மகாவிஷ்ணு - 9

 

தசரதர் புத்திரகாமேஷ்டியாகம் செய்யவே ஹோமகுண்டத்திலிருந்து அக்னிதேவன் ஒரு பாத்திரத்தில் பாயசத்தோடு வெளிவந்தார். அவர் அப்பாயசத்தை தசரதரிடம் கொடுத்து அதனை அவரது மனைவிகளுக்குக் கொடுத்தால் புத்திரசந்தானம் ஏற்படும் எனக் கூறி மறைந்தார்.

தசரதரும் அப்பாயசத்தை கோசலைக்கும் கைகேயிக்கும் பகிர்ந்து கொடுத்தார். அவர்கள் இருவரும் சுமித்திரைக்கு மன்னர் பாயசம் கொடுக்கவில்லையே என எண்ணித் தமக்குக் கிடைத்ததில் பாதிப் பாதிப் பாயசத்தை அவளுக்குத் தனித் தனியே கொடுத்து விட்டுத் தாமும் சாப்பிட்டார்கள். கௌசல்யை சித்திரை மாதத்தில் சுக்கில பட்ச நவமி திதியில் மகாவிஷ்ணுவின் அவதாரமாக இராமரை நீலமேக வண்ணத்தில் பெற்றெடுத்தாள். கைகேயி விஷ்ணுவின் சங்கபத்ம அம்சத்தின் அவதாரமாகப் பரதனைப் பெற்றாள். சேஷனின் அம்சமான இலட்சுமணனையும் சக்கரம், கதை ஆகியவற்றின் அம்சமான சத்துருக்கனையும் சுமித்திரை பெற்றாள்.

இராமர் பிறந்த நாளை இராம நவமியாக கோசல நாடு முழுவதிலும் கொண்டாடினார்கள். அதன் பிறகு வந்த சித்திரை பௌர்ணமி இரவில் அரண்மனை மேல் தளத்தில் தசரதர் தம் நான்கு மைந்தர்களுடனும் மூன்று மனைவிகளோடும் அமைச்சர் சுமந்திரரோடும் அமர்ந்திருந்தார். இராமரைத் தூக்கி பத்திரன் என்ற வேலையாள் விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தான்.
 
 இராமர் தன் தாயாரிடம் போகவே அவளும் அவருக்கு ஆகாயத்திலிருந்த சந்திரனைக் காட்டினான். இராமரோ தனக்கு அந்த நிலா வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார். சுமந்திரர் உடனே முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து வந்து "ராமா! சந்திரனைப் பார்" என அதில் காட்டினார். இராமரும் மகிழ்ந்து "ஓ! இராமன் சந்திரன்" எனக் கூவினார். அன்று முதல் இராமச் சந்திரன் எனவும் அவர் அழைக்கப் பெற்றார்.

இலட்சுமணன் எப்போதும் இராமருடன் இருந்து வந்தான். அது போல பரதனும் சத்துருகனனும் ஒன்றாக இருந்தனர். அவர்கள் வசிஷ்டரிடம் கல்வி பயின்றனர். சிறு வயதிலேயே சகல வேத சாஸ்திரங்களையும் கலைகளையும் கற்றுக் கொண்டு விட்டனர்.

வசிஷ்டரும் "இராமா! நீ சூரியவம்சத்தவன். சூரியனைப் போலவே உலகெங்கும் ஒளி வீசிப் புகழ் பெறுவாய். உன் முன்னோர்களான ரகு, திலீபன் போல உயர்ந்து விளங்குவாய்" என ஆசீர்வதித்தார்.
இவ்வாறு சூதர் கூறவே நைமி சாரண்யா முதலான முனிவர்கள் "சூரியவம்ச மன்னர்களைப் பற்றி சற்று விவரமாகக் கூறுங்கள்" எனக் கேட்கவே சூதரும் கூறலானார்.

