யுத்த காண்டம் - 14

 
விபீஷணன் புஷ்பக விமானத்தைக் கொண்டுவந்தான். அது தங்கத்தாலும், வைரங்களாலும் இழைக்கப்பட்டு மின்னியது. பார்ப்போர் கண்ணைப் பறித்தது. அதை இராமர் முன் வைத்து "இன்னும் தங்களுக்கு நான் என்ன கொண்டுவர வேண்டும்?" எனக் கேட்டான்.

அப்போது இராமர் "இந்த வானரர்கள் ஓர் அரிய சாதனையைச் செய்தனர். இவர்களுக்குப் பரிசுகள் கொடுத்து திருப்திபடுத்து. இதனால் உன் புகழ் ஓங்கும்" என்றார். பின்னர் அவர் இலட்சுமணனோடும், சீதையோடும் புஷ்பகவிமானத்தில் ஏறிக்கொண்டார்.

அவர் விபீஷணனிடமும், சுக்ரீவனிடமும், மற்றவர்களிடமும் விடைபெற்றக் கொள்ளும்போது அவர்கள் "நாங்களும் உங்களோடு வந்து உங்களது பட்டாபிஷேக வைபவத்தைக் காண விரும்புகிறோம்" என்று கூறினர். அதைக் கேட்ட இராமர் அவர்களையும் புஷ்பக விமானத்தில் ஏற்றிக் கொண்டார். விமானம் ஏறியவர்கள் யாவருக்கும் இடமளித்தது.

விமானம் செல்லும்போது இராமர் சீதைக்கு போர்க்களத்தில் நடந்த போரையும் பிறகு, கடலில் கட்டிய அணையையும், விபீஷணன் தன்னைச் சந்தித்த இடத்தையும் காட்டினார். கிஷ்கிந்தாபுரியை அணுகும்போது சீதை சுக்ரீவனின் மனைவியான தாரையையும் மற்றுமுள்ள மனைவியரை அழைத்துச் செல்லலாம் என ராமரிடம் கூறினார். உடனே ராமரும் அதற்கு சம்மதித்தார். ஆகையால், புஷ்பக விமானம் அங்கு இறங்கியது.
 
 சுக்கிரீவன் அந்தப்புரத்திற்குப் போய் தாரையையும் மற்றவர்களையும் அயோத்திக்கு வருமாறு கூறினான். வானர ஸ்திரீகளும் தம்மை நன்கு அலங்கரித்துக் கொண்டு சீதையைக் காண ஆவலோடு வேகமாக ஓடோடி வந்தனர்.

அவர்களை எல்லாம் விமானத்தில் ஏற்றிக்கொண்டு யாவரும் அயோத்தியை நோக்கிச் சென்றனர். இராமர் தாம் சுக்ரீவனைச் சந்தித்த ரிஸ்யமுக பர்வதத்தை சீதைக்குக் காட்டினார்.
இதுபோலவே சபரி, ஜடாயு முதலியோரைக் கண்ட இடங்களையும் காட்டி ஜனஸ்தானத்தில் தாம் அமைத்த ஆசிரமப் பகுதிகளையும் காட்டினார். விமானமும் அயோத்தியை சமீபிக்கலாயிற்று. யாவரும் சற்றுத் தொலைவிலுள்ள அயோத்தியைக் கண்டனர். ஆனால், விமானம் நேராக அயோத்திக்குச் செல்லாது பரத்துவாஜ முனிவரது ஆசிரமத்தில் இறங்கியது. இராமர் முனிவரை வணங்கி அவரிடமிருந்து பரதனது நலனையும் தன் தாய்மார்களைப் பற்றியும் விவரங்களை அறிந்து கொண்டார்.

அவர் பரத்துவாஜ ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தபோது சரியாக அயோத்தியை விட்டு அவர் கிளம்பி பதிநான்கு வருடங்கள் முடிந்துவிட்டன. பரத்துவாஜர் இராமர் அங்கு தங்கி தன் உபசரிப்பை ஏற்று மறுநாள் அயோத்திக்குப் புறப்படுமாறு இராமரிடம் சொன்னார்.

