சோதிடருக்கு சோதிடம்

 

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி அவன் அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கி செல்லுகையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து, "நடு இரவில் இந்த பயங்கர மயானத்தில் தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து ஏதோ ஒரு மகத்தான லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக நீ இவ்வாறு செய்கிறாய் போலும். உன்னைப் போலவே மன உறுதி படைத்த சில மேதாவிகள், சாஸ்திரங்களையே கரைத்துக் குடித்த புத்திசாலிகள் வாழ்க்கையில் முக்கியமான கட்டங்களில் குழம்பி விடுகின்றனர். மேதாவியான ஒரு சோதிடர் தனக்கென்று வரும்போது முடிவெடுக்கத் தெரியாமல் ஒன்று மறியா இளைஞன் ஒருவனின் உதவியை நாடியக் கதையை சொல்கிறேன், கேள்" என்றது.

 சீதாபுரியில், சீதாராமன் என்பவருக்கு பாஸ்கரன் என்ற அழகான மகன் இருந்தான். அவன் அழகிலும், குணத்திலும் மயங்கிய அதே கிராமவாசியான முகிலன் தன் பெண் சந்தியாவை அவனுக்கு மணமுடிக்க எண்ணினார். ஆனால் பாஸ்கரன் திருமணத்தை விரும்பாமல் அந்தப் பெண்ணின் தந்தையிடம், "நான் ஒரு பைசா கூட சம்பாதிக்கவில்லை எனக்கு ஒரு வேலை கிடைத்தால் உங்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன்" என்று கூறினான்.

ஆனால் சந்தியாவின் தந்தையோ எப்படியாவது அவனைத்தன் மாப்பிள்ளையாக்கிக் கொள்ள விரும்பினார். இதற்கு சரியான தீர்வு சோதிடரான மிருத்யுஞ்சயர் கொடுப்பார் என எண்ணி அவரிடம் சென்று அனைத்தையும் விளக்கி, "சோதிடம் மூலம் பாஸ்கரனுக்கு எப்போது வேலை கிடைக்கும் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டார். மிருத்யுஞ்சயரும் சீதாராமன் மற்றும் முகிலன் வீட்டிலிருந்து சாதகத்தை வரவழைத்து இருவரது சாதகங்களையும் அலசிப்பார்த்த சோதிடர் முகிலனிடம், "உன் பெண்ணை திருமணம் செய்தபின் பாஸ்கரன் மதங்கபுரிக்குச் சென்றால் நன்றாக பணம் சம்பாதிப்பான்" என்று கூறினார்.

பாஸ்கரனுக்கு சாதகத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் தந்தையின் பிடிவாதத்திற்கு இணங்கி, பாஸ்கரன் சந்தியாவை மணம் புரிந்து, சோதிடரின் கூற்றுப்படி மதங்கபுரிக்குச் சென்றான். அங்கு தானும் மனைவியும் தங்குவதற்கு வீடு தேடி அலைந்து, ஒரு வீட்டு சொந்தக்காரரிடம் சென்று, "ஐயா, நானும் என் மனைவியும் தங்க வீடு தேவை. எனக்கு இப்போது வேலை ஏதும் இல்லை. ஆனால் வேலைகிடைத்தால், நீங்கள் கேட்ட வாடகையைத் தருகிறேன்" என்றான்.

 வீட்டுக்காரர் அவனை மேலும் கீழும் உற்றுப் பார்த்துவிட்டு "நான் நடத்தும் சோதனையில் நீ வெற்றி பெற்றால் வீடு தருவேன். எனக்கு ராமன், சோமன், நாகன், கர்ணன் ஆகிய நால்வர் பணம் பாக்கி தர வேண்டியுள்ளது. இவர்கள் வெகு நாட்களாகப் பணம் தராமல் அலைக்கழிக்கிறார்கள். இவர்களில் இன்று யாரிடமாவது சென்றால் பணம் கிடைக்குமா என்று சொல், பார்ப்போம்" என்று கேட்டார்.
வீடு கிடைக்க ஏதாவது சொல்லி வைப்போம் என்று எண்ணி, "நீங்கள் நாகனிடம் செல்லுங்கள். உங்கள் பணம் கிடைத்து விடும்" என்று பாஸ்கரன் சொன்னான். அதேபோல் நாகனும் வீட்டுக்காரருக்கு முழுப் பணத்தையும் கொடுத்து விட்டான்.

"அப்புறம் என்ன? பாஸ்கரனுக்கு வீடு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் பெரிய சோதிடர் என்ற செய்தியும் அவனைப்பற்றிப் பரவிவிட, மக்களின் கூட்டம் மிகுதியாக பாஸ்கரனிடம் சோதிடம் கேட்க அலைமோதியது. தன்னிடம் சோதிடம் கேட்க வருபவர்களிடம் நிச்சயமாகப் பேச்சுக் கொடுத்துப் பல விஷயங்களை அவர்கள் வாயிலாகவே அறிந்து கொண்டு, தன் புத்தியையும் பயன்படுத்தி சமயத்துக்கேற்றவாறு அவன் கூறிய சோதிடங்கள் பலிக்க ஆரம்பித்தன.

