உத்தரகாண்டம் - 2

 
இலட்சுமணன் சீதையை வால்மீகி முனிவரது ஆசிரமத்தருகே விட்டுவிட்டுச் சென்றானல்லவா? சீதையோ சற்றுநேரம் வரை அவன் செல்வதையே பார்த்துக் கொண்டே இருந்தாள் அவளது கண்களில் நீர் நிரம்பி விட்டது. துக்கம் தாங்காது விசித்து, விசித்து அழலானாள்.

அவளது அழுகுரல் கேட்டு சற்று தூரத்தில் சென்று கொண்டிருந்த முனிவர்களின் புதல்வர்கள் ஓடோடி வால்மீகி முனிவரிடம் "சுவாமி, நமது ஆசிரமத்திற்கருகே யாரோ ஒரு ஸ்திரீ ஏனோ அழுது கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்தால் தேவலோகத்தில் இருந்து வந்தவள் போலத் தெரிகிறது. அவளைச் சுற்றிலும் யாருமே காணோம். நீங்கள் சற்றுச் சென்று பாருங்கள்" என்றனர்.

வால்மீகி முனிவரும் அவர்கள் கூறியதை கவனமாகக் கேட்டார். அப்படி அந்தக் காட்டில் தன்னந்தனியாக இருந்து புலம்பும் பெண் யாரென எண்ணமிடலானார். அவருக்கு ஞான திருஷ்டியால் எல்லாம் தெரிந்து விட்டது.

வால்மீகி முனிவரும் தம் சீடர்களோடு புறப்பட்டு சீதை இருக்கும் இடத்தை அடைந்தார். அவர் "இவள் தசரத மன்னனின் மருமகள் சீதை. வாம்மா, நீ இங்கு எந்த நிலையில் வந்திருக்கிறாயென்பதெல்லாம் எனக்குத் தெரியும்.

 
 என் ஞான திருஷ்டி அதனைக் கூறிவிட்டது. எவ்வித பயமுமில்லாது தபஸ்வினிகளோடு நீ என் ஆசிரமத்திலிலேயே இருக்கலாம். கவலைப்படாதே" என ஆறுதல் கூறினார்.
சீதையும் அவரை நமஸ்கரித்து அவரது ஆசிரமத்தை அடைந்தாள். வால்மீகியும் அவளை முனிவர்களது மனைவியரிடம் ஒப்படைத்து அவளைத் தக்கபடி உபசரித்து கௌரவிக்குமாறு கூறினார். அவர்களும் அவ்விதமே செய்யலாயினர்.

சீதையை கானகத்தில் விட்டு விட்டு அயோதிக்குத் திரும்பும்போது இலட்சுமணன் சுமந்திரனிடம் "சுமந்திரா, தமையனாருக்கு சீதையின் பிரிவால் எவ்வளவு துயரம் ஏற்பட்டு உள்ளது என்பதை நேரிலேயே கண்டாய் அல்லவா? ஒரு குற்றமுமில்லாத சீதைக்குத்தான் எவ்வளவு கஷ்டம்?" என்றான்.

இலட்சுமணன் கூறியது போல இராமருக்கு ஏற்பட்ட மனத்துயரம் சுமத்திரனுக்குத் தெரியாமலிருக்கவில்லை. அதன் காரணமும் அவனுக்குத் தெரிந்ததுதானே. எனவே, அதனை இலட்சுமணனிடம் அவன் கூற நிச்சயித்துக் கொண்டான்.

சுமந்திரனும் "இலட்சுமணா, இந்தமாதிரி விரகதாபத்தால் இராமர் வாடுவாரென பல முனிவர்கள் கூறி இருக்கிறார்கள். இதன் காரணம் எல்லாம் என்ன என்று நான் கூறுகிறேன். இதுபற்றி உங்களில் யாருக்கும் விவரமாகத் தெரிந்திருக்க நியாயம் இல்லைதான்" எனக்கூறி பின்வருமாறு உரைத்தான்.
ஒருமுறை வசிஷ்டரது ஆசிரமத்திற்குச் சென்றபோது தசரதர் அத்திரி முனிவரின் புதல்வரான துர்வாசரைக் கண்டார். அவரிடம் "என் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்? குறிப்பாக இராமர் எவ்வளவு காலம் இருப்பான்? அவனுக்கு குழந்தைகள் எத்தனை பிறக்கும்?" என்று கேட்டார்.

