அவளது உடலைப் போலப்  பெரிதாக்கினார். சரசா மேலும் தன் உடலைப் பெரிதாக்கி விடவே அனுமாரும் தன் உடலை இன்னமும் பெரிதாக்கினார். சரசா மேலும் தன் உருவைப் பெரிதாக்கி வாயை திறந்து கொண்டு அனுமாரை விழுங்க வந்தாள். 

அனுமார் சட்டென மிகச் சிறிய உருவாகி  அவள் வாயில் புகுந்து அவளது உடலை பிளந்தவாறே பின்புறமாக வெளியே வந்து விட்டார். சரசா தன் சுயரூபத்தை அடைந்து தேவலோகம் சென்றாள். அனுமாரை தேவர்கள்பாராட்டினார்கள்.

அனுமார் தன் உருவைப் பெரிதாக்கிய சமயம் கடலில் இருந்த சிம்ஹிகை என்ற ஜலராட்சசி அவரது நிழலைப் பிடித்து அவரை அசைவற்றிருக்கச் செய்தாள். அனுமாரோ அவளை ஒரே குத்தால் கொன்று விட்டார். இவ்வாறு தன்னைத் தடை செய்தவர்களை எல்லாம் அடித்து ஒழித்தவாறே ஆகாய வழியே அனுமார் கடலை கடந்து சென்ற போது அவரது உடலிலிருந்து வியர்வைத் துளிகள் கடலில் விழ அவற்றை சுவர்ச்சலை என்ற மீன் வடிவில் இருந்த கடல் கன்னி விழுங்கி விட்டாள். அதனால் அவள் கர்ப்பமுற்று மத்சவல்லபன் என்ற மகனைப் பெற்றாள்.

ஒருமுறை இந்திரன் மலைகளுக்குள் இருந்த இறக்கைகளை அறுத்துக் கொண்டே போனான். அப்போது இமவானின் மகனான மைநாகன் கடலிலுள் போய் ஒளிந்து கொண்டான். அவன் அனுமார் ஆகாய வழியே செல்வது கண்டு கடல் மட்டத்திற்கு வந்து "அனுமாரே! சற்று என் மீது தங்கி இளைப்பாறி விட்டுச் செல்லுங்கள்" என வேண்டினான்.
 
 அனுமாரும் அந்த வேண்டுகோளின்படி மைநாக மலை மீது சற்று இருந்து விட்டு மீண்டும் உயரக் கிளம்பி ஆகாய வழியே சென்று இலங்கையை அடைந்தார்.

இலங்கையைக் காப்பவள் இலங்கிணி என்ற தேவதை. 

அனுமார் இலங்கைக்குள் நுழைய முயல்வது கண்டு தன் ஈட்டியால் அவள் குத்த முயன்றாள். அனுமார் சட்டெனச் சிறிய உருவாகி தலைவாசல் வழியே நுழைந்தார். அவரை இலங்கிணி ஈயைப் பிடிப்பது போலத் தன் உள்ளங்கைக்குள் பிடித்தாள். அனுமார் அவளது கையைக் கடிக்கவே சட்டென அவள் பிடிப்பைத் தளர்த்தினாள். அனுமார் விடுபட்டதும் தன் கையை மடக்கி அவளது மார்பில் ஓங்கி ஒரு குத்து குத்தினார். அவள் மறு கணமே நினைவிழந்து கீழே விழுந்தாள்.

தன் நினைவு பெற்றதும் அவள் கண் விழித்து அனுமாரைப் பார்த்து "நான் எப்போது இம்மாதிரி நினைவிழந்து விழுகிறேனோ அப்போது இலங்கைக்கு நாசகாலம் ஆரம்பமாகி விட்டது. இது நானாகச் சொல்வது அல்ல. முன்பு பிரம்ம தேவன் என்னிடம் கூறியது. இவ்வளவு நாள் இலங்கையின் காவல் தெய்வமாக நான் ஒரு சாபத்தால் இருந்தேன். எனக்கு சாப விமோசனம் ஏற்பட்டது. இனி நான் என் இருப்பிடம் செல்கிறேன். நீ தாராளமாக இலங்கைக்குள் செல்" எனக் கூறி அவள் ஒரு கந்தர்வப் பெண்ணாக மாறி மறைந்தாள். 

