விநாயகர் - 6

 
ஆகாசவாணி அப்போது, "விக்கின விநாயகா! இப்போது கஜாசுரனை நீ அழித்ததன் நினைவாக கணபதி நவராத்திரி உற்சவங்களைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இனி இவ்வித விழாக்கள் நடத்துபவர்கள் உன் அருள் பெற்று தாம் எண்ணிச் செய்யும் வேலைகளில் வெற்றியும் பெறுவார்கள்," என ஒலித்தது.
 
மகாவிஷ்ணு அப்போது பிள்ளை யாரிடம், "பார்வதி புத்திரனே! உன்னை என் மருமகன் எனக் கூறி எனக்கு வேறொரு பொறுப்பையும் சுமத்திவிட்டாயே!" என்றார். பிள்ளையாரும், "தாய்மாமன் என்ற உறவில் வரும் கம்சனை நீங்கள் கிருஷ்ணாவதாரம் எடுத்து கொல்லத்தானே போகிறீர்கள். எனவே உறவு என்பதால் எதுவும் ஆகியும் விடாது. அழியாமலும் இராது," என்றார். மகாவிஷ்ணுவும் "பேஷ்! கஜா சுரனின் மீது அமர்ந்து அவனை நீ ஒழித்தபோது உன் சிறிய உருவத்தைக் கண்டு நான் எப்படிப் பூரித்துப் போனேன் தெரியுமா?" என்றார்.
 
பிள்ளையாரும் "நான் மட்டும் தான் சிறிய உருவம் எடுத்தேனா? நீங்களும் வாமனாவதாரம் எடுத்து பலிச்சக்கர வர்த்தியைப் உம் காலால் அழுத்தி பாதாளலோகத்திற்கு அனுப்பப் போகிறீர்களே!" என்றார். மகாவிஷ்ணுவும் "ஆகா! எல்லாம் நீ முன் கூட்டியே எப்படித் தான் சொல்கிறாய்!" எனவே, பிள்ளையாரும் "நீங்கள் தாம் அதர்மத்தைப் போக்கி தர்மத்தை நிலைநாட்ட அவ்வப்போது அவதாரம் எடுத்துக் கொண்டு தானே இருக்கிறீர்கள் சமுதாயத்தில் பிறரைத் துன்புறுத்துவதும் மூட நம்பிக்கைகள் கொண்டதாயும் இருக்கும் போது புத்தாவதாரம் எடுத்து அஹிம்சையையும் உண்மை வழியையும் போதிக்கப் போகிறீர்களே.
மாயாதேவியின் கனவில் என் போன்ற வெள்ளை யானை உருவம் கொண்டு கர்ப்பத்தில் புகுந்து புத்தராகிய சித்தார்த்தரை ஈன்றெடுக்கப் போகிறார் அத்தேவியார்," என்றார். விஷ்ணு சிரித்தார். பரமாணு வடிவில் இருந்த விக்கினமோ "விக்கின ராஜா! உம் கட்டளையை ஏற்று காளிந்தி மடுவிற்குச் செல்கிறேன்," எனக் கூறி விடை பெற்றுக் கொண்டு சென்றது. விக்கினத்தின் பின்னால் வந்த மூஷிகாசுரன் நடந்ததை எல்லாம் மறைந்திருந்து பார்த்துக் கொண்டு இருந்தான்.
 
விக்கினத்திற்கு ஏற்பட்ட கதி தனக்கு வருமுன் பிள்ளையாரை எதிர்ப்பது என எண்ணி அவர் முன் போய் தன் சுய உருவை எடுத்து நின்று சிங்கம் போலக் கர்ஜித்தான். விநாயகர் பருத்துக் கொழுத்த அவனது உடலை பார்த்தார். மூஷிகாசுரனோ "இந்தப் பார்வைக்கு பயப் படுபவன் அந்த விக்கினாசுரன். நான் அல்ல. உன் கடும்பகைவன் நான். சிங்கமாகி நான் உன் மத்தகத்தைப் பிளக்கப் போகிறேன். சிங்கம் யானையின் விரோதி தானே!" என்றான் அட்டகாசமாகச் சிரித்தவாறே.
 
