மகாவிஷ்ணு - 1

 
பால் கடலில் உள்ள மூன்று மலைச் சிகரங்கள் தங்கம், வெள்ளி, இரும்பால் ஆனவை. இந்த மலைகளினிடையே அடர்ந்து வளர்ந்த மரங்கள் இருந்தன. அந்தக் காட்டில் கஜேந்திரன் என்ற யானை தன் மனைவிகளான பல பெண் யானைகளுடன் வாழ்ந்து வந்தது. ஒரு முறை அது தாகம் தீர்த்துக் கொள்ள மற்ற யானைகளுடன் அக்காட்டில் இருந்த பெரிய குளத்திற்குச் சென்றது.
 
குளத்தின் தெள்ளத் தெளிய நீரைக் குடித்தபின் அது தண்ணீரில் குளிக்க ஆசைப்பட்டுத் தன் மனைவிகளான பெண் யானைகளோடு தண்ணீரில் இறங்கிவிட்டது. குளத்து நீரைக் கலக்கி அது தன் மனைவிகளோடு ஜலக்கிரீடை செய்ய ஆரம்பித்தது. அப்போது அக்குளத்தில் வாழ்ந்து வந்த பயங்கர முதலை அதன் காலைப் பலமாகப் பிடித்துக் கொண்டது.
 
கஜேந்திரன் வலி பொறுக்க முடியாமல் அலறியது. அது கேட்டு மற்ற யானைகள் பயந்து கரைக்கு ஓடி விட்டன. அவற்றிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கண்ணீர் உகுத்து நின்றன.
 
கஜேந்திரனோ முதலையின் பிடிப்பிலிருந்து தப்ப முயன்றது. காலை இழுத்தது. அப்படியும் இப்படியும் ஆடிப் பார்த்தது. ஆனால் எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. முதலையின் பிடிப்பு மேலும் பலமாகவே கஜேந்திரன் தன் தந்தத்தால் அதனைக் குத்த முயன்றது. முதலையோ துள்ளிக் குதித்து யானை மீது விழுந்து அதனை படுகாயப்படுத்தியது ஆனாலும் தன் பிடிப்பை விடவில்லை.
கஜேந்திரனின் உடலில் இருந்து இரத்தம் வெளிப்பட்டு ஒழுகலாயிற்று. அப்போதும் அது முதலையை பயமுறுத்திப் பார்த்தது. ஆனால் முதலை அதன் காலை மேலும் பலமாகக் கடிக்கலாயிற்று.
 
கஜேந்திரன் முதலையைத் தன் மற்ற காலால் மிதிக்க முயன்றது. ஆனால் முதலையோ அதனை குளத்தின் நடுவே இழுத்துச் செல்லலாயிற்று. கஜேந்திரன் திமிறி அதனிடமிருந்து தப்ப முயல, முதலை அதன் காலை தன் பற்களால் இறுகப் பற்றி இழுக்க, இப்படியாகந் போராட்டம் வெகு காலம்வரை நடந்து கொண்டே இருந்தது.
 
கஜேந்திரன் தன்னம்பிக்கையோடு போராடலாயிற்று. தன்னால் முடியாமலா போய்விடப் போகிறது என்று கர்வத்தோடு முதலையைத் தாக்க முயன்றது. ஆனால் அதன் சக்தி குறைந்து கொண்டே போகலாயிற்று. முதலைக்கோ நீரில் இருக்க இருக்க பலம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
 
அப்போது தான் கஜேந்திரன் மனதில் "அடடா! குளத்தில் தண்ணீர் குடித்து தாகத்தைக் தணித்துக் கொள்ளத்தானே வந்தேன். இதில் இறங்கி ஜலக்கிŽடை செய்யாமல் இருந்திருந்தால் இப்படிப்பட்ட ஆபத்தில் அகப்பட்டிருக்க வேண்டாமே. என் அறிவீனத்தால் வந்த வினை
 
இது" எனக் காலம் கடந்து எண்ணி வருந்தியது. அப்போது தான் அதற்குத் தனக்கும் மேலான சக்தி ஒன்று இருக்கிறது என்பது நினைவிற்கு வந்தது. "இனி என்னைக் காப்பாற்ற யார் இருக்கிறார்கள்? தெய்வமே! நீதான் இனி எனக்குத் துணை. உன்னையல்லால் வேறு கதி எனக்கு இல்லை" என எண்ணியது.
 
