யுத்த காண்டம் - 8

 
கும்பகர்ணனைப் பற்றி விபீஷணன் இராமரிடம் விவரமாகக் கூறலானான். "இவன் பிறந்த உடனேயே பசியை அடக்க பல மனிதர்களை விழுங்கலானான்.  இதைக் கண்ட மானிடர்கள் பயந்துபோய் இந்திரனை தஞ்சம் அடைந்தார்கள்.  இந்திரனும், கும்பகர்ணன் மீது வச்சிராயுதத்தை விட்டான். ஆனால், கும்பகர்ணன் அதனைத் தாங்கிக் கொண்டு இந்திரனையே புறமுதுகு காட்டி ஓடச் செய்தான்.

இந்திரன் நேராக பிரம்மனிடம் போய் கும்பகர்ணன் மானிடர்களையே அழிப்பதைக் கூறி அவனை அடக்க வேண்டினான். பிரம்மாவும் அரக்கர்களையெல்லாம் ஒன்று கூட்டி கும்பகர்ணனைப் பார்த்து, "விச்வவசு உன்னைப் பெற்றது மானிடர்களை அழிக்கவா? இல்லையே. இப்போது முதல் நீ உன்னை மறந்து எப்போதுமே தூங்கிக்கொண்டே இரு" என்றார்.

அப்போதே கும்பகர்ணனன் தூங்க ஆரம்பித்து விட்டான். அதைக் கண்ட இராவணன் "ஐயா, உங்கள் பேரனை இப்படி சபிப்பது நியாயமா? இதற்கு ஒரு வரம்பை ஏற்படுத்துங்கள்" என வேண்டினான். பிரம்மாவும், "சரி இவன் ஒரு வருடத்தில் ஆறுமாத காலம் தூங்கிவிட்டு ஒருநாள் விழித்து எழுவான். அன்றைய பொழுது கழிந்ததும் மறுபடியும் தூங்குவான்" எனக்கூறி அனுப்பி விட்டார். இதனை விபீஷணன் இராமரிடம் கூறி, "உங்கள் தாக்குதலைக் கண்டு பயந்து இராவணன் இவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பி இங்கு அனுப்பி வைத்திருக்கிறான்.
 இவனைக்  கண்டதுமே பயந்து ஓடும் வானரங்கள் இவனை எதிர்த்துப் போராடத் துணிவு கொள். எனவே, இதுவும் அரக்கன் மாயவேலை எனக்கூறி அவர்களைப் போர்க்களத்தில் நிற்கச் செய்ய வேண்டும்" என்றான்.

இராமன் கட்டளைப்படி நீலன் வானரப்படையை அணிவகுத்து  நிறுத்தினான்.  கவாட்சன், சம்பூ, அங்கதன், அனுமார் ஆகியோர் ஆளுக்கொரு குன்றாகப் பெயர்த்து வந்து இலங்கையின் நான்கு வாசல்களிலும்  நின்று கொண்டனர்.

கும்பகர்ணன் இராவணின் மாளிகைக்குப் போய் கவலையோடு உட்கார்ந்திருக்கும்  அவனைக் கண்டான். கும்பகர்ணனைப் பார்த்ததுமே இராவணனுக்குப் போன உயிர் திரும்பி வந்தது போலாயிற்று.

அவன் இராவணனை வணங்கி, "என்னை இப்போது எழுப்பிய காரணம் என்ன?  ஏதாவது ஆபத்து வந்து விட்டதா?" எனக் கேட்டான். இராவணன், "நீயோ  தூக்கத்தில் இருந்தாய். இங்கே அந்த இராமன் நம் வம்சத்தையே அழிக்க ஆரம்பித்து விட்டான். இந்த நிலையில் நீதான் அவர்களை எதிர்க்க முடியும்" என்றான்.