இராமரும் உடனே அனுமாரை அழைத்து "நீர் அயோத்திக்கு முன்னதாகச் செல்லும். வழியில் சிருங்கபேரிபுரத்தில் குகனைச் சந்தித்து அவனது நலனைப்பற்றி நான் கேட்டதாகச் சொல்லவும். அவன் மூலமாக பரதனைப் பற்றிய தகவல் கிடைக்கும். குகனும் நான் திரும்பி வருவது கேட்டு மகிழ்ச்சி அடைவான். நீரும் அதன்பிறகு அயோத்திற்குப் போய் பரதனைச்  சந்தித்து என்னைப்பற்றி விவரமாக எடுத்துரைக்கவும். நான் வெற்றிபெற்றது கேட்டு பரதன்

முகம் எப்படி மாறுகிறதென கவனிக்கவும்.

 
 தான் இவ்வளவு நாள்களாக ஆண்ட நாடு கைவிட்டுப் போகிறதேயென்ற கவலை அவனுக்கு சிறிதும் ஏற்படக் கூடாது. அவ்வித ஆசை அவனுக்கு இருந்தால் அவனே தொடர்ந்து நாட்டை ஆண்டு வரட்டும். நீ இத்தகவலை எனக்கு அயோத்திக்கு நான் வந்து சேருமுன்னரே வந்து என்னிடம் சொல்லவும்" என்று கூறினார்.
அனுமாரும் மானிட உருவம் எடுத்துக் கொண்டு காற்றிலும் கடிதாகச் சென்றார். 

சிருங்கபேரிபுரத்தில் குகனைச் சந்தித்து இராமர் மறுநாள் பரத்துவாஜரது அசிரமத்திலிருந்து வரும் செய்தியைக் கூறினார். பின்னர், பரதனைப் பற்றி அறிந்து அயோத்திக்குச் சற்றுமுன் இருக்கும் நந்திக்கிராமத்தை அடைந்தார்.
அங்கு பரதன் ஓர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு தவக்கோலத்தில் இருந்தான். பதிநான்கு ஆண்டுகள் முடிந்தும் இன்னும் இராமர் வரவில்லையே என ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தான். அனுமார் அவனை அணுகி "மன்னரே, ஒரு நற்செய்தி கொண்டு வந்திருக்கிறேன். இராமர், இராவணனைக் கொன்று, சிறைப்பட்டுக் கிடந்த சீதையை மீட்டு மிகவும் பலசாலிகளான சுக்ரீவன், விபீஷணன் போன்ற தன் நண்பர்களோடு வந்து கொண்டு இருக்கிறார். அவர்களோடு இலட்சுமணனும் கூட இருக்கிறார்" என்று கூறினார்.

இதைக்கேட்ட உடனேயே பரதன் ஒரேயடியாக மகிழ்ந்து போனான். அனுமாரை அவன் அப்படியே கட்டித் தழுவிக்கொண்டு "ஆகா, இந்த நற்செய்தியைக் கொண்டு வந்த நீங்கள் யாராயிருந்தாலும் உங்களுக்கு லட்சம் பசுக்களையும், நூறு கிராமங்களையும் எனது பரிசாக அளிக்கிறேன். நீங்கள் தயவு செய்து மறுப்பேதும் கூறாமல்  ஏற்றுக்கொள்ளுங்கள்" என்றான்.
அனுமாரும், அதற்கு இணங்கி, பரதனிடம் இராமரைப் பற்றிய விவரங்களை எல்லாம் கூறினார். பரதனும், இராமர் வனவாசம் செய்த காலத்தில் அனுபவித்த கஷ்டங்களையும் மற்ற அனுபவங்களையும் சிரத்தையாகக் கேட்டான். பின்னர், சத்துருக்னனிடம் ஊரெல்லாம் அலங்கரிக்கும்படி அவன் உத்திரவு இட்டான். இராமரை எதிர்கொண்டு அழைக்க மேள தாளங்களையும் நட்டுவப்பெண்மணிகளையும் ஏற்பாடு செய்தான்.
 