"கடவுளே! பகவானே!! ஆதிமூலமே!! அண்ட சராசங்களின் ஆதிகர்த்தா நீயே! என்னைப் போன்ற மதி இழந்தவர்களைக் காக்க நீதான் தக்க தருணத்தில் வருகிறாய். மேலும் கஷ்ட காலத்தில் தான் ஒருவனுக்கு உன்னைப் பற்றிய நினைவே வருகிறது. அதற்கு முன் என்னைப் போல தான் என்ற கர்வத்தில் மூழ்கிக் கிடக்கிறான். கஷ்டம் வரும் போதுதான் கண் திறக்கிறது" என கஜேந்திரன் எண்ணமிட்டுக் கொண்டு இருந்தது.
 
இந்த விதமாக அது கடவுளைப் பற்றி நினைக்க ஆரம்பித்ததுமே முதலைக் கடியால் ஏற்பட்டு வந்த வலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறையலாயிற்று. அப்போது யானை "ஆதிமூலமே! அநாதை ரட்சகா! சகலஜீவராசிகளின் துயர் துடைப்பவன் நீ! இவ்வுலகையே படைத்துக் காப்பவன் நீ! எனவே உன்னையே நம்பி உன் பாதம் சரண் அடந்துள்ள என்னைக் காக்க வேண்டும்" எனத் துதிக்கலாயிற்று.
 
பின்னர் அது "சர்வேஸ்வரா! என் சக்தி குறைந்து கொண்டே போகிறது. இன்னும் சற்று நேரத்தில் பேசும் சக்தியைக் கூட இழந்து விடுவேன் போலிருக்கிறது. உன்னை எவ்வாறு துதி செய்ய முடியும்? என் உடலும் தளர்ந்து கொண்டே போகிறது. நினைவு இழந்து கீழே விழுந்து விடுவேனோ என்றுகூட நான் அஞ்சுகிறேன். என்னை நீ காப்பாயோ அல்லது கை விடுவாயோ எல்லாம் உன் பொறுப்பில் விட்டுவிடுகிறேன். உன்னை விட்டால் என் மீது அக்கறை கொள்பவர் யார் இருக்கிறார்கள்?" என்று கூறித் தன் துதிக்கையை உயரத்தூக்கி மேலுலகில் உள்ள பெருமானைக் கூப்பிடுவது போலச் சைகை செய்தது.
 
அப்போது முதலையின் பலம் மேலும் குறைந்துவிட்டது போலவும் அதன் பிடிப்பு முன் போல இறுக்கமாக இல்லை என்பதனையும் கஜேந்திரன் உணர்ந்தது. ஆனால் ஆட அசைய முடியவில்லை. கண்களை மூடிக்கொண்டு எதுவும் செய்ய முடியாது அது நின்றது.
 
அதன் கூக்குரல் விஷ்ணுவின் காதில் விழுந்துவிட்டது. அவரும் ஓடோடி வந்தார். ஆகாய முழுவதுமே அவர் அடைத்து நின்றது போலவும் கஜேந்திரன் உணர்ந்தது. விஷ்ணு தன் சக்கராயுதத்தை விட்டு தன் கையால் அபயக் குறியை கஜேந்திரனுக்குக் காட்டினார்.
 
வேகமாகச் சுழன்று வந்த சக்கர ஆயுதம் நீரில் பாய்ந்து முதலையின் தலையை வெட்டித் துண்டாக்கியது. ஆனால் என்ன ஆச்சரியம்! அந்த முதலை ஒரு கந்தர்வனாக மாறியது. விஷ்ணுவை வணங்கி அவன் நின்றான் அவன் முன் பிறப்பில் தேவலர் என்ற மகரிஷி நீரில் நின்று ஜபம் செய்து கொண்டிருந்த போது நீரில் நுழைந்து அவரது கால்களைப் பிடித்தானாம்.
 
