ஆரண்ய காண்டம் - 4

 
கரனும் தூஷணனும் திரிசீரனும் இராமரை எதிர்த்துப் போரிட்டு மடிந்ததையும் அவர்களது மாபெரும் படை நாசமுற்றதையும் இலங்கை மன்னனான இராவணனுக்கு அகம்பனென்னும் ஒற்றன் கூறினான். இவன் அப்போர் நடந்ததை நேரில் கண்டவன். இராமரது அம்பிற்கு இரையாகாது உயிர் தப்பிப் பிழைத்துத் தலை தெறிக்க ஓடிவந்தவன்.
 
ஜனஸ்தானத்திலிருந்த அரக்கர்களையெல்லாம் இராமர் அழித்துவிட்டதாக அறிந்து இராவணன் கடுங்கோபம் கொண்டான். அவனது கண்கள் சிவந்தன. மீசை துடிதுடித்தது. அவன் "ஆகா! அந்த அற்பனுக்கு அழிவுகாலம் வந்து விட்டது. எவனையும் அழிக்கும் சக்தி எனக்கு உண்டு. அக்கினியையே எரிக்கும் சக்தியை உடையவன் நான். என் ஆட்களைக் கொல்ல யாருக்கு துணிச்சல் எற்பட்டது?" என்று சிங்கம்போல கர்ஜித்தான்.
 
அப்போது அகம்பன் இராவணனிடம் தான் நேரில் கண்டதை விவரமாகக் கூறினான். அது கேட்டு இராவணன் "அந்த இராமனுக்கு தேவர்களெல்லாம் ஒன்று கூடி வந்து உதவியைச் செய்திருக்கிறார்களோ?" என்று ஆத்திரம் பொங்கக் கேட்டான். அதற்கு அந்த ஒற்றன் "இல்லை! அந்த இராமனின் பலம்தான் என்ன! அவனுக்குத் துணையாக அவன் தம்பி இலட்சுமணன் வேறு.
கரனையும் தூஷணனையும் திரிசீரனையும் மாபெரும் அரக்கர் படையையும் இராமன் ஒருவனே தனியாக நின்று கொன்றவன்" என்றான். அதைக்கேட்டதும் இராவணன் "அப்படியா? இப்போதே ஜனஸ்தானத்திற்குப் போய் அந்த இராமனையும் அவன் தம்பியையும் ஒழித்துவிட்டுத் தான் நான் மறுவேலை பார்ப்பேன்" என்றான்.
 
அப்போது அகம்பன் "வேண்டாம். அவசரப்படாதீர்கள். நான் இராமனது பலத்தையும் சக்தியையும் பற்றிக் குறைத்துத்தான் கூறி இருப்பதாக நினைக்கிறேன். அவனால் முடியாதது ஒன்றும் இல்லை. அவனை எந்த சக்தியும் அழிக்க முடியாது. ஆனால் ஒரே ஒரு வழி இருக்கிறது. அவன் தன் மனைவியான சீதையின் மீது உயிரை வைத்திருக்கிறான். அந்த சீதையை மட்டும் நீங்கள் கவர்ந்து கொண்டு வந்துவிடுங்கள். அந்தப் பிரிவைத் தாங்காது மனமுடைந்து அவன் இறந்து விடுவான்" என்றான்.
 
இராவணனும் சற்று யோசித்துப் பார்த்தான். பிறகு "நீ சொல்வதும் சரியே. நாளைக்காலை சென்று அந்த சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து விடுகிறேன்" எனக் கூறினான். கூறியபடியே மறுநாள் தன் தேரில் ஏறிக்கொண்டு மாரிசன் வசிக்கும் இடத்தை அடைந்தான்.
 
