மகாவிஷ்ணு - 11


 

இலட்சுமிதேவி வேதவதியாக அவதரித்து தவம் செய்து கொண்டிருக்கையில் இராவணன் அவளைச் சீண்டவே அவள் யோகாக்னியோடு கலந்து இலங்கையில் போய் பிறந்தாள். இலங்காபுரியை ஒட்டி ஒரு அழகிய தடாகம் இருந்தது. அந்தத்தடாகத்தில் இராவணன் தினமும் குளித்து விட்டு சிவனைப் பூசிக்கத் தாமரை மலர்களைக் கொய்து கொண்டு போவான்.

அன்றும் அவ்வாறே தாமரை மலர் பறிக்க அவன் சென்ற போது தடாகத்தின் நடுவே ஒரு பெரிய வெள்ளைத் தாமரை இருப்பதைக் கண்டான். அதில் அழகிய குழந்தை ஒன்று தங்க விக்கிரகம் போல இருப்பதையும் கண்டான். அதனை எடுத்து அவன் மகிழ்ச்சியுடன் பார்க்கையில் அசŽர வாக்கு ஒன்று "இராவணா! இந்தக் குழந்தையாலே உனக்கும் இலங்கைக்கும் கெடுதல் நேரிடும்" எனக் கூறி எச்சரித்தது.

அது கேட்டு இராவணன் அக்குழந்தையை கொன்று போட்டு விடும்படிக் கட்டளையிட்டான். வீரர்களால் அக்குழந்தையைக் கொல்ல முடியவில்லை. வாளை வீசினால் அது பொடி பொடியாகியது. நெருப்பில் போட்டால் நெருப்பே அணைந்து விட்டது. அதனால் அக்குழந்தையை ஒரு பெட்டியில் போட்டு மூடி சமுத்திரத்தில் அவர்கள் எறிந்து விட்டார்கள்.

அப்பெட்டி கடலில் மிதந்து போய் பிறகு தரையைப் பிளந்து பூமிக்கு அடியே போய் விதேகநாட்டு மிதிலாபுரியை அடைந்தது. விதேக நாட்டு மன்னன் ஜனகர். அவர் ஒரு யாகம் செய்ய பூமியை உழுத போது ஏரின் நுனியில் அக்குழந்தை இருந்த பெட்டி பட்டது. ஜனகர் அப்பெட்டியை எடுத்துத் திறந்து பார்க்க அதில் அழகிய பெண் குழந்தை இருப்பதைக் கண்டு அகமகிழ்ந்தார்.
 
 ஏர் நுனியில் கிடைத்த பெண்ணாகையால் ‘சிதம்’ என்ற சொல்லிலிருந்து சீதை என அவள் பெயர் பெற்றாள். சனகரின் மகளாக வளர்ந்ததால் ஜானகி என்றும் விதேக மன்னனின் புதல்வியாதலால் வைதேகி என்றும் பெயர்களை அக்குழந்தை பெற்றாள். ஒரு முறை சீதை தன் தோழிகளுடன் பந்து விளையாடிக் கொண்டிருக்கையில் பந்து ஜனகர் பூசித்து வரும் கனமான வில்லான சிவதனுசின் அடியே போய் விட்டது. முன்னூறு பேர்கள் தூக்கக் கூடிய அந்த வில்லை சீதை அனாயாசமாக எடுத்து வைத்து விட்டுத் தன் பந்தை எடுத்துக் கொண்டாள். இதைக் கண்டு வியந்த ஜனகர் "இந்த வில்லை எடுத்து வளைத்து நாண் ஏற்றுபவனையே இந்தச் சீதைக்குக் கணவனாக்குவேன்" என சபதம் செய்தார்.

