யுத்த காண்டம் - 10

 
ஜாம்பவானின் உற்சாகத்தால் ஆகாயத்தில் கிளம்பிய அனுமார் இமயமலைப் பகுதியை அடைந்து அங்கு மூலிகைகள் எங்கே உள்ளது எனப் பார்க்கலானார். கடைசியில் எல்லா மூலிகைகளும் இருக்கும் மலையை அடைந்தார். அங்கு அவர் தான் விரும்பிய மூலிகைகளைத் தேடலானார். அம்மூலிகைகள் சட்டென கிடைக்கவில்லை. அவ்வளவு பரந்த மலைப்பரப்பில் அம்மூலிகைகளை எங்கே என்று தேடிக்கொண்டிருப்பது? மூலிகைகளையோ சட்டென எடுத்துக்கொண்டு இலங்கைக்குச் சென்றாக வேண்டும்.

அப்போதுதான் மயக்கமுற்றுக்கிடப்பவர்களை உணர்விற்குக் கொண்டுவர முடியும். அதற்கான வழி என்ன என யோசித்த அவர் ‘இப்படித் தேடுவதில் பயனில்லை. இந்த மலையையே பெயர்த்து எடுத்துச் செல்கிறேன்’ என்று மலையை அப்படியே தூக்கிக்கொண்டு திரும்பிச் செல்லலானார்.

மலையோடு வரும் அனுமாரை இலங்கையிலுள்ள வானரர்கள் கண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அனுமாரும் ‘ஆ!’ எனக் கூவியவாறே திரிகூட பர்வதத்தருகே தான் கொண்டு வந்த மலையை வைத்தார்.


இராமர், இலட்சுமணர் மற்றும் மயக்கமுற்று கிடக்கும் பல வானரர்கள் எல்லாரும் அம்மலையிலுள்ள மூலிகையில் இருந்து வரும் வாசனையை முகர்ந்தனர். சற்று நேரத்தில் யாவரும் மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்தனர். இராவணனோ இறந்த அரக்கர்களை எல்லாம் கடலில் எறிய ஏற்பாடு  செய்திருந்ததால் அவனது வீரர்கள் அம்மூலிகைகளால் சிறிதுகூட நன்மை பெறமுடியவில்லை.

 இதனால் வானரர்களுக்கே நன்மையாயிற்று. அனுமார் கொண்டு வந்த மூலிகைகளின் வாசனை பட்டதும் மயக்கமுற்றுக்கிடப்பவர்களும் குற்றுயிராகக்கிடப்பவர்கள்கூட உயிர் பெற்றுவிட்டனர். அரக்கர் தரப்பிலோ அவ்விதம் உயிர் பெற்று எழ யாருமே இல்லையே. இது வானரர்களுக்கு மகிழ்ச்சியையே அளித்தது.

வானரர்களுக்கு அம்மூலிகையில் ஆக வேண்டிய வேலை முடிந்ததும் அனுமார்  அம்மலையை எடுத்துப்போ இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு வந்தார். அப்போது  சுக்கிரீவன் அனுமாரிடம் "இராவணன் தன் வீரர்களையும் கும்பகர்ணனையும் இழந்து  விட்டதால் இனி போர் புரிய வரமாட்டான். இன்றிரவு நாம் இலங்கையைத் தாக்கலாம்"  என்றான்.

மாலையானதும் இலங்கையைத் தாக்க வானரர்கள் தயாரானார்கள். நகரைக் காவல் புரிந்த வீரர்கள் வானரர்களின் சத்தத்தையும், ஆரவாரத்தையும் கண்டு பயந்த ஓடிவிட்டனர்.  வானரர்கள் இலங்கை நகரில் நுழைந்து பல இடங்களில் நெருப்பு மூட்டினர். மாளிகைகள், கூட  கோபுரங்கள் தீக்கிரையாகின. பெரிய, பெரிய மாளிகைகள் சரிந்து விழலாயின. பல  விலையுர்ந்த பொருள்கள் நாசமாயின.


