மகாவிஷ்ணு - 2

 
சத்திய விரதன் கூறியபடியே மீன் சமுத்திரத்திற்குப் போய் பெரிய மலைபோல ஆகிவிட்டது. அது "சத்தியவிரதா! நான் இன்னமும் வளர்ந்து கொண்டே போவேனா?" என்று கேட்டது. சத்தியவிரதனும் அதனை வணங்கி "மச்சாவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவே! ஏதோ நீங்கள் புகலிடம் கேட்பது போலக் கேட்டு என்னை உய்விக்க வந்திருக்கிறீர்கள். இந்த மாதிரியான உங்களது லீலாவினோதங்களைப் புரிந்து கொள்ளும் சக்தி என் போன்ற அற்பர்களுக்கு ஏது! எனக்காக மச்சாவதாரம் எடுத்தீர்களே" என்றான் பணிவுடன்.
 
அப்போது மச்சாவதாரம் எடுத்த மகாவிஷ்ணு "மன்னனே! ஏழு நாட்கள் பிரளய காலமாக இருக்கப் போகிறது, அதில் எல்லாமே அழியக் கூடும். அரிய மருந்துகளும் விதைகளும் அழியக் கூடாது. அவை அழிந்தால் எதிர் காலம் ஏது? எனவே இவை காப்பாற்றப்பட வேண்டும். உனக்காக ஒரு கப்பல் விளக்கொளியுடன் அந்த இருட்டிலும் வரும். அதில் சப்தரிஷிகள் இருப்பார்கள்.
 
அந்த ஒளி அவர்களிடமிருந்து வெளிப்படுவதே. மருந்துகளையும் விதைகளையும் எடுத்துக் கொண்டு போய் அந்தக் கப்பலில் ஏற்று. நீயும் அதில் ஏறிக்கொள். அந்தக் கப்பல் ஆடி முழுகி விடாமல் நான் காப்பாற்றுகிறேன். அதற்காகத் தான் நான் இந்த மச்சாவதாரத்தை எடுத்திருக்கிறேன். பிரம்மதேவன் கண் திறக்கும் வரை அந்தக் கப்பல் கடலில் போய்க் கொண்டே இருக்கும். இந்த கல்பகாலத்தில் நீ வைவஸ்வதன் என்ற மனுவாக இருப்பாய்" என்றார்.
 
சத்தியவிரதனும் பயபக்தியுடன் விஷ்ணுவைத் துதித்தவாறே நின்றான். மகாவிஷ்ணு உருவெடுத்த மீன் இறக்கைகள் கொண்டதாய் வாலை ஆட்டியவாறே கிர்'ரென உயரக் கிளம்பி ஆகாயத்தில் சென்று கீழே பாய்ந்து சமுத்திரத்தில் குதித்தது. அந்த சமயத்தில் பிரம்மா தூக்கத்திலிருந்து கண் விழித்தார். பிரளயகாலம் வந்து எங்கும் ஒரே இருட்டாக இருந்தது. ஹயக்கிŽவன் எனப்படும் சோமகாசுரன் பாதாளத்திலிருந்து கடல் மேல் மட்டத்திற்கு வந்து வௌவால் போல பிரம்மாவின் சத்தியலோகத்தை நோக்கிப் பாய்ந்தான்.
 
பிரம்மா கண் விழித்ததும் அவரது நான்கு முகங்களிலிருந்தும் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நான்கு நிற ஒளிகள் வீசி நான்கு வேதங்களாக மாறின. ஹயக்கிரீவன் பிரம்மாவின் பக்கம் விழுந்து கிடந்த அந்த நான்கு வேதங்களையும் கவர்ந்து கொண்டு சமுத்திரத்தின் அடியே பாறைகளுக்கிடையே கொண்டு போய் ஒளித்து வைத்தான்.
 
சோமகாசுரன் தேவர்களின் கடும் பகைவன். வேதங்கள் இல்லாவிட்டால் பிரம்மாவின் படைப்புத் தொழில் நடைபெறாது. அந்த வேதங்களைக்காக்க வந்த விஷ்ணுவின் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்றே ஹயக்கிரீவன் அவ்வாறு செய்தான்.
 
