விநாயகர் - 5

 
பார்வதி தேவி மறுகணமே தனது துயரத்தை மறந்து பிள்ளையாரை தூக்கி வாரி அணைத்துக் கொள்ள, சிவனார் கரம் நீட்டி அன்புடன் அழைத்தார்.
 
பிள்ளையாரும் சற்றுத் தயங்கிய வாறே சிவனாரின் கரங்களுக்குத் தாவினார். சிவனாரும், "பிள்ளை யாரே! உன்னை எம் புதல்வனாக அடைந்தது நான் செய்த பாக்கியமே!" எனக் கூறித் தழுவி உச்சி முகர்ந்தார்.
 
பிள்ளையாரும் சட்டெனக் கீழே குதித்து சிவனாரின் பாதங்களில் விழுந்து வணங்கி, "தந்தையே! நான் தான் தங்களது புதல்வனாகப் பிறந்து மாபெரும் பாக்கியம் அடைந்திருக்கிறேன்" எனக் கூறி பார்வதி தேவி யையும் நமஸ்கரித்தார். பின்னர் அவர் மகாவிஷ்ணுவையும் வணங்கினார்.
 
விஷ்ணுவும் தன்னருகே பிள்ளை யாரை அழைத்து ஆசிகள் கூறினார். அப்போது பிள்ளையார் விஷ்ணுவின் ஒளியில் நீல நிறத்தில் காட்சி அளித்தார். அவருக்கும் விஷ்ணுவுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை யாவரும் கண்டனர்.
 
விநாயகர் பிரம்மாவையும் வணங்கவே பிரம்மாவும் "நீ முதற்பூஜையை ஏற்றுக் கொள். மகாகணபதி !" எனக் கூறி பிள்ளையாரின் கன்னத்தில் செல்லமாக ஒரு தட்டு தட்டினார். அதன் பின் பிள்ளையார் லட்சுமி தேவியையும் சரஸ்வதி தேவியையும் வணங்கினார். அவர்களும் "நாங்களும் உன் பக்கத்திலேயே மாமியார், மருமகள் என்பதனையும் மறந்து இருப்போம்.
நாம் மூவரும் முதலில் ஒன்றாக ஒரே தாய் வயிற்றில் பிறந்தாலும் பின்னர் பால் கடலிலிருந்தும், பிரம்மனின் நாவிலிருந்தும் நாங்கள் தனித்தனியே வந்தோம். பார்வதி தேவி முதலில் தட்சனின் புதல்வி சதிதேவியாகவும் பின்னர் இமயவனின் புதல்வியாகவும் பிறந்தாள். ஜெயலட்சுமி என்ற சித்தியையும் வித்தியாவதி என்ற புத்தியையும் விநாயகருக்கு ஏற்ற மனைவிகள் எனக் கருதுகிறோம். அவர்களைப் பிள்ளையாருக்கு தாமதிக்காமல் மணம் முடித்து வைப்போம்," என்றார்கள்.
 
லட்சுமியும் "ஜெயலட்சுமியுடன் விளங்கும் விநாயகரை நம்பின வருக்கு எந்த வேலையும் வெற்றிகர மாகவே முடியும். ஏனெனில் ஜெய லட்சுமி எனது அம்சம். பிள்ளையார் மணந்து கொள்ளப் போகும் பெண்" என்றாள்.
 
சரஸ்வதியும் "பிள்ளையார் அறிவை அளிப்பவர். கல்வி புகட்ட ஆரம்பிக்கு முன் யாவரும் இவரையே வணங்குவார்கள். என் அம்சமான வித்தியாவதி என்ற புத்தி என்பவள் இவரை மணந்து கொண்டு வாழட்டும்," என்றாள்.
 
பிள்ளையாரோ சற்று திகைத்து யாவரையும் பார்த்து, "எனக்கு இப் போது திருமணம் வேண்டாம். அதற்காகப் பல தடங்கல்களை நானே ஏற்படுத்திக் கொள்ளப் போகிறேன்," என்றார்.
 