அதனால் ஜெபம் கலையவே ரிஷி கோபம் கொண்டு அவனை நீரில் வாழும் முதலையாகப் பிறக்கும்படி சபித்துவிட்டார். அவன் பயந்து அவரிடம் சாப விமோசனத்தைக் கேட்கவே அவரும் கோபம் தணிந்து விஷ்ணுவின் சக்கராயுதம் அவன் மீது பட்டதும் கந்தர்வனாகி விடுவான் எனக் கூறினார்.
 
முதலையிடமிருந்து விடுபட்ட கஜேந்திரனை அவர் கரை சேர்ப்பித்து அதன் உயர்ந்த நேற்றியைத் தம் திருக்கையால் தடவிக் கொடுத்தார். கஜேந்திரன் இழந்த சக்தியைப் பெற்றான். அவனது களைப்பு அகன்றது. திருமாலின் திருக்கைப் பட்டதும் கஜேந்திரனுக்குப் புதிய சக்தியே பிறந்தது! அது மட்டுமல்ல, அதற்குத் தன் முன் பிறப்பைப் பற்றிய முழு விவரமும் தெரிந்தது.
 
கஜேந்திரன் முன் பிறப்பில் இந்திரத்யும்னன் என்ற மன்னனாக இருந்தவன். அவன் விஷ்ணு பக்தன். ஒரு முறை அவன் விஷ்ணுவின் தியானத்தில் மூழ்கி இருந்தபோது அவனைக் காண அகத்திய முனிவர் வந்திருந்தார். தன்னை மன்னன் சரியாகக் கவனியாதது கண்டு அவர் கோபம் கொண்டு அவனை ஒரு யானையாகப் பிறக்கும்படிச் சபித்துவிட்டார். அந்த மன்னன் தான் கஜேந்திரனாகப் பிறந்திருந்தான். அவன் பின்னர் முதலையிலிருந்து விடுவிக்கப்பட்டு மகா விஷ்ணுவின் அருளால் மோட்சம் அடைந்தான்.
 
இந்த கஜேந்திரன் மோட்சக் கதையை சூத மகர முனிவர் நைமிசாரண்ய வனத்தில் சௌனகர் முதலிய முனிவர்களுக்குக் கூறினார். அதைக் கேட்ட அவர்கள் "ஆகா! இது சகல ஜீவராசிகளுக்கும் நீதி புகட்டும் கதை. விஷ்ணுவைச் சரணடைந்தவர்களுக்கு எவ்விதப் பயமும் இல்லை என இது தெளிவாக விளக்குகிறது" என்றார்கள்.
 
சூதரும் "ஆமாம். அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதையும் அவனை நம்பினோர் கெட்டதில்லை என்பதையும் உலகுக்கு எடுத்துக் காட்டுகிறது" என்றார். அப்போது முனிவர்கள் "இந்த கஜேந்திர மோட்சக் கதையிலிருந்து ஆதிமூலமாகிய மகாவிஷ்ணு உலகைப் படைத்து காத்து வருகிறார் என்பது புலனாகிறது. எனவே மகா விஷ்ணுவின் புனித சரிதத்தைக் கேட்க விரும்புகிறோம். எனவே நீங்கள் அவரது சரிதத்தைக் கூறுங்கள்.
 
