விநாயகர் - 10

 
கங்கைக்கும் பார்வதி தேவிக்கு மிடையே மிகுந்த மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது. ஒருநாள் நாரதர் பார்வதியிடம், "தேவி! முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒருநாள் கங்கையில் போய் நீராடி தம் மகத் தான சக்தியை அதற்கு அளிக்கிறார்கள். நீங்களும் போய் கங்கையில் குளிக்கலாமே. அந்த சக்தியும் கங்கையில் சேர்ந்து மற்ற மக்களுக்குப் பயன்படுமே!" எனக் கூறிவிட்டுச் சென்றார்.
 
பிறகு அவர் கங்கையிடம் போய், "கங்கையே! உன்னைப் பரிசுத்தம் ஆக்குவதற்காகப் பார்வதி வந்து உனது நீரில் குளிக்கப் போகிறாளாம்!" என்றார். அதுகேட்டு கங்கை, "அப்படியா சங்கதி? வரட்டும். நான் பார்த்துக் கொள்கிறேன்," என ஆத்திரம் பொங்கக் கூறினாள்.
 
 
பார்வதி தேவி மலர்களைக் கொண்டு கங்கையைப் பூசித்து நீராட இறங்கினாள். அப்போது கங்கை, "நில். என்னை அசுத்தப்படுத்தாதே!" எனக் கூவினாள். இதனால் இருவருக்கும் பெருத்த சண்டை ஏற்பட்டது.
 
பார்வதி கங்கையைப் பார்த்து, "நீ கணவன் தலைமீதே ஏறி உட் கார்ந்துவிட்டாய்!" எனவே, கங் கையோ "நீயோ அவரை ஏமாற்றி அவரது பாதி உடலையே பறித்துக் கொண்டுவிட்டாயே!" எனச் சுடச்சுட பதில் கொடுத்தாள். பார்வதியோ, "எல்லோருடைய பாவத்தையும் சுமக்கும் பாவ மூட்டை நீ!" எனவே, கங்கை "நீதான் பாவி. நீ உனக்கென்று ஏதாவது ஒரு குழந்தையாவது பெற்றெடுத்தாயா? குமரன் தீப்பிழம்புகளால் பிறந்தவன்.
விநாயகரோ அழுக்கில் உருண்டை யாகப் பிறந்தவர்," என்றாள். பார்வதியோ, "உன்னைப் போல எல்லாருக்கும் பணிபுரிய நான் தயார் இல்லை!" எனவே, கங்கையும் ஏளன மாகச் சிரித்தவாறே, "நீ மகாசக்தியல்லவா? உனக்குப் பணிபுரிய ஆயிரம் பேர்கள் கைகட்டி நிற்கிறார்கள் போலிருக்கிறது," என்றாள் குத்தலாக. "ஓ! அப்படியா? என் சக்தியைப் பார்!" என்று அவள் பயங்கர நடனம் புரியலானாள்.
 
உலகமே கிடுகிடுத்தது. இருள் கவ்வியது. கடல் அலைகள் கொந்தளித்தன. புயல் வீசியது. இடிஇடித்து மின்னல் வெட்டி அழகான இயற்கை அன்னையே கோர உருவில் காட்சி அளிக்கலானாள். அப்போது கங்கை "இதோ என் சக்தி. நீரையும் அடக்க வல்லது. பார் இதோ!" எனக் கூறி இமயமலையில் இருந்து தடாலென விழுந்து வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடினாள். இமயமலைக்குக் கீழ் உள்ள பகுதி வெள்ளக்காடாக ஆகியது.
 
இதை எல்லாம் கண்ட தேவர்கள், "இந்த நாரதர் சும்மா இருக்காமல் கங்கைக்கும் பார்வதிக்கும் சிண்டு முடிந்துவிட்டு இப்படி ஓர் அனர்த்தத்தை விளைவித்துவிட்டாரே!" என அவரைத் திட்டினார்கள்.
 
அப்போது விநாயகர் தென்பகுதியிலிருந்து திரும்பி வந்தார். வழியில் நாரதரைப் பார்த்து அவர், " இப்போது திருப்தி தானே உனக்கு? இதனால் மற்றவர்கள் படும் அவதியை நீ ஏன் நினைக்கப் போகிறாய்? உனக்கு வேடிக்கை இருந்தால் போதும்!" என்றார்.
 