சீதையின் சுயம்வரத்திற்கு அரசர்களுக்கு அவ்விஷயத்தை முன் கூட்டியே சொல்வது என்று தீர்மானித்து அவர் சீதையை வளர்த்து வரலானார். இந்த சமயத்தில் தான் விசுவாமித்திரர் அயோத்திக்குப் போய் தசரதரிடம் யாகத்தைக் காக்க இராமரையும் இலட்சுமணனையும் தன்னோடு அனுப்பும்படிக் கேட்டார். தசரதனோ "அவர்கள் சிறுவர்களாயிற்றே. நான் வந்து தங்களது யாகசாலையைக் காவல் புரிகிறேன்" என்றான். விசுவாமித்திரரோ "உன் புதல்வர்களுக்கு க்ஷத்திரியர்கள் கற்க வேண்டிய வித்தைகளைக் கற்றுக் கொடுக்கவும் வேண்டும். அதற்காகத்தான் என்னோடு அனுப்பும்படி நான் கேட்கிறேன்" எனக் கூறி வசிஷ்டரை அர்த்த புஷ்டியுடன் பார்த்தார்.

வசிஷ்டரும் புன்னகைப் புரிந்தவாறே இராமரையும் இலட்சுமணனையும் விசுவாமித்திரருடன் அனுப்பி வைக்கும்படி தசரதரிடம் கூறினார். தசரதரும் அவர்கள் இருவரையும் விசுவாமித்திரருடன் அனுப்பி வைக்கவே அவர்களும் முனி குமாரர்களின் உடை அணிந்து வில் அம்புகளை எடுத்துக் கொண்டு விசுவாமித்திரருடன் சென்றனர்.
 
 வழியில் விசுவாமித்திரர் அம்பு எய்வதிலுள்ள நுணுக்கங்கள் பலவற்றை அவர்களுக்குக் கூறினார். அவர்களும் அவற்றைக் கற்றுக் கொண்டனர். அவர்கள் சித்தாசிரமத்தை அடைந்தனர். விசுவாமித்திரரும் மற்ற முனிவர்களோடு சேர்ந்து யாகத்தை ஆரம்பித்தார். யாகத்தைக் காக்க இராமரும் இலட்சுமணரும் வில்லும் அம்புகளும் வைத்து கொண்டு காவலாக நின்றனர்.

யாகத்தை அழிக்க தாடகை முதலில் வந்தாள். பெண்ணாயிற்றே என்று இராமர் தயங்கவே விசுவாமித்திரர் அவள் அரக்கி என்றும் அவள் யாகத்தைத் தடுப்பதால் அவளைக் கொல்வது பாவமல்ல என்றும் கூறினார். இராமரும் ஒரு கூரிய அம்பை எய்து அவளைக் கொன்றார்.

அடுத்து அவளது மைந்தர்களான மாரிசனும் சுபாகுவும் யாகத்தை அழிக்க வந்தனர். இராமர் விட்ட ஒரு அம்பு சுபாகுவைக் கொன்றது. மற்ற அம்பு மாரிசனைத் தாக்க வரவே அவன் பயந்து ஓடி இலங்கையில் போய்த் தான் நின்று திரும்பிப் பார்த்தான்! நல்லவேளை. அது வரை அந்த அம்பு வரவில்லை. விசுவாமித்திரரின் யாகமும் நன்கு முடிந்தது. அவர் யாக குண்டத்திலிருந்து சக்தி வாய்ந்த பாணத்தை எடுத்துக் கொடுத்து "இது எதிரியைத் தாக்கி விட்டு உன்னிடமே வந்து சேரும் சக்தி வாய்ந்தது" என்றார். இராமரும் அதனை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டு வைத்துக் கொண்டார்.

இந்த யாகம் முடிய சிறிது காலம் பிடித்தது. இந்த காலத்தில் விசுவாமித்திரர் பல போர் முறைகளை இராமருக்கும் இலட்சுமணனுக்கும் கற்றுக் கொடுத்தார். அவர் "இராமா! என்னைப் போல நீயும் சூரிய வம்சத்தில் பிறந்தவன். அதனால்தான் மிகவும் ஆர்வத்தோடு உனக்குப் போர்க் கலைகளை எல்லாம் கற்றுக் கொடுக்கிறேன். நீ எனது சீடன் என்பது பற்றிப் பெருமைப் படுகிறேன்" என்றார். இராமரும் "குரு தேவரே! எல்லாம் தங்கள் அனுக்கிரகம்தான்" என்று பணிவுடன் கூறினார்.