அத்தீயில் பல அரக்கர்கள் எரிந்து மடிந்தார்கள். அரக்கிகளின் கூக்குரல் நகரையே அதிர வைத்தது. குதிரைகளும், யானைகளும் மிரண்டுபோ கட்டை அறுத்துக் கொண்டு ஓடலாயின.  எரியும் இலங்கையின் உருவம் கடலில் பிரதிபலித்து கடலே தீப்பற்றி எரிகிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

வானரர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அரக்கர்களோ மனமொடிந்து போய் துயரக் கடலில் ஆழ்ந்து போயினர். இந்நிலையில் இராமரது பாணங்கள் விர்விர்ரென வந்து கொண்டிருந்தன. சுக்கிரீவன் வானரர்களை இராவணனது மாளிகையின் வாயிலுக்குப் போய் தாக்கி போர் புரியுமாறு கட்டளை இட்டான். வானரர்களும் அவனது மாளிகையைத் தாக்கலாயினர்.
 அதுகண்டு இராவணன் கோபம் கொண்டு அவ்வானரர்களை எதிர்க்க கும்பன், நிகும்பன் என்ற  இருவரை அனுப்பினான். அவர்கள் இருவரும் கும்பகர்ணனின் மைந்தர்கள். அவர்களும் பல  அரக்கர்களோடு வானரர்களை எதிர்க்கலாயினர்.

இம்முறை அரக்கர்கள் பயங்கரமாகத் தாக்கலாயினர். அவர்களுக்கு இறந்த வானரர்கள் வேறு  உயிர் பெற்று வந்து விட்டார்களே என்ற ஆத்திரம் இருந்தது. அரக்கர்கள் அழிந்துபோ  விட்டதை நினைத்து அவர்களும் பிழைத்துவர முடியாமற்போனதை எண்ண எண்ண அவர்களது கோபந்தான் அதிகரித்துக்கொண்டே போயிற்று. அதனால், அவர்களது தாக்குதல் மிகவும் கடுமையாகிறது.

பயங்கரப் போர் மூண்டது. பல அரக்கர்கள் மாண்டு வீழ்ந்தனர். அங்கதன் தீவிரமாகப் போர்  புரியலானான். கும்பனை சுக்கிரீவன் எதிர்த்துப் போர் புரிந்து அவனைக் கொன்றும் விட்டான்.  நிகும்பனை அனுமார் எதிர்க்கலானார். நிகும்பனும் சற்று நேரத்திற்கு எல்லாம் மடிந்து  போனான். இதனால் வானரர்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது போலாயிற்று.  இராவணனின் கோபமோ அதிகரித்தது. அவன் கரனின் மகனான மகராட்சனை அனுப்பினான்.  அவன் வானரர்களைத் துரத்தியடிக்கலானான். இது கண்டு இராமர் அரக்கர்களைத் தம்  பாணங்ளை விட்டுத் தடுத்து நிறுத்தினார்.

தன் தந்தையைக் கொன்ற இராமரைப் பழிக்குப் பழி வாங்க வேண்டுமென மகராட்சன்  துடித்தான். "உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று இராமரை நோக்கி அவன் சவால்  விட்டான். இராமரோ "பேசாதே. செய் கையில் காட்டு" எனக் கூறிவிட்டுப் போர் புரியலானார்.  மகராட்சன் தன் தேர்ப்பாகன், தேர் குதிரையென்று ஒவ்வொன்றாக இழந்து கொண்டே வரலானான். கடைசியில் இராமர் விட்ட அக்கினி அஸ்திரத்தால் அவன் அழிந்து போனான்.  அதைக் கண்டு அரக்கர்கள் அஞ்சி ஓடிப்போயினர்.

மகராட்சன் இறந்தது கேட்டு இராவணனன் கோபமடைந்து தன் மகனான இந்திரஜித்திடம் "நீ அந்த இராமனையும், இலட்சுமணனையும் எப்படியாவது  கொன்றுவிட்டு வா. உனக்கு இவர்கள் எம்மாத்திரம்?" எனக்கூறி அனுப்பினான்.
 இந்திரஜித்தும் "நீங்கள் சற்றும் கவலைப்படாதீர்கள். எனக்கு இந்த மானிடர்களை எதிர்த்துக் கொல்வது மிக எளிது. இனிமேல் நீங்கள் கவலையை விட்டொழியுங்கள். போரில் நமக்கே வெற்றி. நான் அவர்களைக் கொன்று விட்டே வருவேன். நீங்கள் இதில் சந்தேகமே கொள்ள வேண்டாம்" என்று கூறிவிட்டுச் சென்றான். இந்திரஜித் யாக சாலைக்குப் போ ஹோமம் செய்து  ஒரு கருப்பு ஆட்டைப் பலி கொடுத்தான். அக்கினியை மூட்டி அது நன்கு எரிவது கண்டு  தனக்கு வெற்றியே என எண்ணித் தன் தேரில் ஏறி போர்க்களத்திற்குச் சென்றான்.

