யுத்த காண்டம் - 9

 
சுக்கிரிவனது தாக்குதலால் கும்பகர்ணனது உடல் முழுவதிலும் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வெள்ளமாகப் பெருகி வழிந்தது. சற்று அவன் மலைத்தானாயினும் மீண்டும் அவன் போருக்கு எழுந்தான். போர்க்களத்தில் தன் முன் எதிர்ப்பட்ட வானரர்களையெல்லாம் பிடித்து அவன் விழுங்கலானான். இது கண்டு வானரர்கள் அவன் கைக்கு அகப்படாது ஓடலாயினர். இதைக்கண்டு இலட்சுமணன் கும்பகர்ணனை பல அம்புகளால் தாக்கலானான்.

கும்பகர்ணனோ அந்தத் தாக்குதலையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அவன் தான் பிடித்த வானரர்களையெல்லாம் விழுங்கியவாறே இராமரை நோக்கிச் சென்றான். இராமர் ஒரு பயங்கரமான அஸ்திரத்தால் அவனது மார்பில் அடிக்க அவன் நெருப்பைக் கக்கியவாறே கீழே விழுந்தான்.


அவன் மீண்டும் எழுந்து வரடியாதபடி வானரர்கள் அவனது உடலின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டனர்.  ஆனால், கும்பகர்ணன் தன் உடலை ஒரு உலுக்கு உலுக்கவே வானரங்கள் நாவல்பழம் உதிர்ந்து விழுவது போலக் கீழே விழுந்தனர். கும்பகர்ணனோ எழுந்து வந்து இராமரை நோக்கிச் சென்றான். இராமரோ அவனைப் பார்த்து "கும்பகர்ணா, நீ இந்திரனை வென்று இருக்கலாம். ஆனால், நான் இந்திரனல்ல,  இராமன் என்பதை நினைவில் வைத்துக்கொள்" என்றார்.

 அதற்குக் கும்பகர்ணனும் "நானும் கரனோ, கபந்தனோ, வாலியோ அல்ல. கும்பகர்ணன்" என்றான். இராமர் ஓரண்டு அம்புகள் எய்ய அது கும்பகர்ணனை எதுவும் செய்யவில்லை. ஏழு மரங்களைத் துளைத்த  அம்புகளோ வாலியைக் கொன்ற அம்போ இந்த கும்பகர்ணனை அசைக்கக்கூட முடியாது போயின.

இராமர் வாயு அஸ்திரத்தை எடுத்துவிட்டார். அது கும்பகர்ணனது ஒரு கையை அறுத்து வீழ்த்தியது. அது கண்டு கோபம் கொண்ட கும்பகர்ணன் தனது மற்ற கையால் ஒரு மரத்தையே பெயர்த்து எடுத்து வந்தான்.  இராமர் அந்தக் கையை இந்திரஸ்திரம் கொண்டு அறுத்து வீழ்த்தினார். அதன் பின்னர் இரு அம்புகளால் அவனது இரு கால்களையும் துண்டித்தார்.


கும்பகர்ணன் வேரற்ற மரம்போல சாய்ந்து விழுந்தான். தன் வாயை குகை போலாக்கி அவன் சுற்றிலும் இருந்த வானரர்களையெல்லாம் விழுங்க முயன்றான். இராமர் அந்த வாயை அம்புகளால் மூடினார். பின்னர்,  மற்றொரு அம்பினால் அவனது தலையைத் துண்டித்தார்.


இவ்விதமாக கும்பகர்ணன் இறந்து விழுந்தான். இது இராவணன எதிர்பார்க்காத ஒரு சம்பவம். கும்பகர்ணன் இறந்தது கண்டு அரக்கர்கள் அலறினர். வானரர்களோ ஆனந்தக் கூத்தாடினர். கும்பகர்ணன் இறந்தானென்ற செய்தி கேட்டு இராவணனே ‘ஆ’ வென அலறிக் கீழே விழுந்து விட்டான்.


