மகாவிஷ்ணு - 12


 

பரசுராமர் கொடுத்த வில்லை இராமர் நாணேற்றி விடவே, அது கண்ட பரசுராமர் "ராமா! இனி நான் சத்திரியர்களை ஒன்றும் செய்ய மாட்டேன். நாராயண வில்லான இந்தக் கோதண்டம் இனி உன்னுடையதே!" எனக் கூறி விடை பெற்றுக் கொண்டு சென்றார். அது முதல் அவருக்குக் கோதண்டராமன் என்ற பெயரும் ஏற்பட்டது.

யாவரும் விழாக்கோலம் பூண்ட அயோத்தி நகரில் ஊர்வலமாகச் சென்றனர். இப்படியிருக்கையில் இராமர் ஒருநாள் சீதையிடம் "இந்த நகரங்களில் நாம் இருப்பதை விட காடுகளில் ஆனந்தமாகத் திரிந்து வாழ்வது எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா?" என்றார். சீதையும் அதனை ஆமோதித்தாள்.
கொஞ்ச நாட்களாயின. தசரதர் சில கெட்ட சகுனங்களைக் கண்டார். எரி நட்சத்திரங்கள் விழக்கண்டு தனக்கு முனி தம்பதிகள் கொடுத்த சாபத்தை நினைத்து கொண்டார். எங்கே தன் உயிர் போய் விடுமோ என பயந்து அவர் இராமருக்குப் பட்டாபிஷேகம் செய்ய வசிஷ்டரிடம் யோசனை கேட்டு அதற்கான முகூர்த்த நாளையும் முடிவு செய்தார்.

இதே சமயம் பிரம்மாவும் சரஸ்வதிதேவியும் வீற்றிருக்க அவர்களை காண நாரதர் தேவர்களை அழைத்துக் கொண்டு வந்தார். பிரம்மாவிடம் "இராமர் அரியாசனத்தில் அமர்ந்து விட்டால் ராட்சஸர்கள் அழிவது எப்படி என இவர்கள் கவலைப்படுகிறார்கள்" எனக் கூறித் தம்மோடு வந்த தேவர்களைக் காட்டினார். பிரம்மா சரஸ்வதிதேவியைப் பார்க்க அவளும் புன்னகை புரிந்து "நாரதா! எது நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கும்.
 
 அதோ பார். மந்தரை இப்போது அரண்மனைக்குள் அது விஷயமாகத் தான் போய்க் கொண்டிருக்கிறாள். கவலைப் படாதே" என்றாள். நாரதரும் தேவர்களும் கீழ் நோக்கி பூலோகத்தைப் பார்க்க அவர்களுக்கு கூனி மந்தரை நன்கு தெரிந்தாள். நாரதரும் "ஓ! இவள் வாக்கில் நீங்கள் அமர்ந்து  தேவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறீர்களா! மிக்க நன்றி" எனக் கூறி மகிழ்ச்சியுடன் தேவர்களை அழைத்துக் கொண்டு சென்றார்.

கூனி மந்தரை கைகேயியின் அந்தரங்கப் பணியாள். அவள் கைகேயியைப் பரிதாமபகரமாகப் பார்க்கவே கைகேயியும் "ஏன் இப்படிப் பார்க்கிறாய்? என்ன விஷயம்?" என்று கேட்டாள். கூனியும் "ஐயோ! நாளைக்கு இராமனுக்குப் பட்டாபிஷேகமாம்" என்றாள் முகத்தைச் சுளித்தவாறே.

கைகேயியோ "இந்த நல்ல செய்தியை ‘ஐயோ’ என்கிறாயே. இந்தா இந்த முத்து மாலை இதைச் சொன்ன உனக்குப் பரிசு "எனக் கூறித் தன் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி அவள் கழுத்தில் போட்டாள்.
கூனியோ "ஐயோ! உனக்கு சூது வாது எதுவும் தெரியாது. 

