ஆரண்ய காண்டம் - 3

 
பஞ்சவடியில் பர்ணசாலையை அமைத்துக் கொண்டு இராமர், சீதை, இலட்சுமணர் ஆகிய மூவரும் சுகமாக வாழ்ந்து வரலாயினர். காலம் கழிந்தது. குளிர்காலம் வந்தது. ஒருநாள் அதிகாலையில் மூவரும் கோதாவரி நதியில் குளிக்கச் சென்றனர்.
 
அப்போது இலட்சுமணன் "ஆகா. பரதனைப் போன்ற நல்ல மனிதன் எங்கே இருக்கிறான்? இப்பேர்ப்பட்ட மாணிக்கம் கைகேயி போன்ற கிராதகியின் வயிற்றில் ஜனித்ததே" எனக் கூறி கைகேயியின் மீதிருந்த தன் வெறுப்பை அந்த சமயம் மீண்டும் வெளிப்படுத்தினான்.
 
அப்போது இராமர் "தம்பி, நீ கைகேயியைப் பற்றி ஒன்றும் கூறாதே. பரதனைப் பற்றி பேசு. மீண்டும் நாம் நால்வரும் ஒன்று கூடும் நாளே நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நாள்" என்றார். மூவரும் நதியில் குளித்துவிட்டுத் தம் குடிலுக்குத் திரும்பி அன்றாடம் செய்யும் கடமைகளைச் செய்தனர்.
 
அச்சமயம் அங்கு ராட்சசப் பெண் ஒருத்தி வந்தாள். அவள் இலங்கையின் மன்னன் இராவணனுடைய தங்கை சூர்ப்பணகை. அவளது முகம் விகாரமாயிருந்தது. பெரிய வயிறு. செம்பட்டை மயிர். குரலோ கேட்போரை நடுநடுங்க வைக்கும். அவள் இராமரைக் கண்டு அவரது அழகில் மயங்கி அவரை அணுகினாள்.
அவள் அவரிடம் "முனிவரைப் போல வேடம் தரித்திருந்தாலும் உங்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன. மனைவிவேறு இருக்கிறாள். நீங்கள் எதற்காக எங்கள் நாட்டிற்குள் அடி எடுத்து வைத்தீர்கள்?" என்று கேட்டாள்.
 
அப்போது இராமர் தாம் காட்டிற்கு வர வேண்டிய காரணத்தை அவளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். சீதையைப் பற்றியும் அவளிடம் கூறி "ஆமாம். எங்களைப் பற்றியே நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேனே. நீ யார்? உன்னைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லையே" என்று கேட்டார். அவளும் "என் பெயர் சூர்ப்பணகை நான் விரும்பும் உருவத்தை அடைய முடியும்.
 
என் தனையன் இராவணன். இலங்கையின் மன்னன். கும்பகர்ணனும் விபீஷணனும் என் சகோதரர்களே. கரனும் தூஷணனும் என் சகோதரர்கள். நான் இந்தக் காட்டிலேயேதான் வசிக்கிறேன். உங்களைப் பார்த்ததும் என் மனம் உங்களிடம் லயித்து விட்டது. உங்களையே விவாகம் செய்து கொண்டு விடுகிறேன். இந்த சீதையை விட்டுவிடுங்கள். அவள் அழகாகக்கூட இல்லை. என் அழகிற்குமுன் அவள் அழகு எம்மாத்திரம்?" என்றாள்.
 
அப்போது இராமர் "எனக்கு ஏற்கெனவே மனைவி இருப்பதால் உன்னை நான் எப்படி மணந்து கொள்வது? நீயோ உயர் வம்சத்துப் பெண். இதோ என் தம்பி இருக்கிறான். அழகும் பலமும் பொருந்தியவன். அவன் இக்காட்டில் தனியாகவே இருக்கிறான். தன் மனைவியைக் கூட அழைத்து வரவில்லை. எனவே நீ இவனை மணந்து கொள்" என்று வேடிக்கையாகவே கூறினார்.
 
சூர்ப்பணகை அதை உண்மையாகக் கொண்டு இலட்சுமணனிடம் போய் தன்னை மணந்து கொள்ளும்படிக் கூறினாள். அவனும் சிரித்துக் கொண்டே "ஆகா! உன் போன்ற அழகியை மணந்து கொள்பவன் உனக்கு அடிமையாகி வேலைக்காரன் போல இருப்பான். நான் உன்னை மணந்து கொண்டாலும் அப்படித் தானே ஆகிவிடுவேன்! ஒரு வேலைக்காரனின் மனைவி என்று உன்னை எல்லாரும் சொல்வார்கள்.
அதனால் நீ பேசாமல் என் எசமானரும் தமையனாருமான இராமரையே மணந்துகொள்" எனக்கூறி இராமரிடம் போகச் சொன்னான். இம்மாதிரி சூர்ப்பணகை இரண்டு மூன்று தடவை இராமரிடமும் இலட்சுமணனிடமுமாக அலைந்து அலைந்து பார்த்தாள். அவளுக்கு முடிவில் கோபம் வந்தது "இந்த சீதை இருப்பதால் தானே இராமர் என்னை விவாகம் செய்து கொள்ள மறுக்கிறார்.
 