இச்சமயத்தில் சனக மன்னர் சீதையின் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்து மன்னர்களுக்கும் ரிஷி முனிவர்களுக்கும் தகவல் அனுப்பினார்.
 
 விசுவாமித்திரருக்கும் அத்தகவல் கிடைக்கவே அவர் இராமரையும் இலட்சுமணனையும் அழைத்துக் கொண்டு மிதிலையை நோக்கிச் சென்றார்.
வழியில் கௌதமரின் ஆசிரமம் இருந்தது. அவ்வழியே சென்ற இராமரின் கால் ஒரு பாறை மீது பட்டதும் அது பெண்ணாக மாறி அவள் இராமரை வணங்கினாள். அவள்தான் கௌதமரின் மனைவி அகல்யை. கௌதமரின் சாபத்தால் அவள் கல்லாகி இருந்தாள். இராமரின் கால் பட்டால் அவளுக்கு சாப விமோசனம் என அவர் கூறி இருந்ததால் இராமரின் கால் பட்டதும் அவளுக்கு இருந்த சாபம் விலகியது.

அப்போது கௌதமரும் அங்கு வந்தார். அவரும் இராமரைப் பார்த்து "இராமா! உன்னால் இவள் சாபம் விலகி முன் போலானாள். இவள் என் மனைவி அகல்யை" என்றார். ஒரு பெண்ணிற்கு சாப விமோசனம் அளிக்கும் சக்தி தனக்கு இருக்கிறதா என எண்ணியவாறே அவர் கௌதமரையும் அகல்யையும் பார்த்தார். கௌதமரும் "ஆமாம். இராமா! நீ சக்தி வாய்ந்தவனே" என கூறி ஆசீர்வதித்தார். விசுவாமித்திரரும் கௌதமர் கூறியதை ஆமோதிப்பது போலத் தலையை ஆட்டிப் புன்னகை புரிந்தார்.

சூதர் இதனைக் கூறி "விஷ்ணுவின் அவதாரங்களில் இராமாவதாரமும் பின் வந்த கிருஷ்ணாவதாரமும் பல நல்ல செயல்களைப் புரிந்து மக்கள் மனதைக் கவர்ந்தன" எனக் கூறி மேலும் தொடர்ந்தார்.
கௌதமர் எல்லாரையும் தம் ஆசிரமத்துள் அழைத்துச் சென்றார். அவர் அளித்த உபசரிப்பை ஏற்ற பின் விடை பெற்றுக் கொண்டு விசுவாமித்திரர் இராமரையும் இலட்சுமணனையும் அழைத்துக் கொண்டு மிதிலாபுரிக்குச் சென்றார்.

விசுவாமித்திரரை அழைத்தது போலவே சனகரின் மந்திரி சதானந்தர் மற்றும் பல முனிவர்களையும் அழைத்திருந்ததால் வழி நேடுக சீதையின் சுயம்வரம் பற்றிய பேச்சாகத்தான் இருந்தது. விசுவாமித்திரரும் இராமரும் இலட்சுமணனும் மிதிலையை அடைந்தனர்.

அப்போது சீதை தன் தங்கையான ஊர்மிளையுடன் சேர்ந்து பூங்காவில் உலாவிக் கொண்டிருந்தாள். அப்போது அவ்வழியே இராமரும் இலட்சுமணனும் சென்று கொண்டுஇருப்பதை அவர்கள் பார்த்தார்கள். சீதை இராமரைப் பார்த்து தன் மனதைப் பறி கொடுத்துத்தான் விட்டாள். ஊர்மிளையும் இலட்சுமணனைக் கண்டு அவனே தன் கணவன் எனத் தீர்மானித்துக் கொண்டாள். இராமரும் அதே சமயம் சீதையைப் பார்க்கவே அவள் நாணத்தால் தலை குனிந்து கொண்டு அங்கிருந்து அரண்மனைக்குள் ஓடி விட்டாள்.

