
பலிசக்கரவர்த்தி பாதாளத்தை அடைந்து அதன் மன்னனானபோதும், விஷ்ணுவின் பாத கமலங்களையே பூசித்து வந்தான். தேவர்களுக்கு தேவலோகம் கிடைக்க, இந்திரனும் தன் பதவியில் மகிழ்ச்சியுடன் இருந்து வரலானான்.
பலிசக்கரவர்த்தியின் அரண்மனை வாயிலை வாமனர் காத்து வந்தார். அப்போது இராவணன் பாதாளலோகத்தைக் கைப்பற்ற வந்தான். அரண்மனை வாசலில் ஒரு குள்ளன் இருப்பதைக் கண்டு அவனால் தன்னை என்ன செய்து விட முடியும் என எண்ணி உள்ளே போக முயன்றான். ஆனால் வாமனர் விசுவரூபம் எடுத்து தன் காலின் கட்டை விரலால் அவனை லேசாகத் தட்டினார். அவன் குட்டிக்கரணங்கள் போட்டவாறே இலங்கையில் போய் விழுந்தான். அதன் பிறகு பாதாளலோகத்தைப் பற்றி அவன் நினைக்கவே இல்லை.
தான் பூலோகத்தில் ஆட்சி புரிந்த பகுதி வளமானதாக இருக்கிறதா என வருடத்திற்கு ஒரு முறை சென்று மகாபலி பார்த்து வந்தான். அவனது விஜயத்தை அப்பகுதிகளில் தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். மறுநாள் அவர்கள் பலிசக்கரவர்த்தியைப் பூசித்து வணங்குகிறார்கள். வாமனர் ஆகாயஅளவிற்கு உயர்ந்ததால் அவர்கள் ஆகாச தீபங்களை ஏற்றி மகிழ்வார்கள். தென் கடலிலிருந்து முதலில் பூமியின் மீது அடி எடுத்து வைக்கும் இடத்தில் இப்போதும் தீபம் ஏற்றி அவனது வருகையை நல்வரவாகக் கருதி மக்கள் மகிழ்கிறார்கள். பலிசக்கரவர்த்தியின் காலத்தில் அடங்கி ஒடுங்கி இருந்த சத்திரியர்கள் மெதுவாகத் தலை தூக்கலானார்கள்.

அப்போது ஆண்ட மன்னர்களுள் சிறந்தவனான கார்த்த வீர்யார்ஜுனன் மகாவிஷ்ணுவின் சுதர்சனச் சக்கரத்தின் அம்சமாகப் பிறந்தவன். விஷ்ணு ஆழ்ந்த நித்திரையில் இருந்த போது அவரது திருக்கரங்களில் இருந்த சங்கிற்கும் சக்கரத்திற்கும் பெருத்த வாக்குவாதம் மூண்டது. அப்போது சக்கரம் "நான் பளபளவெனப் பிரகாசிப்பவன். ‘கிர்கிர்’ என்று எங்கு வேண்டுமானாலும் சுற்றி வருபவன். எவ்வளவோ துஷ்டர்களின் தலைகளை நான் தான் துண்டித்திருக்கிறேன். என்னைக் கையில் கொண்ட விஷ்ணுவை சக்ரபாணி என அழைக்கிறார்கள். நீ எதற்கு லாயக்கு? ‘பொம்’ ‘பொம்’ என்று சத்தம் செய்யதானே தெரியும்?" என்று ஏசியது.
அது கேட்டு பாஞ்சஜன்யம் என்ற அந்த தெய்வீகச் சங்கு "அடே சக்கரம்! இப்படி கர்வத்தோடு பேசும் நீ பூவுலகில் தலைக்கு மேல் கர்வம் கொண்ட மன்னனாகப் பிறப்பாய். அப்போது ஒரு முனி குமாரன் விறகு வெட்டும் தன் கோடாலியால் உன் கர்வத்தை அடக்குவான்" எனச் சபித்தது. அந்த சுதர்சனச் சக்கரம் தான் கார்த்த வீரிய மன்னனாகப் பிறந்து மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி ஆண்டு வந்தான். அவன் தத்தாத்திரேயரின் பரமபக்தன். அவரது அனுக்கிரகத்தால் அஷ்ட சித்திகளையும் அடைந்தவன். பல ஆயுதங்களைத் தன் ஆயிரம் கரங்களில் வைத்திருப்பவன்.
இவ்வாறு சூதமகரிஷி கூறவே நைமிசாரண்யத்தில் அவரைச் சுற்றி அமர்ந்திருந்த முனிவர்கள் "முனிசிரேஷ்டரே! தத்தாத்திரேயர் விஷ்ணுவின் அவதாரம் தானே. அந்த அவதாரம் எப்படி ஏற்பட்டதெனக் கூறுங்கள்" என வேண்டினார்கள். சூதரும் அது பற்றி விவரமாகக் கூறலானார். அத்திரி முனிவர் தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக விஷ்ணுவைக் குறித்துத் தவம் புரிந்தார். அப்போது விஷ்ணு பிரம்மாவுடனும் சிவனுடனும் சேர்ந்து வந்து அவர் முன் தோன்றி "நானும் இவர்களும் ஒன்று தானே.