அனுமார் இலங்காபுரிக்குள் சென்றார். மாட மாளிகைகள் கொண்ட அந்த அழகிய நகரைக் கண்டு அவர் பிரமித்துப் போனார். அவர் சிறிய உருவிலேயே இலங்கை முழுவதும் திரிந்து சீதையைத் தேடிப் பார்த்தார். அசோகவனத்தில் அங்கு அவர் சீதையைக் கண்டார். சீதையைச் சுற்றிலும் ஆயுதங்களை வைத்துக் கொண்டு ராட்சசிகள் காவலாக நிற்பதை அவர் பார்த்து அங்கே அருகிலிருந்த ஒரு மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து இராமரின் திருநாமத்தை உச்சரிக்கலானார்.அப்போது இராவணன் அட்டகாசமாக தேவ, நாக, யட்ச, ராட்சசப் பெண்கள் சூழ அங்கு வந்தான்.
 
 அவன் சீதை இருந்த இடத்திற்கு வந்து "ஏ சீதையே!  இப்போதாவது நான் சொல்வதைக் கேள், அந்த இராமன் வந்து
உன்னை விடுவித்துக் கொண்டு போகப் போவதில்லை" என்றான். 

சீதையோ ஒரு புல்லைத் தூக்கி எறிந்து "அடே, புல்லுக்குச்  சமமானவனே! இதையெல்லாம் சொன்னால் என் மனம் மாறி  விடுமா? நீயோ திருடன் இப்படிப் பட்டவனை தண்டிப்பது  அரசரான இராமரின் கடமை. உனக்கு விரைவிலேயே முடிவு  காலம் வரப்போகிறது" என்றாள் அலட்சியமாக.

இராவணன் தன் வாளை உருவி "உன்னைத் துண்டு துண்டாக  வெட்டிப் போடுகிறேன் பார்" என்றான். சீதையோ "நீ ஒன்றும்
அப்படிச் செய்யமாட்டாய். இந்த வீண் மிரட்டலில் நான் பயந்து உன் விருப்பப்படி நடக்க மாட்டேன். இராமரை எதிர்த்து வென்றா என்னை நீ சிறை பிடித்தாய்? பயந்தாங் கொள்ளியான நீ சன்னியாசி போல வந்து கபடமாக என்னைக் கவர்ந்து வந்தாய். இந்தத் திருட்டுத்தனத்திற்கு உனக்கு தண்டனை கிடைக்கத்தான் வேண்டும்" என்றாள்.

அதைக் கேட்ட இராவணன் முணு முணுத்தவாறே அங்கிருந்து சென்றான். அனுமார் ராட்சசப் பெண்கள் இல்லாத நேரமாகப் பார்த்து மரத்திலிருந்து இறங்கி சீதையைக் கண்டு இராமரின் மோதிரத்தைக் கொடுத்தார். தனது விஸ்வரூபத்தை அவர் சீதா தேவிக்குக் காட்டித் தன் தோளின் மீது அவள் அமர்ந்து கொண்டால் இராமரிடம் கொண்டு போய்ச் சேர்த்து விடுவதாகக் கூறினார். சீதையோ "இது சரியல்ல. இராமர் இராவணனைக் கொன்றே என்னை விடுவித்துக் கொண்டு போக வேண்டும். அதுவரை நான் கண்ணீர் வடித்தவாறே இந்த அசோக வனத்தில்தான் இருப்பேன் என்பதை நீ அவரிடம் போய் கூறு" என தன் தலையிலிருந்த சூடாமணியை எடுத்து அனுமாரிடம்  கொடுத்து அதனை இராமரிடம் சேர்ப்பிக்குமாறு சொன்னாள். 

அதனை வாங்கி கொண்டு, தான் வந்தது இராவணனுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக அசோகவனத்து பூஞ்செடிகளையும் கொடிகளையும் அழிக்கலானார். தன்னைப் பிடிக்க வந்த ராட்சசர்களையெல்லாம் அடித்துக் கொன்றார்.
 
 இவ்வாறு பல ராட்சசர்கள் மடியவே  இராவணன் தன் மூத்த மகனான இந்திரஜித்தை அனுப்பினான்.  அவன் விட்ட பிரம்மாஸ்திரத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதற்காக அனுமார் கட்டுண்டார். இராவணனை நேரில் கண்டு அறிவுரை கூறவும்  அவர் விரும்பினார். 