பிள்ளையார் புன்முறுவல் பூத்து, "சிங்கமாகப் போகிறாயா? அது ஜகன் மாதாவின் வாகனமாயிற்றே. அதற்கு நான் மரியாதை செய்ய வேண்டுமே!" என்றார். சிங்கமாக உருக் கொண்ட மூஷிகாசுரன் பலமாகக் கர்ஜிக்க, "சிவமே" எனப் பிள்ளை யார் துதி செய்தார். சிவனும் சரப அவதாரம் எடுத்து வந்தார்.
 
சரபம் என்னும் மிருகம் சிங்கத்தை விட பலமானது. எட்டுக் கால்கள் கொண்டது. பயங்கரப் பற்களும், யானை போன்ற துதிக்கையும், பாம் பிற்கு உள்ளது போன்ற வாலும் அனல் கக்கும் வாயும் கொண்ட அந்த உருவம் பார்க்க பயங்கரமாக இருந்தது. அது தன் துதிக்கையால் எதிரே இருந்த சிங்கத்தை அடிக்க அது பயந்து ஓடலாயிற்று, சரபமிருகமும் மறைந்தது.
அப்போது பிள்ளையார் தம் துதிக்கையை நீட்டி ஓடும் சிங்கத்தின் உடலைப் பற்றி உயரத் தூக்கினார். மூஷிகாசுரனாகிய சிங்கம் பயந்து நடுங்கியது. தேவர்கள் ஆகாயத்தில் கூடி மலர்மாரி பொழிய நாரதர் கானம் செய்யலானார்.
 
விஷ்ணுவோ, "பிள்ளையாரே! இந்த சிங்கத்தை எனக்குக் கொடு. நான் வளர்க்கிறேன்" எனவே, விநா யகரும் "ஓ! நரசிம்மாவதாரம் எடுக்க இது பயன்படுமென நினைக்கிறீர் களா? இது எனக்கு வேண்டும். நீங்கள் நரசிம்மாவதாரம் எடுத்து இர ணியனைக் கொல்லுங்கள்" என்றார்.
 
துதிக்கை மூஷிகாசுரனைப் பற்றி தூக்கி மகாசுவேதை முன் கொண்டு போய்விட்டு பிடியைத் தளர்த்தி மறைந்தது. மகாசுவேதை தன் கணவனுக்கு நல்லுரைகள் பல கூறிப் பார்த்தாள். அதைக் கேளாமல் மூஷிகா சுரன் விநாயகருடன் போர் புரியக் கிளம்பினான்.
 
மகாசுவேதையோ தேவியைப் பிரார்த்திக்கவே, தேவியும் அவள் முன் தோன்றி "உன் கணவன் விநாயகருக்கு எலி வடிவில் வாகனமாகப் போகிறான். நீ அவருக்கு வெண்குடையாக இருந்து உன் கணவனை விட்டுப் பிரியாமல் பிள்ளையாருட னேயே இருப்பாய்," எனக் கூறி மறைந்தாள்.
 
வஜ்ஜிரதந்தன் தான் விரும்பும் உருவை எடுக்கக் கூடியவன். இம்முறை அவன் ராட்சஸ கழுகு போல மாறி வழியில் தென்பட்ட இரு யானைகளைத் தன் கால் நகங்களில் பற்றிக் கொண்டு ஆகாயத்தில் பறந்து போய்க் கொண்டிருந்தான். அப்போது சிறிய கழுகாக ஒரு மரத்தின் மீது அமர்ந்திருந்த கருட பகவானின் தவத்தை அது கலைத்தது. இதனால் கருடன் அந்த ராட்சஸக் கழுகைத் தன் அலகால் கொத்தவே அது தன் சுய உருவில் கீழே விழுந்தது. கருடனோ, "போ, போ! பிள்ளையாரின் அருள் உனக்குக் கிடைக்கும்" எனக் கூறி விட்டுப் போயிற்று.
 
