உத்தரகாண்டம் - 1



 
இராமருடைய பட்டாபிஷேகம் வெகுசிறப்பாக அயோத்தியில் நடந்து முடிந்தது. பட்டாபிஷேகத்திற்கு வந்திருந்த ஏராளமான உறவினர்களும், நண்பர்களும் ஒவ்வொருவராக விடைப் பெற்றுக்கொண்டு திரும்பஆயினர்.
ஒவ்வொருவரிடமும் தன் நன்றியறிதலைத் தெரிவித்த இராமர், அவர்களுக்குத் தக்க வெகுமதிகள் கொடுத்து, மரியாதை செய்து வழி அனுப்பினர். சீதாப்பிராட்டியின் தந்தையான ஜனகரை பரதன் திரும்ப அழைத்துச் சென்று அவர் ராஜ்யம் வரை கொண்டு சென்றுவிட, கைகேய ராஜனுடன் இலட்சுமணன் சென்றான்.

சுக்ரீவனுடன் சேர்ந்து வந்திருந்த இலட்சக்கணக்கான வானரங்கள் அரண்மனை விருந்தாளிகளாக ஆர அமர இரண்டு மாதம் தங்கியிருந்தபின் கிஷ்கிந்தை திரும்ப, அவ்வாறே விபீஷணனுடன் வந்திருந்த ராட்சஸர்களும் இலங்கை திரும்பினர். கடைசியாக சுக்ரீவன், அங்கதன், விபீஷணன் ஆகியோரும் விடை பெற்றனர். அவர்களை இராமர் இராஜமரியாதை செய்து பிரியா விடை கொடுத்தனுப்பினார்.

ஒருவாறு பட்டாபிஷேகக் கோலாகலங்கள் முடிந்து அயோத்தியில் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியது. இராமர் அயோத்தியை ஆட்சி புரிவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார். விரைவிலேயே அவருக்கு மிக்க மகிழ்ச்சியான ஒரு தகவல் கிடைத்தது. சீதை கர்ப்பமுற்றிருக்கிறாள் என்ற செய்தியை தன் தாய்மார்களிடமிருந்து தெரிந்து கொண்ட இராமர் அடைந்த குதூகலத்திற்கு எல்லையே இல்லை. தனிமையில் சீதையை அழைத்து அவளிடம் அன்பு வார்த்தைகளை பிரபாகமாகக் கொட்டி அவளை வெட்கி தலைகுனியச் செய்தாள்.

 பின்னர் சீதையிடம், "என் அன்புக்குரியவளே! பெண்கள் கர்ப்பமுற்றிருக்கும்போது அவர்கள் ஆசைப்படுவது எதுவாயினும் அவள் கணவன் அதைத் தர வேண்டும் உனக்கு என்ன விருப்பமோ கேள்! எதுவாயினும் அதை உன் காலடியில் சேர்ப்பிக்கிறேன்" என்றார்.

சீதை வெட்கப் புன்னகையுடன், "சுவாமி! எனக்கு மறுபடியும் கங்கைக் கரையிலுள்ள ரிஷிகளின் ஆசிரமங்களுக்குச் சென்று சற்றுநேரம் பொழுது போக்க வேண்டுமெனத் தோன்றுகிறது" என்றாள்.
"இவ்வளவுதானே! நாளைக்கே நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன்" என்று இராமர் சொல்லிவிட்டுச் சென்றார். அவருக்காக மந்திராலோசனை அறையில் பத்திரன் காத்துக் கொண்டிருந்தான். அவர் அவனிடம், "பத்திரா! பொது மக்கள் ஆங்காங்கே என்ன பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என உன்னை கவனிக்கச் சொன்னேனே! கவனித்தாயா? மக்கள் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கிறார்கள்? மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்று கேட்டார்.