அதற்கு நாரதர், "இப்படிப்பட்ட ஆபத்து வேளைகளில் நாயகமாக நின்று உதவினால் தானே ஒருவரது மகிமை வெளிப்படும்," என்று கூறியவாறே சென்றார். பார்வதியோ, "இதென்ன விளை யாட்டாக ஆரம்பித்த பேச்சு வினையில் போய் முடிந்ததே. இந்த கங்கையை அடக்க இனி வேறொரு பகீரதன் வரவா போகிறான்?" என்று எண்ணி வருந்தலானாள்.
 
இது விநாயகருக்குத் தெரிந்து விட்டது. ஆனால் எதுவுமே தெரியா தவரைப் போலத் தாயாரின் முன் வந்து நின்று, "அம்மா, ஒரு நல்ல காரியம் செய்யப் போகிறேன்.
என்னை ஆசீர்வதித்து அனுப்பு!" என்று வேண்டினார். பார்வதியும் "பேஷ், பேஷ்! எல் லோரும் எந்த வேலையும் தடங்கல் இல்லாமல் நடக்க உன் ஆசிகளை வேண்டுவார்கள். நீ ஏதோ செய்ய என்னிடம் ஆசிகளைக் கேட்கிறாய், ஆமாம். நீ தென்திசையில் சென்று வந்தாயே. அங்கே என்ன விசேஷம்?" என்று கேட்டாள்.
 
விநாயகரும் "விந்திய மலைக்குத் தெற்கே எல்லாம் வறண்டு கிடக் கிறது. நீ அதனைப் பசுமையாக்கி அன்னபூரணி என்ற பெயரைப் பெற் றுக் கொள். அந்த கங்கையைக் கொஞ்சம் தெற்குப் பக்கமாகத் திருப்பி விட்டாலே போதும்," என்றார். அப்போது பார்வதி, "நான் என்ன செய்யக் கிடக்கிறது? எல்லாம் உன் தந்தை விசுவநாதரின் பொறுப்பு. அவர் எல்லா உலகங்களுக்குமே அதிபதி," என்றாள்.
 
விநாயகரும், "இப்படிச் சொல்லி விட்டு நாம் பேசாமல் கைகட்டி உட்கார்ந்துவிட்டால் எப்படி? ஏதா வது முயற்சி செய்ய தானே வேண் டும்?" என்றார். அதற்கு பார்வதியும், "ஆமாம். உன் போன்றவர்கள் முயன்றால் எதுதான் நடக்காது?" என்றாள்.
 
விநாயகரும் "அம்மா ! உன் ஆசீர் வாதம் இருந்தால் போதும்," எனக் கூறி வணங்கி, பார்வதி தேவியின் ஆசிகளைப் பெற்று அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவர் மேற்கு மலைத் தொடர்ச்சியில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழும் கௌத மரிடம் கன்றைப் போடப் போகும் நிலையிலுள்ள பசு மாட்டின் உரு வில் போனார்.
 
கௌதமரோ மாடு வந்து புல் மேய்கிறது என நினைத்துத் தம் கமண்டலத்திலிருந்து நீரை எடுத்துத் தெளித்தார். அந்த நீர்த் துளிகள் அந்தப் பசுவின் மீது பட்டதுமே அது துடி துடித்துக் கீழே விழுந்தது. பசுவைக் கொன்று கௌதமர் தம் தவத்தை எல்லாம் இழந்துவிட்டார். அப்படியும் அவர் தம் கண்களை மூடிக் கொண்டே இருந்தார்.
 
நாரதர் இந்திரனைத் தூண்டிவிட் டார். இந்திரனுக்கு கௌதமரிடம் தீராத பகை. ஏனெனில் பிரம்மா மிக அழகான பெண்ணான அகலிகையைச் சிருஷ்டித்த போது இந்திரன் அவளை மணக்க விரும்பினான்.
ஆனால் பிரம்மா பூவுலகை ஒரு சுற்று சுற்றி முதலில் வருபவனுக்கே அக லிகை எனக் கூறி ஒரு போட்டியை ஏற்படுத்தினார். அதில் மற்றவர்களோடு இந்திரனும் கலந்து கொண்டு உலகைச் சுற்றிவரக் கிளம்பினான்.
 