இராமன் அரசனானால் நீ இனி கௌசலைக்கு அடிமை. உன் வாழ்வும் உன் சந்ததியரும் தலை தூக்க முடியாது. எனவே கோபமாய்ப் படுக்கை அறையில் போய்ப்படு. தசரதர் வந்தால் அவர் உனக்குக் கொடுப்பதாக வாக்களித்த இரண்டு வரங்களைக் கேட்டு வாங்கு" என்று பலவாறு கூறி துர்போதனை செய்தாள்.

இதன் பயனாக கைகேயி தசரதர் அவளது அறைக்கு வந்ததும் இராமர் பதிநான்கு வருடங்கள் வனவாசம் செய்யவும் பரதன் முடி சூடவுமான இரு வரங்களைக் கேட்டு வாங்கி விட்டாள். கொடுத்த வாக்கை மீற முடியாது. தசரதர் வரங்களை அளித்து விட்டு தன் நினைவு இழந்து அங்கேயே விழுந்து கிடந்தார்.

கைகேயி இராமரை அழைத்து தசரதர் கொடுத்த வரங்களைக் கூறவே இராமரும் "தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. அவர் வாக்கைக் காக்கிறேன்" எனக் கூறி அப்போதே காட்டிற்குப் போகத் தயாரானார்.

 இராமருடன் சீதையும் இலட்சுமணனும் காட்டிற்குக் கிளம்பினார்கள். அயோத்தி மக்களும் இராமரைத் தடுக்க அவர் யாவரையும் சமாதானப்படுத்தி விட்டு கங்கை நதியைக் கடந்து பரத்துவாஜ முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார். அங்கு இராமரும், இலட்சுமணனும் சீதையும் தபஸ்விகளைப் போலத் தலை முடியை முடிந்து கானக வாசிகளாயினர்.

தன் நினைவை அடைந்த தசரதர் இராமர் காட்டிற்குப் போய் விட்டது கேட்டு "ஆ! இராமா!" என கூறியவாறே உயிரை விட்டார். அப்போது பரதன் தன் தாய் மாமன் வீட்டில் சத்துருகனனோடு இருந்தான். அவனுக்குத் தகவல் அனுப்பப்பட்டது. அவனும் அயோத்தி வந்து தன் தந்தையின் ஈமச் சடங்குகளைச் செய்தான். அவன் தன் தாயின் முகத்தைக் காணக் கூட கூசினான்.

 பரதன், இராமரை அழைத்து வந்து அவரையே அரியாசனத்தில் அமர்த்தத் தீர்மானித்து இராமர் இருக்கும் இடத்திற்கு சென்றான். இராமரோ நாடு திரும்ப மறுத்து பரதனையே நாட்டை ஆண்டு வரும்படியும் தான் பதினான்காண்டு கழிந்ததும் வந்து விடுவதாகவும் கூறினார். பரதன் அவரது பாதுகைகளை பெற்று அவற்றைத் தலை மீது வைத்துக் கொண்டு நந்திக் கிராமம் என்ற இடத்தில் தங்கி அரியாசனத்தில் அவற்றை வைத்து இராமரின் பிரதிநிதியாக ஆண்டு வரலானான்.

இராமரும் இலட்சுமணரும் சீதையும் அங்கு குடிலை அமைத்து வசிக்கலாயினர். அப்போது விராதன் என்ற அரக்கன் சீதையைக் கவர்ந்து செல்ல முயலவே இராமர் ஒரே அம்பால் அவனைக் கொன்றார். இதற்குள் சூர்ப்பணகை, கரனும் தூஷணனும் இறந்ததை அறிந்தாள்.

சூர்ப்பணகை இராவணனின் தங்கை. தண்டகாரண்ய பகுதியில்இருந்த ராட்சஸர்களுக்கு எல்லாம் தலைவி. ராட்சஸர்களை ஆயிரக்கணக்கில் கொன்ற இராமரையும் இலட்சுமணனையும் அழித்து விட சூர்ப்பணகை அட்டகாசத்துடன் பஞ்சவடிக்கு வந்தாள். இராமரிடம் தன்னை மணந்து கொள்ளும்படிக் கேட்டாள். வேண்டினாள். பயமுறுத்தினாள். பின்னர் சீதையைத் தாக்க ஓடினாள்.
 
