
மகாவிஷ்ணு தம் வாசல் காப்போர்கள் ஜெயனிடமும் விஜயனிடமும் "நீங்கள் ஏழு
பிறப்புகள் எடுத்து என் நண்பர்களாக இருந்து முடிவில் என்னை அடைய
விரும்புகிறீர்களா அல்லது மூன்று பிறப்புகள் எடுத்து என் கடும் பகைவர்களாக
இருந்து முடிவில் என் கையாலேயே மடிந்து வைகுண்டத்திற்கு வர
விரும்புகிறீர்களா?" என்று கேட்டார். அவர்களும் விஷ்ணுவை விரைவில் அடைய
வேண்டும் என எண்ணி "மூன்று பிறப்புகளில் உங்கள் விரோதிகளாக இருந்து நற்கதி
பெறுகிறோம்." என்று தம் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். அப்போது சனகர்,
நந்தனர் முதலிய முனிவர்கள் அவர்களைப் பாராட்டி விஷ்ணுவிடம் "நாங்கள்
அவசரப்பட்டு இவர்களைச் சபித்து விட்டோம். அதற்காக மனம் வருந்துகிறோம்.
எங்களை மன்னித்து விடுங்கள்" எனக்கூறி அவரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு
சென்றார்கள்.
ஜெயனும் விஜயனும் கஸ்யபப்
பிரஜாபதியின் மனைவி திதியின் மகன்களாக இரண்யகசிபு என்றும் இரண்யாட்சன் என்ற
பெயரிலும் பிறந்தார்கள். அவர்கள் பெரியவர்களாகி பிரம்மாவைக் குறித்து தவம்
செய்து பல அரிய வரங்களைப் பெற்றார்கள். அவர்கள் விஷ்ணுவைக் கடும்
பகைவராகக் கருதி வெறுத்து வந்தார்கள்.
இரண்யாட்சன் விஷ்ணுவை இகழ்ந்தும் பல அநியாய அட்டூழியங்களைச் செய்தும்
வந்தான். பூமியையே தூக்கிக் கொண்டு போய் அவன் ரசாதலத்திலுள்ள
சமுத்திரத்தில் போட்டு விட்டான். பூமாதேவி விஷ்ணுவை தியானித்துத் தன்னை
காப்பாற்றும்படி வேண்டினாள்.

வருணனோ "பூமியைக் கடலிலிருந்து தூக்கியது நான் அல்ல. அதோ அந்த
யக்ஞவராகம்தான். எனவே நீ அதனோடு சண்டை போடு" என்றான். இரண்யாட்சனும் வராக
உருவில் இருப்பது மகாவிஷ்ணுதான் என அறிந்து கோபம் கொண்டு உக்கிரமாக அதனைத்
தாக்கினான். இருவருக்கிடையே பயங்கரப் போர் நிகழ்ந்தது. முடிவில் வராக
வடிவில் இருந்த விஷ்ணு தன் கூரிய மூக்கினால் மாடு முட்டுவதுபோல
இரண்யாட்சனைக் குத்திக் கொன்றார்.
பூமாதேவி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். மகாவிஷ்ணுவையே அவள் மணந்து
கொண்டாள். மகாவிஷ்ணுவும் அவளை அழைத்துக் கொண்டு வைகுண்டம் சென்றார். அங்கு
அவர் அவளைத் தன் தொடைமீது அமர்த்திக் கொண்டு காட்சி அளிக்க பிரம்மா முதலிய
தேவர்கள் மலர் மாரி பொழிந்து புகழ்ந்து பாடினார்கள். விஷ்ணு பன்றி உருவில்
வந்து தன் தம்பியான இரண்யாட்சனைக் கொன்றதால் அவரைப் பழிக்குப் பழி
வாங்குவது என்று இரண்யகசிபு தீர்மானித்தான்.
அதற்காகத் தவம் செய்து பிரம்மாவிடமிருந்து அரிய வரங்களைப் பெறுவது
எனத் தீர்மானித்துக் கொண்டு அவன் காட்டிற்குச் சென்றான். அப்போது அவன்
மனைவி லீலாவதி கர்ப்பமுற்று இருந்தாள். இரண்யகசிபுவிற்குப் பிறக்கப் போகும்
மகனும் அவனைப் போல குணம் படைத்தவனாக இருப்பானோ என பயந்த இந்திரன் லீலாவதி
யின் கர்ப்பத்தில் வளரும் குழந்தையை அந்த நிலையிலேயே கலைத்து ஒழிக்க ஆகாய
வழியாகச் சென்று கொண்டிருந்தான்.