அதற்கு பத்திரன், "பிரபு! எங்கு சென்றாலும் தங்களுடைய வீர, தீர பராக்கிராமங்களைப் பற்றியே புகழ் பாடுகின்றனர்" என்று தயங்கியவாறு சொன்னார். அவன் எதையோ சொல்ல மறைப்பது போல் இராமருக்குத் தோன்றவே, "பத்திரா! தினமும் நல்ல விஷயங்களை மட்டுமே சொல்கிறாய். ஏதாவது, அதற்கு மாறாக இருந்தாலும் கூறிவிடு! ஏனெனில், மக்களின் உண்மையான உணர்ச்சிகளை நான் அறிய வேண்டும்" என்றார்.
மிகவும் தயங்கிய பத்திரன் கடைசியில் சொல்லவே விருப்பம் இன்றி மென்று விழுங்கிக் கொண்டே, "மகாராஜா! நான் அதை எப்படிச் சொல்வேன்? ஒரு சிலர் அபாண்டமாகத் தங்கள் மீது பழி சுமத்துகின்றனர். அந்நியன் ஒருவன் வசம் இருந்த மனைவியை நம் ராஜா எப்படி முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார் என்ற அவதூருகப் பேசுகின்றனர்" என்று சொல்லி முடித்தான்.

 அதைக் கேட்ட இராமர் இடியால் தாக்குண்டவர் போல் ஆனார். அவர் உடலெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு நடுங்கியது. கொல்லனின் உலைக்களம் போல் இதயம் கொதித்துப் பொங்கியது. திக்பிரமை பிடித்து வெகுநேரம் அப்படியே சிலையாக உறைத்து போனார். நீண்ட நேரம் கழித்து ஒரு முடிவுக்கு வந்தவராய், தன் சகோதரர்களைத் தன்னிடம் தனிமையில் அழைத்தார். அவர்களிடம் தான் பத்திரன் வாயிலாகக் கேள்விப்பட்டதைக் கூறும்போதே குரல் தழுதழுத்துக் கண்கள் வெள்ளமாய் கண்ணீரைப் பெருக்க, சொல்லி முடித்து விம்மினார்.

"என் சீதை களங்கமற்றவள் என்பது எனக்குத் தெரியும். லட்சுமணா! என்னுடன் நிழலாக இருந்தவன் நீ! ஆகவே, அது உனக்கும் தெரியும். ஆனால், இந்த உலகம் இன்னும் அதை நம்ப மறுக்கிறது. என்ன செய்வேன்? நான் ஒரு சாதாரணப் பிரஜையாக இருந்தால், மற்றவர்களின் கருத்தைப் பொருட்படுத்த மாட்டேன். ஆனால், நான் ஒரு ராஜா!

மக்களுக்காகவே வாழ்பவன்! அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பவன்! எனக்கென்று குடும்பம், மனைவி, மக்கள் இருந்தாலும், என்னுடைய உண்மையான குடும்பம் குடிமக்களே! அதனால் நான் அவர்களுக்காகத்தான் வாழ வேண்டும். அதனால் லட்சுமணா! நாளை நீ உன் அண்ணியை அழைத்துச் சென்று கங்கைக் கரையில் விட்டுவிட்டுத் திரும்பி விடு! இதைப்பற்றி அவளுக்கு எதுவும் சொல்லமாட்டேன் என்று சபதமிடு! ரிஷிகளின் ஆசிரமத்திற்குச் செல்ல அவள் ஆசைப்பட்டாள்! அவள் ஆசையை நிறைவேற்றுவதாக மட்டுமே சொல்! அவளை விட்டு நான் பிரியப் போவதை சொல்ல வேண்டாம்" என்று சொல்லிய இராமர் துக்கம் தாங்காமல் கதறியழுதார்.

 புறப்படும்போது இருந்த குதூகலம் சீதையிடம் சுத்தமாக இல்லை. ஏதோ விபரீதமான விஷயத்தை இலட்சுமணன் மறைக்கிறான் என்பது மட்டும் தெளிவாகப் புரிய,  அவனைக் கண்களில் நீர் மல்க உண்மையைச் சொல்லும்படி இறைஞ்சினாள்.

"என் வாயினால் எப்படிச் சொல்வேன் தாயே! அந்த மகாப்பாவச் செயலை, கொடூரமான, ஈவிரக்கமற்ற செயலை என்னிடம் ஒப்படைத்ததற்கு பதிலாக உங்கள் கணவர் என்னைக் கொன்று போட்டிருக்கலாம்" என்று இலட்சுமணன் தேம்பியழுதான். அப்படி என்னதான் இராமர் சொல்லி இருப்பார் என்று ஊகிக்க முடியாமல் சீதை திகைத்தாள்.