பின்னர் மெதுவாகச் சமாளித்து எழுந்து தன் தம்பிக்காக கண்ணீர் வடிக்கலானான். அப்போது திரசிரனும் அதிகாயனும் இராவணனுக்கு ஆறுதல் கூறினர். அவர்கள் "நீங்கள் கவலைப்படாதீர்கள்.  நாங்கள் எல்லாருமாக ஒன்று சேர்ந்து எதிரிகளைத் தாக்குகிறோம். அப்போது அவர்களால் என்ன செய்ய  முடியும்? எங்கள் தாக்குதலைச் சமாளிக்க முடியாது அடிபணிவார்கள்" எனக் கூறினர்.

பின்னர் அவர்கள்  தேகாந்தகன், நராந்தகன், மகோதரன், மகாபார்சுவன் என்பவர்களை அழைத்துக் கொண்டு தாமதியாது போர்க்களத்திற்கு சென்றனர். மீண்டும் அரக்கர்களுக்கும் வானரர்களுக்கும் இடையே கடும் போர் மூண்டது.  நராந்தகன் வானர சேனைக்குள் புகுந்து பலரை அடித்து வீழ்த்தினான். அப்போது அங்கதன் அவனை எதிர்க்கலானான். நராந்தகன் ஒரு ஈட்டியை எடுத்து அங்கதனின் மீது விட்டெறிந்தான்.
 அந்த ஈட்டி முறிந்து போயிற்றே ஓழிய அங்கதனுக்கு எவ்விதக் கெடுதலையும் செய்யவில்லை. அங்கதன் அடித்த அடியில் நராந்தகனது இரதத்தின் குதிரை இறந்து விழுந்தது. அதனால் ஆத்திரம் அடைந்து அவன் அங்கதனது தலைமீது ஓங்கியடித்தான். அங்கதனின் தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் கசியலாயிற்று.  அங்கதனும் ஆத்திரம் அடைந்து நராந்தனனின் மார்பில் அடிக்கவே அவன் இரத்தம் கக்கியவாறே கீழே  விழுந்து இறந்தான்.

அதைக் கண்டு மகோதரனும் தேகாந்தகனும் திசிரனும் அங்கதன் மீது பாய்ந்தனர். அவர்களது  தாக்குதல்களையும் அவன் தன்னந்தனியனாகவே சமாளிக்கலானான். இதற்குள் அனுமாரும் நீலனும் அங்கு  வந்து சேர்ந்தனர். இப்போது மிக உக்கிரமாயிற்று. அனுமார் தேகாந்தகனின் தலையில் ஒரு அடிஅடித்து அவனைக் கொன்றார்.  பின்னர் திசிரனை எதிர்த்து அவனது வாளைக் கொண்டே அவனது உயிர்போகும்படி செய்தார்.


அப்போது மகாபார்சுவன் ஒரு கதையை எடுத்துக் கொண்டு வானரர்களை எதிர்க்கலானான். ஷபன் என்ற வானரவீரன் அவனை எதிர்க்கலானான். இருவரும் போர் புரியலாயினர். ஷபன் சட்டென மகாபார்சுவனின் கதையைப் பிடுங்கி அதனாலேயே அவனைக் கொன்றான்.


இப்படியாக அரக்கர்களில் பலசாலிகள் ஒவ்வொருவராக மடிந்து விழவே எஞ்சியவர்கள் ஓட்டமெடுத்தனர்.  இதைக் கண்ட அதிகாயன் கோபம் கொண்டு தன் வீரர்களுக்கு உற்சாமூட்டி வானரர்களைத் தாக்கத் செய்தான். அவனது இடிபோன்ற தாக்குதலும் கும்பகர்ணனது போலவே மிகக் கடுமையாகவே இருந்தது. அதைக் கண்ட இராமர் "இவன் யார்?" என விபீஷணனிடம் கேட்டார். "இவன்தான் யமாலினி என்பவளுக்குப் பிறந்தவன்.  இராவணன்தான் இவனது தந்தை. இவனை ஒழிக்காவிட்டால் நம்படைக்கு பெருத்த சேதமே ஏற்படும்"  என்றான்.