பாஸ்கரன் மதங்கபுரியில் நன்றாக வாழ ஆரம்பித்தான் ஒருநாள் சந்தியா  பாஸ்கரனிடம் "நீங்கள் இவ்வளவு பெரிய சோதிட நிபுணர் என்று நான் அறியவில்லை. நாம் இந்த ஊரை விட்டு, தலைநகர் சென்று அங்கே சோதிடம் பார்த்தால் நிறைய சம்பாதிக்கலாமே!" என்று யோசனை கூறினாள். அதற்கு பாஸ்கரன் சிரித்தவாறு, "எனக்கு சோதிடம் தெரியாது. அதில் நம்பிக்கையும் இல்லை. ஏதோ அதிருஷ்டம் என்னுடன் ஒத்துழைக்கிறது. தலைநகர் சென்றால் அங்கே சோதிடம் பார்ப்பதை விட்டுவிட்டு, ஏதாவது வியாபாரம் வேண்டுமென்றால் செய்யலாம்" என்றான்.

அதற்கு சந்தியா, "உங்கள் திறமையைப் பற்றி உங்களுக்கே தெரியவில்லை. உங்களுக்கு சோதிடம் சொன்ன மிருத்யுஞ்சயரைக் கேட்காமல் நீங்கள் சோதிடம் பார்ப்பதை விடாதீர்கள்" என்றாள்.

 இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் மிருத்யுஞ்சய சோதிடரே அவனைத் தேடி வந்து விட்டார். "பாஸ்கரன் உன்னுடைய புகழ் பற்றி அறிந்தேன். உனது திறமை அபாரமானது" என்று கூறினார் மிருத்யுஞ்சயர்.

"சுவாமி, நான் உங்களைக் காணத்தான் வர இருந்தேன். நீங்களே வந்து விட்டீர்கள். நீங்கள் இங்கு வந்திருக்கும் நோக்கத்தைத் தெரிந்து கொள்ளலாமா?" என்று பாஸ்கரன் கேட்டான்.
உடனே மிருத்யுஞ்சயர், "எனது கிராமத்தில் லட்சுமணன் என்றொரு விவசாயி இருக்கிறான். அவனுடைய மகனுக்கு மன்னனின் தர்பாரில் வேலையில் சேர்ந்துள்ளான். தன் மகனுடன் தலைநகரில் வசிக்க முடிவெடுத்ததால் அவனிடமுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை விற்க முயற்சி செய்கிறான். ஆனால் ஏக்கருக்கு நூறு பொற்காசுகள் மட்டுமே நியாயமான விலையான நிலத்திற்கு ஆயிரம் பொற்காசுகள் எதிர்பார்க்கிறான். இந்த விலை கொடுத்து வாங்க யாரும் தயாராயில்லை. அவன் இப்போது அவற்றை என்னை வாங்கிக் கொள்ளச் சொல்கிறான்" என்றார் அந்த சோதிடர்.

"அவன் உங்களை ஏன் வாங்கச் சொல்கிறான்? நீங்கள் அதிக விலை கொடுத்து ஏன் வாங்க வேண்டும்?" என்றான் பாஸ்கரன்."அது ஒரு பெரிய கதை" என்று தொடர்ந்த சோதிடர் "லட்சுமணன் ஒரு காலத்தில்  நிலங்களில் விளைச்சலே இல்லாமல் நஷ்டம் அடைந்து கடனாளியாகி விட்டான். அப்போது அவனை உற்சாகமளிக்கும் வகையில் நான் அவனிடம் சில ஆண்டுகள் கழித்து விளைச்சல் சரியாகும் என்றும், அவன் மகனுக்கு அரண்மனையில் வேலை கிடைக்கும் என்றும் தவிர பத்தாயிரம் பொற்காசுகள் கொண்ட ஒரு புதையல் அவன் நிலத்தில் உள்ளது என்றும் சொன்னேன். நான் சொன்னதுபோல், அனைத்தும் நடந்தது.

என்னுடைய சோதிடத்தினால்தான் அவனுக்குப் பல நன்மைகள் உண்டாயின என்ற நம்பிக்கையிலும் நன்றியினாலும் அந்த நிலங்களை எனக்கே விற்க விருப்பம் கொண்டுள்ளான். இந்நிலையில் நான் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஆகவேதான் உன்னிடம் சோதிடம் கேட்க வந்தேன்" என்றார்.

 "நான் இந்த விஷயத்தில் என்ன அறிவுரை கூறுவது" என்று பாஸ்கரன் கூறினான்.
"அந்த நிலத்தில் புதையல் கிடைக்கும் என்று நான் சொன்னது உண்மையாகும் என்று நீ கூறினால் நான் கண்டிப்பாக அந்த நிலத்தை வாங்குவேன்" என்றார்.