அதற்கு துர்வாசர் "இந்த விருந்தாந்தத்தைக் கேள். ஒருமுறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நேர்ந்த போரில் அசுரர்கள் தோற்றுப்போய் பிருகு மகாமுனிவரின் மனைவியைச் சரணடைந்தனர். அவளும் அவர்களுக்குப் புகலிடம் கொடுத்தாள். இதைக்கண்ட விஷ்ணு கோபம் கொண்டு பிருகுவின் மனைவியின் தலையைத் தன் சக்கிரா ஆயுதத்தால் துண்டித்தார். 

அதைக்கண்டு பிருகு கோபமடைந்து விஷ்ணுவை பூவுலகில் மானிடனாகப் பிறந்து மனைவியைப் விட்டுப் பிரிந்து வாடுமாறு சபித்தார். அந்த சாபத்தின்படி விஷ்ணு இராமனாக அவதரித்தார்" என்றார்.

 அதைக் கேட்ட தசரதர் "அப்படியா சமாசாரம்? விஷ்ணுவா இராமராக அவதரித்திருக்கிறார்? அப்படியானால் என் இராமன் மகாவிஷ்ணுவின் அவதாரமா? ஆனால், மானிடர்களைப் போலக் கஷ்டப்படத்தான் வேண்டுமா?" என்று அவரிடம் கேட்டார். துர்வாசரும் "இராமர், பிருகு முனிவரின் சாபப்படி விரகதாபத்தால் வாடியே இருந்ததாக வேண்டும். அவர்பதினோராயிரம் ஆண்டுகள் அயோத்தியை ஆண்டு, பல அசுவமேத யாகங்கள் செய்து பிரம்ம லோகத்தை அடைவார். அவருக்கு இரு புதல்வர்கள் பிறப்பார்கள். ஆனால், அயோத்தியில் பிறக்க மாட்டார்கள். அவர்களுக்கு இராமர் பட்டாபிஷேகம் செய்து வைப்பார்" என்றார்.

சுமந்திரன் இந்த விவரங்களை இலட்சுமணனிடம் கூறினான். இதற்குள் மாலைப் பொழுதாகி விடவே இருவரும் கௌமதி என்னும் இடத்திற்குருகே தங்கி இரவுப் பொழுதைக் கழித்துவிட்டு மறுநாள் அயோத்தியை அடைந்தனர்.
இரதத்தில் அமர்ந்து வந்து கொண்டு இருந்த இலட்சுமணனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இராமரைச் சந்தித்து என்ன பேசுவது என்று தோன்றவில்லை. சீதையைப் பற்றி என்ன கூறுவது என்று யோசிக்கலானான். அப்போது, இரதம் அயோத்திக்குள் வந்து விட்டது.


 
 இலட்சுமணன் இரதத்தை விட்டிறங்கி இராமரது மாளிகைக்குள் சென்றான். அவரிடம் என்ன சொல்வது எனத் தெரியவில்லை. ஒருவாறாக அவன் தன் மனதைதிடப்படுத்திக் கொண்டு "அண்ணா உங்களது கட்டளைப்படியே வால்மீகி முனிவரது ஆசிரமத்தருகே சீதாதேவியைக் கொண்டு போய்விட்டுவிட்டுத் திரும்பி வந்து விட்டேன்" எனக் கண்ணீர் உகுத்தவாறே கூறினான்.
அதுகேட்டு இராமர் "பேஷ். நீ என் கட்டளையை நிறைவேற்றி விட்டாய். அது போதும்" என்றார். அவர் இந்த இடைக்காலமாகிய நான்கு நாட்கள் சரிவர ஆட்சியில் கவனம் செலுத்தவில்லை. அதனை அவர் இலட்சுமணனிடம் கூறி நிருக மன்னனின் வரலாற்றைச் சொன்னார்.
ஒருமுறை நிருக மன்னன் பல பசுக்களைத் தானமளித்தான். அவர் ஒரு பிராம்மணனுக்கு அளித்த பசுக்களில் ஒன்று எப்படியோ திரும்பி அரண்மனை வந்து மற்ற பசுக்களோடு சேர்ந்து விட்டது. அது தெரியாது அந்தப் பசுவை வேறொரு பிராம்மணனுக்கு இன்னும் சில பசுக்களோடு சேர்த்துக்கொடுத்துவிட்டான்.