அவளைக் கொன்று இப்போதே சாப்பிட்டு விடுகிறேன். அதன் பிறகு நான் இராமரைத் திருமணம் செய்து கொள்கிறேன்" எனக் கூறி சீதையின் மீது அவள் பாய்ந்தாள். அப்போது இராமர் இலட்சுமணனிடம் "பார்த்தாயா நாம் வேடிக்கையாகப் பேசியது எப்படி வினையாக முடிந்து விட்டதென்று? இனி சீதைக்கு எவ்வித ஆபத்தும் நேரிடாமல் பார்" என்றார். இலட்சுமணனும் இராமரருகே இருந்த கத்தியை எடுத்து சூர்ப்பணகையைப் பிடித்து அவளது மூக்கையும் காதுகளையும் அறுத்துத் தள்ளினான்.
 
சூர்ப்பணகையோ பயங்கரமாகக் கத்திக் கூச்சல் போட்டவாறே தன் சகோதரனான கரன் இருக்கும் இடத்திற்கு ஓடினாள். அவன் பல அரக்கர்களோடு பேசிக் கொண்டு இருந்தான். தன் சகோதரியின் நிலையைக் கண்டதும் அவன் கோபத்தோடு "உன்னை யார் இப்படி அவமானம் செய்தது? அவன் இனியும் உயிரோடு இருப்பதா? நான் போய் அவனை ஒழிக்கிறேன். அவன் எங்கே இருக்கிறான் சொல்" என்று கேட்டான்.
 
அப்போது சூர்ப்பணகை அவனிடம் இராமரையும் சீதையையும் இலட்சுமணனையும் பற்றி விவரமாகக்கூறி "நீ அந்த மூன்று பேர்களையும் கொன்று அவர்களது ரத்தத்தை எனக்கு கொடுத்தாலே அதைக் குடித்து மனம் நிம்மதி பெறுவேன்" என்றாள்.
உடனே கரன் தனது ஆட்களில் பதிநான்கு பேர்களைத் தேர்ந்தெடுத்து "நீங்கள் போய் சூர்ப்பணகை கூறியபடியுள்ள அந்த மூவரையும் பிடித்துக் கொன்று அவர்களது இரத்தத்தைக் கொண்டு வாருங்கள்" என்று கட்டளைஇட்டான். அவர்களும் சூர்ப்பணகையை அழைத்துக்கொண்டு இராமர் இருக்கும் பர்ணசாலைக்கு வந்து சேர்ந்தனர்.
 
சூர்ப்பணகையும் "அதோ இருக்கிறார்கள் அம்மூவரும்" எனக் காட்டவே அவர்கள் தாக்குதலுக்குத் தயாராயினர். அதைக் கண்ட இராமர் "தம்பி, நீ சீதையைப் பார்த்துக் கொள். நான் இவர்களை அடித்து வீழ்த்துகிறேன்" எனக் கூறினார்.
 
அவர் அந்த அரக்கர்களின் முன் நின்று "நீங்களெல்லாம் ஏன் இந்த ஆசிரமப் பகுதிக்கு வந்தீர்கள்? இந்த மாதிரி முனிவர்களைத் துன்புறுத்தும் அரக்கர்களை ஒழிக்கவே என்னுடைய வில்லும் அம்புகளும் உள்ளன. மரியாதையாகப் போய்விடுங்கள். இல்லையேல் என் அம்புகளுக்கு இரையாகிவிடுவீர்கள்" என்றார். அவர்களோ "நீ எங்கள் எசமானராகிய கரனுக்கு கோபத்தை மூட்டி இருக்கிறாய். உன்னையும் உன்னோடு இருக்கும் இருவரையும் கொல்லவே நாங்கள் வந்தோம்" எனக் கூறி தம் கையிலுள்ள வேல்களை இராமர் மீது எறிந்தனர்.
 
இராமரோ அவற்றையெல்லாம் தன் அம்புகளால் தடுத்து அவற்றையே எடுத்துத் தன் வில்லில் வைத்து அந்த அரக்கர்கள் மீது விடுத்தார். அந்தப் பதிநான்கு பேர்வழிகளும் இறந்து வீழ்ந்தனர்.
 