அப்போது பிரம்மாவும் மற்றவர்களும் "ஆயிரம் தடங்கல்களே வந்தாலும் இந்தக் கல்யாணம் நடந்தே தீரும்," என்றார்கள். அப்போது நாரதர் முன் வந்து ,"விநாயகரே! இந்த மாதிரி திருமணத்திலிருந்து தப்பிவிட முடியாது. நானும் குடும்பத்திலிருந்து தப்பத்தானே மூவுலகிலும் சுற்றித் திரிகிறேன். திருமணம் செய்து கொள்வதும் வேலை பார்ப்பதும் ஆண்களுக்கு அழகு. திரிமூர்த்தி களும் திருமணம் செய்து கொண்டு ஆக்கல், காத்தல், அழித்தல் என்று மூன்று தொழில்களையும் செய்து வருகிறார்கள். நீயும் நானும் இதற்கு விதிவிலக்கா?" என்றார்.
 
பிள்ளையார் சிரித்தவாறே "நார தரே! உமக்கும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுவிட்டதா? ஏதாவது சுயம் வரத்திற்குப் போகப் போகிறீரா?" என்று கேட்டார்.
நாரதரும் "விநாயகனே! நீ எல் லாம் தெரிந்தவன். என்னை விட வாக்குச் சாதுரியம் படைத்தவன். எனவே உன்னை நினைக்காமல் எதுவும் ஆரம்பிக்க முடியாது. நீ முக்காலமும் உணர்ந்தவன். மாபெரும் ஞானி. அதனால் உணர்ச்சி வசப்படா மல் இருக்க முடியும். மாயை உன்னை ஒன்றும் செய்ய முடியாது. உன் கண்களை மறைக்காது. உன் னால் எல்லோருக்கும் நன்மையே ஏற்படும். எனவே சித்தி, புத்திகளை மணந்து எட்டு சித்திகளையும், எட்டு செல்வங்களையும் உன்னிடம் வைத்துக் கொள்," என்று கூறி தம் வீணையை மீட்டி மங்கள கீதம் வாசித்து முடித்தார்.
 
தேவர்கள் தம் இருப்பிடங்களுக்குத் திரும்ப சிவனாரும் பார்வதியும் பிள்ளையாருடன் தம் வாசஸ்தல மாகிய கைலாசத்திற்குச் சென்றார்கள். நாரதர் வச்சிரதந்தனைக் காணப் போய்விட்டார்.
 
அன்று கணபதி வாலைப் பிடித்து ‘கிர்' ‘கிர்'ரென்று சுற்றி எறிந்ததால் வச்சிரதத்தன் உடல்வலியால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தான். அவனது மனைவி தவளா அவனது உடம்பிற்கு ஒத்தடம் கொடுத்து வந்தாள். நாரதர் வருவதைக் கண்டதும் அவள், "இவர் இன்னமும் என்ன கலகம் விளை விக்கப் போகிறாரோ?" என எண்ணிய வாறே அந்தப்புரத்திற்குள் சென்றாள். நாரதர் அந்த மூஷிகாசுரனான வச்சிரதந்தனிடம் "உன்னை தோற் கடித்த கணபதி பிள்ளையாராகப் புகழ்பெற்று விளங்குகிறார். தெரி யுமா?" என்று பேச்சை ஆரம்பித்தார். அவனும் "பிள்ளையாரா? யாரு டைய பிள்ளயாக ஆனார்?" என்று கேட்டான்.
 