முதலில் தானம் பெற்ற பிராம்மணன் தன் பசுவைக் காணாது தேடியவாறே இரண்டாவது முறை பசுவைதானம் பெற்ற பிராம்மணனின் இருப்பிடத்தை அடைந்தான். அந்த பிராம்மணனிடம் தன் பசு இருப்பதைக் கண்டு அதனை அழைக்கவே அது பழக்கப்பட்ட குரல் கேட்டு அப்பிராம்மணனிடம் ஓடி வந்தது.
அப்பசு தன்னுடையதே என்றும் தனக்கே நிருக மன்னன் தானம் கொடுத்ததாயும்  இருவரும் மாறி மாறிச் சச்சரவிடலாயினர். இருவரும் அதற்கு முடிவுகாண நிருக மன்னன் இடமே சென்றனர். ஆனால், அவர்களால் அரசனை பேட்டி காண முடியவில்லை. பல நாட்கள் அரண்மனை வாசலில் காத்திருந்துவிட்டு முடிவில் மனம் நொந்து போய் அவன் யார் கண்ணுக்கும் புலப்படாத வனாகி அலைந்து திரிந்து முடிவில் யாதவ வம்சத்தில் பிறக்கும் கிருஷ்ண பகவானால் சாப விமோசனம் பெறட்டுமென அவர்கள் சபித்துவிட்டுப் போயினர். நிருக மன்னனும் தன் மகனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்து சாபப்படி யார் கண்ணிலும் படாதபடி வசிக்க ஓரிடத்தில் தக்க ஏற்பாடுகளைச் செய்துகொண்டு போய்விட்டான்.

 இராமர் இக்கதையைக் கூறிவிட்டு இலட்சுமணனுக்கு நிமி என்பவனின் வரலாற்றையும் கூறலானார்.நிமி இட்சுவாகு மன்னனின் பனிரெண்டாவது மைந்தன். அவன் வைஜயந்தமென்ற அழகிய நகரை நிர்மாணித்தான். தந்தையைத் திருப்தி செய்ய அவன் ஒரு யாகம் செய்ய எண்ணி வசிஷ்டரை குருவாக இருக்க வேண்டினான். அவர் இந்திரனின் யாகத்தை முடித்து வைத்துவிட்டு வந்து அந்த யாகத்தை தொடங்குவதாகக் கூறிச் சென்றார்.
நிமியோ யாகத்தை உடனேயே செய்துவிட வேண்டுமெனத் துடித்தான். வசிஷ்டரோ இந்திரனின் யாகத்திற்குச் சென்றுவிட்டார். அது முடிய எவ்வளவு நாட்களாகுமோ? எனவே, அவன் வேறு ஒரு முனிவரின் உதவியால் யாகத்தை நடத்தி விடுவது என்று தீர்மானித்துக் கொண்டான்.


எனவே, நிமி கௌதமரின் உதவியால் யாகத்தை ஆரம்பித்து முடித்து விட்டான். வசிஷ்டர் திரும்பி வந்து யாகம் முடிந்து போனதைக் கண்டார். தன்னை நிமி அவமானப்படுத்தி விட்டதாக அவர் எண்ணி "உன் உடல் உணர்வற்றுப் போகக் கடவது" எனச் சபித்து விட்டார். வசிஷ்டர் வந்தது கூட நிமிக்குத் தெரியாது. ஆனால், அவரிட்ட சாபத்தை அறிந்த நிமி "நான் எதையும் அறியாதபோது என்னை வசிஷ்டர் சபித்ததால் அவரது உடலும் உணர்விழந்து ஒன்றுமில்லாது போகட்டும்" என எதிர் சாபமிட்டான்.