அவருடைய பேச்சை தவிர்க்க முடியாததால் நிலத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று பாஸ்கரன் கூறினான். இதைக் கேட்டதும் மிருத்யுஞ்சயர் மகிழ்ச்சியுடன் கிளம்பிச் சென்றார்.
இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சந்தியா பாஸ்கரனை நோக்கி, நீங்கள் சோதிடம் பார்ப்பதை நிறுத்தி விடுங்கள். நீங்கள் முன்னமே சொன்னதுபோல், நாம் தலைநகருக்குச் சென்று வியாபாரம் செய்வோம் வெகு விரைவில் பத்தாயிரம் பொற்காசுகளை சம்பாதித்து மிருத்யுஞ்சயரிடம் இருந்து அந்த நிலத்தை வாங்கி விடலாம். அதில்இருந்து புதையல் நமதாகி விடும்" என்றாள்.

மனைவியின் அறிவுரைப்படி, பாஸ்கரன் அவளுடன் தலைநகருக்குச் சென்று வியாபாரம் செய்ய ஆரம்பித்தான். சாமர்த்தியசாலியான பாஸ்கரன் ஓரிரு மாதங்களிலேயே நிலம் வாங்கப் பணம் சேர்த்து விட்டான். பணம் சேர்ந்தவுடன் உடனே தன் மனைவியுடன் கிராமத்திற்கு ஓடோடி வந்தான். கிராமத்தில் தன் வீட்டை அடைந்தவுடன் அவன் தந்தை, "விஷயம் தெரியுமா? மிருத்தியுஞ்சய சோதிடர் லட்சுமணனிடம் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கினார். அந்த நிலத்தில் அவருக்கு பத்தாயிரம் வராகன் கொண்ட புதையல் கிடைத்து விட்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த நிலத்தில் புதையல் இருக்கிறது என்பது அவருக்கு முன்னமே சோதிடத்தில் தெரியுமாம்" என்றாரே பார்க்கலாம்.

அதைக்கேட்டதும் பாஸ்கரன், அதிர்ச்சி அடைந்தான். இனித் தொடர்ந்து வியாபாரம் செய்வதா, இல்லை சோதிடம் பார்ப்பதா என்று பாஸ்கரன் குழம்பினான்.

இந்த இடத்தில் தன் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, "விக்கிரமா! மிருத்யுஞ்சயர் சோதிட சாஸ்திரத்தில் மகா நிபுணர். அப்படியிருந்தும் நிலம் வாங்குவது பற்றிய விஷயத்தில், அதில் புதையல் உள்ளது என்று சோதிடத்தின் மூலம் அவருக்கே தெரிந்திருந்தும், பாஸ்கரனிடம் ஏன் சோதிடம் கேட்கப் போனார்? தனது திறமையின் மீது அவருக்கே நம்பிக்கை இல்லையா? பாஸ்கரனுக்கு சோதிடக்கலை பற்றி ஒன்றுமே தெரியாத போது அவன் கூறிய சோதிட பலன்கள் எவ்வாறு சரியாக அமைந்தன? இவற்றுக்கு விளக்கம் தெரிந்தும் நீ சொல்லாமலிருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது.

உடனே விக்கிரமன், "ஊருக்கெல்லாம் மருத்துவம் பார்க்கும் மருத்துவர், தனது உடல் நலம் சரியில்லையெனில் மற்றொரு மருத்துவரைப் போய் பார்ப்பதில்லையா? ஒரு ரணசிகிச்சை மருத்துவர் தன் மகனுக்குத் தானே அறுவை சிகிச்சை செய்யாமல், மற்றொரு நிபுணரை நாடுவதில்லையா? அதுபோல் மிக முக்கியமான விஷயத்தில் தன்னுடைய சோதிடத்தை மட்டும் முழுதும் நம்பாமல் மிருத்யுஞ்சயர் மற்றொரு சோதிடரை நாடியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. சோதிடம் கேட்க வருபவர்கள் தாங்கள் கேட்க விரும்பும் பல சந்தேகங்களுக்குத் தேவையான பல தகவல்களை தானே சொல்லிவிடுவது உண்டு. பொது அறிவும், சாமர்த்தியமும் மனித சுபாவத்தை அறியும் திறனும் மற்றவர்களது வார்த்தைகளை கூர்ந்து கவனிக்கும் குணமும், பாஸ்கரனுக்கு இருந்ததோடு அதிருஷ்டமும் அவன் பக்கம் இருந்ததால், அவன் ஊகமாகக் கூறிய சோதிடப் பலன்கள் உண்மையாக அமைந்தன" என்றான்.

விக்கிரமனது இந்த சரியான பதிலால் அவன் மௌனம் கலையவே, அவன் சுமந்து கொண்டிருந்த உடலிலிருந்த வேதாளம் மீண்டும் அந்த உடலோடு முருங்கை மரத்தில் போய் ஏறிக் கொண்டது.

 
 
வேதாளம் வரும்...

0 comments:

Post a Comment