ஆரண்ய காண்டம் - 2

 
இராமர் முன் செல்ல பின்னே சீதையும் இலட்சுமணனும் சென்றனர். வழியிலே பல மலைகளையும் நதிகளையும் நீர்நிலைகளையும் பார்த்துக் கொண்டும் அவற்றைக் கடந்தும் சென்றனர். எண்ணற்ற பறவைகளின் கூட்டமும், யானைகள், காட்டுப் பன்றிகள் போன்ற மிருகங்களின் கூட்டங்களும் அவர்களுக்குத் தென்பட்டன. ஆனால் ஒரு மிருகங்கள் கூட அவர்களுக்குத் தீங்கு எதுவும் விளைவிக்கவில்லை.
 
கதிரவன் மேலை வாயிலில் விழும்போது அவர்கள் ஒரு அழகிய குளத்தை அடைந்தனர். அதனடியில் இருந்து இனிய வாத்திய இசை வருவது கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டனர். இராமர் தம்மோடு வந்த தர்மபிருத்தரென்ற முனிவரிடம் அது பற்றி விசாரித்தார். அந்த முனிவரும் அந்தக் குளம் தோன்றிய வரலாற்றைக் கூறலானார். பஞ்சாப்சரம் என்ற அக்குளத்தை மாண்டகர்ணி என்ற முனிவர் தமது தவபலத்தால் தோற்றுவித்தார். அவர் காற்றை ஆகாரமாகக் கொண்டு பத்தாயிரம் ஆண்டுகள் தவம் செய்தார்.
 
அவரது தவத்தைக் கண்டு தேவர்கள் நடுங்கி தம் பதவிகளை அவர் அபகரித்துக் கொண்டு விடுவாரோவென பயந்து அவரது தவத்தைக் குலைக்க முயன்றனர். அவர்கள் ஐந்து அழகிய அப்சரகன்னிகைகளை அம்முனிவர் இருக்குமிடத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்களைக் கண்ட மாண்டகர்ணி தேவர்கள் விரித்த வலையில் அகப்பட்டுக் கொண்டார்.
தம் நிலை மறந்து ஒரு குளத்தைத் தோற்றுவித்துதான் யௌவன உருவெடுத்து அக்குளத்தடியே அழகிய காட்சிகளை சிருஷ்டித்தார். அந்த ஐந்து அப்சர பெண்களையும் மணந்து கொண்டு அவர் சுகபோகங்களில் ஈடு பட்டார். அவரது தவமும் குலைந்தது.
 
இதை தர்மபிருத்தர் கூற இராமரும் இலட்சுமணனும் சீதையும் மிகவும் சுவாரசியத்துடன் கேட்டவாறே ஆசிரமங்களிருக்கும் பகுதியை அடைந்தனர். அங்குள்ளோர் அவர்களை நன்கு உபசரித்து வரவேற்றனர். இவ்வாறு இராமரும் தன் மனைவியுடனும் தம்பியுடனும் ஒவ்வொரு ஆசிரமமாகச் சென்றார். ஒவ்வொரு ஆசிரமத்திலும் சிறிது சிறிது காலம்வீதம் இருந்து பத்து வருடங்களை அவர் கழித்து விட்டார்.
 
அதன் பிறகு இராமர் சீதையையும் இலட்சுமணனையும் அழைத்து கொண்டு மீண்டும் சுதீட்சண மகா முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றார். அங்கே இருக்கும் போது அவர் "இந்த ஆரண்யத்தில் எங்கோ அகத்திய மாமுனிவர் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். அவர் ஆசிரமம் இருக்குமிடம் எங்களுக்குத் தெரியவில்லை. அவரை தரிசித்து அவருக்குப் பணி புரிய வேண்டுமென எங்களுக்கு ஆவலாக உள்ளது. அவர் இருக்கும் இடத்தை எங்களுக்குக் கூற முடியுமா?" என்றார்.
 