சுயம்வர மண்டபத்தில் வைக்கப்பட்ட சிவதனுசை எந்த மன்னனாலும் தூக்கக் கூட முடியவில்லை. அப்போது சனகர் அங்கு கூடி இருந்த மன்னர்களைப் பார்த்துப் பெரு மூச்சு விட்டார். அவரது கவலையைக் கண்ட விசுவாமித்திரர் இராமரிடம் வில்லைத் தூக்கி நிறுத்தி நாணேற்றும் படிக் கூறினார்.

குருவின் கட்டளைப் படி இராமர் சிவதனுசை எடுக்கச் சென்றார். முதலில் அவர் அந்த வில்லை மரியாதையுடன் வணங்கினார். பிறகு அவர் ஒரு யானை கரும்பைப்பற்றுவது போல எளிதாகச் சிவதனுசை எடுத்து நிறுத்தி நாணேற்ற வளைத்தார். அப்போது அந்த வில் படீரென்ற பெருத்த சத்தத்தோடு முறிந்தது.

அந்த சத்தம் மகேதிர மலையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த பரசுராமர் காதிலும் விழுந்தது. பரசுராமர் தாம் விஷ்ணுவின் அவதாரம் என்பதை உணர்ந்து இப்போது விஷ்ணுவின் மற்ற அவதாரமான இராமருக்குத் தன்னிடமுள்ள கோதண்டம் என்ற வில்லைக்கொடுத்து விடும் எண்ணத்தோடு அங்கிருந்து கிளம்பினார்.

 
சிவதனுசு முறிந்ததும் அதனை வளைத்து முறித்த இராமரின் கழுத்தில் சீதை மலர் மாலையை போட்டாள். சனகரும் உடனே தசரதருக்குச் செய்தி அனுப்பி விட்டு சீதைக்கும் இராமருக்கும் நடக்கப் போகும் விவாகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யலானார். தசரதரும் தம் குடும்பத்தவருடன் மிதிலைக்கு வந்து சேர்ந்தார்.
இராமர் சீதை விவாகத்தின் அன்றே சீதையின் தங்கையான ஊர்மிளையை இலட்சுமணனுக்கு மணமுடித்து வைக்க ஏற்பாடாயிற்று. இது போல பரதனுக்கு மாண்டவியையும் சத்துருகனனுக்கு சுருதகீர்த்தியையும் மணமுடித்து வைத்தார்கள்.

சீதா கல்யாணத்தோடு அவளது மற்ற மூன்று சகோதரிகளின் விவாகமும் தசரதரின் மைந்தர்களுடனேயே நடந்தது சிறப்பாக விளங்கியது.

 தசரதர் தம் புதல்வர்களையும் மருமகள்களையும் அழைத்துக் கொண்டு மிதிலையிலிருந்து அயோத்திக்குக் கிளம்பினார். வழியில் ஆவேசத்தோடு பரசுராமர் வந்து நிற்கவே தசரதர் அவரிடம் இராமருக்குப் பதிலாகத் தன்னைத் தாக்கித் தன் தலையை வெட்டி விடும்படி வேண்டினார்.

பரசுராமரோ "இராமா! வெகு நாட்களாக உபயோகப் படுத்தாமலிருந்த சிவதனுசை எடுத்து  நிறுத்தி விட்டதற்காகக் கர்வப் பட்டுக் கொள்ளாதே. இதோ பார். கோதண்டம் இது நாராயணணின் வில். எங்கே இதனை எடுத்து அம்பை எய்து காட்டு பார்க்கலாம்" என்று கூறி கோதண்டத்தை எடுத்து நீட்டினார்.

இராமர் அதனை வாங்கிக் கொண்டார் அப்போது பரசுராமரிடம் இருந்த விஷ்ணு அம்சம் மறைந்து போயிற்று. அது இராமரிடம் வந்து சேர்ந்து விட்டது. இராமர் கோதண்டத்தில் அம்பை வைத்துக் கொண்டு எய்வதற்குத் தயாராக நின்றார்.  (தொடரும்)

 

0 comments:

Post a Comment

Flag Counter