"தாயே! என் வாயினால் அதை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. அக்கினியைப் போல் பரிசுத்தமான உங்களைப் பற்றி பொது மக்களில் சிலர் அபவாதம் கூறினார்களாம்! இராவணன் வசம் பல மாதங்கள் இருந்த உங்களை இராமர் ஏற்றுக் கொண்டது தவறு என்று வாய்கூசாமல் சில மகாப்பாவிகள் வம்பளந்தார்களாம். அதனால் குடிமக்களின் கருத்தை ஆதரித்து, உங்களைப் பிரிய தீர்மானித்து விட்டார் என் அண்ணன்! உங்களை இங்கேயே விட்டுவிடும்படி எனக்குக் கட்டளை இட்டிருக்கிறார் தாயே!" என்ற இலட்சுமணன் தான் சொன்ன நஞ்சினும் கொடிய சொற்களின் கடுமையைத்தானே தாங்க முடியாமல் வேரற்ற மரம் போல் கீழே விழுந்து கதறியழ, சீதை ஆயிரம் இடிகளினால் ஒரே நேரத்தில் தாக்குண்டவள் போல் உறைந்து போனாள். அவளால் பேசவே முடியவில்லை கண்கள் மட்டும் தாரை, தாரையாய் கண்ணிரைப் பெருக்கின.

கடைசியில் மனத்தை திடப்படுத்திக் கொண்டு, "அழாதே லட்சுமணா! அழவேண்டியவள் நான்தான்! கஷ்டப்படுவதற்கென்றே பிறந்தவள் நான் என்று தோன்றுகிறது. நான் எந்த நேரத்தில் பெண்ணாய் பிறந்தேனோ தெரியவில்லை, என்னை அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக தாக்கிக் கொண்டேயிருக்கின்றன. அவரைப் பிரிந்திருந்த காலத்தில் நான் வேதனையில் துடித்தது எனக்குதான் தெரியும். இலங்கையில் யுத்தம் முடிந்த பிறகு, எனக்கு விடிவு காலம் வந்து விட்டதென்றும், இனி என் கணவர் உடன் சேர்ந்து காலமெல்லாம் ஆனந்தமாக வாழப் போகிறேன் என்று கனவு கண்டேன். என் கனவுகள் கானல் நீராக மாறப் போகின்றன. போன பிறவியில் என்ன பாவம் செய்தேனோ இப்போது இத்தனை கஷ்டங்களை சுமக்க!

லட்சுமணா! நீ இப்போது கூறிய சொற்களைக் கேட்டதும் அப்படியே கங்கையிலிருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளலாமா என்று தோன்றுகிறது. ஆனால், அப்படிச் செய்தால் ரகுவமிசத்திற்கு மீண்டும் என்னால் அபவாதம் உண்டாகும். தவிர, என் வயிற்றில் வளரும் மழலைகளின் உயிரைப் பறிக்க எனக்கு அதிகாரமில்லை. லட்சுமணா!
என் தலைவிதியை நான் அநுபவிக்கிறேன். உன் அண்ணனின்ஆணையை நீ நிறைவேற்று! திரும்பிச் சென்று அவரிடம் என்னைப் பற்றி சொல் அவர் மீது எனக்கு வருத்தமோ, கோபமோ  இல்லையென்று சொல்! இந்த நிலையிலும் அவருடைய நலமும், சந்தோஷமுமே நான் முக்கியமாகக் கருதுகிறேன் என்று சொல் என்னைப் பற்றி நினைத்து வருந்த வேண்டாமென்று சொல்!" என்று சீதை தெளிவாகச் சொல்ல, இலட்சுமணன் துக்கம் தாளாமல் கதறிக் கதறியழுதான். சீதையின் பாதங்களில் வீழ்ந்து அவற்றைத் தன் கண்ணீரினால் நனைத்தான்.

 பிறகு, திரும்பிச் சென்று படகில் ஏறி, கங்கையைக் கடக்கத் தொடங்கினான். தன் அண்ணியின் முகம் தெரியும் வரை குலுங்கிக் குலுங்கியழுதான். சற்று நேரத்தில் படகு கங்கையில் வெகுதூரம் வந்து விட, சீதையின் முகம் தெரியவில்லை. இலட்சுமணன் உருவம் மறைந்தபின், அதுவரை சிலையாய் நின்றிருந்த சீதை விக்கி, விக்கியழுதாள். அவள் அழுகை ஒலி நாற்திசையிலும் எதிரொலித்தது.


 

0 comments:

Post a Comment

Flag Counter