சுதீட்சணரும் "நானும் இதையே சொல்லலாமென்று இருந்தேன். நீங்களே கேட்டு விட்டீர்கள். இங்கிருந்து தென்திசையில் சென்றால் அகத்தியரது தம்பியின் ஆசிரமம் உள்ளது. அங்கிருந்து சற்று தூரத்தில் அகத்தியரது ஆசிரமம் உள்ளது. அது மிகவும் அழகான இடத்தில் அமைந்துள்ளது. நீங்கள் சிறிது காலம் அங்கு சௌக்கியமாகத் தங்கி இருக்கலாம். உங்களுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாது" என்றார்.
 
இராமரும் சீதையும் இலட்சுமணனும் அம்முனிவரை வலம் வந்து வணங்கி அவரிடம் விடை பெற்றுக் கொண்டு அகத்தியரது ஆசிரமத்தை நோக்கிச் சென்றனர். வழியிலுள்ள அகத்திய முனிவரது தம்பியின் ஆசிரமத்தை அடைந்தனர்.
அவ்வாறு மூவரும் அகத்திய முனிவரின் தம்பியின் ஆசிரமத்திற்கு நடந்து செல்கையில் இராமர் இலட்சுமணனுக்கும் சீதைக்கும் அகத்திய முனிவரைப் பற்றி விவரமாகக் கூறினார். இல்வலன், வாதாபி என்ற இரு அரக்கர்கள் ஓரிடத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வழியில் வருவோரை ஏமாற்றிக் கொன்று சாப்பிட்டு வந்தனர்.
 
இவ்வலன் என்பவன் அந்தணனைப் போல உருவெடுத்துக் கொள்வான். வாதாபி ஆட்டின் உருவில் இருப்பான். இல்வலன் வழியில் காண்போரை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து முறைப்படி உபசாரங்களைச் செய்து அவர்களை அங்கே சாப்பிடும்படி வேண்டுவான். அதற்காக அங்குள்ள ஆட்டைக் கொன்று விருந்திடுவான். அவர்களும் அதைச் சாப்பிட்டபின் "வாதாபி வெளியே வா" என்பான். வாதாபியும் விருந்தினனின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வருவான். இருவருமாக அந்த விருந்தாளியைப் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டு விடுவார்கள்.
 
அவர்களது இந்த சூழ்ச்சியில் அகப்பட்டு பலியானவர்கள் பலபேர். இப்படி இருக்கையில் ஒருமுறை அகத்தியர் அவ்வழியே சென்று கொண்டிருந்தார். எல்லாரையும் ஏமாற்றுவது போல அவரையும் இல்வலன் ஏமாற்றியதாக நினைத்துக் கொண்டு அவரைத் தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றான். அனைவருக்கும் கொடுப்பது போல் இல்வலன் அங்கு ஆட்டின் உருவிலிருந்த வாதாபியை வெட்டி அந்த மாமிசத்தை அவருக்கு உண்ணக் கொடுத்தான். அவரும் அதை உண்டார். வயிறு சற்று வலிக்கவே அவரும் தன் வயிறைத் தடவிக் கொடுத்தார். வாதாபி மறுவினாடியே அவரது வயிற்றில் ஜீரணமாகி விட்டான்.
 
இதையறியாது இல்வலன் வழக்கம் போல "வாதாபி வெளியே வா" என்று கூவினான். அப்போது அகத்தியர் சிரித்தவாறே "இனி எங்கே வரப்போகிறான்? அவன்தான் என் வயிற்றில் ஜீரணமாகி விட்டானே" என்றார். உடனே இல்வலன் அவர்மீது பாய்ந்து அவரைக் கொல்ல முயன்றான். ஆனால் அவர் அவனைப் பார்த்த ஒரு பார்வை அவனை சுட்டெரித்துச் சாம்பாலாக்கிவிட்டது.

