உண்மையான அன்பு

 

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கி செல்கையில் அதனுள் இருந்த வேதாளம்  சிரித்துக் கொண்டே "மன்னா நீ யாருக்காக இத்தனை சிரமப்படுகிறாயோ, அவன் இதற்குத் தகுதியுள்ளவன்தானா என்று நிச்சயமாகத் தெரியுமா?  ஏனெனில் சில சமயங்களில் மேதாவிகள்
கூட உண்மையைக் கண்டு அறிவதில் தவறு செய்கின்றனர். அப்படிப்பட்ட ஒருவனான பானுமூர்த்தி என்பவனின் கதையைக் கூறுகிறேன், கேள்" என்று கதை சொல்லலாயிற்று.

 
 பானுமூர்த்தி என்பவன் ஒரு கந்தர்வ மன்னனிடம் பணி புரிந்து வந்தான். அவன் சுப்ரியா என்ற கந்தர்வப் பெண்ணிடம் காதல் கொண்டான். ஆனால் சுப்ரியாவோ அவனிடம் ஒரு பெரிய தந்தப் பேழையைத் தந்து, "மன்னனின் பொக்கிஷத்திலுள்ள விலையுயர்ந்த இரத்தினக் கற்களால் இதை நிரப்பி என்னிடம் கொடுத்தால் மட்டுமே நான் உன்னை மணம் புரிந்து கொள்வேன்" என்றாள்.

பானுமூர்த்தி தன் காதலைப் பற்றி மன்னனிடம் கூற, மன்னன் அவனிடம் "இரத்தினக் கற்களை வீசி நான் உன்மேல் அடிப்பேன். எத்தனை கற்களின் அடியை உன்னால் தாங்க முடிகிறதோ, அத்தனையும் உனக்குத் தருவேன்" என்றான்.

நிபந்தனையை ஒப்புக் கொண்ட பானுமூர்த்தி சோதனைக்குட்பட்டான். ஆனால் முதல் அடியையே தாங்க முடியாமல் அடிப்பதை நிறுத்தச் சொன்னான். அதைக் கண்ட மன்னன், "உன்னுடைய காதல் உண்மையானது என்றால் உன்னால் வலியைத் தாங்க முடியும்" என்று ஏளனம் செய்தான்.
உடனே பானுமூர்த்தி "மன்னா, நான் சுப்ரியாவை மணக்க விரும்புவது உண்மையே. ஆனால் அதற்காக என்னால் இந்த வலியைத் தாங்க முடியாது " என்றான்.

அதற்கு கந்தர்வ மன்னன், "காதலைக் குறைவாக மதிப்பிடும் உனக்கு இனி இந்த கந்தர்வ உலகில் இடம் இல்லை. நீ பூலோகம் சென்று அடைவாய்" என சாபமிட்டான். பிறகு மனம் இளகி பானுமூர்த்தியைப் பார்த்து "இந்த தந்தப் பேழையில் இரத்தினக் கற்களை நிரப்பிக் கொண்டு பூலோகத்திலுள்ள உண்மையான அன்பு கொண்ட மனிதன் ஒருவனுக்கு பரிசாக அளித்து விட்டு மீண்டும் கந்தர்வ லோகம் திரும்புவாய்" என்று ஆணையிட்டான்.
அந்தப் பேழையுடன் பூலோகம் வந்த, பானுமூர்த்தி  தன்னை சந்நியாசியாக மாற்றிக் கொண்டு, உண்மையான அன்புள்ள மனிதனைத் தேடினான். பலநாட்கள் சுற்றி அலைந்து அவன் சோலையூர் என்ற ஊரை அடைந்தான்.
 
 அந்த ஊரில் எல்லாரும் புகழும்படியான சிவசங்கரின் குடும்பத்தைப் பற்றிக் கேள்விப்பட்டான். அக்குடும்பத்தில் மூத்தவனான ராமன் தன் தாய் தந்தையரை உரிய முறையில் போற்றிக் காத்ததுடன், தன் தம்பியையும் மிகுந்த அன்புடன் நேசித்து வந்தான். தன் குடும்பம் மட்டுமின்றி அந்த ஊரிலுள்ள அனைவரையும் தன்னுடைய குடும்பத்தினர்களைப் போல் நேசித்து வந்தான்.

அவன் தம்பியான சந்திரனும் ராமனைப் போலவே நல்ல குணங்கள் படைத்தவன். ஆனால் சுகவாசியாகவும் சோம்பேறியாகவும் இருந்தான். 