மூஷிகாசுரன் விநாயகரிடம் போய், "உனக்கு இரண்டு நீண்ட தந்தங்கள் தான் உள்ளன. அவை எதற்குப் பயன்படும்? என் பற்களால் நான் வஜ்ஜிராயுதத்தைக் கூடக் கடித்துப் பொடியாக்கி அரைத்து விழுங்கி விடுவேன்.
கைலாச பர்வதத்தையே குடைந்துவிடுவேன். என் சக்தி எவ்வளவு என்று உனக்குத் தெரியுமா?" என்றான். பிள்ளையாரும் "சரிதான் நீ சொல்வது. இந்த தந்தம் இருந்து என்ன பயன்?" எனக் கூறி ஒரு தந்தத்தை தூர எறிவது போல வஜ்ஜிரதத்தன் மீது எறிந்தார். அது அவனது உடலில் பாய்ந்து குத்தலாயிற்று. அவனது உடலிலிருந்து ரத்தம் கசியலாயிற்று. மகாசுவேதை அது கண்டு தன் நினைவு இழந்து விழுந்து விட்டாள்.
 
வஜ்ஜிரதந்தன் ஒரு சிறிய எலியாக மாறி பூமிக்குள் வளை செய்து கொண்டு ஓட, ஒடிந்த பிள்ளையாரின் தந்தமும் அவனை விடாது குத்தித் துரத்தியது. அந்த எலி எங்கு போனா லும் அது விடவில்லை. பாதாள லோகம் போயும் தந்தம் குத்துவது கண்டு பூலோகத்திற்கு வந்து வஜ் ஜிரதந்தன் அங்கும் இங்கும் ஓட, அப்போதும் பிள்ளையாரின் ஒடிந்த தந்தம் அவனை விடவில்லை.
 
முடிவில் அவன் பிள்ளையாரிடம் வந்து அவரது கால்களில் விழுந்து, "ஐயோ. என்னால் வலி பொறுக்க முடியவில்லையே. காப்பாற்றுங்கள்!" என வேண்டினான். பிள்ளையாரும் வஜ்ஜிரதந்தனான மூஷிகாசுரனுக்கு அபயம் அளித்தார். ஒரு தந்தம் ஒடிந்து போனதால் ஒரே தந்தத்துடன் இருந்த அவருக்கு ‘ஏக தந்தன்' என்ற பெயரும் ஏற்பட்டது.
 
விநாயகர் மூஷிகாசுரனை பார்க் கவே அவன் "பிள்ளையாரே! எனக்கு உங்கள் தந்தம் அறிவைக் கொடுத்து விட்டது. நான் உங்களது வாகனமாக இருந்து மகிழ்கிறேன்" எனக் கூறி மிகப்பெரிய எலியானான். பிள்ளையாரும் அதன் மீது தன் பாதத்தை வைத்து அழுத்த அது ‘கீச்' ‘கீச்'செனக் கத்தி சிறிதாகி சுண்டெலி யாகியது. அது விநாயகரை மிகச் சுலபமாகத் தூக்கித் திரியலாயிற்று. சுண்டெலியாகியும் அதன் முந்தைய பலம் அதற்கு இருந்தது.
 
இதற்குள் நினைவிழந்து விழுந்த மகாசுவேதை உணர்வு பெற்றாள். அவள் எழுந்து விநாயகரை வணங்கி "சுவாமி, என் கணவர் தங்களது வாகனமாகி விட்டார். நான் வெண் குடையாகித் தங்களுக்குப் பின்னால் இருந்து நிழல் கொடுக்கிறேன்" என்று வேண்டினாள்.
விநாயகரும் "ஆகா! அப்படியே ஆகட்டும்" எனக் கூறி அவர் எலி யைப்பார்த்து "வஜ்ஜிரதந்தா! தேவி அருளியபடி உன் மனைவி எனக்குக் குடையாகி உன்னோடு என்னருகே இருப்பாள். நீ எனக்கு பக்தர்கள் படைக்கும் நைவேத்தியப் பொருள்களை உண்டு திருப்தி அடைந்து கொள்.
 
தேவாதி தேவர்கள் என்முன் வந்து தலையில் மூன்று குட்டுகள் குட்டி, தம் காதுகளைப் பிடித்துக் கொண்டு மூன்று தோப்புக் கரணங்கள் போட்டுத் தம் கன்னங்களில் மும்முறை தட்டிக் கொண்டு விட்டு என்னை வணங்குவார்கள். அவ்வணக் கம் உன்னையும் சேரும்" என்று கூறினார்.
 
