மகாவிஷ்ணு - 8

 

கீழே விழுந்த ஜமதக்னி முனிவர் இறந்தவர் போலானார். அவரது மனைவி ரேணுகாதேவி அவரது உடலின் மீது விழுந்து கதறிக் கதறி அழுதாள். அப்போதுதான் பரசுராமர் காட்டிலிருந்து திரும்பி வந்தார். நடந்ததை அறிந்த அவர் தம் கோடாலியை எடுத்துக் கொண்டு மாகிஷ்மதி நகருக்குச் சென்றார். இச்சமயம் பிருகு முனிவர் ஜமதக்னியின் ஆசிரமத்திற்கு வந்தார். அவர் ரேணுகாதேவிக்கு ஆறுதல் கூறி ஜமதக்னியின் உடலிலிருந்து உயிர் போய் விடாமல் தடுத்து நிறுத்தி அவரைப் பிழைக்க வைத்தார்.

மாகிஷ்மதி நகருக்கு ஓட்டிச் செல்லப்பட்ட பசு அவர்கள் விரும்பியதைக் கொடுக்கவில்லை. அதனால் அதனை அடித்துத் துன்புறுத்தலாயினர். அச்சமயம் அங்கே போய்ச் சேர்ந்த பரசுராமர் அவர்களைத் தாக்கவே, அவர்கள் பயந்து ஓடி விட்டார்கள். பரசுராமரும் பசுவைத் தடவிக் கொடுத்து தம் தந்தையின் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தார்.

பரசுராமர் கார்த்தவீரியனை போருக்கு அழைக்கவே அவன் வந்திருப்பது சாதாரண முனி குமாரன் தானே என எண்ணி விட்டான். ஆனால் தான் எய்த அஸ்திரங்களை எல்லாம் பரசுராமர் தவிடு பொடியாக்கி விட்டு பயங்கரமாக தாக்குவது கண்டு திகைத்தான். பரசுராமர் தன் கோடாலியால் அவனது ஆயிரம் கைகளை மரக்கிளைகளை வெட்டுவது போல வெட்டித் தள்ளினார். அவன் தன் சக்தியை இழந்து நிலை குலைந்தான்.
 
 அப்போதுதான் தன் முன் நிற்பது மகாவிஷ்ணுவின் அவதாரம் எனவும் தான் அவரது சக்கராயுதம் எனவும் அவன் தெரிந்து கொண்டான். அவன் உடனே பரசுராமரை வணங்கி சக்ராயுதத்தில் போய் கலந்து விட்டான். பரசுராமரும் தம் தந்தையின் ஆசிரமத்திற்குத் திரும்பி வந்தார்.

அங்கு தன் தந்தை உயிரோடு இருப்பது கண்டு மகிழ்ந்து தாம் செய்ததை எல்லாம் அவரிடம் கூறினார். அப்போது ஜமதக்னி முனிவர் "மகனே, நீ செய்தது யோகிகளான நாம் செய்யத்தகாத செயல். இதற்குப் பரிகாரமாக நீ தவம் செய்" எனக் கூறினார்.
அப்போது பரசுராமர் "தந்தையே. ஒரு மன்னன் நேறி தவறி நடந்தால் அவனை தண்டிக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. நீங்கள் சொல்வதற்காக வேண்டுமானால் தவம் செய்கிறேன். ஆனால் நான் செய்த செயலுக்குப் பிராயச்சித்தமாக அல்ல" எனக் கூறிக் காட்டிற்குள் போய் தவத்தில் மூழ்கி விட்டார்.

கார்த்தவீரியனின் ஆயிரம் புதல்வர்கள் ஹைஹயஷத்திரியர்களைக் கூட்டிக் கொண்டு ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தைத் தாக்கினார்கள். ஜமதக்கினி முனிவர் ஆழ்ந்த தவத்தில் இருந்தும் அவர் மீது பாய்ந்தார்கள். அது கண்டு ரேணுகாதேவி "ராமா!! ராமா!! என இருபத்தோரு முறை உரக்கக் கூவினாள்.