ராமனது நல்ல குணங்களால் கவரப்பட்ட அந்த ஊர் செல்வந்தரான சுந்தரம் தன் மகளான மல்லிகாவை அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். திருமணத்தின் போது மல்லிகாவின் தங்கையான மனோகரியைக் கண்டு ராமனின் தம்பி சந்திரன் பெரிதும் ஈர்க்கப் பட்டான்.  அவளைத்தான் மணம் புரிவேன்  என்று உறுதி கொண்ட சந்திரன் ஒரு நாள் மனோகரியைத் தனிமையில் சந்தித்துத் தன் விருப்பத்தை  அவளிடம் வெளியிட்டான்.
மனோகரிக்கு சந்திரனின் நல்ல குணங்களைப் பற்றித் தெரிந்திருந்தாலும், கூடவே அவன் உடலை வருத்தி உழைக்காத ஒரு சுகவாசி என்பதும் தெரிந்திருந்தது. ஆகவே அவள் சந்திரனிடம்" எனக்காக ஒரு வீடு வாங்கிக் கொடுத்தால் உன்னை மணக்க சம்மதிக்கிறேன்" என்றாள்.


"இவ்வளவு தானே! கொஞ்சம் அவகாசம் கொடு. நான் உனக்காக வீடு ஒன்று வாங்குகிறேன்" என்றான் சந்திரன். அதற்கு மனோகரி, "வீடு நீ எப்படி வாங்குவாய்? உனக்கோ வேலை எதுவும் கிடையாது. உன்னால் எப்படி முடியும்?" என்றாள். உடனே சந்திரன், "என் அப்பாவிடம் பணம்  கேட்டு, அதில் வீடு வாங்குவேன்" என்றான்.

அதற்கு மனோகரி, " நீ உழைத்துப் பணம் சம்பாதித்து வீடு வாங்கு. பிறகு பார்ப்போம்" என்று கூறி அவனை அனுப்பி விட்டாள். மனோகரியின் இந்தத் துடுக்கான பதிலால் சந்திரன் மிகுந்த ஏமாற்றமும் அவமானமும் அடைந்தான்.
 
 அதுவரையில் தான் சுகவாசியாக வேலை வெட்டி செய்யாமல் வீண் பொழுது போக்கியதற்காக வருந்தினான். இனி என்னதான் வேலை செய்தாலும், வீடு வாங்கும் அளவுக்குப் பணம் சேர்ப்பதற்குள் பல ஆண்டுகள் ஆகி விடும். அதுவரை மனோகரி எப்படி காத்திருப்பாள்? அவளை மறந்து விட வேண்டியது தான் என்று முடிவு செய்தான். ஆனால் அவ்வளவு எளிதாக மறக்க முடியவில்லை.

தன் தம்பியின் வாட்டமடைந்த முகத்தைக் கண்டு ராமன் ஒருநாள் தம்பியிடம் விசாரித்து உண்மையைத் தெரிந்து கொண்டான். தன் தம்பியிடம், "சந்திரா! மனோகரி மீது உனக்கு அபாரமான அன்பு இருப்பது உண்மையானால், நீ வீடு வாங்க உன் முயற்சியால் எவ்வாறு பணம் சேர்ப்பது என்று யோசி. மனோகரிக்கும் உன்மீது உண்மையான அன்பு இருந்தால், அவளுக்கு உனக்காகக் காத்திருப்பாள்" என்றான்.

இந்த சூழ்நிலையில்தான் கந்தர்வ மன்னரிடம் பணிபுரிந்த பானுமூர்த்தி ராமனை நாடி வந்தார். ஆனால் தன்னிடம் உள்ள ரத்தினக் கற்களைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. அவர் வந்த விஷயத்தைப் பற்றிக் கேள்விப் பட்டதும், "சுவாமி, உண்மையாக அன்பு கொண்டுள்ள மனிதனைத் தேடி நீங்கள் வந்துள்ளீர்கள். என்னைக் காட்டிலும், என் தம்பியான சந்திரன் ஒரு பெண்ணிடம் உண்மையாகவே தீவிர அன்பு செலுத்துகிறான். நீங்கள் தேடி வந்துள்ள சரியான நபர் அவனே" என்றான். 

சாமியார் உருவத்தில் இருந்த பானு மூர்த்தி சந்திரனின் அன்பின் ஆழத்தை சோதிக்க விரும்பினார். சந்திரனை நோக்கி, "மனோகரிக்காக எவ்வளவு கட்டங்களை சந்திக்க நேர்ந்தாலும் பொறுத்துக் கொள்வாயா?" என்றார். சந்திரன் சம்மதிக்கவே அவனை ஒரு காட்டுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள  குகையில் உட்காரச் செய்து, "நீ ஒருநாள் முழுதும் இப்படியே அமர்ந்து ஆஞ்சனேயரை நினைத்து உண்ணாமல் தவம் இரு. மனோகரி மீதுள்ள அன்பு உண்மையானால், நீ இதைச் செய்ய வேண்டும்" என்றார். சந்திரன் பானுமூர்த்தி சொல்லியவாறு தியானத்தில் அமர்ந்து விட்டான்.
 