அதைக் கேட்ட கும்பகர்ணன் சிரித்துக்கொண்டே, "இதுபற்றி முன்பொருமுறை நாம் ஆலோசனை நடத்தியபோது உன் நன்மையைக் கோரியவர்கள் இந்த மாதிரியான ஆபத்து வருமெனக் கூறியது இப்போது எனக்கு நினைவிற்கு வருகிறது. முன்பின் யோசியாது நீ சீதையைக் கவர்ந்து வந்துவிட்டாய். இப்போதாகிலும் விபீஷணன் கூறியது போல நடக்க முன் வருவாயா?" எனச் சொன்னான்.

அது கேட்டு இராவணன், "நீ என் தம்பி. நான் உன் தமையன். நீ சொல்லி நான் கேட்க வேண்டுமா? நடந்ததைப் பற்றி இப்போது ஏன் பேசுகிறாய்? இனி நடக்க வேண்டியதைப் பற்றி யோசி" என்றான்.


கும்பகர்ணனும் இராவணனின் மன நிலையைப் புரிந்து கொண்டவனாக, "நான் உன் தம்பிதான். ஆனாலும் உனக்கு நல்லதைச் சொன்னேன். இனி உன் விருப்பப்படியே நடப்பேன். இப்போதே போருக்குப் போகிறேன். இராமனையும்,  இலட்சுமணனையும் கொன்று விட்டு வருகிறேன்.
 அப்போது உனக்கு மகிழ்ச்சி ஏற்படும் அல்லவா? அது போதும்" என்றான். அப்போது மகோதரன், "கும்பகர்ணா! நீ உன் சக்தியைப் பற்றி பெருமை பட்டுக் கொள்ளாதே. பல அரக்கர்களைக் கொன்ற அந்த இராமனை இப்போது நீ
ஒருவனாகக் கொன்று விட முடியாது. அதைத் தெரிந்து கொள்" என்றான்.

பின்னர் அவன் தானும் மற்றும் நான்கு அரக்க வீரர்களும் கும்பகர்ணனுக்கு உதவியாக போர்க்களத்திற்குப் போவது நல்லது என இராவணனிடம் கூறினான்.  அதைக்கேட்ட கும்பகர்ணனோ, "பசப்பு வார்த்தைகள்? நீ வாயை முடிக்கொண்டு பேசாமல் கிட" எனக்கூறி மகோதரனை அடக்கிவிட்டு, "இப்படிப்பட்டவர்களால்தான் நீ இந்த நிலையை அடைந்தாய். இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது" என்றான்.

இதைக்கேட்ட இராவணன், "ஆமாம். மகோதரன் இராமனைக் கண்டாலே பயந்து நடுங்குகிறான். அதற்காகத்தான் ஐந்து பேர்களின் துணையோடு போர்க்களம் செல்லத் தயாராகிறான். அவன் சொன்னதை மனத்தில் கொள்ளாமல் நீ போர் புரியப் போ வெற்றியோடு திரும்பி வா" எனக் கூறி அவனைப் போர்க்களத்திற்கு அனுப்பி வைத்தான்.

கும்பகர்ணன் தனிச் சிறப்பு பெற்ற ஈட்டி ஒன்றை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அது இந்திரனின் வச்சிராயுத்தைவிட சக்தி வாய்ந்தது. அவனோடு பெரிய அரக்கர் படையே சென்றது. பயங்கரமான கோஷங்கள் போட்டவாறே அவர்கள் போர்க்களத்தை அடைந்தனர்.

கும்பகர்ணனின் உடல் மிகவும் பெரிதாகியது. அவனைக் கண்டதுமே வானரர்கள் பயந்து ஓடலாயினர். நளன், நீலன், கவாட்சன், குதன் போன்ற வீரர்கள்கூட பயந்து  ஓடலாயினர். அதைக் கண்ட அங்கதன் "இதென்ன கோழைத்தனம்? ஏன் இப்படி பயந்து ஓடுகிறீர்கள்? போர் புரிய வந்த நீங்கள் இப்படி பயந்து ஓடி எத்தனை நாள்கள்தான் உயிரைக் காத்துக் கொண்டிருக்க போகிறீர்கள்? இப்போது வந்திருப்பது உண்மையில் அரக்கனல்ல. உங்களை எல்லாம் பயமுறுத்த இராவணன் செய்த ஒரு தந்திரமான யுக்தியாகும். இதனை நாம் எளிதில் முறியடித்து விடலாம். ஓடாதீர்கள். எல்லாரும் வந்து நின்று போர் புரியுங்கள்" எனக் கூறி யாவரையும் மீண்டும் போர்க்களத்திற்கு வரச் செய்தான்.
 அங்கதனின் இம்மொழிகளால் உற்சாகம் பெற்ற வானரர்கள் கும்பகர்ணனை எதிர்த்துப் போராடலாயினர். கற்களையும், மரங்களையும் எடுத்து அவன்மீது அவர்கள் வீசலாயினர். ஆனால், கும்பகர்ணனுக்கு அவற்றால் எவ்விதத் தீங்கும் ஏற்படவில்லை.