எனவே திரி மூர்த்திகளான நாங்கள் ஒன்றுபட்ட அம்சமாகத் திகழும் ஒரு குழந்தையாகப் பிறக்கிறோம். அதற்கு தத்தாத்திரேயர் என்ற பெயர் இருக்கட்டும்" என்றார். பின்னர் மூவரும் மறைந்தனர்.
இதே சமயம் நாரதர் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரையும் கண்டு அத்திரி முனிவரின் மனைவி அனசூயை மகாபதிவிரதை என்று கூறினார். அவள் பல அற்புதங்கள் புரிந்ததை எடுத்துக் கூறினார். கங்கையைப் பிடித்து பாவங்களைப் போக்கினாள். நாரதர் கொடுத்த இரும்புக் கடலைகளை வேகவைத்து சுண்டல் ஆக்கி கொடுத்தாள். சூரியனே உதிக்கக் கூடாது எனச் சபித்த சுமதிக்கு ஆறுதல் கூறி சூரியனை உதிக்கச் செய்து இறந்த அவளது கணவனை உயிர்ப்பித்துக் கொடுத்தாள்.
இதை எல்லாம் கேட்கக் கேட்க அந்த மூவருக்கும் அனசூயை மீது பொறாமையும் வெறுப்பும் ஏற்பட்டது. அவர்கள் தம் கணவன்களிடம் அனசூயையைப் பட்சிக்குமாறு கூறி அனுப்பினார்கள். மூவரும் முனிவர்களாக மாறி அத்திரி முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றார்கள்.


பின்னர் அவர்களைத் தொட்டிலில் போட்டுத் தாலாட்டித் தூங்க வைத்தாள்.
அப்போது ஒரு வெண்ணிறக் காளையும் ஒரு கருடபட்சியும் ஒரு அன்னப் பறவையும் அந்த ஆசிரமவாசலில் வந்து நின்றன. புள்ளிகளும் நான்கு வித நிறங்களும் கொண்ட நாய்க் குட்டிகள் வால்களை ஆட்டிய வாறே ஓடி வந்தன. அதன் பின் நாகப்பாம்பு படம் விரித்து ஆடியவாறே வந்தது.
இவற்றின் பின்னால் நாரதர் வீணையை இசைத்து கொண்டு அந்த ஆசிரமத்துள் வந்தார். அவர் பின்னால் பார்வதியும் இலட்சுமியும் சரஸ்வதியும் வந்தனர். அவர் அனுசூயையிடம் "அம்மணீ! இவர்கள் மூவரும் கணவர்களைக் காணாமல் தேடி இங்கு இருப்பதாக அறிந்து வந்திருக்கிறார்கள். அவரவரது கணவரை அவரவரிடம் கொடுத்து விடுங்கள்" என்றார்.
அனுசூயையும் அவர்கள் மூவரையும் வணங்கி "நான் கொடுப்பதா! அவரவர்கள் அவரவரது கணவரை எடுத்துக் கொள்ளலாமே. இதோ இந்தத் தொட்டில்களில் குழந்தைகளாகப் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்றாள். அவர்கள் மூவரும் உடனே ஓடிப் போய் பார்த்தனர். மூன்று குழந்தைகளும் ஒரே அச்சில் வார்த்த தங்கப் பதுமைகள் போல இருந்தன. அவர்களில் யார் சிவன், யார் விஷ்ணு, யார் பிரம்மா எனக் கண்டு பிடிக்க முடியாமல் அவர்கள் விழித்தனர்.
அப்போது நாரதர் "என்னம்மா இது? உங்கள் கணவர்களைக் கூட உங்களால் அடையாளம் கண்டு அடைய முடியவில்லையா? வெட்கப்படாமல் சட்டென உங்கள் கணவரை எடுங்கள்.

இதைக் கண்டு நாரதர் கொல்லென்று சிரித்தார். பிரம்மாவும் விஷ்ணும் சிவனும் அப்போது ஒன்று சேர்ந்து நின்றார்கள். இந்த சமயத்தில் அத்திரி முனிவர் தம் ஆசிரமத்திற்கு வந்தார். தன் வீட்டில் திரிமூர்த்திகள் நிற்பது கண்டு அவர்களை வணங்கி நின்றார். ஒருபுறம் பிரம்மாவும் மறுபுறம் சிவனும் இருக்க நடுவில் விஷ்ணு நின்றார்.