மகாகல்ப காலத்தில் விவஸ்வந்தன் என்ற பெயரில் பிரகாசித்த சூரியனின் மகன் வைவஸ்வத மனு என்ற பெயர் பெற்றார். இவருக்கு பத்து மைந்தர்கள். அவர்களில இஷ்வாகு என்பவன் ஒருவன்.
இந்த இஷ்வாகு வம்சத்தில் பிறந்தவர்கள் சிறந்த மன்னர்களே. இவர்களில் திலீபனும் ரகுவும் மிகவும் புகழ் பெற்றவர்கள்.


திலீபன் புத்திரப் பேறு பெற குல குரு வசிஷ்டரின் கட்டளைப்படி காமதேனுவின் அம்சமான நந்தினியைப் போஷித்து காட்டில் கொண்டு போய் மேய்த்து அதனை பூசித்து வரலானான். ஒரு நாள் அது ஒரு குகைக்குள் போய் விட்டது. அக்குகையில் ஒரு பயங்கர சிங்கம் இருந்தது. அது நந்தினியைப் பிடித்துக் கொள்ளவே திலீபன் அச்சிங்கத்தை கொல்ல வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டான். ஆனால் அவனால் அம்பை எய்ய முடியாமல் கை செயலற்றுப் போயிற்று.
 அப்போது சிங்கம் "அரசே! இந்தப் பசு என் ஆகாரமாகும். அதனால் நீ என்னைக் கொல்ல முயன்றது சரியல்ல என்பதை அறிவிக்கவே உன் கை அப்படி நின்று போயிற்று" என்றது. அது கேட்டு திலீபன் "நீ உனக்கு ஆகாரமாக என்னை ஏற்றுக் கொள். அந்தப் பசுவை விட்டு விடு" என வேண்டினான். அப்போது அந்த சிங்கம் மாயமாய் மறைந்தது.

அப்போது நந்தினி திலீபன் தன் பால் கொண்ட பக்தியைப் பாராட்டி தானே அவனை பரீட்சிக்க அவ்வாறு செய்ததாகக் கூறி அவனுக்குப் புத்திர பாக்கியம் கிட்ட வரமளித்து விட்டு மறைந்தது.
திலீபனின் மகனே ரகு. இவன் பெரிய கொடையாளியாகத் திகழ்ந்தான். தன் விருந்தாளியாக யார் வந்தாலும் அவர் மனதில் நினைப்பதை அறிந்து அவற்றை அளித்து வந்தான். ஒரு முறை அவனது விருந்தாளியாக வந்த ஒரு முனிவர் ரகுவின் மனைவியைப் பார்த்து விட்டு அவளை அடைய நினைத்தார். ரகு அதனை அறிந்து தன் மனைவியை அவரது ஆசிரமத்தில் கொண்டு போய் விட்டு விட்டான்.


அப்போது முனிவருக்குத் தமது எண்ணம் எவ்வளவு பாவமானது என்று தெரிந்தது. ரகுவின் மனைவியை அவர் மரியாதையுடன் அரண்மனைக்குத் திருப்பி அனுப்பி வைத்தார். ஆனால் ரகு அவளை ஏற்க சம்மதிக்கவில்லை. ஒரு முறை ஒருவருக்குக் கொடுத்ததை மீண்டும் வாங்கிக் கொள்வது சரியல்ல என்றான். அது கேட்டு ராணி தன்னைக் கொன்று விடும்படி அவனிடம் கேட்டுக் கொண்டாள்.

ரகுவும் அவளை வெட்டத் தன் வாளை உயரத் தூக்கி அடித்தான். ஆனால் அது மலர் மாலையாக மாறி அவள் கழுத்தில் விழுந்தது. அந்த தம்பதி மீது தேவர்கள் மலர்மாரி பொழிந்தார்கள். ரகு தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையுமே தானம் செய்து விட்டான். அதனால் பொக்கிஷத்தில் பணம் இல்லாததால் குபேரனிடமிருந்து பணம் எடுத்து வரச் சென்றான். அழகாபுரியை அடைந்த போது யட்சர்கள் தம் மாயாஜாலங்களால் அவனது முயற்சியை முறியடிக்க முயன்றார்கள். ஆனால் ரகு அவற்றையெல்லாம் வெல்லவே குபேரன் மகிழ்ந்து மனம் உவந்து ஏராளமான விலையுயர்ந்த பொருள்களைக் கொடுத்து அனுப்பினான்.
 