வஜ்ஜிரதந்தனும் "முன்பு தேவர்கள் என்னை இம்மாதிரித்தான் வணங்கினார்கள். இப்போதும் அப்படியே வணங்கட்டும். உங்களது வாகனமாக இருந்து உங்களோடு சேர்ந்து அவர்களது வணக்கங்களை ஏற்கிறேன்," என்றான்.
 
இதன் பின் தவளாதேவி விநாய கருக்கு வெண்குடையாகி நின்றாள். அவளது கணவன் மூஷிகவாகனமாகி விநாயகரைச் சுமந்தான். இப்படியாகக் கணவனும் மனைவியுமாகப் பிள்ளையாருக்குத் திருப்பணிகள் புரியலாயினர்.
 
மகாவிஷ்ணு பிள்ளையாரிடம் "ஆகா! உனக்குத் தான் எப்படிப்பட்ட வாகனம் கிடைத்துள்ளது. அதைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக உள்ளது," என்றார். அதற்கு பிள்ளையார் "நீங்கள் கல்கி அவதாரம் எடுக்கும்போது என் வாகனம் உங்களுக்கு வெள்ளைக் குதிரை வாகனமாக இருக்கும்.உங்களை ஆகாய மார்க்கமாய் சுமந்து, பல கிரகங்களுக்குப் போய் மனிதர்கள் வாழப் பல புதிய இடங்களைக் கண்டுபிடிக்கும்" என்றார். மகா விஷ்ணுவும் "பேஷ். உன் வாக்கு அப்படியே பலிக்கட்டும்" என்றார்.
 
விஷ்ணுவும் "எல்லாத் தடை களையும் நீ தாண்டத்தான் போகிறாய். அதன்பின் கல்யாணம் தானே," என்றார். நாரதரும் "ஆமாம். அதில் சந்தேகம் வேறு உள்ளதா? அப்புறம் இவரது கல்யாணம் நடந்தே தீரும்" என்றார். பிறகு அவர் தம் வீணையை மீட்டியவாறே தம் சஞ்சாரத்தைத் தொடங்கலானார்.
 
சிவனாருக்கும் பார்வதிக்கும் ஏற் பட்ட பற்றுதலால் தேஜாமயமான ஒளி கிளம்பியது. அக்கினிதேவன் அதனை ஏற்று எடுத்துப் போய் சரவணப் பொய்கையில் சேர்ப்பித்தான். ஆறு பாகங்களாக இருந்த அந்த நேருப்புச்சுடர்கள் ஆறு முகங்களாகி திருக்குமரனின் அவதாரத்திற்குக் காரணமாகியது. ஆறு கார்த்திகைப் பெண்கள் குமரனை வளர்த்து பார்வதி யிடமும் சிவனாரிடமும் பிறகு ஒப்படைத் தார்கள்.
 
குமரன் வளர்ந்து பெரியவனாக, கருடன் மயிலை வாகனமாக அளித்தான். இந்திரன் பலவித ஆயுதங் களைக் கொடுத்தான். பார்வதி சக்தி வாய்ந்த வேலை அளித்தாள். குமரன் வளர்ந்து பெரியவனாக ஆக, தாரகா சுரன் தினமும் கெட்ட கனவுகளைக் காணலானான்.
 
குமரன் அரும் தவம் செய்து பிரம்மஞானம் பெற்று சுப்பிரமணி யன் என்ற பெயரை அடைந்தான். தூயமணி எப்படி ஒளிவிடுமோ அப் படி அறிவு ஒளி விட்டது. ஓங்கார பிரணவப் பொருளை குமரன் தன் தந்தைக்கே உபதேசித்து சுவாமிநாதன் ஆனான்.
 
அண்ணனாகிய விநாயகரும் தம்பியாகிய குமரனும் தம் தாய் தந்தை பார்வதி, பரமேசுவரனுக்கு மகிழ்ச்சியை அளித்துத் தம் ஆடல் பாடல்களால் அவர்களைக் களிப் பித்து வரலாயினர்.   
 

0 comments:

Post a Comment