தேவயானியின் அன்பு

 
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மரத்திலேறி அதில்
தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம், "மன்னா! நீ நேர்மையானவன் என்பதும், குடிமக்களின் நலனையே பெரிதும் மதிக்கும் குணசீலன் என்பதும் நான் அறிவேன்.
 
ஆனால் உன்னைப்போன்ற உத்தமமான மன்னர்கள் கூட சில சமயங்களில் தன் சுயநலத்திற்காக நெறி தவறி தவறான பாதையில் செல்வதுண்டு. அத்தகைய மன்னர்களில் ஒருவனின் கதையை உனக்குக் கூறுகிறேன், கேள்!" என்றது.
 
விஜயபுரி ராஜ்யத்தை ஆண்டு வந்த உக்கிரசேன மன்னருக்கு, வீரசேனன் என்ற மகன் இருந்தான். சிறு வயது முதலே வீரசேனன் கல்வி கேள்வி களில் சிறந்தவனாக விளங்கினான். வாலிபன் ஆனதும் போர்க்கலைகள், ராஜதந்திரங்கள், அரசாங்க நிர்வாகம் அனைத்தையும் கற்றுக் கொண்டு, ஓர் இளவரசனுக்குரிய சகல லட்சணங்களுடன் திகழ்ந்தான். சில சமயங்களில், சிக்கலான அரசாங்க விகாரங்களில் உக்கிரசேனரே தன் மகனைக் கலந்து ஆலோசிப்பதுண்டு. தன் மகனுக்குப் பட்டம் சூட்டினால், அவன் மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்வான் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட, ஒரு நன்னாளில் வீரசேனனுக்கு முடிசூட்டி விட்டுத் தான் ஓய்வு பெற்றார்.
 
மன்னர் ஆனபின் வீரசேனன் ஓய்வின்றி உழைத்து தன் தந்தையை விட சிறப்பாக ஆட்சியை நிர்வகித்தான். நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுப்பதில் மந்திரிகளுடனும், சேனாதிபதிகளுடனும், அதிகாரிகளுடனும் பெரும்பாலான நேரத்தை செலவழித்தான். அவனுடைய அளப்பரிய திறமையினால், நாடு சில ஆண்டுகளிலேயே மகோன்னத நிலையை அடைந்தது.
 
வீரசேனனுக்குத் திருமணம் செய்து வைக்க அவன் தந்தை விரும்பினார். அதைப் பற்றிக் கேட்டதும், வீரசேனன் தனக்குரிய பெண்ணைத் தானே தேர்ந்தெடுப்பதாகக் கூறினான். குடிமக்களின் நலனுக்காகவே நாளெல்லாம் பாடுபட்ட வீரசேனனுக்கு தான் ஓர் எளிய குடும்பத்துப் பெண்ணை விவாகம் செய்வதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றியது. மனைவியாக வரப்போகும் பெண் கல்வியில் சிறந்தவளாகவும், புத்திசாலியாகவும், தன்னுடைய அரசாங்க வேலைகளில் தனக்கு யோசனை கூறும் அளவிற்கு அறிவு உடையவள்ஆகவும் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தான். அதற்காக, தன் ராஜ்யத்தில் உள்ள இளம் பெண்களை அழைத்து, அவர்களுக்குள் போட்டி வைத்து, தனக்குத் தகுந்த பெண்ணைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தான்.
 
 அதற்காக அறிவிப்பு பிறப்பித்ததும் ராஜ்யத்திலுள்ள ஆயிரக்கணக்கான பெண்கள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர்.
புத்திசாலித்தனம், சமயோசிதம், நினைவாற்றல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் பல கடுமையான போட்டிகளுக்கு அவர்களை உட்படுத்தி, அவர்களுள் இருவரைத் தேர்ந்தெடுத்தான். அவர்களில் ஒருத்தி தேவயானி! மற்றொருத்தி சிவரஞ்சனி! இருவரும் எல்லாப் போட்டிகளிலும் சரிசமமாக இருந்ததால், இருவரையும் மேலும் சிலப் போட்டிகளுக்கு அழைத்தான்.
 
இருவரிடமும், "உங்களில் ஒருத்தி மட்டுமே என் மனைவியாக முடியும். நான் இப்போது தரும் சவாலை யார் வெற்றிகரமாக முடிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து நான் அதை முடிவு செய்வேன். ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சவாரி செய்யும் இளைஞன் ஒருவனை நீங்கள் என்னிடம் அழைத்து வர வேண்டும். யார் வெற்றி பெறுகிறீர்கள் என்று பார்க்கலாம்!" என்றான்.
 