இராவணனைக் கண்டதுமே மாŽசன் "ஆகா! இதென்ன திடீர் விஜயம்? இலங்கையில் எல்லாரும் ஷேமந்தானே?" எனக் கேட்டான். அதற்கு இராவணன் "இலங்கையில் எல்லாரும் ஷேமமே. ஆனால் ஜனஸ்தானத்திலுள்ள நம் பந்துக்களையெல்லாம் இராமன் கொன்று விட்டான். அவனது மனைவியை அபகரித்துச் செல்லவே நான் வந்திருக்கிறேன். இதற்கு உன் உதவி தேவை" என்றான்.
 
அதுகேட்டு மாரிசன் "ஐயோ! உனக்கு இந்த மாதிரி துர்போதனை செய்தது யார்? இப்படிச் செய்தால் நீ அடியோடு அழிந்து போவாய். இந்தப் பைத்தியக்கார எண்ணத்தை விட்டுவிட்டுப் பேசாமல் இலங்கைக்கே திரும்பிப் போய்விடு. இராமனது கோபத்தைக் கிளப்பாதே. அதனால் விபரித விளைவே ஏற்படும்" என்றான். அதைக் கேட்டு இராவணன் இலங்கைக்குத் திரும்பிச் சென்று விட்டான்.
ஆனால் அவன் அங்கே சென்றதும் தன் தங்கை சூர்ப்பணகை அலங்கோல நிலையில் வந்து இருப்பதைக் கண்டான். சபை நடுவே அவள் இராமனது பராக்கிரமத்தைப் பற்றிக் கூறி இராவணனை இகழ்ந்தாள்.
 
அதனால் இராவணனுக்கு ரோஷம் வந்துவிட்டது. உடனே அவன் "யார் அந்தப் பயல் இராமன்? எங்கேயிருந்து முளைத்திருக்கிறான்? ரொம்ப பலசாலியோ?" எனக் கேட்டான். அதற்கு சூர்ப்பணகை "இராமன் அயோத்தி மன்னனான தசரதனின் மகன். அவன் போர் புரிந்ததை நானும் கண்ணால் கண்டேன். அவனது அம்புகள் மழைபோல பொழிந்தவண்ணம் இருந்தன.
 
எப்போது அவற்றை எடுத்து வில்லில் தொடுத்து எய்கிறானென்று கூடப் பார்க்க முடியவில்லை. பதிநான்காயிரம் அரக்கர்கள் கண் மூடிக் கண் திறப்பதற்குள் இறந்து வீழ்ந்தார்கள். பெண்ணென்று கருதி என்னைக் கொல்லாது இப்படி அவமானப் படுத்தி அனுப்பி இருக்கிறான். அவனுக்குத் துணையாக அவன் தம்பி இலட்சுமணன் வேறு. இராமனின் மனைவி சீதையைப் பற்றி என்னென்பது? அவளது அழகை வர்ணிக்கவே, முடியாது.
 
அவளைப் போன்றவள் உனக்குத்தான் மனைவியாக இருக்க வேண்டியவள். அவளை இங்கே அழைத்து வந்து உனக்கு மனைவியாக்க எண்ணியே நான் அவர்களது குடிலுக்குச் சென்றேன். ஆனால் அவமானப் பட்டு திரும்பி வந்திருக்கிறேன். நீ அந்த இராமனைக் கொன்று வஞ்சம் தீர்த்துக்கொள். சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து உன் மனைவியாக்கிக் கொள்" என்றாள்.
 
இராவணன் உடனே தன் தர்பாரைக் கலைத்துவிட்டு சீதையை அபகரித்து வர யோசனை செய்யலானான். இராமனைக் கொன்று சீதையை அபகரித்து வருவதைவிட கபடத்தனமாய் அவளைக் கவர்ந்து வருவதே மேலென அவனுக்குப்பட்டது.
 