ஆசிரமத்தில் நாரதர் தினமும் லீலாவதிக்கு விஷ்ணுவின் பெருமையையும்
நாராயண நாம மகிமையையும் மற்றும் பல வேதாந்த விஷயங்களையும் கூறி வரலானார்.
அவளது கர்ப்பத்திலிருந்த சிசு கவனமாகக் கேட்டுத் தன் மனதில் பதிய வைத்துக்
கொண்டு விட்டது. உரிய காலத்தில் லீலாவதி ஒரு ஆண் குழந்தையைப்
பெற்றெடுத்தாள்.
இரண்யகசிபுவின் கடுந்தவத்தைக் கண்டு காட்டில் கடுந்தவம் புரிந்து
பிரம்மாவை மகிழ்வித்தான். பிரம்மாவும் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும்
என்று அவனிடம் கேட்டார். இரண்ய கசிபுவும் "நான் பூமி மீதோ ஆகாயத்திலோ
இரவிலோ பகலிலோ வீட்டினுள்ளேயோ அல்லது வெளியிலோ மனிதனாலோ மிருகத்தாலோ
தேவர்களாலோ மரணம் அடையக் கூடாது. உலகின் எந்த ஜீவராசியும் என்னைக் கொல்லும்
சக்தி பெற்றிருக்கக் கூடாது" என்று பல அரிய சக்திகள் கொண்ட வரங்களைக்
கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்ட வரங்களைக் கொடுத்து விட்டு மறைந்தார்.
சக்தி வாய்ந்த வரங்களைப் பெற்ற பெருமையோடு இரண்யகசிபு காட்டிலிருந்து
தன் அரண்மனைக்குத் திரும்பலானான். அப்போது நாரதர் அவனைச் சந்தித்து அவன்
மனைவி லீலாவதிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதையும் அவள் தன் ஆசிரமத்தில்
இருப்பதையும் கூறி அவனைத் தன்னோடு அழைத்துச் சென்றார்.
அங்கு இரண்யகசிபு தன் மனைவியையும் மகனையும் கண்டு மகிழ்ந்தான்.
அக்குழந்தைக்குப் பிரகலாதன் என்ற பெயர் வைக்கப் பட்டது. அதன் பிறகு அவன்
தன் மனைவியையும் மகனையும் அழைத்துக் கொண்டு நாரதரிடம் விடை பெற்றுத் தன்
அரண்மனைக்குக் கிளம்பிச் சென்றான்.

பிரகலாதன் வளர்ந்து பெரியவனானான். அவன் எப்போதும் நாராயணனின்
திருநாமத்தையே உச்சரித்து வந்தான். இதைக் கண்ட இரண்யகசிபு தன் மகனைத்
திருத்தத் தன் குருவின் புதல்வர்களான சண்டமார்க்கர்களிடம் ஒப்படைத்தான்.
பிரகலாதன் குருகுலவாசத்தின் போது எல்லா சாஸ்திரங்களையும் கற்றும்
நாராயணனின் திருநாமத்தை எப்போதும் உச்சரித்தும் வந்தான். அது மட்டுமல்ல,
தன்னோடு படிப்பவர்களையும் நாராயணனின் திவ்விய நாமத்தை உச்சரிக்கும்படிக்
கூறிப் பழக்கப்படுத்தினான். இது கண்டு சண்டமார்க்கர்கள் பயந்து பிரகலாதனை
இரண்யகசிபுவிடம் அழைத்து சென்றனர். இரண்யகசிபுவும் தன் மகனைத் தன் மடிமீது
அமர்த்திக் கொண்டு அவன் கற்றதை எல்லாம் கூறும் படிச் சொன்னான். உடனே
பிரகலாதன் நாராயண நாமத்தை உச்சரித்து விஷ்ணுவின் மகிமை பற்றி விரிவாகக்
கூறினான்.
அது கேட்டு இரண்யகசிபு கோபம் கொண்டு தன் மகனை கீழே தள்ளி விட்டு
சண்டமார்க்கர்களிடம் "இதுதான் நீங்கள் கற்றுக் கொடுத்ததா?" என்று கோபத்தோடு
கேட்டான். அவர்களும் பயந்து தாம் அவ்வாறு சொல்லிக் கொடுக்கவில்லை என்று
கூறி பிரகலாதன் குருகுல வாசத்தின் போது மற்ற மாணவர்களுக்கும் இப்படி
உபதேசித்ததாக கூறினார்கள்.
அப்போது இரண்யகசிபு "அடே பிரகலாதா! இந்த விஷ்ணு உன் சிற்றப்பாவைக்
கொன்றவன். நம் குலத் துரோகியைப் புகழ்வதா? இனிமேலும் அவன் பெயரைக் கூறாதே.
மறந்து விடு" என்றான்.
பிரகலாதனோ "என் உடலில் உயிர் உள்ள வரையில் அவரது திருநாமத்தை
உச்சரித்துக் கொண்டுதான் இருப்பேன்" என்றான். அது கேட்டு இரண்யகசிபு
கடுங்கோபம் கொண்டு "இவனுக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடாமல் சிறையில்
தள்ளுங்கள்" என்று கட்டளை இட, வீரர்களும் அவனை இழுத்துப் போய்ச்
சிறைச்சாலையில் அடைத்தார்கள்.
பிரகலாதனின் தாய் லீலாவதியோ துடி துடித்துப் போனாள். நாட்கள் சில
கழிந்தன. இரண்யகசிபுவும் சிறையில் பிரகலாதன் நினைவிழந்து மெலிந்து விழுந்து
கிடப்பான் என எண்ணி அவனை அழைத்து வரும்படிக் கட்டளை இட்டான். பிரகலாதன்
வந்த போது அவனைக் கண்டு இரண்யகசிபு திடுக்கிட்டான். ஏனெனில் அவன் உடல்
மெலிந்து விடவில்லை முகம் வாடி விடவில்லை. புன்னகை புரிந்தவாறே ‘நாராயண நம'
எனக் கூறிக் கொண்டே இருந்தான்.
அது கேட்டு இரண்யகசிபுவின் கோபம் அதிகரித்தது. அவனை யானையின்
காலடியில் போட்டு மிதிக்கச் செய்யக் கட்டளைஇட்டான். யானையோ பிரகலா தனைக்
கண்டதும் சிங்கத்தைப் பார்த்து பயப்படுவது போலப் பின்வாங்கி ஓடியது.
பிரகலாதன் மீது பாம்புகளை ஏவும்படி இரண்யகசிபு கட்டளை இட்டான்.