சற்று நேரம் சென்றபின், அந்த இரு பெண்களும் வீரசேனன் முன் இரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி சூரிய ஒளி படும்படி மன்னன் முன் வைத்தனர். புராணத்தின்படி சூரியபகவான் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சஞ்சாரம் செய்பவர்! இருவரின் மதி நுட்பத்தையும் கண்டு வீரசேனன் வியந்து போனான். சற்று நேரம் யோசித்து விட்டு,"பெண்களே! கடைசியாக ஒரு போட்டி வைப்பதற்கு முன் உங்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள்!" என்றான்.
 
உடனே சிவரஞ்சனி சற்றும் தயங்காமல், "நான் ராமாபுரத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி மாணிக்கத்தின் மகள்!" என்றாள். ஆனால், தேவயானி, "நீங்கள் என்னுடைய அறிவைத்தான் சோதிக்க வேண்டுமே தவிர, நான் யார் என்பது போன்ற ஆராய்ச்சிகளில் இறங்கக்கூடாது" என்றாள். ஆனால் வீரசேனன், "உன்னுடைய பெற்றோரைப் பற்றிக் கூற நீ ஏன் தயங்க வேண்டும்? நீ ஏதோ சொல்லக்கூடாத ரகசியத்தை மறைக்கிறாய் என்பது விளங்குகிறது" என்று வற்புறுத்தினான்.
 
வெகுநேரம் தயங்கியபின், தேவயானி, "நான் கோசல ராஜ்யத்து யுவராணி தேவயானி.
 
உங்களை எப்படியாவது திருமணம் செய்து கொண்டு விடவேண்டும் என்ற ஆசையினால், எளிய குடும்பத்துப் பெண்ணைப் போல் இதுவநடித்தேன். தயவு செய்து என்னைப் புறக்கணித்து விடாதீர்கள்!" என்று வேண்டினாள்.
 
"அப்படியானால், உண்மையை மறைத்து நீ போட்டியில் பங்கேற்று என்னை இதுவரை ஏமாற்றிஇருக்கிறாய். எளிய குடும்பத்துப் பெண்ணை மட்டுமே நான் மணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று அறிவித்துள்ள நிலையில் என் லட்சியத்திற்குப் புறம்பாக என்னால் நடக்க முடியாது!" என்றான் வீரசேனன். அதற்கு அவள், "நான் உங்களை நேசித்தேன், ஆகையால் உங்களை திருமணம் புரிந்து கொள்ள இங்கு வந்தேன். அதற்கான தகுதியையும் அடைந்தேன். என்னை நீங்கள் நிராகரிப்பதால் அதற்குக் கூடிய விரைவில் பதில் சொல்லியே ஆகவேண்டும்" என்று கூறியவாறு தேவயானி அங்கிருந்து வேகமாக வெளியேறிவிட்டாள்.
 
 வீரசேனன் சிலையென அப்படியே நின்று விட்டான். சிவரஞ்சனிக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்து சென்று விட்டாள்.
 
இதற்கு முன் வீரசேனன் தேவயானியைப் பார்த்தது கூடக் கிடையாது. ஆனால் அவளைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறான். அவள் கோசல நாட்டின் மன்னனான அமரேந்திரனின் ஒரே மகள். அவளது தந்தைக்கு மிகவும் பிரியமானவள். அவர் முறையாக ஆட்சி செய்யாமல், எப்போதும் சதுரங்கம் விளையாடுவதில் தன் நேரத்தைக் கழிப்பவர். ஆகையால் அவர் மகள் ஆட்சிப் பொறுப்பை தன் கையில் எடுத்துக் கொண்டாள். சிறு வயதிலிருந்தே செல்லமாக வளர்ந்ததால், தேவயானி கர்வம் பிடித்தவளாக இருந்தாள். அவள் யதேச்சாதிகாரம் புரிந்ததால், கோசல மக்கள் பெரிதும் துன்புற்றனர்.
 
மிகுந்த அவமானத்திலும், கோபத்திலும் திரும்பிய தேவயானியை அவளுடைய தந்தை சமாதானப் படுத்தினார். அவர் நினைத்திருந்தால் விஜயபுரி மீது படையெடுத்து இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் தன் மகளின் ஆசையை நிறைவேற்ற எண்ணினார். ஆகையால் வயதில் மூத்த மந்திரியை அழைத்து இது குறித்து விவாதித்தார். அதன்பிறகு, அவரிடம் வீரசேனனிடம் கொடுக்குமாறு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்.
கோசலராஜ்ய மந்திரி வீரசேனனை அடைந்து அமரேந்திரன் எழுதிய கடிதத்தைக் கொடுத்தார். அதில் பின் வருமாறு எழுதியிருந்தது. "மதிப்பிற்குரிய வீரசேனரே! என் மகள் தேவயானி தான் யுவராணி என்ற உண்மையை மறைத்து, தாங்கள் நடத்திய போட்டிகளில் கலந்து கொண்டு, தங்களை ஏமாற்றியதற்கு அவள் சார்பாக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவள் தங்கள் மீது கொண்டிருக்கும் அளவிடமுடியாத அன்புதான் அத்தகைய தவறை அவளை செய்யத் தூண்டியது. தயவு செய்து, அவளுடைய உணர்வுகளை மதித்து, அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமாய் நான் தங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
 