இதனால் வானரர்கள் மனம் தளரலாயிற்று. படையிலேயே குழப்பம் ஏற்பட்டது.
ஒருவர் மீது ஒருவர் விழுந்து உருளலாயினர். சிலர் உயரக் கிளம்பிக் கீழே விழுந்தனர். இப்படியாக வானரப் படையிலே ஒழுங்கு இல்லாது போயிற்று.

இதைக் கண்ட அங்கதன் "இதென்ன? எல்லாரும் ஒழுங்காக நில்லுங்கள். யாரும் குதிக்கவோ, உருளவோ கூடாது. கீழே கிடப்பவர்கள் எழுந்து நில்லுங்கள்" என உரக்கக் கூவினான். அவனது குரல் கேட்டு மந்திர சக்தியால் புதுசக்தி பெற்றவர்கள் போல வானரர்கள் புத்துணர்ச்சி பெற்றார்கள். அவர்களில் சிலர்  "இந்த கும்பகர்ணனின் தாக்குதல் மிகவும் பயங்கரமாக இருக்கிறதே. நம்மால் எதிர்த்து நிற்க முடியாது போல் இருக்கிறதே" என்றும் கூறினர். அது கேட்ட அங்கதன், "ஆறிலும் சாவு,  நூரிறிலும் சாவு என்பதை நினைவு கொள்ளுங்கள்.  போரில் மடிந்தால் வீர சொர்க்கம் கிடைக்கும். போர் செய்தால் வெற்றியும், புகழும் கிடைக்கும். ஓடினால் அவமானம், தண்டனையும் பெறுவீர்கள். எனவே, நாம் போர் புரிந்தே வீர சொர்க்கம் அடையலாம்" என்றான்.

அங்கதன் அவ்வப்போது கூறிய மொழிகள் வானரர்களுக்கு தெம்பைக் கொடுக்கலாயிற்று. அதனால் அவர்களது மனத்திலிருந்த பயம் என்னும் பேய் ஓடி மறையலாயிற்று. போர் தீவிரமாகியது.

போரில் அரக்கர்கள் ஆயிரக்கணக்கில் மடியலாயினர். தேர்கள் பொடிப் பொடியாயின. யானைகளும், குதிரைகளும், ஒட்டகங்களும் இறந்து மலையாகக் குவிந்தன. அனுமார் ஆகாயத்தில் இருந்தவாறே கும்பகர்ணனின் மீது கல்மாறி பொழியலானார்.
 கும்பகர்ணனன் அத்தாக்குதலை எல்லாம் தன் ஈட்டியாலேயே சமாளிக்க லானான். அது கண்டு அனுமார் ஒரு குன்றைப் பெயர்த்து அவன்மீது விட்டெறிந்தார். அது அவன் தலைமீது விழுந்து மண்டையை உடைத்தது.
இரத்தம் பீறிட்டு வரவே கும்பகர்ணனன் தன் கையிலிருந்து ஈட்டியை அனுமான் மீது விட்டெறிந்தான். அது அனுமாரைத் தாக்கி அவனை நினைவிழந்து விழச் செய்தது.