 
ரகு அதனைக் கொண்டு தொடர்ந்து தான தருமங்களைச் செய்யலானான். ரகுவின் மகன் அஜன். மன்னன் அஜனும் மாபெரும் வீரனே. சுயம்வரத்தில் போஜராஜனின் மகள் இந்துமதி அஜனைத் தேர்ந்து எடுத்தாள். இதனால் மற்ற மன்னர்கள் ஆத்திரம் கொண்டு அஜனைத் தாக்கினார்கள். அஜன் அவர்களை எல்லாம் எதிர்த்து வென்றான். அஜன் இந்துமதியுடன் ஒரு நாள் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்தான் அப்போது நாரதர் ஆகாயத்தில் சென்று கொண்டிருக்கையில் அவரது வீணையில் சுற்றப் பட்ட மலர் மாலையிலிருந்து ஒரு தேவலோக மலர் இந்துமதியின் மீது பட்டது. மறு நிமிடமே அவள் இறந்தாள். அஜன் தன் மனைவி இறந்ததால் மன வருத்தம் அடையவே நாரதர் அவன் முன் தோன்றி இந்துமதியின் பூர்வ விருத்தாந்தத்தைக் கூறினார்.

திருண பிந்து என்ற முனிவர் செய்த தவத்தைக் கலைக்க  இந்திரன் ஹரிணி என்ற தேவலோக மாதை அனுப்பினான். அவள் அந்த முனிவரின் சாபத்தைப் பெற்று மானிட ஜென்மம் அடைந்தாள். தேவலோக மலர் அவள் மீது படும் போதுதான் அவளுக்கு சாபவிமோசனம் என முனிவர் கூறினார். அதன்படி நாரதரின் வீணை மீதிருந்து தேவலோக மலர் அவள் மீது விழுந்ததும் அவள் இறந்து தேவலோகம் சென்றாள்.

இந்த அஜனின் மகன் தசரதன். இஷ்வாகு வம்ச மன்னர்கள் தேவர்களுக்கு அசுரர்களை அழிக்க அவ்வப்போது உதவி வந்தார்கள். தசரதனும் அது போல ஒரு முறை இந்திரனுக்கு உதவச் சென்றான். தசரதனோடு கைகேயியும் போர்க்களத்திற்குச் சென்றாள். அப்போரில் தசரதனின் ரதச் சக்கரம் கழன்று விடாதபடி அவள் அதனை வெகு சாமர்த்தியமாகச் செலுத்தினாள். அது கண்டு மகிழ்ந்து தசரதன் அப்போது அவளுக்கு இரண்டு வரங்களை அளித்தான். அவளும் அவற்றைத்தான் விரும்பும் போது கேட்டு வாங்கிக் கொள்வதாகக் கூறினாள்.

தசரதன் ஒரு நாள் வேட்டையாடும் போது இருட்டும் வேளையில் எங்கோ யானை நீர் குடிப்பது போன்ற சத்தம் கேட்டு அம்பை எய்தான்.

அது யானை செய்த சத்தம் அல்ல. ஒரு முனிவரின் மகன் தன் கமண்டலத்தில் நீர் மொண்ட போது ஏற்பட்ட சத்தம் அது. தசரதன் எய்த அம்பு அந்த முனிவரின் குமாரனின் உயிரைப் பறித்து விட்டது.