இது வெறும் சுயநல நோக்குடன் கூடியதல்ல! தாங்கள் அவளை மணம் புரிந்தால் இந்த கோசல நாடு தங்களுக்கு உரியதாகி விடும். தங்கள் சாம்ராஜ்யம் விரிவடைந்தால், நன்மை அடையப்போவது தங்கள் ராஜ்யம்தான்! இப்போது கோசல நாட்டின் ஆட்சிப் பொறுப்பு தேவயானியிடம் இருந்தாலும், அவளை சரியாக வழி நடத்திச் செல்வோர் இல்லாததால், எங்கள் நாட்டின் நிர்வாகம் சரிவர இல்லை. ஆனால், கோசல நாடும் தங்கள் ஆதிக்கத்தில் வந்தால், மகாதிறமைசாலியான நீங்கள் எங்கள் நாட்டையும் நன்றாக ஆட்சி செய்வீர்கள்! கோசல நாட்டு மக்களும் நன்மை அடைவார்கள். ஆகையால் உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து, நாட்டு மக்களின் நலன் கருதி, தேவயானியை மணம் புரிய சம்மதிக்கும்படி நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.
 
" அந்தக் கடிதத்தைப் படித்தபின் வெகுநேரம் யோசித்த வீரசேனன் இறுதியில் கோசலநாட்டு மந்திரியிடம் தேவயாணியை மணக்க சம்மதம் தெரிவித்தான்.
 
இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், "மன்னா! இந்த வீரசேனனின் செயலை என்னவென்று சொல்வது! தன் லட்சியமே பெரிது என்று முழங்கிக் கொண்டிருந்தவன், இறுதியில் கோசல நாடு தனக்குக் கிடைக்கும் என்ற பேராசையில் லட்சியத்தைக் காற்றில் பறக்க விட்டுவிட்டான்.
தேவயானியை மணக்க மறுத்தால் எங்கே அவர்கள்  போர் தொடுப்பார்களோ என்ற பயத்தில், தன் கொள்கையை குழிதோண்டிப் புதைத்து விட்டான். நேர்மையானவன், லட்சியவாதி என்று விஜயபுரி மக்கள் நம்பிக் கொண்டிருந்த அவர்கள் நாட்டு மன்னன், இறுதியில் பேராசையினால், தன் கொள்கையை கைவிட்டான். வீரசேனனைப் பற்றி உன் கருத்து என்ன? உனக்கு விளக்கம் தெரிந்து இருந்தும் மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்!" என்றது.
 
அதற்கு விக்கிரமன், "எளிய குடும்பத்துப் பெண்ணை மணம் புரிந்தால், குடிமக்களுடன் உள்ள பிணைப்பு அதிகமாகும் என்று தோன்றியதால், மேற்கூறிய லட்சியத்தை வீரசேனன் மேற்கொண்டான். ஆனால், தேவயானியின் தந்தை எழுதியிருந்த கடிதம் அவனுடைய கருத்துகளை மாற்றின. எந்த ஒரு நாடும் அருகிலுள்ள ராஜ்யங்களுடன் போரின்றி, நல்லிணக்கத்துடன் இருந்தால்தான் அமைதி நிலவும். தேவயானியை மணம் புரிவதால், அவன் ராஜ்யம் விரிவடைவதால் அவன் படைப்பலம் பெருகும். தவிர, கோசல நாடும் தன் ஆதிக்கத்தில் வந்தால் அதுவரை சீர்குலைந்திருந்த கோசல நாட்டு நிர்வாகம் மேன்மையடைந்து, அந்த நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள். நாட்டு மக்களின் நலன் கருதும் மன்னன் தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தரக்கூடாது. தனது லட்சியத்தைவிட, புதியதொரு ஒப்பந்தத்தால் நாட்டு மக்கள் மேலும் நன்மை அடைவார்கள் என்றால், மன்னன் தனது பழைய லட்சியத்தை கைவிடுவதில் தவறில்லை. ஆகையால், எந்தக் கோணத்திலிருந்து நோக்கினாலும், இரண்டு நாட்டு மக்களின் நலன் கருதி வீரசேனன் தேவயானியை மணக்க முடிவு செய்தது தவறே அல்ல!" என்றான்.
 
 விக்கிரமனது இந்த சரியான பதிலினால் அவனது மௌனம் கலையவே, அவன் சுமந்து வந்த உடலிலிருந்த வேதாளம் மீண்டும் அந்த உடலுடன் பறந்துபோய் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
 

0 comments:

Post a Comment