ஏனெனில் இராமரது பராக்கிரமத்தைப் பார்த்தால் அவரைத் தோற்கடிப்பது எளிதல்ல என்பது அவனுக்கு விளங்கிவிட்டது. அவன் தனது எண்ணத்தை யாரிடமும் கூறவில்லை. மறுநாளே தன் தேரில் ஏறிக்கொண்டு விர்ரென மாரிசனின் இருப்பிடத்திற்குப் போய்ச் சேர்ந்தான்.
மாரிசன் அவனை வரவேற்று உபசரித்து "இவ்வளவு சீக்கிரமே ஊர் போய் திரும்பி வந்து விட்டீர்களே! என்ன விஷயம்?" எனக் கேட்டான். அதற்கு இராவணன் "அந்த இராமனை என்னால் மன்னிக்கவே முடியாது. அவன் கொடியவன், துஷ்டன், கயவன், மூர்க்கன், நீசன்! நம் உறவினர்களையெல்லாம் ஒழித்தது மட்டுமல்லாது தங்கை சூர்ப்பணகையையும் அவமானப் படுத்தி அனுப்பிவிட்டான். அந்த சீதையை இனி நான் கவர்ந்தே செல்வேன். அதற்கு உன் உதவி தேவை" என்றான்.
 
அப்போது மாரிசன் கை கூப்பி வணங்கி "வேண்டாம் இந்தக் கெட்ட எண்ணம். இதனை விட்டு விடுங்கள். நான் இப்போது சொல்வது உங்களுக்குக் கசப்பாக இருக்கலாம். ஆனால் நல்லது சொல்ல உலகில் ஆட்கள் கிடைப்பது அரிதே. இராமரைப் பற்றி நீங்கள் எண்ணியது முற்றிலும் தவறு. அவர் மிகவும் நல்லவர். யாரையும் வலிய சண்டைக்கு இழுக்கமாட்டார். இந்த சூர்ப்பணகைதான் அங்கே போய் ஏதோ உளறி அவமானப் பட்டு வந்தாள்.
 
அவளே கரனையும் தூஷணனையும் தூண்டி போரிடச் செய்து அவர்களை எமலோகத்தைப் பார்க்க வைத்தாள். இப்போது உங்களிடம் வந்திருக்கிறாள். இராமர் செய்தது தவறேயல்ல. நானே அவர் சிறுவராக இருந்தபோது அவர் கையால் அடிபட்டு ஓடிப் போயிருக்கிறேன். எனக்கு மந்திர தந்திரங்கள் தெரிந்திருந்தாலும் என் கை வரிசையைக் காட்ட முடியவில்லை. இங்கும் இரு அரக்கர்களோடு அவரைத்தாக்கப் போய் ஓடோடி வந்துவிட்டேன்.
 
என்னோடு சென்ற இரு அரக்கர்களும் இறந்தனர். இதையெல்லாம் பார்த்த பிறகுதான் இராமர் வழிக்கே போகவேண்டாமென நான் சொல்கிறேன்" என்றான். இராவணனுக்கு இதெல்லாம் ஒன்றும் ஏறவில்லை. அவன் மாரிசனிடம் "இதோ பார். நான் தீர்மானித்துக் கொண்டபடி நடந்தே தீர்வேன். மும்மூர்த்திகளே வந்து சொன்னாலும் என் எண்ணத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன். நான் உன்னிடம் உபதேசம் கேட்க வரவில்லை. உன் உதவியைத்தான் கேட்கிறேன்.
அதைச் செய்துவிட்டுப்போ. நீ உன் மாயசக்தியால் தங்கமானைப்போல உருவெடுத்துக் கொண்டு போய் இராமனின் ஆசிரமத்தின் முன் அலைந்து கொண்டிரு. உன்னைப் பிடிக்க அவன் வந்தால் சிறிது தூரத்திற்கு இழுத்துப்போய் இராமர் குரல் கொடுப்பதுபோல "ஐயோ, சீதா, லட்சுமணா!!" என்று கத்து. அப்போது சீதையைக் காவல் காக்கும் இலட்சுமணனும் இராமனைத் தேடிக்கொண்டு போய்விடுவான். நான் அந்த சமயத்தில் சீதையை அபகரித்துக் கொண்டு போய்விடுவேன். இந்த உதவியைச் செய்தால் என் நாட்டில் பாதியைக் கொடுக்கிறேன். அப்படிச் செய்யாவிட்டால் உன்னையே நான் ஒழித்து விடுவேன்" என்றான்.
 