ஆறு கைகளில் சங்கும் சக்கரமும் கதையும் தாமரையும், திரிசூலமும் கமண்டலமும் இருந்தன. தோள்களில் பைகள் தொங்கின. இந்த அவதாரம் தான் தத்தாத்திரேய அவதாரம். அத்திரி அனுசூயையின் குழந்தையாகப் பிறந்த அவதாரம்.
நாரதர் தத்தாத்திரேயரைத் தொழுதார். சிவனாரின் நந்தி காளையாகவும், நான்கு வேதங்கள் நான்கு நாய்களாகவும், பாம்பும், கழுகும், அன்னமும் சூழ தத்தாத்திரேயர் திரிந்துவரலானார். அவரை முனிவர்களும் யோகிகளும் வணங்கினார்கள். தத்தாத்திரேயர் கார்த்தவீரிய மன்னர் அவர்களின் குலதெய்வமாகி விளங்கினார்.
கார்த்தவீரியன் தத்தாத்திரேயரை வணங்கி விட்டு பெரிய படையுடன் திக்விஜயம் செய்யக் கிளம்பினான். ஜமதக்கினி முனிவரின் கடைசி புதல்வன் தான் பரசுராமர். அவர் கையில் எப்போதும் கோடாலி இருக்கும். அவர் இமயமலைக்குப் போய் தவம் செய்து சிவபிரானின் அருளால் அந்த சக்திவாய்ந்த கோடாலியைப் பெற்றார்.
ஒரு முறை அவரது தாய் ரேணுகாதேவி நீராட நதிக்குச் சென்றாள். வெகு நேரமாகியும் தன் மனைவி திரும்பி வராதது கண்டு ஜமதக்கினி முனிவர் தம் ஞான திருஷ்டியால் என்ன நடந்தது என்று தெரிந்து கொண்டு விட்டார். சித்திரரதன் என்ற கந்தர்வன் தன் மனைவிகளுடன் ஜலக்கிரீடை செய்து கொண்டிருந்ததை ரேணுகா மெய்மறந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
இதனால் அவருக்குக் கடுங்கோபம் வந்து விட்டது. ரேணுகா ஆசிரமத்திற்குத் திரும்பி வந்ததும் ஜமதக்கினி முனிவர் தம் புதல்வர்களிடம் அவளது தலையை வெட்டி எறியுமாறு கூறினார். பரசுராமரின் தமையன்மார்கள் அனைவரும் அவ்வாறு செய்ய மறுத்தனர். அதனால் ஜமதக்கினி முனிவர் பரசுராமரிடம் "நீ உன் தாயின் தலையையும் உன் தமையன்மார்களின் தலைகளையும் வெட்டி எறி" எனக் கூறினார்.
பரசுராமர் சற்றும் தயங்காமல் தன் தந்தையின் கட்டளைப் படி அவர்களது தலைகளை வெட்டி எறிந்தார். அது கண்டு மகிழ்ந்த ஜமதக்கினி முனிவர் அவரைப் புகழ்ந்து "உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்" என்றார். பரசுராமரும் "என் தாயாரும் அண்ணன்மார்களும் உயிர் பெற்று வர வேண்டும்" என்று கேட்டார்.
ஜமதக்கினி முனிவரும் அவ்வாறே அவர்களை உயிர்ப்பித்தார். பரசுராமரை நெடுங்காலம் வாழ ஆசீர்வதித்தார். கார்த்தவீரியன் தன் திக்விஜயத்தை முடித்துக் கொண்டு தன் தலை நகருக்குத் திரும்பும் வழியில் ஜமதக்கினி முனிவரின் ஆசிரமத்தைக் கண்டான். அப்போது அவனுக்கும் அவனது படையினருக்கும் நல்ல பசி. ஜமதக்கினி முனிவர் காமதேனுவுக்குச் சமமான தன் யாகப் பசுவைக் கொண்டு கார்த்தவீரியனுக்கும் அவனது படை வீரர்களுக்கும் வேண்டிய உணவுப் பொருள்களை வரவழைத்துக் கொடுத்தார். அவர்களும் நல்ல விருந்து சாப்பாடு சாப்பிட்டார்கள்.
அந்த மாதிரிப் பசு தன்னிடம் இருந்தால் தன் படை வீரர்களுக்கு எப்போதும் உணவளித்துக் கொண்டு இருக்கலாம் எனக் கார்த்தவீரியன் எண்ணித் தன் வீரர்களிடம் அப்பசுவைத் தன் தலைநகரான மாகிஷ்மத நகருக்கு இழுத்துச் செல்லுமாறு கட்டளையிட்டான். வீரர்கள் தன் யாகப் பசுவை இழுப்பது கண்டு ஜமதக்கினி முனிவர் குறுக்கிட்டுத் தடுத்தார். அவர்கள் அவரைக் கீழே தள்ளி விட்டு யாகப்பசுவை அங்கே இருந்து தலைநகருக்கு இழுத்துச் சென்றார்கள்.

0 comments:
Post a Comment