இராவணனின் தர்பாரை அவர் அடைந்த போது அவன்  சிம்மாசனத்தில் அமர்ந்து தாழ்ந்து அனுமாரைப் பார்த்துப்  பரிகாசம் செய்வது போல ஒரு சிரிப்பு சிரித்தான். அனுமார் ஒரு  முறை மூச்சை அடக்கி வெளி விட்டார். அப்போது அவரைக்  கட்டி இருந்த கட்டுகள் அறுந்தன. தன் வாலை அவர் நீட்டி வளையமாகச் சுருட்டியவாறே இராவணனின் சிம்மாசனத்திற்கும் உயரமாகச் செய்து அதன் மீது அமர்ந்து இராவணனைத் தாழ்ந்து பார்த்தார்.

இராவணன் அது கண்டு திகைக்கையில் அனுமார் "ராட்சச  மன்னனே!  இராவணா!! நான் இராமதூதன். 

இராமரால் இலங்கையை முற்றுகையிட்டு வென்று விட முடியும். அதனால்  நீ மிகுந்த பலசாலி என்று கர்வப்பட்டுக் கொண்டிராதே. நான்  சொல்வதைக் கேள். மரியாதையாகச் சீதையை இராமரிடம்  ஒப்படைத்து விட்டு அவரிடம் மன்னிப்புக் கேள்" என்றார்.  இராவணனோ கோபத்தோடு அனுமாரைக் கொல்லத் தன் வாளை எடுத்துக் கொண்டான்.

அப்போது விபீஷணன் குறுக்கிட்டு "தூதனாக வந்தவனைக் கொல்லக் கூடாது. ஏதாவது அங்கஹீனம் செய்து அனுப்பு" என்றான். இராவணனும் "குரங்குகளுக்குத் தம் வால் என்றால் உயிர். அதனால் அந்த வாலில் துணி சுற்றி எண்ணெய் விட்டு எரித்துப் பொசுக்குங்கள்" என்றான்.
ராட்சச வீரர்களும் அவ்வாறே செய்தனர். அனுமாரோ ஒரு குதி குதித்து ஆகாயத்தில் உயரக் கிளம்பினார். அவர் தம் வாலைச் சுழற்றியவாறே இலங்கா புரியின் மாளிகைகளுக்குத் தீ வைத்தார். 

பல மாளிகைகள் எரிந்தன. இலங்கை சாம்பல் மயமாகி விட்டது.  விபீஷணனின் மாளிகை மட்டும் தீக்கு இரையாகவில்லை.
அனுமார் மீண்டும் அசோகவனத்திற்குப் போய் சீதையைக்  கண்டார். அவளிடம் விடை பெற்றுக் கொண்டு அவர் ஆகாய  மார்க்கமாகக் கிளம்பி கடலைக் கடந்தார். பின்னர் மற்ற  வானரர்களுடன் அவர் கிஷ்கிந்தைக்கு வந்து இராமரிடம் சீதை  கொடுத்த  சூடாமணியைத் தந்தார். 

அதைப் பெற்றுக் கொண்ட இராமர் சீதையை நேரில் கண்டது போலவே மகிழ்ந்து போனார்.  அவர் அனுமாரைக் கட்டித் தழுவி கொண்டு அவரது வீர  செயல்களைப் பாராட்டினார். பின்னர் அவர் தன் வில்லை  எடுத்துக் கொண்டு இராவணனைக் கொல்வதாகச் சபதம்  செய்தார். இராவணனின் தம்பி விபீஷணன். இராமரோடு விரோதம்  வேண்டாம் என்றும் சீதையை இராமரிடம் ஒப்படைத்து இலங்கையைக் காப்பாற்றுமாறும் இராவணனிடம் வேண்டினான்.  இராவணனோ" என் பலத்தால் இராமனை வெல்ல முடியும். நீ இப்படிச் சொல்லி எனக்கு துரோகம் செய்கிறாய். அதனால் நீ உடனே இலங்கையை விட்டு போய் விடு. என் கண் முன் தென்படாதே" என்று கோபத்தோடு கூறினான். வீபீஷணனும் தன் ஆட்களுடன் இலங்கையை விட்டு அகன்றான்.

 

0 comments:

Post a Comment