பிரளயம் ஏற்பட்டு கடல் பொங்கி நிலப்பரப்பையே மூழ்க வைக்கலாயிற்று. அப்போது சத்திய விரதன் எதிர்பார்த்த கப்பல் ஒளி அவனிருந்த இடத்திலிருந்து வெகு தூரத்தில் நட்சத்திரம் போலத் தெரிந்தது. அது வர வரப் பெரியதாகி சத்தியவிரதனை நோக்கி வந்து கொண்டிருந்தது சப்தரிஷிகளின் ஒளிதான் அது.
 
விஷ்ணுவின் திருநாமத்தை ஜபித்தவாறே மருந்துகளையும் தானிய விதைகளையும் அருகே வந்த அக்கப்பலில் ஏற்றி சத்திய விரதன் அதில் தானும் ஏறிக் கொண்டான். மச்சாவதாரமாக வந்த மீன் அக்கப்பலைத் தன் பக்க முட்களால் கொம்பு போல முட்டுக் கொடுத்தது. அதில் மிகப் பெரிய முள் கொம்பு போல நீண்டு இருக்க அதனைச் சுற்றி இருந்த மாபெரும் பாம்பு கப்பலைக் கயறு கொண்டு கட்டுவது போலச் சுற்றிக் கொண்டது. அது தன் படத்தை விரித்து வேகமான காற்று கப்பல் மீது படாமல் தடுத்தது. மீனோ பலமாகத் துள்ளி கப்பலை வேகமாகச் செலுத்தியது. 
 
துருவ நட்சத்திர திக்கில் கப்பல் வட துருவத்தை நோக்கி வேகமாகச் சென்றது. சமுத்திரத்தின் அடியில் வேதங்களை ஒளித்து வைத்த சோமகாசுரன் அதற்குக் காவலாக இருந்தான். நான்கு வேதங்களும் நான்கு குழந்தைகளாக மாறி ‘குவா', ‘குவா'வென அழத் தொடங்கின. மச்சாவதாரம் எடுத்த மகாவிஷ்ணு அந்த நான்கு வேதங்களைத் தேடிக் கொண்டு சென்றார்.
 
மாபெரும் மீன் ஒன்று வருவது கண்டு முதலில் பயந்து போன சோமகாசூரன் சட்டெனத் தன் கதையைத் தூக்கிக் கொண்டு அதனை எதிர்க்கலானான். மீன் உருவிலிருந்த மகாவிஷ்ணு இடுப்பு வரை மீனாகவும் அதற்கு மேல் நான்கு கைகளைக் கொண்டவராயும் ஆனார். மச்ச மூர்த்தியான விஷ்ணுவிற்கும் சோமகாசுரனுக்கும் கடும் போர் மூண்டது. சோமகாசுரன் கடலடியே ஓடிப் பதுங்க முயன்றான். ஆனால் விஷ்ணுவின் சக்கராயுதம் அவனைத் துரத்தி அடித்து சுக்கல் சுக்கலாக நறுக்கியது. அவன் அழிந்த பிறகு மகாவிஷ்ணு குழந்தைகளாக இருந்த நான்கு வேதங்களை எடுத்துக் கொண்டு கடல் மட்டத்திற்கு மேல் வந்தார்.
 
விஷ்ணுவின் மச்சாவதாரத்தைக் கண்ட சத்திய விரதனும் மாபெரும் பாம்பும் ஆனந்தக் கண்ணீர் சொரிந்து கை கூப்பி மெய் மறந்து அவரைத் துதி செய்தார்கள். பிரளய வேகம் தணிந்து கடல் அமைதியாகி நிலப் பரப்பு தெரிந்தது. கப்பலும் அது நிற்க வேண்டிய இடத்தைப் போய் அடைந்தது.
 
பிரம்மாவிற்குப் பகலும் இரவும் ஒரே அளவு கொண்டதுதான். அவர் தூங்கி முடிக்கும் காலம் முடிந்தது. விடியும் வேளை வந்து ஒளி விட்டு புதிய கல்பம் ஆரம்பமாகியது. சரஸ்வதிதேவி தன் வீணையில் பூபாளராகம் வாசித்தாள். பிரம்மா கண் விழித்துப் பார்த்தார். வேதங்கள் காணப்படவில்லை. என்ன செய்வது என அவர் திகைத்துப் போனார். அப்போது விஷ்ணு வந்து அவரிடம் வேதங்களை ஒப்படைத்தார்.
 