இப்படியாக ஒருவரையொருவர் சபித்துக் கொள்ளவே வசிஷ்டர் வாயு உருவில் தன் தந்தையிடம் போய் "நிமியின் சாபத்தால் என் உடலே பயனற்று விட்டது. எனவே, எனக்கு வேறொரு உடல் கொடுங்கள்" என்றார். பிரம்மாவும் வசிஷ்டரை வருணன், மித்திரன் ஆகியவர்களின் தயவை நாடச் சென்னார். அவர்களைக் நாடியதால் வசிஷ்டர் நல்லதான மற்றொரு உடலை அடைந்தார். அந்த உடலோடுதான் வசிஷ்டர் இட்சுவாகு வம்ச குருவானார்.

நிமி தன் உடலின் உணர்வை இழந்தபோதிலும் அவனது உயிரெல்லாம் கண்களில் இருக்குமாறு தேவர்கள் வரம் கொடுத்தனர். அவனது உடலில் இருந்து ஒரு மகன் பிறக்கச் செய்தனர். அவன் பெயரில் மதிலாபுரி ஏற்பட்டது. அவனுக்கு ஜனகமன்னனென்ற மற்றொரு பெயரும்கூட உண்டு. இராமர் கூறிய வரலாற்றைக் கேட்டு இலட்சுமணன் "அண்ணா, நிமியும், வசிஷ்டரும் மகா சக்தி வாய்ந்த மேதாவிகளாக இருந்தும் ஏன் பொறுமை இல்லாது போயினர்" எனக் கேட்டான்.


அதற்கு இராமர் "மேதாவிகளும் தவறு செய்பவர்களே". இதற்கு யயாதியின் கதையைக் கூறுகிறேன். யயாதிக்கு சர்மிஷ்டை, தேவயானி என இருமனைவியர் இருந்தனர். சர்மிஷ்டை அசுர மன்னனான விருஷபர்வனின் மகள். தேவயானி அசுர குருவான சுக்கிராச்சாரியாரின் புதல்வி. இருவருக்கும் குழந்தைகள் உண்டு. யயாதி சர்மிஷ்டையின் புத்வனான புருவிடம் அதிக வாஞ்சை கொண்டிருந்தான். அது போலவே சர்மிஷ்டையிடந்தான் அதிக அன்பு கொண்டிருந்தான்.

தேவயானி இதுபற்றி தன் தந்தையிடம் போய்க் கூறவே சுக்கிராச்சாரியாரும் யயாதிக்கு முதுமை வந்து விடட்டுமென சபித்தார். இது கண்டு யயாதி அவரிடம் தன் தவறுகளை ஒப்புக் கொண்டு சாபமாற்றை வேண்டவே அவரும் "உன் புதல்வர்களில் யாராவது ஒருவன் உன் முதுமையை ஏற்றால் நீ அவனது வாலிபத்தைப் பெறலாம். நீ விரும்பும்போது வாலிபத்தை அவனிடம் கொடுத்து உன் முதுமையைப் பெற்றுக் கொள்" எனக் கூறி அனுப்பி விட்டார். யயாதியின் முதுமையை அவரது புதல்வர்களில் ஒருவனைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஏற்க மறுத்தனர். அவனது பிரியமான மகனான புருதான் தன் தந்தைக்குத் தன் வாலிபத்தைக் கொடுத்தான். யயாதியும் தன் முதுமையை புருவுக்குக் கொடுத்துவிட்டு அவனது வாலிபத்தை வாங்கிக் கொண்டு சுகபோகங்களை அனுபவித்தான். பல வருடங்களான பின்னர் தன் முதுமையைத் தன் மைந்தனிடமிருந்து பெற்றுக் கொண்டு அவனது வாலிபத்தை அவனுக்கே கொடுத்தான். பின்னர், புருவையே நாட்டின் மன்னன் ஆக்கினான். புருவும் நன்கு ஆண்டு வரலானான்.

இப்படியாக இராமர், இலட்சுமணனுக்கு கதைகள் கூறினார். அன்றைய இரவுப் பொழுதும் கழிய மறுநாள் பொழுதும் புலர்ந்தது.


0 comments:

Post a Comment