அனுமார் கீழே விழுந்ததும் வானர வீரர்கள் ஓடலாயினர். அது கண்டு நீலன் அவர்களையெல்லாம் தடுத்து நிறுத்தி போர் புரியுமாறு கூறி அவனே கும்பகர்ணனோடு போர் புரியலானான்.

ஒரு பெரிய பாறையை எடுத்து அவன் கும்பகர்ணனின்மீது விட்டு எறியவே அதை கும்பகர்ணன் பொடிப்பொடியாக்கி விட்டான். அப்போது ஐந்து வானர வீரர்கள் ஒரே சமயத்தில் கும்பகர்ணனைத் தாக்கலாயினர். கும்பகர்ணன் சற்றும் தளர்ந்து விடாமல் அந்த ஐந்து பேர்களையும் கொன்றான்.

இது கண்டு அங்கதன் கும்பகர்ணனை எதிர்க்கலானான். ஒரு பெரிய பாறையை அவன்மீது வீசினான். கும்பகர்ணன் அதைத் தவிடு பொடியாக்கிவிட்டு ஒரு ஈட்டியை அங்கதன்மீது விட்டு எறிந்தான். அங்கதன் சட்டென விலகவே ஈட்டி எங்கோ போயிற்று.


அப்போது சட்டென அங்கதன் கும்பர்கணனின் மார்பில் ஓங்கி அடித்தான். அந்த அடியால் கும்பகர்ணன் ஒரு நிமிடம் தன் நினைவை இழந்து விழுந்தான். ஆனால், மயக்கம் தெளிந்ததும் அங்கதனை ஒரே அடியில் கீழே தள்ளி விட்டு தன்னை எதிர்க்க வந்த சுக்கிரிவனை எதிர்க்கலானான்.

கும்பகர்ணன் தன் ஈட்டியை சுழற்றி சுக்கிரிவன்மீது எறியலானான். இதற்குள் அனுமார் மயக்கம் தெளிந்து எழுந்து பாய்ந்து அந்த ஈட்டியைத் தன் கையால் பிடித்து இரண்டாக ஒடித்துப் போட்டார். இதைக் கண்டு கும்பகர்ணன் ஆத்திரம் கொண்டு ஒரு பெரிய பாறையை எடுத்து சுக்கிரிவன் மீது எறிந்தான். அந்த அடியால் சுக்கிரிவன் கீழே விழவே கும்பகர்ணன் அவனைத் தூக்கிக் கொண்டு போகலானான்.
வானரர்கள் சுக்கிரிவனை விடுவிக்க முடியவில்லை. ஏன் என்றால் சுக்கிரிவனின் சக்தி அவர்களுக்குத் தெயும். கும்பகர்ணன் சுக்கிரிவனைக் கவர்ந்து கொண்டு இலங்கைக்குச் சென்றான். சுக்கிரிவன் அகப்பட்டு விட்டதால் இனி இராமரும், இலட்சுமணனும் மனம் தளர்ந்து சமாதானத்திற்கு வந்து விடுவார்கள் என அவன் கருதினான். இலங்கைக்குள் வந்த கும்பகர்ணனை அரக்கர்கள் ஆரவாரத்தோடு வரவேற்றனர். இதற்குள் சுக்கிரிவனின் மயக்கம் போய்விட்டது.

சுக்கிரிவன் தன் நிலையை நன்கு புந்து கொண்டான். அவன் கும்பகர்ணனிடமிருந்து தப்ப ஒரு உபாயம் செய்தான். அவன் கும்பகர்ணனின் காதுகளை கிள்ளி முக்கையும் கன்னங்களையும் கடித்தான். அப்போது கும்பகர்ணன் சுக்கிரிவனைக் கீழே போட்டு தன் காலால் மிதித்து நசுக்கி கொல்ல முயன்றான்.

சுக்கிரிவன் எதிர்பார்த்தது நிகழ்ந்து விட்டது. கும்பகர்ணன் அவனைக் கீழே போட்டதுமே அவன் சட்டென ஆகாயத்தில் கிளம்பி அதிவேகமாக இலங்காபுரியிலிருந்து நேராக இராமர் இருக்கும் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தான்.

0 comments:

Post a Comment