அப்போது மாரிசன் கோபத்தோடு "இராவணா, என்னைக் கொல்வதைவிட உனக்கு இந்த யோசனை கூறியவர்களைக் கொல்வதே நல்லது. இந்த மாதிரி நீ செய்யப் போவதை உன் மந்திரிகள்கூட தடுக்க முயலவில்லையா? இந்த உதவி செய்தால் நான் இறக்கத்தான் போகிறேன். ஆனால் அது பற்றி நான் கவலைப் படவில்லை.
 
எனக்குப் பின்னால் நீயும் அரக்கர் குலமும் அழியப் போகிறதே என்று எண்ணித் தான் நான் கவலைப் படுகிறேன்" என்று கூறினான். பின்னர் அவன் எழுந்து இராவணனோடு செல்லத் தயாரானான். அவ்வளவு கடுஞ் சொற்களைக் கூறியும் இராவணன் சற்றும் மசியவில்லை.
 
மாரிசன் தன்னோடு வரக்கிளம்பியது கண்டு ஒரேயடியாக அவன் மகிழ்ந்து போனான். அவன் மாŽசனை உடனேயே தனது தேரில் ஏற்றிக் கொண்டு இராமரது ஆசிரமம் இருக்கும் இடத்தருகே சென்றான். தேரிலிருந்து கீழே இறங்கியதும் மாரிசன் அழகிய பொன்மான் உருவம் பூண்டு புல் மேய்ந்தவாறே இராமரது ஆசிரமத்தின் முன் சென்றான். பொன் போன்ற மேனியில் புள்ளிகள் பல இருக்க அங்குமிங்குமாக அந்த மான் பல முறை ஓடினால் யார்தான் அதனைக் கண்டு மயங்கமாட்டார்கள்?
 
சீதை அந்த சமயம் ஆசிரமவாயிலுக்கு வந்தாள். அழகிய மானைப் பார்த்து மயங்கி நின்றாள். உடனே இராமரிடமும் இலட்சுமணரிடமும் போய் அந்த மானைப் பற்றிக் கூறி அவர்களை அழைத்து வந்தாள். சற்றுநேரம் அதனைப் பார்த்துவிட்டு இலட்சுமணன் இராமரிடம் "இதனைப் பார்த்தால் உண்மையான மானென்று தோன்றவில்லை.
 
இது மாரிசனென்றே நான் நினைக்கிறேன். அவன் மாய உருவில் இருந்து வேட்டைக்கு வரும் மன்னர்களை எல்லாம் கொன்று தின்பது வழக்கமாம்" என்றான். அப்போது சீதை இலட்சுமணனிடம் பேசாதிருக்கும்படி சொல்லிவிட்டு இராமரிடம் "இந்த அழகிய மானை எனக்குப் பிடித்துக் கொடுங்கள்.
 
பொழுதைப் போக்க இதனோடு நான் விளையாடிக் கொண்டிருப்பேன். ஆகா! எவ்வளவு அழகாக இருக்கிறது. இதை வளர்த்து நாம் அயோத்தி திரும்பும்போது இதனையும் கூட்டிச் செல்வோம். இதனை அங்குஉள்ளோருக்கும் நான் காட்டினால் அவர்களும் மகிழ்ச்சியடைவார்கள்.
 
உயிருடன் பிடிக்கமுடியவில்லை என்றால் அதைக் கொன்றாவது கொண்டு வாருங்கள். நான் அதன் தோலைப் பத்திரப்படுத்தி வைத்து இருப்பேன்" எனக் கூறினாள். இதைக் கேட்டதும் இராமர் தனது வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு மானைப் பிடிப்பதற்குக் கிளம்பினான்.     
 

0 comments:

Post a Comment