இராமர் இந்த வரலாற்றைக் கூறி முடித்தபோது தான் அகத்தியரது தம்பியின் ஆசிரமத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது மாலை மங்கும் வேளை. அகத்தியரின் தம்பியும் அம்மூவரையும் வரவேற்று விருந்திட்டு உபசரித்தார். அவர்களும் அந்த இரவை அங்கே கழித்து மறுநாள் காலையில் எழுந்து அவரிடம் விடை பெற்றுக் கொண்டு அகத்தியரது ஆசிரமத்தை நோக்கிச் சென்றனர்.
 
வழியில் யானைகள் முறித்துப் போட்டிருந்த பல மரங்களை அவர்கள் கண்டனர். பறவைகளின் இனியகானம் அவர்களுக்கு களிப்பை மூட்டியது. அகத்தியரது ஆசிரமம் அமைதியான சூழ்நிலையில் அழகாக அமைந்திருந்ததை அவர்கள் கண்டனர். அப்போது இராமர் "அகத்தியரது தவவலிமையை என்னென்பது? சூரியனின் வழியைக் குறுக்கிட்டுத் தடுக்க முயன்ற மேரு மலையின் கொட்டத்தை அடக்கினார். அதன்பின்னர் தென் திசையில் சென்று தமது ஆசிரமத்தை ஏற்படுத்திக் கொண்டார். அங்கு கொடுமை புரிவோருமில்லை. பிறரை ஏமாற்றுவோரும் இல்லை. பாவம் செய்வோரும் கிடையாது. இப்படிப்பட்ட மகிமை பொருந்திய ஆசிரமத்திற்கே நாம் வந்து சேர்ந்துள்ளோம்" என்றார்.
 
பின்னர் அவர் தன் தம்பியிடம் "இலட்சுமணா, நீ போய் முனிவரிடம் நாம் மூவரும் அங்கு வரப்போவதாக அறிவித்து அவரது அனுமதி பெற்றுவா" என்றார்.
 
இலட்சுமணனும் ஆசிரமத்திற்குள் சென்று அகத்தியரது சீடர்களில் ஒருவனிடம் "நானும் எனது தமையனார் இராமரும் அவரது மனைவி சீதையும் வந்துள்ளோம். நாங்கள் தசரத ராஜனின் புதல்வர்கள். இந்த ஆசிரமத்திற்குள் வர உங்களது குருவின் அனுமதி கிடைக்குமா?" என்றான்.
 
அச்சீடனும் உடனே உள்ளே போய் அகத்தியரிடம் இதைக் கூறினான். அவரும் "இம்மூவரும் இங்கு வருவார்களென   எதிர்பார்த்துக்
கொண்டுதானிருக்கிறேன். அவர்களை அழைத்து வா" என்றார். சீடனும் இலட்சுமணனோடு சென்று இராமரையும் சீதையையும் தங்களது ஆசிரமத்திற்குள் அழைத்துக் கொண்டு வந்தான்.
சூரியனின் ஒளிபோல பிரகாசிக்கும் அகத்தியர் தம் சீடர்களின் கூட்டத்தோடு அம்மூவரையும் வரவேற்றார். மூவரும் மாமுனிவரது பாதங்களில் விழுந்து வணங்கினர். அகத்தியரும் அவர்களை விருந்தினர்களாகத் தமது ஆசிரமத்தில் இருக்கச் செய்தார். அகத்தியரிடம் ஒரு அற்புதமான வில் இருந்தது. அது மகா விஷ்ணுவினுடையது. தங்கம் போல பிரகாசிக்கும் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டது.
 
அதை விசுவகர்மா தயாரித்தான். அதோடு பிரமன் கொடுத்த ஒரு அபூர்வ பாணமும், எடுக்க எடுக்கக் குறையாத அம்புராத்தூணியும் இருந்தன. அத்துடன் தங்க உறையோடு கூடிய ஒரு வாளும் இருந்தது. இவற்றை எல்லாம் அகத்தியர் இராமருக்குக் கொடுத்து விட்டார்.
 
