மகாவிஷ்ணு - 4

 
பாற்கடலைக் கடையும் போது ராட்சஸர்கள் தேவர்களைக் கேலி செய்தவாறே பாம்பின் தலைப் பகுதியைப் பலமாகப்பற்றி இழுத்தார்கள். தேவர்களும் போட்டி போட்டுக்கொண்டு பலமாக இழுக்கவே மாபெரும் பாம்பான வாசுகி தன் பல தலைகளிலிருந்து கொடிய ஆலாகல விஷத்தைக் கக்கியது. இது கண்டு எல்லோரும் சம்போ! மகாதேவா!! எனச் சிவனாரைத் துதித்தார்கள்.
 
சிவனாரும் வந்து அந்தக் கொடிய விஷத்தைக் குடித்தார். விஷம் அவரது உடலைத் தாக்கக் கூடாது என நினைத்து தேவி அவரது கழுத்தைப் பலமாகப் பிடித்துக் கொண்டாள். அதனால் விஷம் அவரது கழுத்தோடு நின்று அப்பகுதியை நீல நிறமாக்கி விட்டது. அதனால் அவருக்கு நீலகண்டன் என்ற மற்றொரு பெயரும் ஏற்பட்டது.
 
அமிழும் மந்தர மலையைத் தாங்க தேவர்கள் விஷ்ணுவைப் பிரார்த்திக்க அவரும் பெரிய ஆமை வடிவை எடுத்து கடலில் நுழைந்து மந்தரமலையின் அடியில் போய் அதனைத்தம் முதுகில் தாங்கி கடல் மட்டத்திற்கு மேல் இருக்கச் செய்தார். இதனால் பாற்கடலைக்கடைவது எளிதாயிற்று.
 
பாற் கடலிலிருந்து சந்திரன் இலட்சுமி, கற்பக மரம், காமதேனு, ஐராவதம், உச்சசிரவஸ் என்ற குதிரை போன்ற பல அதிசயப் படைப்புகள் வெளி வந்தன.
 
முடிவில் பாற்கடலிலிருந்து அமிர்தம் வெளி வந்தது. விஷ்ணுவே ஆயுர்வேத வைத்திய முறையை ஏற்படுத்திய தன்வந்திரியின் உருவில் அமிர்த கலயத்தை எடுத்துக்கொண்டு பல மூலிகைகளோடு தாமரை மலர் மீது அமர்ந்து கடலிலிருந்து வெளியே வந்தார்.
 
அமிர்தத்தை அடைய எவ்வளவு கஷ்டப்பட வேண்டியதாயிற்று! தன்வந்திரியின் கையில் இருந்த கலயத்தை ராட்சஸர்கள் கண்டு "அது எங்களுக்கே சொந்தம்" என்று பிடுங்கிக் கொண்டு விட்டார்கள். அது கண்டு தேவர்களோ அது தமக்கே சொந்தம் என்றார்கள். இப்படி அவர்கள் சச்சரவு செய்து கொண்டிருக்கையில் அங்கே அழகிய பெண்ணான மோகினி தோன்றினாள். அவளைக் கண்டு ராட்சஸர்கள் மதிமயங்கிப் போனார்கள்.
 
அப்போது மோகினி "வீண் சண்டை எதற்கு? அந்தக் கலயத்தை என்னிடம் கொடுங்கள். நான் பகிர்ந்து கொடுக்கிறேன்" என்று புன்னகை புரிந்தவாறே கூறினாள். ராட்சஸர்களும் அதற்குச் சம்மதித்து அமிர்த கலயத்தை அவளிடம் கொடுத்தார்கள்.
 
ராட்சஸர்களை ஒரு வரிசையிலும் தேவர்களை எதிர் வரிசையிலும் மோகினி உட்கார வைத்தாள். பின்னர் அவள் அமிர்தகலயத்தை எடுத்துக் கொண்டு குலுக்கிமினுக்கியவாறே அவர்களிடையே நடந்து வந்தாள்.
 