பிரம்மா மகாவிஷ்ணுவின் மச்சாவதார ரூபம் கண்டு கை கூப்பி "நாராயணா! உங்கள் மச்சாவதார ரூபத்தை தியானம் செய்பவர்களுக்கு ஆபத்துகள் நீங்கி அஞ்ஞானம் அழிந்து, ஞான ஒளி தோன்றும்" எனக் கூறித் துதி செய்தார். 
 
மச்சாவதாரம் எடுத்த நோக்கம் முடிவடைந்ததால் மகாவிஷ்ணு மறைந்து தன் வைகுண்ட வோகத்தை அடைந்தார். பிரம்மா வேதங்களை அடைந்த பின் தம் சிருஷ்டித் தொழிலில் ஈடுபட்டார். புதிய கல்ப காலத்தில் விவஸ்வந்தன் என்ற பெயரோடு உதயமான சூரியதேவனின் புதல்வனாக சத்திய விரதன் பிறந்து வைவஸ்வதமனு என்ற பெயர் பெற்றான்.
 
சப்தரிஷிகள் ஆகாயத்தில் சென்று ஒரு மண்டலமாகி துருவ நட்சத்திரத்தைச் சுற்றி வரலாயினர். இவ்வாறு சூதர் கூறவே முனிவர்கள் "அந்த துருவனின் வரலாற்றைக் கூறுங்கள்" எனக் வேண்டினார்கள். சூதரும் துருவ சரிதத்தைத் தொடங்கினார். சப்த உலகங்களின் மிக உயர்ந்த இடம் துருவ மண்டலம்.
 
அது தான் மகாவிஷ்ணுவின் சிரம் இருக்கும் இடமும். அவரது தலை மீது இருந்து ஒளி விடும் பாக்கியம் பெற்ற துருவன் சிறுவனாக இருக்கும்போது உத்தான பாதன் என்ற மன்னனின் மகனாகப் பிறந்தான். துருவனின் தாயார் சுநீதி உத்தான பாதனின் முதல் மனைவி. சுருசி இளைய மனைவி. மன்னனுக்கு சுருசியின் மீதுதான் மிகவும் பிரியம்.
 
ஒரு நாள் உத்தானபாதன் சுருசியின் மகனான உத்தமனைத் தன் மடி மீது உட்கார வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த துருவன் மன்னனின் மடி மீது உட்காரப் போனான். அப்போது சுருசி அங்கே இருந்தாள் அவளுக்கு துருவனைக் கண்டால் பிடிக்காது.
 
அவள் துருவனைத் தடுத்து "அதிர்ஷ்டம் இல்லாதவர்களுக்குப் பிறந்தால் இப்படிப்பட்ட உயர்ந்த இடம் எல்லாம் கிடைக்காது. நீ என்ன தவம் செய்தாலும் என் மகனுக்குச் சமமாக உன் தந்தையின் மடிமீது அமர முடியாது. நீ என் வயிற்றில் பிறந்தவனாக இருந்தால்தான் இந்த அதிர்ஷ்டம் கிட்டும். நீ தான் நாராயணனை பக்தியுடன் வழிபடுகிறாயே. அவரிடம் வேண்டிப் பார்" என்றாள். துருவனின் மனம் வேதனைப்பட்டது. ஆனால் சிற்றன்னை நாராயணனை வேண்டிப் பார் என்று கூறியது அவன் மனதில் நன்கு பதிந்து விட்டது.
 
அவன் சுருசியை வணங்கி அங்கிருந்து போய்விட்டான். உத்தானபாதன் எதுவுமே பேசாது கற்சிலை போல இருந்தான். சுருசியும் "பையன் நல்லவன்தான். என்ன கடுஞ்சொல் கூறினாலும் அமைதியுடன் போகிறானே ஓ! நான் அவன் தாயைவிட உயர்ந்தவள் என்பதை உணர்ந்துவிட்டான் போலிருக்கிறது" என்றாள்.
 