 இதே சமயம் அதிகாயனும் பெருத்த ஆரவாரத்துடன் வானரப்படைகளிடையே புகுந்து விட்டான். குதன்,  மைந்தன், நீலன், சரபன் தலானோர் ஒன்றுகூடி அவனை எதிர்க்கலாயினர். அவர்களை எல்லாம் அவன் தன் அம்புகளைக் கொண்டு தாக்கியவாறே இராமர் இருக்கும் இடத்தை அடைந்தான்.

அவடம் அவன் "நான் சாதாரண போர் வீரர்களோடு போர் புரியமாட்டேன். எனக்குச் சமமானவன் யார் இருக்கிறான் இங்கே?" என்றான் இதைக் கேட்ட இலட்சுமணன் "தம்பி ரொம்பவும் துள்ளாதே" என்றான். அப்போது அதிகாயன் "ஐயோ பாவம். நீயா என்னை எதிர்க்கப் போகிறாய்? வீணாக உயிரை இழக்கப் போகிறாய்" எனக் கூறி போர் புரியலானான். அம்புகள் இரு தரப்பிலிருந்தும் மழை போலப் பொழிந்து  கொண்டே இருந்தன. இலட்சுமணனால் அதிகாயனின் கவசத்தைத் துளைத்து அம்பை எய்து அவனைக்  கொல்ல முடியவில்லை. எனவே, பிரம்மாஸ்திரத்தை விட்டு அவனது தலையைத் துண்டித்தான்.


போர்க்களத்திற்குச் சென்ற ஆறு அரக்க வீரர்களும் அழிந்து போயினர் எனக் கேட்டு இராவணன் மிகவும் வருத்தமடைந்தான். அப்போது இந்திரஜித்து இராவணனிடம், "தந்தையே, நான் இருக்கும்போது ஏன் கவலைப்பட வேண்டும்? நான் இப்போதே போய் அந்த இராமனையும், இலட்சுமணனையும் கொன்று வருகிறேன்" எனக்கூறி போர்க்களத்திற்குச் சென்றான். தேர்மீது ஏறி யானைகள்மீது பல வீரர்கள் அமர்ந்துவர அட்டகாசம் செய்தவாறே இந்திரஜித் தன் போர்க்களம் சென்றான். போர்க்களத்திலேயே ஒரு ஹோமம்  செய்து ஒரு ஆட்டையும் பலி கொடுத்தான். பின்னர் அவன் தன் இரதத்தோடு ஆகாயத்தில் மறைந்து நின்று போர் புரியலானான்.


வானர வீரர்களான கந்தமாதனன், நளன், மைந்தன், கஜன், ஜாம்பவந்தன், சுக்கிரிவன், ஷபன், அங்கதன், திவிதன்

தலானோர் மறைந்திருந்து தாக்கும் இந்திரஜித்தின் முயற்சிகளை எல்லாம் முறியடிக்க ஆயினர். பல
வானரர்கள் காயமுற்றனர். சிலர் மயக்கமுற்றனர். வேறு பல வானரர்கள் இறந்தும் போயினர்.
 இந்திரஜித் எங்கிருந்து போர் புரிகிறானென்பது வானரப்படையினருக்குத் தெரியவில்லை. இந்திரஜித்தின் அம்புகள் இராமர் மீதும் இலட்சுமணன் மீதும் விழுந்தன. அப்போது இராமர் இலட்சுமணனிடம்,  "இந்த இந்திரஜித்தை எப்படி ஒழிப்பது? நாம் இவனது தாக்குதலால் இறந்து விழுந்தது போல கிடந்தால் இவன் தன் தாக்குதலை நிச்சயம் நிறுத்திக் கொள்வான்" என்றார்.