தசரதன் அந்த கமண்டல நீரை எடுத்துக் கொண்டு அந்த முனி குமாரனின் கண்பார்வை இழந்த கிழப் பெற்றோர்களிடம் போய் நடந்ததைக் கூறினான். அவர்கள் மகனின் பிரிவு ஆற்றாமல் "நீயும் எங்களைப் போல மகனைப் பிரிந்து அவன் நினைவில் உயிரை விடுவாய்" எனச் சபித்து இறந்து போனார்கள். சூரியவம்சத்து மன்னர்கள் தம்மிடம் அடைக்கலம் புகுந்தவர்களைக் கைவிட மாட்டார்கள். சிபி சக்கரவர்த்தி இதற்குப் பெயர் போனவன். அவனைப் பரீட்சிக்க இந்திரனும் அக்னியும் புறாவும் கழுகுமாக உரு எடுத்து வந்தார்கள். புறா சிபியின் மடியில் வந்து உட்கார்ந்தது. கழுகு அதனைக் கேட்க சிபி அதன் நிறைக்குத் தன் உடலிலிருந்து மாமிசம் அறுத்துக் கொடுப்பதாகக் கூறினார். கழுகும் சம்மதித்தது.

தராசில் ஒரு தட்டில் புறாவை வைத்து விட்டு மறு தட்டில் சிபி தன் உடலிலிருந்து மாமிசத்தை அறுத்து வைத்தார். எவ்வளவு வைத்தும் தட்டு சம நிலைக்கு வராது போகவே அவரே தட்டில் உட்காரவே தட்டுகள் சமநிலையை அடைந்தன.

  அப்போது இந்திரனும் அக்னியும் தம் உண்மையான உருவை எடுத்து சிபி சக்கரவர்த்தியைப் பாராட்டிப் பல வரங்கள் அளித்து விட்டுச் சென்றார்கள்.

இஷ்வாகு மன்னன் அம்பரீஷன்  விஷ்ணுவின் பரம பக்தன். அம்பரீஷனுக்கு லட்சுமியின் அம்சமாக ஸ்ரீமதி என்ற மகள் பிறந்தாள். அவள் சிறு வயது முதல் விஷ்ணுவையே தன் கணவராகக் கருதி வந்தாள். அவள் மிகவும் அழகானவள்.

ஒரு முறை நாரதர் பர்வதர் என்ற மகா முனிவரிடம் தன்னை மாயை ஒன்றும் சொல்ல முடியாது எனப் பெருமை அடித்துக் கொண்டார். அதனைப் பரீட்சிக்கலாம் என இருவரும் உலகைச் சுற்றி வந்தனர். அவர்கள் அம்பரீஷனைக் காணச் செல்ல அம்மன்னனும் தன் மகள் ஸ்ரீமதியைக் கொண்டு அவர்களுக்குப் பணிவிடைகள் செய்யச் செய்தான்.
விஷ்ணுவின் மாயை அந்த இருவர் மீதும் படிந்தது. ஸ்ரீமதியை பார்த்த இரு முனிவர்களும் அவளை மணக்க விரும்பி தம் விருப்பத்தை அம்பரீஷனிடம் கூறினார்கள். அம்பரீஷனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவன் "அவளது சுயம்வரத்திற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்" எனக் கூறி அனுப்பினான்.


ஸ்ரீமதியை எப்படியாவது அடைந்து விடுவது என நாரதர் முயன்றார். இதைக் கண்ட பர்வதர் தான் ஸ்ரீமதியை அடைய முடியாவிட்டாலும் நாரதர் அடையும் படி விட்டு விடக் கூடாது என நினைத்தார். நாரதர் விஷ்ணுவிடம் போய் தான் அழகாக விளங்க ஆபரணங்களும் மகுடமும் கேட்டு வாங்கி கொண்டு சென்றார். அவருக்குப் பின் வந்த பர்வதர் விஷ்ணுவிடம் "இந்த நாரதர் சுயம்வர மண்டபத்தில் அமர்ந்திருக்கும் போது அவரது முகம் ரங்கினுடையதாக மாறி விட வேண்டும்" என்று வேண்டினார். விஷ்ணுவும் அப்படியே ஆகும் எனக் கூறினார். 

      

0 comments:

Post a Comment

Flag Counter