 நந்திக்கிராமத்திற்கும், அயோத்திக்குமிடையே உள்ள பாதை சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டது. ஆங்காங்கு தோரணங்களும், மலர் மாலைகளும் கட்டப்பட்டன. வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டன. இராமரை எதிர்கொண்டு அழைக்க மக்கள் அனைவரும்  கூட்டம், கூட்டமாகக்  கிளம்பி வந்தனர்.

யானைகள், குதிரைகள், இரதங்கள் எல்லாம் அலங்கரிக்கப்பட்டன. கௌசல்யை, கைகேயி, சுமத்திரை முதலானோர் பல்லக்குகளில் ஏறிக்கொண்டு சென்றனர். யாவரும் நந்திக்கிராமத்தை அடைந்து இராமரது வருகைக்காக மிகவும் ஆவலுடன் காத்து நின்றனர்.

நேரமாக ஆக பரதன் பொறுமையை இழக்கலானான். இராமர் இன்னமும் வரவில்லையே என கவலைப்பட்டவாறே, ஒருவேளை அனுமார் கூறியது உண்மை இல்லையோ எனவும் சந்தேகப்படலானான். ஆனால், அவ்வாறு அவன் கவலைப்பட்டுக் கொண்டிருந்த சமயம் புஷ்பக விமானம் தென்பட்டது. அது மெதுவாக நந்திக்கிராமத்தில் வந்து இறங்கியது.

பரதன் ஓடிப்போய் இராமரது பாதங்களில் விழுந்து வணங்கினான். இராமர் அவனை அப்படியே கட்டித் தழுவிக்கொண்டார். வானர வீரர்கள் எல்லாம் மானிட உருவில் இருந்தனர். பரதன் அவர்களை எல்லாம் வரவேற்றவாறே சுக்ரீவனிடம் "சுக்ரீவா, இதுவரை நாங்கள் நால்வராக இருந்தோம். இப்போது நீயும் சேர்ந்ததால் ஐந்து சகோதரனாகி விட்டோம்" என்றான். அவன் விபீஷணனையும் பாராட்டி அவன் செய்த உதவியையும் புகழலானான்.
இராமர் தன் தாய்மார்களுக்கும் அங்கிருந்த மற்ற பெரியவர்களுக்கும் வசிஷ்டருக்கும் நமஸ்காரம் செய்தார். பரதன் இராமரது பாதுகைகளைக் கொண்டு வந்து அவரது காலடியில் வைத்து "இனி நீங்கள் ஆட்சியை ஏற்க வேண்டும். இதனை ஒப்படைக்கும் நாளை நான் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன். கடைசியில் அது வந்தேவிட்டது" எனக்கூறி நாட்டின் பொருள்வளத்தையும், படைபலத்தையும் சொன்னான்.
 
 இராமர் அவற்றை ஏற்றார். புஷ்பக விமானம் குபேரனிடம் திரும்ப அனுப்பப்பட்டது. பரதன் இராமரிடம் "அண்ணா, என் தாய் கேட்டு வாங்கிய நாட்டை நானே உங்களிடம் ஒப்படைக்கிறேன். எனக்கு நாடாளும் திறமை தங்களைவிட அதிகமில்லை. அதனை ஆளவேண்டும் என்ற ஆசையும் எனக்கு இல்லை" என்றான்.
இதன் பிறகு பரதனும், இலட்சுமணனும், சுக்ரீவனும் இராமருக்குப் புனிதநீராட்டினர். தலைமுடியை சரிப்படுத்தி, உடல் எல்லாம் வாசனை திரவியங்களைப் பூசி அழகிய பட்டாடைகளை உடுத்தச் செய்தனர். இதுபோலவே தசரதரின் மனைவிமார்கள் சீதையையும் அலங்கரித்தனர்.

சுமந்திரன் அழகிய குதிரைகள் பூட்டப்பட்ட இரதத்தைக் கொண்டுவந்து நிறுத்தினான். அதில் இராமர் ஏறி அமர்ந்து கொண்டார். சுக்ரீவன், விபீஷணன் முதலியோரும் நீராடி நல்லாடை தரித்து அந்த இரதத்தின் பின்னால் சென்றனர்.