இலட்சுமணனும் அப்படியே செய்யலாமெனக் கூறவே இருவரும் பொத்தெனக் கீழே விழுந்தனர். அதைக் கண்ட இந்திரஜித் மிகவும் சந்தோஷப்பட்டவனாக போர்க்களத்தில் இருந்து இலங்கைக்குள் சென்றான். இராமரும், இலட்சுமணனும் விழுந்தது கண்டு வானரர்கள் அதிர்ச்சி உற்றனர். அவர்கள் சுக்கிரிவன், நீலன்,  அங்கதன், ஜாம்பவந்தன் தலானோரும் முர்ச்சையடைந்து கிடப்பதைப் பார்த்தனர்.


விபீஷணன், வானரர்களிடம் "கவலைப்படாதீர்கள். இராமரும், இலட்சுமணனும் தம் நினைவு இழந்து கிடக்கவில்லை" என்றான். அப்போது இருட்டுவேளை. யார் யார் எப்படி இருக்கிறார்களென்று கூடச் சரியாகத் தெரியவில்லை.  விபீஷணனும், அனுமாரும் ஒவ்வொரு உடலாகப் பார்த்துக் கொண்டே வரலாயினர். இந்திரஜித்தன் அன்று வானரப் படைகளுக்கு விளைவித்த சேதம் கொஞ்ச நஞ்சம் அல்ல. அனுமாரும், விபீஷணனும் ஜாம்பவந்தனைத் தேடிக் கண்டு பிடித்தனர்.


அப்போது ஜாம்பவான் "யார் பேசுவது? விபீஷணனா? எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. எனக்கு பார்வையே

போய்விட்டது  எனப் போலிருக்கிறது. இங்கு அனுமான் இருக்கிறானா?" எனக்கேட்டான். அதற்கு விபீஷணன் "ஓ! நீங்கள் இராமரையோ, இலட்சுமணனையோ, சுக்கிரிவனையோ அல்லது  அங்கதனையோ பற்றிக் கேட்காமல் அனுமானைப் பற்றி மட்டும் அக்கறையுடன் விசாத்தீர்களே இதற்கு ஏதாவது காரணம் உண்டோ?" எனக் கேட்டான்.
அதற்கு ஜாம்பவான் "இந்த வானரப்படையே அழிந்தபோதிலும் அனுமான் ஒருவன் இருந்தால் போதும். இந்த அரக்கர்களை எல்லாம்  அழித்து விடலாம். அனுமான் இல்லாது வானரப்படை இருந்து எவ்வித யனும் இல்லை" என்றான்.

இதைக் கேட்டுக் கொண்டே இருந்த அனுமார் ஜாம்பவந்தனை அணுகி அவனை வணங்கி நின்றார்.  அனுமான் குரலைக் கேட்டதுமே ஜாம்பவந்தனின் முகம் மலர்ந்தது. அவன் அனுமாரைத் தன்னருகே  வரும்படி சொன்னான். அனுமாரும், ஜாம்பவானருகே சென்றார். அப்போது அவன் "இந்த வானரர்களை எல்லாம் காக்கும் பொறுப்பு உன்னுடையதே ஆகும். இந்த வேலையை வேறு யாராலும் செய்யவும் முடியாது.


நீ இப்போதே இமயமலையை நோக்கிப் போ. அங்கே கைலாசம், ஷபம் என்னும் இரு மலைகளுக்கிடையே  மூலிகை மலை உள்ளது. அதில் நான்கு சக்தி வாய்ந்த மூலிகைகள் உள்ளன. அவை வைசல்யகரணி, மிருத  சஞ்சீவினி, சுவர்ணகரணி, சந்தானகரணி எனப்படுவன. அவற்றை நீ எடுத்துக் கொண்டு விரைவில் வா"  என்றான். அனுமார் உடனே அங்கிருந்து கிளம்பினார். அவரது உடல் முன்போல பெரிய உருவம் கொண்டது.    

0 comments:

Post a Comment