நாங்கள் கேட்டு புண்ணிய பலன் அடைகிறோம்" என்றார்கள். சூதரும் "ஆகா! வியாசர் பகவானின் லீலைகளையெல்லாம் பாகவதம் என்ற வடிவில் தம் மகனான சுகருக்குக் கூறினார். அதனை சுகரிடமிருந்து பரீட்சித்து மன்னன் கேட்டு அறிந்தான். கஜேந்திரனைக் காக்க வந்ததை விஷ்ணுவின் ஆதி அவதாரம் என்றும் கூறுவார்கள். விஷ்ணு பல அவதாரங்கள் எடுத்தார். அவற்றுள் தசாவதாரம் எனப்படும் பத்து அவதாரங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
 
நாராயணன் என்ற சொல்லிற்கு நீரில் வசிப்பவன் என்றும் நரர் களின்அதிபன் என்றும் பொருள் கூறுவார்கள். மகாவிஷ்ணு நீரைச் சிருஷ்டிக்க, ஜீவராசிகளில் முதலில் மீனினம் தோன்றியது. எனவே அவரும் மீனாகி மச்சாவதாரம் எடுத்தார். மகாவிஷ்ணு பால் கடலில் சேஷனைப் படுக்கையாகக் கொண்டு இருந்தார்.
 
சேஷன் பாம்பின் உருவில் ஆயிரம் தலைகளை கொண்டு இருந்தான் மகாவிஷ்ணுவின் தொப்புளில் இருந்து தோன்றிய தாமரையில்தான் பிரம்மா தோன்றினார். அவர்தான் எல்லா ஜீவராசிகளையும் படைக்கும் தொழிலை மேற் கொண்டார். ஒருமுறை சத்திய விரதர் என்ற ராஜரிஷி நதியில் குளித்து நாராயணனுக்கு அர்க்கியம் விடத் தண்ணீரை அள்ளினர்.
 
அப்போது அவரது உள்ளங்கை நீரில் தங்க நிறத்தில் ஒரு சிறிய மீன் குஞ்சு வந்தது. சத்தியவிரதர் அதனை நீரில் போடப் போனார். அப்போது அது "அரசே! எங்கள் மீனினம் பொல்லாதது. சிறிய மீன்களைப் பெரிய மீன்கள் விழுங்கிவிடும். ஒரு வேளை ஒரு சிறிய மீன் அவைகளுக்கு அகப்படாது தப்பினாலும் யாராவது ஒரு மீனவனின் வலையில் அகப்பட்டாக வேண்டும். இந்த ஆபத்துகளிலிருந்து தப்பவே நான் உங்களது உள்ளங்கைத் தண்ணீருக்குள் வந்தேன். என்னை மறுபடியும் நீரில் விட்டு விடாதீர்கள்" எனக் கெஞ்சிக் கேட்டது.
 
சத்தியவிரதர் அந்த மீன் குஞ்சை தன் கமண்டலத்து நீரில் போட்டு எடுத்துக் கொண்டு தலை நகருக்குச் சென்றார். அவர் மன்னராக இருந்தும் தவம் செய்து விஷ்ணு பக்தராக விளங்குபவர். சிறந்த அறிவாளி. கமண்டலத்தில் விடப்பட்ட மீன் குஞ்சு மறுநாளே வளர்ந்து பெரிதாகிவிட்டது. அது கண்டு மன்னர் அதனை பெரிய நீர்த் தொட்டியில் விட்டார். அதற்கு அடுத்த நாள் அது மேலும் பெரிதாகிவிடவே தன் பூங்காவின் குளத்தில் விட்டார். அது இன்னமும் பெரிதாகவே மன்னர் அதனை ஒரு ஏரியில் கொண்டு போய் விட்டார். அது மேலும் பெரிதாகவே மன்னர் அதனை கடலில் கொண்டு போய் விட்டார்.
 
அப்போது அந்த மீன் "ராஜ ரிஷியே! உன்னிடம் சரண்புகுந்த என்னை இப்படிக் கடலில் விடுவது நியாயமா? முதலையோ திமிங்கலமோ வந்து என்னை விழுங்கிவிடுமே" என்றது. சத்திய விரதரும் "நீ நாள் தோறும் வளர்ந்து இப்போது மிகப் பெரிய மீனாகிவிட்டாய். உன்னை வேறு எங்கே விடுவது? இவ்வளவு பெரிதான உன்னை எதனால் விழுங்க முடியும்? முடியவே முடியாதுதானே? அதனால் பயப்படவே வேண்டாம்" எனக் கூறினார்.
 

0 comments:

Post a Comment