அவை பிரகலாதனைச் சுற்றி வந்து வணங்கி விட்டுப் போய் விட்டன. பின்னர்
மலையிலிருந்து உருட்டியும், கடலில் தள்ளியும், விஷம் கொடுத்தும் இரண்யகசிபு
பிரகாலாதனைக் கொல்லப் பார்த்தான். ஆனால் எவற்றாலும் பிரகலாதனைக் கொல்ல
முடியாதது கண்டு இரண்யகசிபு ஆச்சரியத்தோடு, "என்ன செய்தாலும் நீ இறக்காமல்
இருக்கிறாயே இதன் மர்மம் என்ன?" என்று கேட்டான்.
பிரகலாதனும் சிரித்தவாறே "இதில் மர்மம் என்ன இருக்கிறது? நான்
நாராயணனை எதிலும் காண்கிறேன். நீரிலும் ஜீவராசிகளிலும் விஷத்திலும் அவர்
இருக்கிறார். எல்லாம் அவரது லீலாவினோதமே. அதனால்தான் என்னை இவற்றால்
எதுவும் செய்ய முடியவில்லை" என்றான். அது கேட்டு இரண்யகசிபு கோபம் கொண்டு
பிரகலாதனை இழுத்துப் போய் தர்பாரில் ஒரு பெரிய தூணின் முன் நிறுத்தி "அடே!
நீ கூறும் நாராயணன் எப்பொருளிலும் இருப்பதாகக் கூறுகிறாயே. என் தம்பியைக்
கொன்ற அந்த விஷ்ணு இந்தத் தூணில் இருக்கிறானா?" என்று கேட்டான்.
பிரகலாதன் "ஆகா! அவர் தூணிலும் இருக்கிறார். துரும்பிலும் இருக்கிறார்
எங்கும் இருக்கிறார்" என்றான். இரண்யகசிபுவும் "அப்படியா! இதனை உதைத்துப்
பிளக்கிறேன். எங்கே இதிலிருந்து அந்த விஷ்ணு வருகிறானா என்று பார்க்கிறேன்"
என்று கூறி எதிரே இருந்த தூணை ஓங்கி உதைத்தான்.
அப்போது அண்டமே கிடுகிடுக்கும் படியான சத்தம் ஏற்பட்டது. தூண்
பிளந்தது. அதிலிருந்து அது வரை உலகிலேயே சிருஷ்டிக்கப் படாத உருவம் வந்தது.
அதன் உடல் மனிதனுடையதாகவும் தலை சிங்கத்தினுடையதாகவும் இருந்தது. பற்களும்
கூரிய நகங்களும் பயங்கரமாக இருந்தன. இதுதான் விஷ்ணு எடுத்து வந்த
நரசிம்மாவதாரம்.

0 comments:
Post a Comment