ஹைஹயர்கள் ஜமதக்னியின் தலையை வெட்டி எறிந்தார்கள். ரேணுகாதேவி மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள். ஜமதக்னி முனிவரின் தலை உருண்டு போய் பாறைகளுக்கிடையே அகப்பட்டுக் கொண்டது. ஹைஹயர்கள் அந்த ஆசிரமத்திற்கு நேருப்பை மூட்டி விட்டார்கள். அந்தத் தீயில் ரேணுகாதேவி எரிந்து சாம்பலானாள்.

காட்டில் தவம் செய்து கொண்டிருந்த பரசுராமரின் காதில் ரேணுகா இருபத்தோரு தடவை கூப்பிட்டது விழுந்தது. அவர் எழுந்து தம் ஆசிரமத்திற்கு சென்றார். அப்போது ஆசிரமம் எரிந்து கொண்டிருப்பதையும் தம் தாய் தந்தையர் இறந்து போனதையும் கண்டார். அவர் தம் கோடாலியை எடுத்துக் கொண்டு ஹைஹயர்களைத் தாக்கி வெட்டிக் கொன்று குவிக்கலானார்.
 
 பாறைகளிடையே கிடக்கும் தன் தந்தையின் தலையை எடுத்துக் கையில் அவர் வைத்துக் கொண்டு "தந்தையே! இப்படி கோரமான செயலை ஷத்திரியர்கள் செய்தார்கள். எனவே ஷத்திரியர்களின் ரத்தத்தாலேயே உங்களுக்குத் தர்ப்பணம் செய்கிறேன். இந்தப் பூ உலகிலேயே ஒரு ஷத்திரியன் கூட இல்லாமல் அழிப்பதாகச் சத்தியம் செய்கிறேன" என எட்டு திசையிலும் எதிரொலிக்கக் கூறினார். அதைக் கேட்டு யாவரும் நடுங்கினார்கள். பல முனிவர்கள் வந்து அவரது கோபத்தைத் தணிக்கலானார்கள்.

பிருகு முனிவரும் "ராமா! துஷ்டர்களை தண்டிப்பது பகவானின் வேலை. நீ அதனை மேற்கொள்ள வேண்டாமே" என்றார். அதற்கு பரசுராமர் "அந்த பகவான் மனித ரூபத்தில் வந்து தான் துஷ்டர்களை தண்டிக்கிறார். அப்படிப் பட்ட அவதாரம் நான் என்று ஏன் பெரியவர்களான நீங்கள் நினைக்க கூடாது?" எனக் கூறி விட்டு அங்கிருந்து அமர்ந்து அவர் சிவனைக் குறித்து கடுந்தவம் புரிந்தார்.

சிவனாரும் பரசுராமரின் முன் தோன்றவே பரசுராமரும் "என் சபதம் நிறைவேற எனக்கு சக்தியை அளிக்க வேண்டுகிறேன்" என்ற வரத்தைக் கேட்டார். சிவனும் அவருக்கு பல அஸ்திரங்களை கொடுத்ததோடு "உனக்கு பார்க்க வாஸ்திரம் என்ற மிகச் சக்தி வாய்ந்த அஸ்திரமும் கொடுக்கிறேன்" எனக் கூறி ஆசீர்வதித்து அனுப்பினார். பின்னர் பரசுராமர் கோலோகத்திற்குச் சென்று விஷ்ணுவை தரிசித்து கிருஷ்ண கவசத்தை அடைந்தார். தன் அம்சத் தோடு கூடிய வில் ஒன்றையும் அவர் பரசுராமருக்கு அளித்து அதனை தான் ராமாவதாரம் எடுக்கும் போது திரும்ப வாங்கிக் கொள்வதாகக் கூறினார்.

பரசுராமர் அங்கிருந்து திரும்பியதும் ஷத்திரியர்களை ஒழிக்கலானார்.  கார்த்தவீரியனின் புதல்வர்களும் ஹைஹயர்களும் நகரை விட்டே ஓடிப் போய் விட்டார்கள். பரசுராமர் அந்நகரின் மீது அக்கினியஸ்திரத்தை எய்தார். மாகிஷ்மதி நகரம் எரிந்து சாம்பலாகியது.