 இலட்சுமணன் அவளைக் கொல்லாமல் அவளது மூக்கையும் காதுகளையும் அறுத்து அவமானப் படுத்தி அனுப்பினான். சூர்ப்பணகை இலங்கைக்குப் போய் இராவணனிடம் தனக்கு நேர்ந்த அவமானத்தையும் அதற்குக் காரணமான இராமர், இலட்சுமணன் சீதை ஆகியவர்களைப் பற்றியும் கூறினாள். சீதையின் அழகைக் கேட்ட இராவணன் அவளை ஏமாற்றிக் கவர்ந்து வரத் திட்டமிட்டு மாŽசனைத் தங்க மானாக சீதை உள்ள குடிலுக்கு அனுப்பினான்.

சீதையும் மாயத் தங்க மானைக் கண்டு அதனை பிடித்துத் தருமாறு இராமரிடம் கேட்க அவரும் அந்த மானைத் துரத்திக் கொண்டு சென்றார். அது அகப்படாததால் அவர் அதன் மீது ஒரு அம்பை எய்யவே அது "அது! இலட்சுமணா!! ஆ! சீதா!!" என இராமர் கூவுவது போலக் கூவி உயிரை விட்டது.


இலட்சுமணன் அது கேட்டு "இது என்ன மாயம்?" என சீதையோ "மாயம் இல்லை. உன் அண்ணனைக் காப்பாற்ற முடியுமா இல்லையா?" எனக் கடுஞ் சொற்கள் கூறினாள். இலட்சுமணனும் குடிலின் முன் மூன்று கோடுகளைக் கிழித்து சீதையிடம் அதனை தாண்டிச் செல்ல வேண்டாம் என கூறி விட்டுச் சென்றான்.


தனியாக இருந்த சீதையை சன்னியாசி உருவில் சென்ற இராவணன் பிச்சை போட அழைத்து குடிலை விட்டு சற்று தூரம் வரச் செய்து அவளைக் கவர்ந்து சென்றான். இலட்சுமணன் இராமரைக் கண்டு நடந்ததை அறிந்தான. இருவரும் வேக வேகமாகக் குடிலுக்கு வந்த போது சீதை இல்லாதது கண்டு திகைத்தனர்.


இருவரும் சீதையைத் தேடித் திரிகையில் ஓரிடத்தில் இறக்கைகள் அறுபட்டுக் கிடந்த ஜடாயுவை அவர்கள் கண்டார்கள். ஜடாயுவும் தான் சீதையைக் கவர்ந்து தென் திசையில் சென்ற இராவணனைத் தடுத்து எதிர்த்துப் போரிட்டதாயும் அதில் தன் இறக்கைகளை இராவணன் அறுத்து விட்டதாயும் கூறி உயிர் விட்டான். அவனது ஈமச் சடங்குகளை இராமர் செய்ய அவன் நற்கதி பெற்றான்.


பின்னர் இராமரும் இலட்சுணனும் சீதையைத் தேடிச் செல்லவே அவர்களைக் கபந்தன் என்ற பயங்கர உருவம் பிடித்து விழுங்க முயன்றது.

 
 அந்த விசித்திர உருவத்தைக் கண்ட இருவரும் அதனை  தாக்கவே கபந்தனின் சாபம் விலகியது. அவன் ஒரு கந்தர்வனாகி "எனக்கு உங்களால் சாபவிமோசனம் கிட்டியது. நீங்கள் தென் திசையில் ரிஷிய முகபர்வதத்தை அடையுங்கள். அங்கு வானரர்கள் உங்கள் நண்பர்களாகி உங்களுக்கு உதவி புரிவார்கள்" எனக் கூறி கந்தர்வ லோகத்திற்குச் சென்றான்.