வசிஷ்டர் தசரதரின் மந்திரிகளோடு முன்னதாக அயோத்திக்குப் போய் பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைஎல்லாம் செய்யலானார். அதன்பிறகு நகர எல்லையில் மந்திரிகளெல்லாம் வந்திருந்து இராமரது வருகைக்காக் காத்திருந்தனர்.


இராமர் ஏறிய இரதத்தை பரதன் ஓட்டிவர, சத்துருக்னன் குடைபிடிக்க, இலட்சுமணனும் விபீஷணனும் வெண்சாமரங்களை வீசலாயினர். சுக்ரீவன் ஒரு யானை மீதேறி ஊர்வலத்தை நடத்திச் சென்றான். பலவகையான வாத்திய கோஷங்கள் எங்கும் முழங்கின.

இராமர் அயோத்தியை அடைந்தபோது ஒவ்வொரு வீட்டின் வாசலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இராமர் தசரதரின் மாளிகையை அடைந்ததும் பரதனிடம் சுக்ரீவன் தங்குவதற்காகத் தனியான ஒரு மாளிகையை ஏற்பாடு செய்யச் சொன்னார்.

சுக்ரீவன் தன் விடுதியை அடைந்ததும் நான்கு பொற்குடங்களை நான்கு வானரப் பிரமுகர்களிடம் கொடுத்து அவற்றில் கடல்நீரைக் கொண்டுவரச் சொன்னான். அவர்களும் மறுநாள் பொழுது புலர்வதற்குள் நீரைக்கொண்டு வந்தனர். அப்படிச்சென்றவர்களுள் அனுமாரும் ஜாம்பவந்தனும் இருந்தனர்.

இராமரது பட்டாபிஷேகம் இனிது நடைபெற்றது. இராமரும் சீதையும் தங்க அரியணைமீது அமர்ந்தனர். பல ரிஷிகளும், முனிவர்களும், பிராம்மணர்களும், மந்திரிகளும், நகர மக்களும் அவர்களை நீராடச் செய்தனர். சத்துருக்னன் வெண்குடை பிடிக்க சுக்ரீவனும், விபீஷணனும் வெண்சாமரம் வீசினர். தேவேந்திரன் அனுப்பிய அழகிய மலர் மாலையை இராமர் அணிந்திருந்தார்.

இராமர், பிராம்மணர்களுக்கு பல லட்சம் பசுக்களையும், குதிரைகளையும் தானமளித்தார். முப்பதுகோடி தங்க நாணயங்கள், ஆடைகள், பல கிராமங்கள் மான்யங்களாகக் கொடுக்கப்பட்டன. இராமர் கொடுத்த ஓர் அழகிய முத்து மாலையை சீதை தனக்கு மிகவும் மகிழ்ச்சியையூட்டிய அனுமாருக்குப் பரிசாக அளித்தாள். அனுமாரும் அதனை பக்தியோடு ஏற்று அணிந்து கொண்டார்.

இராமர் மற்ற வானரர்களுக்கும் பரிசளிக்க யாவரும் அவற்றைப் பெற்றுக் கொண்டனர். சுக்ரீவன் தன் படையோடு இராமரிடம் விடைப் பெற்றுக் கொண்டு கிஷ்கிந்தைக்கு கிளம்பினான். விபீஷணனும் இலங்கைக்குத் திரும்பினான்.

இராமரது ஆட்சியின் பாரத்தில் பாதியை இலட்சுமணன் வகித்தான். அவர் நூறு அசுவமேத யாகங்கள் செய்தார்.


இராமரது ஆட்சியில் மக்களுக்கு எவ்வித குறையும் இல்லை. அகாலமரணம் ஏற்படவில்லை. இராமராஜ்யம் என்பது மக்கள் சுகப்படும் ஆட்சி என்ற பொருள் இவ்வுலகில் எக்காலத்திலும் நிலைக்கும்படி ஏற்பட்டுவிட்டது.( யுத்த காண்டம் முடிவுற்றது)

0 comments:

Post a Comment