கண்ணீர் உகுத்தவாறே வந்த துருவனைக் கண்டு சுநீதி நடந்ததை அறிந்து கொண்டாள். அவள் "ஆமாம் துருவா! வேலைக்காரியை விடக் கேவலமாகக் கருதப்படும் என் வயிற்றில் நீ பிறந்தது உனது துருதிஷ்டம்தான். நமக்கு அந்த நாராயணனே வழி காட்ட வேண்டும். உன் சிற்றன்னை கூறியது ரொம்பவும் சரி" என்றாள்.
 
அப்போது துருவன் "அப்படியானால் நான் நாராயணனான விஷ்ணு பகவானைக் குறித்துத் தவம் செய்கிறேன். எனக்கு உயர்ந்த இடமாக அவர் அளிப்பார். நான் ஏன் இன்னொருத்தியின் பிள்ளையாகப் பிறக்க வேண்டும்? என்னைப் பெற்ற நீ எவ்வளவு பாக்கியசாலி என உலகமே போற்றும்படிச் செய்கிறேன்.
 
இதற்காக நான் விஷ்ணுவைக் குறித்து தவம் செய்து வரம் கேட்கிறேன்" என்றான். அவனது தாய் என்ன சொல்லியும் கேளாமல் துருவன் தவம் செய்யக் கிளம்பிவிட்டான். வழியில் நாரதர் அவனைக் கண்டு அவன் தவம் செய்யப் போவது கேட்டு "துருவா, அது மிகவும் கடினமானது.
 
நீ உன் தந்தையின் மடிமீது தானே அமர வேண்டும்? என்னோடு வா. நான் சொல்லி அவர் மடியில் உன்னை உட்கார வைக்கிறேன்" என்றார். துருவனோ "வேண்டாம். எனக்கு மகாவிஷ்ணுவின் அருள் கிடைத்தாலே போதும். வேறு யார் தயவும் வேண்டாம். நான் தவம் செய்தே ஆக வேண்டும்" என உறுதியுடன் கூறினான்.
 
நாரதரும் "துருவா! நீயோ சிறுவன். தவம் செய்வது என்பது விளையாட்டல்ல. காட்டில் தனியாக இருக்கும் உன்னை சிங்கம், புலி, கரடி, போன்ற மிருகங்கள் அடித்துக் கொன்றுவிடுமே. மழை, வெயில், பனி என்றெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டுமே. இந்தக் கஷ்டம் எல்லாம் உனக்கு எதற்கு? நான் சொல்வதைக் கேள். பேசாமல் என்னோடு வா.
 
உன் தந்தையிடம் சமாதானமாகச் சொல்லி உன் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்" என்றார். நாரதமுனிவர் கூறியதைக் கேட்ட துருவன் "முனிபுங்கவரே! நான் ஷத்திரியன். தோல்வி அடைய விரும்பாதவன். எதற்கும் பயப்படாதவன். எனவே கொடிய மிருகங்கள் எனக் கூறி என்னை பயமுறுத்தப் பார்க்கிறீர்களா? நான் பயந்து பின் வாங்க மாட்டேன்" என்றான்.
 
நாரதரும் "துருவா! பேஷ்! நீ எப்படிப்பட்டவன் என்பதை அறியவே இப்படியெல்லாம் சொல்லிப் பார்த்தேன். உன் உறுதியைக் குலைக்க முடியாதுதான். நானும் சிறு வயதில் அவமானப்பட்டு உன்னைப் போலக் காட்டிற்குப் போய்த் தவம் புரிந்தவன்தான். நீ மதுவனத்திற்குப் போய் தவம் செய். நமோ நாராயணா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே இரு. நீ உன் முயற்சியில் வெற்றி அடைவாய்." எனக் கூறி அவனை ஆசீர்வதித்தார்.
 
சூதர் அவ்வாறு சொன்னதும் முனிவர்கள் "நாரதரும் கஷ்டப் பட்டு அவமானப்பட்டாரா? ஏன்? அது பற்றிக் கேட்க ஆவலாக இருக்கிறோம். கூறுங்கள்" என வேண்டினார்கள்.
 

0 comments:

Post a Comment