இராமரையும் இலட்சுமணனையும் ரிஷியமுகபர்வதத்தில் முதலில் அனுமார் கண்டு சுக்கிŽவனை அவர்களது நண்பனாக்கினார். முப்பத்து முக்கோடி தேவர்களும் வானரர்களாகப் பிறந்திருந்தார்கள். அவர்கள் ராட்சஸர்களை அழிக்க இராமருக்கு உதவவே அவ்வாறு பிறந்தவர்கள். அனுமார் சிவக்கிருபையால் அஞ்சனாதேவிக்கும் வாயு தேவனுக்கும் புதல்வராகப் பிறந்தவர். அஞ்சனையின் புதல்வன் என்பதால் ஆஞ்சனேயர் என்றும் வாயுவின் புதல்வன் என்பதால் மாருதி என்றும் அவர் பெயர் பெற்றார். மருதம் என்றால் காற்று எனப் பொருளாம்.

குழந்தையாக இருக்கையில் அனுமார் சூரியன் உதயமாவது கண்டு அவனை ஒரு பழம் என நினைத்துப் பிடிக்கப் பாய்ந்து சென்றார். இந்திரன் அப்போது தன் வச்சிராயுதத்தால் அவரை அடிக்க அவர் கீழே தன் நினைவு இழந்து விழுந்தார். இது கண்டு வாயு தேவன் கோபம் கொண்டு ஒரே இடத்தில் நின்று விட்டார்.

காற்று வீசாது போகவே உயிரினங்கள் திணற தேவர்கள் வந்து வாயு தேவனை சமாதானப்படுத்தி அனுமார் என்றென்றும் சிரஞ்சீவியாக வாழ்வார் என ஆசீர்வதித்து வரங்களை அளித்தார்கள்.

 பிரம்மா அனுமாரின் காதுகளில் அபூர்வ குண்டலங்களை அணிவித்து "இது யார் கண்களுக்குத் தென்படுகிறதோ அவரே மகாவிஷ்ணுவின் மறு அவதாரம் எனத் தெரிந்து கொள்" எனக் கூறினார். அனுமார் இராமரை முதலில் கண்ட போது அவர் இலட்சுமணனிடம் "இந்த அழகிய குண்டலங்களைக் காதில் அணிந்து வருவது யார்?" எனக் கூறியதை அனுமார் கேட்டு இராமர் விஷ்ணுவின் அவதாரம் எனத் தெரிந்து கொண்டார்.

அவர் இராமரை வணங்கி அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானார். பின்னர் அக்னி சாட்சியாக சுக்ரிவனை இராமரின் நண்பனாக்கினார். சுக்ரிவனின் அண்ணன் வாலி. அவன் சுக்Žவனை துரோகி எனக் கூறி அவனைக் கொல்ல முயன்றான். சுக்ரிவன் வாலியிடமிருந்து தப்பி அவன் வர முடியாத இடமாகிய ரிஷியமுகபர்வதத்தை வந்தடைந்தான். வாலியோ சுக்Žவனின் மனைவியைச் சிறையில் அடைத்தான்.

சுக்ரிவனுக்கு உதவி அவனுக்கு அநீதி இழைத்த வாலியைக் கொன்று அவனையே கிஷ்கிந்தை மன்னனாக்குவதாக இராமர் வாக்களித்தார். வாலியின் எதிரே நின்று யார் போர் புரிந்தாலும் அவர்களின் பாதி பலம் வாலிக்கே போய் விடும். இவ்வாறு வாலி ஒரு வரம் பெற்றிருந்ததால் வாலியும் சுக்ரிவனும் போர் புரிந்த போது இராமர் ஒரு மரத்தின் மறைவில் நின்று தன் அம்பை எய்து வாலிக்கு நற்கதியும் அளித்தார். 
(தொடரும்)

 

0 comments:

Post a Comment