ராட்சஸர்கள் ஆவென வாயைப் பிளந்து கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். தேவர்களும் அந்த மோகினி யாரெனத் தெரியாமல் திகைத்தனர். மோகினி அமிர்தத்தை முதலில் தேவர்களுக்கே கொடுத்துக் கொண்டு போனாள். அப்போது தேவர்களுக்கு விஷ்ணு தான் மோகினியின் உருவில் வந்திருக்கிறார் என்பது தெரிந்து விட்டது.
 
மோகினி ராட்சஸர்களை மயக்கி ஏமாற்றுகிறாள் என்பதை ராட்சஸர்களில் ஒருவனான ராகு கண்டு கொண்டான். அவன் ஜல ராட்சஸி சிம்ஹிகையின் மகன். அவன் தேவர்களில் ஒருவனைப் போல உருமாறி தேவர்கள் உட்கார்ந்த வரிசையில் போய் அமர்ந்தான். அவனுக்கும் அமிர்தம் கிடைக்கவே அதனைக் குடித்து விட்டான். இதனை கவனித்து விட்ட சூரிய சந்திரர்கள் விஷ்ணுவிடம் கூறி விட்டார்கள். விஷ்ணுவும் அப்போது பல உருவில் இருந்தார். மோகினி, ஆமை என்பதோடு எப்போதும் உள்ள உருவிலும் இருந்ததால் தம் சக்கராயுதத்தை ராகுவின் மீது விட்டார். 
 
ராகுவைத் துரத்தி அவனது தலையைத் துண்டித்தது. அமிர்தம் சாப்பிட்டதால் அந்தத் தலையும் உயிருடன் இருந்தது உடலும் உயிருடன் இருந்தது. தலைப்பகுதி ராகு எனவும் வால் பகுதி கேது எனவும் பெயர் பெற்று ஏழு கிரகங்களோடு சேர்ந்து இருக்கலாயின. அதனால் ராகுவும் கேதுவும் கூட கிரகங்களாகக் கருதப்பட்டன. மகாவிஷ்ணுவிடம் தன்னைக் காட்டிக் கொடுத்த சூரியனையும் சந்திரனையும் சில அமாவாசைகளிலும் சில பௌர்ணமி நாட்களிலும் ராகு துன்புறுத்தி வந்தான். இதுதான் சூரிய சந்திர கிரகணங்கள் என்று வழக்கில் சொல்லி வரலானார்கள்.
 
அமிர்தம் முழுவதும் தேவர்களுக்குக் கொடுத்த பின் மோகினி திடீரென மறைந்து விட்டாள். அப்போது தான் ராட்சஸர்களுக்குத் தாம் ஏமாந்து போனது தெரிந்தது. அதுமுதல் அவர்கள் விஷ்ணுவையும் தேவர்களையும் தம் கடும் பகைவர்களாக எண்ணி வரலானார்கள்.
 
மோகினி அழகிற்கே எடுத்துக் காட்டாக அமைந்தாள். நாரதரும் ஜெகன் மோகினி அவதாரத்தின் புகழ்பாடி தம் வீணையை மீட்டியவாறே கைலாச லோகத்திற்குச் சென்றார். பார்வதிதேவி அதைக் கேட்டு "அறியாமையில் இருந்த ராட்சஸர்களை மயக்கி ஏமாற்றி விட்டதால் மட்டும் மோகினி உயர்ந்தவளாகி விட்டாளா?" என்று கேட்டாள். நாரதரும் "ஆம் தாயே. யாரையும் கவர்ந்து இந்த உலகையே காக்க வந்ததுதான் மோகினி அவதாரத்தின் நோக்கம். அதனால் அவள் உயர்ந்தவளே" என்று கூறி விட்டுச் சென்றார்.
 
பார்வதிதேவி அது பற்றிச் சிவபிரானிடம் கூறினாள். சிவபெருமானோ தலையை ஆட்டிப் புன்னகை புரிந்து விட்டுப் பேசாமல் இருந்தார். பின்னர் அவர் பார்வதிதேவியை அழைத்துக் கொண்டு நந்தி வாகனத்தில் ஏறி வைகுண்டத்திற்குச் சென்று" நீங்கள் எடுத்த மோகினி உருவத்தை மறுபடியும் காணவேண்டும் என்று வந்திருக்கிறோம்" என்றார்.
 