இதைக் கண்டு சூர்ப்பணகை வெலவெலத்துப்போய் ஓடி கரனின் முன் நின்றாள். அவனும் "என்ன? உன் மனம் இப்போது திருப்திஅடைந்ததா?" என்று கேட்டான். சூர்ப்பணகையோ "நீ அனுப்பிய ஆட்களெல்லாம் இறந்து விட்டார்கள். அவர்களையெல்லாம் அந்த இராமன் கொன்று விட்டான். அவன் சாமானியமானவல்ல. அவனும் அவனது தம்பியும் தீர வீரர்கள். அவர்களை நீ பழிக்குப் பழி வாங்கவேண்டும். நீயே போய் அவர்களை ஒழித்துவிடு" என்றாள்.
அதுகேட்டு கரன் "அப்படியா? அந்த இரு பொடிப்பயல்களையும் கொல்வது எனக்கு எம்மாத்திரம்? உனக்கு ஏற்பட்ட அவமானம் எனக்கு ஏற்பட்டது போலத்தானே. இதோ இப்போதே போய் அவர்களை ஒழித்துவிட்டு வருகிறேன்" என்றான்.
 
கரனிடம் பதிநான்காயிரம்பேர்கள் கொண்ட பெருத்த படை இருந்தது. அதன் தலைவன் தூஷணன். கரனும் தூஷணனுமாக இராமனைத் தாக்கக் கிளம்பினர். கரனோடு பனிரெண்டு பேர்களும் தூஷணனோடு நால்வரும் சென்றனர். அவர்களது சேனையும் தயாராகவே இருந்தது.
 
தம்மைத் தாக்க ஒரு பெருத்த படையே வருவது கண்டு இராமர் சீதையையும் இலட்சுமணனையும் ஒரு மறைவிடத்திற்கு அனுப்பினார். பின்னர் அவர் அரக்கர்களை எதிர்க்கத் தயாரானார். அரக்கர்படை ஓவெனக் கத்திக் கொண்டும் கோஷமிட்டுக் கொண்டும் பயங்கர வெள்ளம் போல வரலாயிற்று.
 
அரக்கர்கள் இராமர்மீது ஒரே அம்பு மழையாகப் பொழிந்தனர். இராமர் அவற்றையெல்லாம் தடுத்து முறித்தார். ஆயினும் சில அவரைத் தாக்கி காயப்படுத்தின. ஆனால் அவர் மலை போல அசையாது நின்று தம் அம்புகளால் அரக்கர்களை அடித்து வீழ்த்தலானார். தூஷணனின் தேரோட்டி இறந்து வீழ்ந்தான். குதிரைகள் அடிப்பட்டு வீழ்ந்தன.
 
தூஷணனின் இரு கைகளையும் அவர் வெட்டி வீழ்த்தினார். இவ்விதமாக ஐயாயிரம் பேர்களுக்கு மேல் அழிந்து போயினர். இப்படியாக அவர் தன்னந்தனியாகவே நின்ற மற்ற அரக்கர்களையும் எதிர்க்கலானார். அவர்களும் முடிவில் இறந்து வீழ்ந்தனர். கரனும், திரிசீரன் என்பவனும் மிகுந்திருந்தனர். கரனின் கோபத்திற்கும் ஆத்திரத்திற்கும் எல்லையே இல்லாது போயிற்று. அவன் இராமனைத் தாக்கப் போனான்.
 
அது கண்டு திரிசீரன் "நான் இராமனைத் தாக்குகிறேன். ஒரு வேளை என்னை இராமன் கொன்றால் நீங்கள் அவனைத் தாக்கிக் கொல்லுங்கள்" எனக் கூறி முன் சென்றான்.
 
திரிசீரனுக்கும் இராமருக்கும்இடையே பயங்கரப்போர் நிகழ்ந்தது. அதில் திரிசீரன் தனது தேரோட்டி, கொடி, குதிரைகள் முதலியவற்றை இழந்து அம்பால் அடிப்பட்டுக் கீழே விழுந்தான். இதே சமயம் இராமர் விட்ட மூன்று அம்புகள் அவனது தலையைத் துண்டித்து எங்கோ கொண்டுபோய்த் தள்ளின.
 
அதுகண்டு கரன் இராமரோடு போர் புரியலானான். அவன் புரிந்த போர் மிகவும் பயங்கரமாக இருந்தது. அவரது கவசங்களைத் துளைத்தான். தன் கதையால் இராமரைத் தாக்கினான். அதை இராமரது பாணம் தடுக்க அது பொடிப்பொடியாகி விட்டது. அதைக் கண்டு கரன் ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி இராமர்மீது எறிந்தான். இராமரோ அதனையும் தவிடுபொடியாக்கினார். அடுத்த நிமிடமே அவர் விடுத்த அம்பு ஒன்று கரனைக் கொன்று வீழ்த்தியது.
 
இப்படியாக இராமர் கரனையும் தூஷணனையும் அவனது பெருத்த படையையும் ஒழித்து அந்தக் காட்டுப் பகுதியிலேயே அரக்கர் பயம் என்று இல்லாத படி செய்து விட்டார். போர் முடிந்தது. சீதையும் இலட்சுமணனும் பர்ணசாலைக்கு மகிழ்ச்சியுடன் திரும்பினர்.      
                    

0 comments:

Post a Comment