இராமரும் அகத்தியரிடம் "எங்கள் வனவாசகாலம் பூர்த்தியாகும்வரை ஒரு ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு நாங்கள் வசிக்க விரும்புகிறோம். அதற்கு இந்த வனத்தில் தக்க இடம் எதுவென்று எங்களுக்கு நீங்கள்தான் கூற வேண்டும்" என்று கேட்டார்.
 
அகத்தியரும் "இங்கிருந்து சிறிது தூரத்தில் பஞ்சவடி என்னும் இடம் இருக்கிறது. அங்கு உண்ண ஏராளமான கிழங்கு வகைகளும் நீர் வசதியும் உள்ளது. மான்களும் நிறைய உள்ளன. அப்பகுதியில் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு நீங்கள் இருக்கலாம். உங்கள் வனவாச காலந்தான் அநேகமாக முடிந்து விட்டதே.
 
எஞ்சிய காலத்தையும் முடித்துவிட்டு அயோத்திக்குச் சென்று நாட்டை ஆண்டு வாருங்கள். பஞ்சவடி ரம்மியமான இடம் உங்கள் மனத்திற்கு மிகவும் பிடித்தமாக இருக்கும். சீதைக்கு அந்த இடம் மிகவும் பிடித்தமானதாக இருக்கும்" என்றார்.
 
இராமரும் இலட்சுமணரும் சீதையும் அகத்தியரை வணங்கி நமஸ்கரித்து விடை பெற்றுக் கொண்டனர். அகத்தியர் கூறிய வழியே சென்று கொண்டிருந்தனர். வழியிலே ஒரு பெரிய கழுகைக் கண்டனர். ஒரு ராட்சசன் தான் அப்படிப்பட்ட உருவம் எடுத்து இருக்கிறான் என அவர்கள் நினைத்துக் கொண்டனர்.
 
அப்போது அக்கழுகு அவர்கள் முன்வந்து மிகவும் அடக்கத்தோடு "நீங்கள் என்னைக் கண்டு பயப்படுகிறீர்களா? வேண்டாம். நான் உங்களது தந்தையின் நண்பன். என் பெயர் ஜடாயு. எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். அவன் பெயர் சம்பாதி, என் தாய் சுவேனி. தந்தை அருணன். கருடன் எனது பெரிய தகப்பனாராவார்.
 
இந்தக் காடு மிகவும் அபாயகரமானது. எனவே உங்களுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்றால் உங்களுக்குத் துணையாக இருக்கிறேன். நீங்களிருவரும் வேட்டையாடப் போய்விட்டால் தனியாக இருக்கும் சீதாதேவியைப் பாதுகாக்கவும் உதவிக்கும் நான் இருக்கிறேன்" என்றது.
 
அதுகேட்டு இராமர் மிகவும் மகிழ்ந்தார். ஜடாயுவிடம் தன் தந்தையை பற்றி பேசிக் கொண்டே யாவரும் பஞ்சவடியை அடைந்தனர். பஞ்சவடியை அடைந்த பின்னர் அவர் இலட்சுமணனிடம் "தம்பி, நாம் பஞ்சவடிக்கு வந்து விட்டோம். இங்கு நல்ல இடமாகப் பார்த்து பர்ணசாலையை அமைத்து விடு" என்றார்.
 
கோதாவரி நதியினருகே ஆசிரமம் அமைந்துவிட்டது. அவர்கள் இறுகக் கட்டிய கனமான படல்களோடு ஆசிரமத்தை அமைத்து முறைப்படி பூசை முதலியன செய்தார்கள். அதற்குப் பின்னர் தான் அவர்கள் மூவரும் அதில் வசிக்கலாயினர்.                                            
 

0 comments:

Post a Comment