சற்று நேரத்திற்குப் பின் சற்று தொலைவில் பூச்செண்டுகளைத் தூக்கி எறிந்து விளையாடும் மோகினியை சிவபெருமானும் பார்வதியும் கண்டார்கள். சிவனார் தம்மை மறந்து அந்த மோகினியின் பக்கம் ஓடினார். 
 
மோகினியும் அவரது பிடிக்கு அகப்படாமல் நகர்ந்து நகர்ந்து செல்ல, சிவபிரானும் அவளைப் பிடிப்பதற்காகக் கையை நீட்டியவாறே செல்லலானார். பார்வதிதேவி இதைக் கண்டு திகைத்து நின்றாள்.
 
சிவமோகினி லீலாவினோதத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயத்தோடு நின்று பார்த்தார்கள். நந்தி தேவரும் ஆடாமல் அசையாமல் நின்றார். மோகினியும் சிவபிரானும் ஓடிக் கொண்டே இருந்தனர். பார்வதிதேவி கைலாசத்திற்குத் திரும்பி வந்தாள். மோகினியோ சிவபிரானை ஏழு உலகங்களிலும் தம் பின்னால் வரச் செய்து கைலாசத்திற்கே வந்தாள், தன்னை பிடிக்க முயன்ற சிவபிரானை அவ்வாறு செய்ய வேண்டாம் எனக் கூறி அவள் பார்வதியை நோக்கி ஓடினாள். ஆனால் சிவபிரான் அவளது இடையைப் பற்றி விட்டார். மறு நிமிடம் மோகினியின் உருவம் மறைய அந்த இடத்தில் மகாவிஷ்ணு நின்றார்.
 
பார்வதியும் விஷ்ணுவிடம் "அண்ணா இது நீங்களும் என் கணவரும் சேர்ந்து நடத்திய லீலை இதை உலகம் உணரத்தான் உணரும்" என்றாள். அப்போது நாரதரும் "தேவி நீங்கள் கூறியது முற்றிலும் சரி" எனக் கூறி வீணையை மீட்டி இனிய கீதங்களைப் பாடினார்.
 
சிவபெருமானும் "இப்படிப் பட்ட மோகினியின் உருவ அழகில் ராட்சஸர்கள் மயங்கி மதி இழந்து அமிர்தத்தையே மறந்து போனது ஆச்சரியப்படத் தக்க விஷயம் அல்லதான்" என்றார். விஷ்ணுவும் புன்னகை புரிந்தவாறே பார்வதியிடம் "முன்பு நம் கங்காதேவி மேலுலகிலிருந்து பூலோகத்திற்குச் சென்ற போதும் சிவபிரான் இப்போது போலவே அவளது அழகில் மயங்கித்தான் தன் தலைமீது வைத்துக் கொண்டார் போலிருக்கிறது" என்றார். இப்படி சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர் வைகுண்டலோகத்திற்கு திரும்பிச் சென்றார்.
 
சில காலத்திற்குப் பின் விஷ்ணு கர்த்தமபிரஜா பதிக்கும் தேவஹுதிக்கும் மகனாகப் பிறந்து கபிலவதாரம் எடுத்தார். சிறு வயதிலேயே தவம்செய்து நல்லறிவு பெற்ற இந்த கபிலரைப் பின்னர் கபிலமகா முனிவர் என்று உலகமே போற்றிப் புகழந்தது.
 
புகழந்தது. கபிலர் தம் தாய் தேவஹுதிக்குக் கூறிய பல தத்துவபோதனைகள் தாம் சாங்கியயோகம் எனப்பெயர் பெற்று விளங்கியது. கபிலர் பாதாள லோகத்தில் எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் தவம் செய்து கொண்டிருந்தபோது தான் பூவுலகில் சகரன் என்ற சக்கரவர்த்தி தனது நூறாவது அசுவமேத யாகத்தைச் செய்யலானான். இந்திரன் தன் பதவி போய் விடுமோ எனப் பயந்து அந்த அசுவமேத யாகக் குதிரையைத் திருடிக் கொண்டு போய் கபிலர் தவம் செய்து கொண்டிருந்த இடத்தில் கட்டி விட்டுப் போய் விட்டான்.
 