கார்த்தவீரியனின் புதல்வர்களும் ஹைஹயஷத்திரியர்களும் மற்றும் பல அரசர்களின் உதவியோடு பரசுராமரை எதிர்க்க வந்தார்கள். 
பரசுராமர் தம் கோடாடாலியால் அவர்களை எல்லாம் வெட்டி அவர்களது ரத்தத்தை ஐந்து மடுக்களில் நிரப்பினார். தம் தந்தை ஜமதக்னி முனிவரின் தலையை அவர் அந்த மடுக்களில் முக்கி எடுத்து தர்ப்பணம் செய்து பின்னர் அதனை தகனம் செய்தார்.

பின்னர் பரசுராமர் ஒரு யாகம் செய்து தம் கறைகளைப் போக்கித் தம் தந்தையின் ஈமச்சடங்குகளைச் செய்தார். பின்னர் அவர் ஷத்திரியர்களை அடியோடு ஒழிக்க கிளம்பினார். தம் கோடாலியைச் சுழற்றி ஷத்திரியர்களை மூலை முடுக்கு விடாமல் தேடிப் பிடித்து ஒழிக்கலானார். இதனால் ஷத்திரியத் தாய்மார்கள் தம் குழந்தைகளையும் வம்சத்தையும் காக்க பிராமணர்களின் வீடுகளில் மறைத்து வைத்தார்கள். தாமும் பிராமண ஸ்திரிகள் போல மாறி பரசுராமரிடமிருந்து தப்பினார்கள்.

பரசுராமர் இப்படி இருபத்தோரு முறை நாடு முழுவதும் அலசி ஷத்திரியர்களைத் தேடிப் பிடித்துக் கொன்றார். ஷத்திரியர்கள் எல்லோருமே அடியோடு அழிந்து விட்டார்கள் என அவர் திருப்தியடைந்ததும் தன்னிடமிருந்த நாடு முழுவதையும் அவர் கஸ்யபருக்கு தானம் செய்து விட்டு தென் கடலினருகே உள்ள மகேந்திரமலைக்குச் சென்று தவம் செய்யலானார்.

பிராமணர்களின் வீடுகளிலும் முனிவர்களது ஆசிரமங்களிலும் மறைந்திருந்து வளர்ந்து வந்த ஷத்திரியக் குழந்தைகள் பெரியவர்களானதும் அவர்களுக்குக் கஸ்யபர் பரசுராமர் தமக்கு அளித்த நாட்டைக் கொடுத்து விட்டார். இதனால் பல நாடுகள் உருவாயின.

 
 இவ்வாறு தோன்றிய இஷ்வாகு வம்சத்தில் பிறந்த ரகு மன்னன் பேரும் புகழும் பெற்று விளங்கினான். இவன் பெயரால் ரகு வம்சம் ஏற்பட்டது. இந்த ரகு வம்சத்தில்தான் மகாவிஷ்ணு தசரத மன்னனின் புதல்வர் இராமராக அவதாரம் எடுத்தார்.

மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் இராமாவதாரத்தை வால்மீகி முனிவர் இராமாயணம் என்ற மாபெரும் காவியமாகப் படைத்தார் என சூதமகரிஷி கூறி இராம கதையைச் சொல்லலானார்.

இரணியகசிபுவும் இரணியாட்சனும் விஷ்ணுவினால் கொல்லப்பட்டனர். அதன் பின் அவர்கள் இரண்டாவது பிறப்பில் இராவணனாகவும் கும்பகர்ணனாகவும் பிறந்து சப்த லோகங்களையும் நடுநடுங்க வைத்தார்கள். இராவணன் கடும் தவம் புரிந்து பிரம்மாவிடமிருந்து தேவர்களாலோ அசுரர்களாலோ யட்சர்களாலோ கந்தர்வர்களாலோ தன் உயிர் போக கூடாது என்ற வரம் பெற்றான்.