 மறுநாள் அங்கு வந்த பானு மூர்த்தி தான் கூறியவாறே ஆடாமல் அசையாமல் தியானத்தில் அமர்ந்திருந்த சந்திரனை எழுப்பி, "சபாஷ், முதல் சோதனையில் தேறிவிட்டாய். இப்போது அங்கேபார். ஒரு அசுரனின் சிலை தெரிகிறதல்லவா? அதன் வாயினுள் ஒரு சாவி தொங்குகிறதைப் பார். சிலையின் வாயில் கை விட்டு அந்தச் சாவியை எடு. கையை விடும் சமயம், அசுரன் சிலை வாயை மூடிக் கொள்ளும். உனக்குப் பொறுக்க முடியாத வலி உண்டாகும். மனோகரியின் மீதுள்ள அன்பு உண்மையானால் அந்த வலியைப் பொறுத்துக் கொள். போ" என்றார்.
சந்திரன் அந்த அசுரனின் சிலையின் வாயில் கை விட்டு சாவியை எடுக்கையில், வாய் மூடிக் கொள்ள சந்திரனுக்குத் தாங்க முடியாத வேதனை உண்டாயிற்று. மனோகரிக்காகப் பொறுத்துக் கொண்டு, எப்படியோ சாவியை வெளியில் எடுத்து விட்டாள்.

அப்போது பானுமூர்த்தி, "சபாஷ், அந்தச் சாவியால் அசுரனின் வயிற்றில் ஒரு பூட்டு உள்ளதே, அதைத் திற" என்றார். அந்தப் பூட்டை சந்திரன் திறந்ததும், பெரிய சத்தத்துடன் அசுரனின் சிலையின் வயிறு திறந்தது. பானுமூர்த்தி அந்த துவாரத்தின் வழியே சந்திரனைக் கூட்டிச் சென்றார். அவருடைய தந்தப் பேழை அங்கே காணப்பட்டது. "சந்திரா, உனது முழு பலத்தையும் உபயோகித்து இந்தப் பேழையின் மேல் கை முட்டியால் குத்து. மேல் மூடி உடையும் வரை நீ குத்திக் கொண்டே இருக்க வேண்டும் செய்" என்றார்.
சந்திரன் பலமாக மேல் மூடியை முட்டியால் குத்தினான்.

 பொறுக்க முடியாத வலி ஏற்பட்டது. ஆனால் மனோகரியை நினைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் குத்தினான். கடைசியில் மேல் மூடியும் உடைந்தது. சந்திரனின் கண்களுக்கு இரத்தினக் கற்கள் தெரியாமல் பாம்பு தெரிந்ததால், பானுமூர்த்தி, "சந்திரா. இதனுள் இருக்கும் இரத்தினக் கற்கள் உன் கண்களுக்குத் தெரியாததால் உன்னை விடச் சிறந்தவர்கள் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. நீ சென்று உன் குடும்பத்தினர்கள் அனைவரையும் அழைத்து வா" என்றார்.

சந்திரன் குடும்பத்தினர்களான அவன் தாய், தந்தை, அண்ணி அனைவருக்கும் பாம்புதான் தெரிந்தது. ஆனால் ராமனின்  கண்களுக்கு மட்டும் இரத்தினக் கற்கள் தெரிந்தன.

இந்த இடத்தில் வேதாளம் கதையை நிறுத்தி விட்டு, "விக்கிரமா! பானுமூர்த்தியால் சிறிதளவு வலிக் கூட சுப்ரியாவின் பொருட்டு தாங்க முடியவில்லை. ஆனால் சந்திரனோ மனோகரியின் மேல் கொண்ட அன்பினால் தாங்க முடியாத வலியையும் வேதனையையும்  அவன் பொறுத்துக் கொண்டான். அவனுடைய அன்பு உண்மையானது தான். அப்படிஇருந்தும் அவன் கண்களுக்கு அந்த இரத்தினக் கற்கள் ஏன் தெரியவில்லை? அவன் அண்ணன் ராமனுடைய கண்களுக்கு எப்படித் தெரிந்தது? இதற்கு பதில் அறிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது.

அதற்கு விக்கிரமன் " சந்திரன் மனோகரியின் மீது கொண்ட அன்பு ஆழமானது தான். அதில் சந்தேகமேஇல்லை. ஆனால் சந்திரன் அத்தகைய அன்பு கொண்டிருந்தது மனோகரி ஒருத்தி மீதுதான். இளமைப் பருவத்தில் இவ்வாறு ஆழ்ந்த அன்பு ஒரு பெண்ணிடம் உண்டாவது இயற்கைதான். ஆனால் அவன் அண்ணன் ராமன் மன்னுயிர்களைத் தன் உயிர்போல் நேசித்தவன், அவன் தன் குடும்பம் மட்டுமன்றி அனைவர்களிடமும் அன்பு கொண்டிருந்தான். ஆகவே அனைவரிலும் சிறந்த அவன் கண்களுக்கு மட்டுமே இரத்தினக் கற்கள் தெரிந்ததில் ஆச்சரியமில்லை" என்றான்.

விக்கிரமனது இந்த சரியான பதிலால் அவன் மௌனம் கலையவே, அவன் சுமந்து வந்த உடலுடன் இருந்த வேதாளம் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

 
 
வேதாளம் வரும்...

0 comments:

Post a Comment