சகரனின் ஆயிரம் புதல்வர்கள் யாகக் குதிரையைத் தேடிக் கொண்டு சென்றார்கள். பூமியைப் பள்ளம் தோண்டியவாறே அவர்கள் பாதாள லோகத்தை அடைந்தார்கள். அங்கே கபிலர் தவம் செய்து கொண்டிருந்த இடத்தில் அவர்கள் யாகக் குதிரையைக் கண்டார்கள். கபிலர்தான் குதிரையைத் திருடியவர் என அவர்கள் எண்ணி அவரைத் தாக்கினார்கள். அவர் தம் கண்களைத் திறந்து அவர்களைப் பார்க்கவே அந்த ஆயிரம் பேர்களும் எரிந்து சாம்பலாகி விட்டார்கள்.
 
சகரனின் பேரன் பகீரதன் எரிந்து சாம்பலாகிப் போன தன் முன்னோர்கள் நற்கதி அடைய மிகவும் முயற்சி செய்தபோது, விஷ்ணுவின் பாதங்களிலிருந்து தோன்றி மந்தாகினி என்ற பெயரில் சொர்க்கலோகத்தில் இருந்த கங்கை நதி பூமிக்கு வந்து அந்த எரிந்த சாம்பலைக் கரைத்தால் தான் அது முடியும் எனத் தெரிந்து கொண்டான்.
 
ஆகவே அவன் கங்கையை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். கங்கை தான் பூவுலகிற்கு வரத் தயார் என்றும் தன் வேகத்தைத் தாங்குபவர் யாராவது வேண்டுமே எனவே பகீரதன் சிவபிரானைக் குறித்துத் தவம் செய்து அவரை மகிழ்வித்து அவரிடம் கங்கையின் வேகத்தைத் தாங்கித் தருமாறு வேண்டிக் கொண்டான்.
 
கங்காதேவி மேலிருந்து கீழே வந்தபோது சிவபிரான் அவளது அழகைக் கண்டு அவளைத் தம் சடை முடியில் தாங்கி அதில் நிறுத்தி பலமாகக் கட்டி வைத்து விட்டார்.
 
பகீரதன் அவரிடம் வேண்டிக் கொண்டதன் பேரில் அவர் தம் சடை முடியைக் கொஞ்சம் அவிழ்த்து சிறிது கங்கை நீரை விட்டார். அது கங்கை நதியாகி பகீரதனின் பின்னால் சென்று அவனது முன்னோர்களின் சாம்பலின் மீது பாய்ந்து சென்று அவர்களை நற்கதி அடையும்படிச் செய்தது. சனகசனந்தாதி முனிவர்கள் எனப்படுவோர் நால்வர். அவர்கள் சனகர், சனந்தர், சனத் சுஜாதர், சனத்குமாரர் என்பவர்களாவர். எப்போதும் பாலர்களாக இருந்து விஷ்ணுவின் புகழ் பாடி எல்லா உலகங்களுக்கும் இவர்கள் போய் வந்தார்கள்.
 
அவர்கள் விஷ்ணுவைப் பார்க்க வைகுண்டத்திற்குப் போனார்கள். வைகுண்ட வாசலில் காவலாக நின்ற ஜெயனும் விஜயனும் அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அவர்கள் அக்காவலாளிகளைப் பொருட்படுத்தாமல் நேரே விஷ்ணு சயனித்திருந்த அறையை நோக்கிச் சென்றார்கள். அப்போது காவலாளிகள் இருவரும் அவர்களைத் தடுக்கவே அவர்கள் "நீங்கள் இங்கே இருக்கத் தகுதி பெற்றவர்களல்ல. ராட்சஸர்களாகப் பிறப்பீர்களாக" என்று சபித்தனர்.
 
தலைவாசலில் ஏதோ சத்தம் ஏற்பட்டது கேட்டு அங்கே விபŽதம் ஏதும் நடந்து விட்டதோ என எண்ணி இலட்சுமி தேவி ஓடிவர, அவள் பின்னால் மகாவிஷ்ணுவும் வந்தார்.
 

0 comments:

Post a Comment