போட்டிக்கு வந்த கௌதமரோ கன்று போட்டுக் கொண்டிருக்கும் ஒரு பசு மாட்டைச் சுற்றிவிட்டு எல் லோருக்கும் முன்னதாக வந்து பிரம்மாவிடம் தாமே முதலில் உலகைச் சுற்றி வந்தவர் எனக் கூறி அவரை தன் வாதத்தை ஏற்கும்படி செய்தார். பிரம்மாவும் அகலிகையை கௌதமருக்கே மணமுடித்து வைத்தார்.
 
எந்தப் பசுவை கௌதமர் பூதேவிக்குச் சமம் என்று பிரம்மாவிடம் கூறி னாரோ அதனையே அவர் இப்போது கொன்றுவிட்டார். இதுவே தக்க தருணம் என இந்திரன் எண்ணி ஒரு முனிவர் போல வேடம் பூண்டு எல்லா இடங்களுக்கும் போய், "கௌதமர் ஒரு பசுவைக் கொன்று விட்டார். மகாபாவி. அவரது ஆசி ரமமே அதனால் புனிதத் தன்மையை இழந்துவிட்டது. அங்கே யாராவது அடி எடுத்து வைத்தால் கூட பாவம் பற்றிக் கொண்டுவிடும். கங்கை நீரை இறந்து விழுந்து கிடக்கும் பசுவின் மீது பாய்ந்து ஓடச் செய்தால் அது பிழைத்து எழும்," என்று பறை சாற்றினான்.
 
எந்த முனிவரும் கௌதமரைக் காண விரும்பாமல் பகிஷ்கரிக்கலாயினர். கௌதமரது ஆசிரமவாசி களும் அவரை விட்டுப் போய்விட் டார்கள். வடக்கே இமயத்தில் உள்ள கங்கையை மேற்குத் தொடர்ச்சி மலை உள்ள பகுதிக்கு வந்து எப்படி பாயச் செய்வது? கங்கையை வேண்டி அங்கே வரவழைக்க கௌதமர் இமயமலைக்குப் போய் தவம் செய்யலானார்.
 
பகீரதன் தன் முன்னோர்கள் நற்கதி பெற வேண்டும் என்பதற்காக தவம் செய்து கங்கையை பூவுலகிற்குக் கொண்டு வந்தான். சிவபிரான் கங் கையின் வேகத்தைத் தம் சடைகளில் அடக்கி பிறகு வெளியே விட்டார்.
 
அது இமயமலை வழியாக இறங்கி சமவெளிக்குப் பாய்ந்து பகீரதனின் பின்னால் போய் முடிவில் கடலில் கலந்தது. பகீரதனின் பின்னால் கங்கை சென்றபோது, தன் ஆசிரமத்தை அது நாசப்படுத்திவிடப் போகிறதே என எண்ணியவாறே ஜஹ்னு என்ற முனிவர் அதனைத் தடுத்து உள்ளங்கையில் எடுத்து உறிஞ்சிக் குடித்துவிட்டார்.
கங்கை தடுக்கப்பட்டது கண்டு பகீரதன் அந்த முனிவரை வேண்டி அவரிடமிருந்து கங்கையை அவரது காது வழியே வெளியே வரச் செய்தான். பகீரதன் கொண்டு வந்ததால் பாகீரதி என்றும் ஜஹ்னு முனிவர் காதிலிருந்து வந்ததால் ஜான்ஹவி எனவும் கங்கை பெயர் பெற்றது. கௌதமரின் பின் கங்கை சென்றாள். வழியில் பல கிளை நதிகள் ஏற்பட்டன.
 
கௌதமர் ஆசிரமத் திற்குப் போய் கங்கை விழுந்து கிடந்த பசுவின் மீது பாய்ந்து ஓடினாள். கௌதம ரின் ஆசிரமத்திலிருந்து வந்ததால் கௌதமி என்ற பெயரும் ஏற்பட்டது. பசுவோ உயிர் பெற்று ஆகாயத்தில் கிளம்பிப் போய் விநாயகராக உரு மாறி, "அம்மா, கங்கையே! என்னை மன்னித்துவிடு. உன் அமிர்தமயமான நீரை விந்திய மலைக்குத் தெற்கில் உள்ளவர்களும் ருசித்துப் பயன்பெற வேண்டும் என்றே இவ்வாறு செய்தேன். தட்சிண கங்கையாக அவதரித்த நீ பசுவை அதாவது கோமாதாவை உயிர்ப்பித்தாய். எனவே உனக்கு கோதாவரி என்ற பெயர் ஏற்படட்டும்," என்று கூறி மறைந்தார்.
 