நாரதரும் "எல்லாம் அந்த சிவனாருடைய பிள்ளையாகத்தான் ஆனார். இதோ பார். வரங்களை அளிக்க பிரம்மதேவன் இருக்கும் வரை கவலையே இல்லை. நீ யானை முகம் கொண்ட பிள்ளையாரை எப்படிப் பழி வாங்க வேண்டுமோ வாங்கு!" எனக் கூறிவிட்டுப்போனார். அதன்படியே வச்சிரதந்தன் பிரம்மனைக் குறித்துக் கடும் தவம் செய்யக் கிளம்பினான். அவனது மனைவி தடுத்தும் நிற்கவில்லை.
அவனது தவத்தால் மகிழ்ந்த பிரம்மாவும் அவன் முன் தோன்றி, "வச்சிரதந்தா! என்ன வேண்டும் உனக்கு?" என்று கேட்டார். அவனும் "இன்னல்களெல்லாம் ஒன்று சேர்த்து உருவாக, அந்த உரு வம் என் சொற்படி நடக்கச் செய்ய வேண்டும். இதுதான் நான் கோருவது" என்றான்.
 
பிரம்மாவும் அவ்வாறே இன்னல்களை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு உருவாக்கி வச்சிரதந்தன் முன் நிறுத்தினார். அவன் கண்களுக்கு எதுவும் தெரியாமல் போகவே அவர் சூட்சும திருஷ்டியை அவனுக்கு அளித்து அந்த உருவத்தைப் பார்க்கச் செய்தார். அது சாதாரணமானவர்களின் கண் களுக்குப் புலப்படாமல் கருப்பு நிறத்தில் இருந்தது.
 
பிரம்மாவும் "இது தான் நீ கேட்ட உருவம். இதனால் பலவித இன்னல்களை நீ வரவழைக்கலாம். அவற்றால் பயங்கர அழிவு ஏற்படும். இது நோய், பஞ்சம், பட்டினி, போர் என்று பல உருவங்களை எடுத்து உலகை வாட்டும் சக்தி பெற்றது. இதனை நீ எப்படி உபயோகிக்க வேண்டுமோ அப்படி உபயோகித்துக் கொள்," என்று கூறிவிட்டு மறைந்தார்.
 
மூஷிகாசுரனும் அந்த உருவத் திடம், "நீ பெரிய யானையாகி அசுரகுணம் கொண்டு விக்கினேஸ் வரரான பிள்ளையாரைத் தாக்கி ஒழித்துவிடு" என்றான். அதுவும் யானை போல பயங்கரமாய் கண்களை உருட்டி கோரைப் பற்களைக் கொண்டதாய் மலையே செல்வது போல ஆகாயத்தில் கிளம்பிச் சென்றது.
 
கைலாசத்தில் பிள்ளையார் நன்கு வளர்ந்து வந்தார். பிறகு அவர் தாம் பிறந்த இடமாகிய விசுவகர்மா அமைத்துக் கொடுத்த மாளிகைக்குச் செல்ல சிவனிடமும் பார்வதி தேவி யிடமும் அனுமதி பெற்று அங்கு சென்றார். வழியில் அவர் மன்மதனைக் கண்டு, "ஓ! கண்ணில் படாத நீ என் கண்களில் பட்டுவிட்டாயே! என் மீது உன் அம்புகளை எய்கிறாயே! ஏன்?" என்று கேட்டார்.
 
மன்மதனும் பணிவுடன், "கஜமுகரே! என் மலர்க் கணைகள் உங் களை என்ன செய்துவிடும்? நான் யாருக்காவது தென்பட வேண்டும் என்று விரும்பினால் அப்படித் தென்படுவேன் என்று பரமேசுவரனே எனக்கு வரம் அளித்திருக்கிறார்.
நீங்கள் மிகவும் வேண்டியவர். எனவே உங்கள் பார்வையில் பட்டேன். நீங்கள் சிவனாரின் மைந்தன். நான் விஷ்ணுவின் புதல்வன். என் வாகனம் கிளி. உங்கள் வாகனம் எலி. என் ஆயுதம் மலர்கள். உங்களது ஆயுதம் கயறும் அங்குசமும். மேலும் உங்களுக்குத் தம்பியாகக் குமரன் பிறக்க வேண்டுமே. பார்வதி, பரமசிவன் ஆகிய இருவரின் ஒளியால் குமரன் பிறந்து தாரகாசுரனை அழிக்க வேண் டுமே. அதற்காகத் தான் நான் முயல்வது. இப்போது கைலாசத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறேன்," என்றான்.
 