கும்பகர்ணன் மலை போல படுத்துக் கிடந்தான். அவன் தவம் செய்து வாய் குளறி வருடத்தில் ஆறு மாதம் தூங்கவும் ஆறு மாதம் விழித்திருக்கவுமான வரத்தைக் கேட்டுப் பெற்றான். இராவணன் குபேரனிடமிருந்து அவனது புஷ்பக விமானத்தைப் பிடுங்கிக் கொண்டதோடு அவனை இலங்காபுரியிலிருந்து விரட்டி அந்நகரத்தையும் தன் வசப்படுத்திக் கொண்டான்.

இராவணனுக்கு பத்துத் தலைகள். அவன் கைலாசத்திற்குப் போனபோது அங்கு காவல் புரிந்த நந்தியைப் பார்த்து குரங்கு எனப் பரிகாசம் செய்தான். அவர் அதனால் கோபம் கொண்டு அவனது இலங்கை குரங்குகளால் அழியட்டும் எனச் சபித்தார்.

இராவணன் தன் இருபது கைகளால் கைலாசபர்வதத்தையே தூக்க முயன்றான். அப்போது சிவனார் தம் காலின் கட்டை விரலால் மலையை இலேசாக அழுத்தினார்.

இராவணன் மலையின் அடியே அகப்பட்டு நசுங்கலானான். அவன் ஆவென அலறினான். பின்னர் அவன் தனது ஒவ்வொரு தலையாக வெட்டி சிவனாருக்கு அர்ப்பணம் செய்து அவரைத் துதி செய்தான். அவனது சாமகானம் கேட்டு சிவனார் மகிழ்ந்து அவனை விட்டதோடு ஆசீர்வதித்து அனுப்பினார்.

இராவணன் சிவ பக்தனாக இருந்த போதிலும் மிகவும் கொடியவன். மிகவும் அகம்பாவம் கொண்டவன். இராவணனின் மனைவி மண்டோதரி மயனின் மகள். தன் கணவனுக்கு அவள் அவ்வப்போது அறிவுரைகள் கூறி வந்தாள். அவனது தம்பி விபீஷணனும் நேர்மை தவறாது நடப்பவன். அவனும் இராவணனுக்கு நல்ல அறிவுரைகளைச் சொல்லி வந்தான். ஆனால் அவற்றையெல்லாம் இராவணன் அலட்சியம் செய்தான்.

விந்தியமலைக்குத் தெற்கிலுள்ள பகுதி இராவணனது ஆட்சியில் இருந்தது. ராட்சஸர்கள் இப்பகுதியில் திரிந்து அட்டகாசம் புரிந்தனர். முனிவர்களது தவத்தைக் கலைத்தும் யாகங்கள் நடக்காமலும் செய்து வந்தனர்.
கிருஷத்துவஜர் என்ற மகரிஷி வேதம் ஓதிக் கொண்டிருக்கையில் பிறந்தவள் வேதவதி. அவள் விஷ்ணுவையே தன் கணவராக அடைய வேண்டும் என நினைத்துத் தவம் செய்து கொண்டிருந்தாள். அப்போது இராவணன் அவளிடம் போய் தான் விஷ்ணுவை விட உயர்ந்தவன் என்றும் தன்னை மணந்து கொள்ளும்படியும் கூறி அவளைப் பிடித்து இழுத்தான்.


அவளோ "அடே துஷ்டா! உன் கைபட்ட இந்த உடலை இப்போதே விடுகிறேன். அடுத்த பிறவியில் நான் சீதையாகப் பிறந்து நீயும் உன் இலங்கையும் அழியக் காரணமாக இருப்பேன்" எனக் கூறி அக்கினியை வரவழைத்து அதில் விழுந்து உயிர் நீத்தாள். அரக்கர்களை அழிக்க மகாவிஷ்ணு மனிதனாய்ப் பிறந்தார்.

 

0 comments:

Post a Comment

Flag Counter