கோதாவரி பல உபநதிகளைச் சேர்த்துக் கொண்டு கிழக்கு நோக்கிப் பாய்ந்து அப்பகுதியை செழிப்பாக் கியது. சப்தரிஷிகளும் தேவர்களும் அந்நதியில் நீராடினார்கள். அது கிழக்காகப் பாய்ந்து முடிவில் கடலை அடைந்தது. கங்கை கோதாவரியாக மாறிப் பாய்ந்தபோது கங்கையின் கூந்தல் சற்று மேற்குப் புறமாக விழுந்தது. விஷ்ணு தன் கைவிரலால் அக் கூந்தலின் சிக்கை எடுத்துவிடவே அது சற்றுத் தள்ளி விழுந்து கிருஷ்ண வேணி, கிருஷ்ணா நதி எனப் பெயர் பெற்று இன்னொரு நதியாகியது.
 
கங்கை ஆகாயத்தில் எழுந்து கிளம்பியபோது அதன் துளிகள் மேலும் தெற்கேயுள்ள கவேர மகா முனிவரின் ஆசிரமத்திலுள்ள கமண் டலத்தில் போய் விழுந்தது. அது ஒரு கன்னிப் பெண்ணாக வளர்ந்து அகத் திய முனிவரோடு காட்டில் திரிந்து காவேரி என்ற பெயரில் ஓடிக் கடலை அடைந்தது.
இவ்வாறு கௌதமர் அழைத்து வந்த கங்கை தென்பகுதியில் மூன்று பெரிய புண்ணிய நதிகளாகி அப்பகுதிகளை வளமிக்கதாகச் செய்தது. நதிகளில் நீராடப் போவோர் ஏழு நதிகளில் கங்கை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி என்பனவற்றையும் சேர்த்துக் கூறி ஸ்நானம் செய்வது வழக்கமாகிவிட்டது.
 
கௌதமரின் ஆசிரமம் மீண்டும் களைகட்டிவிட்டது. கோதாவரி நதிக்கரையில் பல புண்ணிய க்ஷேஷத்திரங்கள் தோன்றின. கௌதமர் மற்றொரு பகீரதனாகப் போற்றப்பட்டார். இந்திரன் கூட கௌதமர் செயற்கரிய செயலைச் செய்தார் எனப் புகழ்ந்து, தான் அவர் மீது துவேஷம் காட்டிய தற்காகத் தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.
 
கௌதமர் மனம் தான் ஒரு நிலை யில் இல்லை. தன் மனைவி அகலி கையை கல்லாகும்படி சபித்துவிட்டு வந்து தனியே வாழ மேற்குப் பகுதியில் ஆசிரமத்தை அமைத்திருந்தார். கோதாவரி வந்ததிலிருந்து அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாகி அவரது தனிமையையும் அமைதியான சூழ்நிலையையும் சீர்குலைத்து விட்டது. பல ஆசிரமங்கள் வேறு தோன்றின.
 
அத்திரி அனுசூயை அங்கு வாழ அவர்களது புண்ணிய பலத்தால் மேலும் அப்பகுதி வளமுற்றது. கௌதமருக்கும் தன்னோடு அக லிகை இல்லையே என்ற குறை மனதை வாட்டியது. தான் அவசரப்பட்டு தீர விசாரிக்காமல் அகலி கையை சபித்ததற்காக அவர் தன்னைத் தானே நோந்து கொண்டார்.
 
அப்போது விநாயகர் அவர் முன் தோன்றி "கௌதமரே! விரைவிலேயே விஷ்ணு ராமராக அவதரித்து அகலிகைக்கு சாப விமோசனம் அளிக்கப் போகிறார். கோதாவரி இங்கு வந்ததால் உமக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் விரைவில் மறையப் போகின்றன,"' என்றார். கௌதமரும், "விநாயகரே! எல்லாம் உன் திருவிளையாடல் தான்!" எனக் கூறி அவரை வணங்கி நின்றார்.
 

0 comments:

Post a Comment