பிள்ளையாரும், "மன்மதா! நான் கைலாசத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறேன். நீ அங்கே போய்க் கொண்டிருக்கிறாய், சரி. நீ செய்ய விரும்பும் வேலை தடங்கல் இல்லாமல் நன்கு நடந்து முடிவு பெறட்டும்," என்றார். மன்மதனும் உடனே அங்கிருந்து மாயமாய் மறைந்து கைலாசத்திற்குச் சென்றான்.
 
பிள்ளையார் தம் மாளிகையை வந்தடைந்தார். அவர் தம் மாளிகைத் தலைவாசல் அழகையும் சுற்றிலு முள்ள இயற்கைக் காட்சியையும் ரசித்து நின்று கொண்டிருந்தபோது, "எங்கே அந்த விக்கினேஸ்வரன்?" என்று இடி இடிப்பது போன்ற பயங்கரக் குரல் ஒன்று கேட்டது. கஜாசுரன் உருவில் வந்த இன்னல்களின் உருவம் பிள்ளையாரின் முன் வந்து பூமியை மிதித்து அதிரச் செய்தது.
அது "ஏய்! நான் கஜாசுரன். என் உருவமே யானை போன்றது. பிள்ளையாரே! உனக்கு யானை முகம் மட்டுமே உள்ளது. உன்னை ஒழித்துக்கட்டவே நான் வந்தேன்," என்றது.
 
விநாயகர் எதுவும் கேளாதவர் போல, "ஆகா! எதையாவது துண்டு துண்டாக்கிச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. என் கோடாலியைத் தீட்டிக் கொடுக்கிறாயா?" எனக் கூறியவாறே தம் கோடாலியை அவனிருந்த இடத்தில் போட்டார்.
 
அது அவனது காலில் பட்டு அந்தக் காலையே துண்டித்து விட்டது. அவன் ‘பொத்'தெனக் கீழே விழுந்தான். பிள்ளையார் அவன் உடலின் மீது ஏறி நின்று களிநடம் புரியலானார். அவனோ "ஐயோ! என்னை விட்டு விடுங்கள். பிரம்மா வச்சிரதந்தனுக் குக் கொடுத்த வரத்தின் பயனாக இன்னல்களை எல்லாம் ஒன்றாக்கி உருவமாகப் படைத்து என்னை சிருஷ்டித்தார். நான் கஜாசுரனாக வந்தேன். தக்க தண்டனை பெற் றேன்," என்றான்.
 
விநாயகரும் "நான் தான் இன்னல்களைப் போக்கும் விக்கி னேஸ்வரன் ஆயிற்றே. அது தெரிந்தும் என்னை எதிர்த்தாய். எனவே உன்னைவிட்டு வைப்பது சரியல்ல. நீ காளிந்தி மடுவில் காளியன் என்ற விஷப் பாம்பாகி மறைந்து இரு. கிருஷ்ண பரமாத்மா தம் பால்ய லீலையால் உன்னைக் கொல்வார். அவரது திருவடி உன் தலை மீது படும். உன் பாவம் போகும்.
 
உன் தலைகளின் மீது அவரது திருவடி பதிந்து விடுமாதலால் உன் வம் சத்தவர்களின் தலைகளிலும் அந்தச் சின்னம் இருந்து கொண்டே இருக்கும்," எனக் கூறி தன் கோடாலியால் கஜாசுரனைத் துண்டு துண்டாகளாக்கினார். அவை அணுஅணுவாகி ஆகாயத்தில் கிளம்பி மறைந்தன. தேவர்கள் விக்கின விநாயகர் மீது மலர்களைப் பொழிந்தார்கள்.
 

0 comments:

Post a Comment

Flag Counter