அங்கு அவன் இராமரின் மீதும் இலட்சுமணனின் மீதும் அம்புகளைப் பொழியலானான். அவன்  மறைந்து இருந்து ஆகாயத்தியிலிருந்து அம்புகளை விட்டதால் இராமரும், இலட்சுமணனும்  அவனிருக்கும் இடத்தை அறிந்து கொள்ள முடியாது போயிற்று. எனவே, அவர்கள் இருவரும்  ஆகாயம் முழுவதிலுமே அம்புகளை எதனர். ஆனால், அதில் ஓர் அம்புகூட இந்திரஜித்தைத்  தாக்கவில்லை. 

இந்திரஜித் மாயமாக மறைந்து நின்று போர் புரிவதில் அதிசமர்த்தன். எனவே, அவன் எங்கே  இருந்து கொண்டு போர் புரிகிறானென்றுகூடக் கண்டுபிடிக்க முடியாது. நேருக்குநேர் நின்று போர் புரிந்தாலே அவனது தாக்குதலை சமாளிப்பது கஷ்டம். அப்படி இருக்க மறைந்திருந்த அவன் போர் புரிந்தால் அதனை முறியடிப்பது சுலபமா?

இந்திரஜித்தின் அம்புகள் வந்த திசையை நோக்கி இராமரும் இலட்சுமணனும் தம் அம்புகளை  எய்தனர். இந்திரஜித்தோ ஓரிடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் நகர்ந்தவாறே போர் புரிந்தான்.  இது கண்ட இலட்சுமணன் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகிக்கத் தயாரானான்.

அப்போது இராமர் "இவன் ஒருவனை அழிக்க பிரம்மாஸ்திரத்தை விட்டால் இன்னும் பலர்  அழிந்து போவார்கள். இவனை நம்மால் எப்படியும் கொல்ல முடியும்" எனக் கூறினார்.
 இதே சமயம் இந்திரஜித் சீதையைப்போல ஓர் உருவத்தை உண்டாக்கி ஒரு தேரில் அமர்த்தி வானரர்கள் பார்க்கும்படியாக அந்த மாய சீதையை வெட்ட முயன்றான். வானர சேனையில் முன்னதாக நின்று அனுமார் இந்திரஜித்தையும் மாய சீதையையும் கண்டார். இந்திரஜித் தன் வாளை எடுத்து அந்த மாய சீதையைத் தாக்க அவள் "ராமா, ராமா" என்று கத்தினாள்.

இந்திரஜித் செய்த இந்த தந்திரம் வானரர்களை ஒரு கலக்கு கலக்கிவிட்டது. சீதைக்காகத்தானே இந்தப்போர் நடக்கிறது. சீதையே இறந்து போய் விட்டால் இராமரும், இலட்சுமணரும் உயிர் வாழ்ந்து இருப்பார்களா? துயரத்தால் மனம் உடைந்து இறந்தே போய்விடுவார்கள். அப்போது இவ்வளவு நாள்களாக போர் புரிந்ததெல்லாம் வீண்தானே.

அனுமார் இந்திரஜித் முன்போ "ஏன் இப்படி சீதையை வதைக்கிறா? உனக்கு இவர் என்ன  கெடுதல் செய்தார்?" என்று கேட்டார். அதற்கு இந்திரஜித் "இவளால்தானே எங்கள் அரக்கர் குலமே அழிகிறது. இவள் ஒழியட்டும். இதற்குப் பிறகு நான் இராமனையும்,  இலட்சுமணனையும் கொன்று விடுகிறேன். அப்புறம் அந்தக் கோடரிக் காம்பு விபீஷணன் என்  அம்பிற்கு இரையாவான்" எனக் கூறியவாறே மாய சீதையை அவன் வெட்டினான்.

பின்னர் அவன் "சீதை ஒழிந்தாள். இவ்வளவு பாடுபட்டு போர் புரிந்ததால் உங்களுக்கு இனி என்ன பயன்?" என்றான். அப்போது அனுமார் மிகுந்த ஆத்திரமடைந்து இந்திரஜித்தைத் தாக்கலானார். சீதையோ இறந்தாகிவிட்டது. இனி போர் புரிவதால் என்ன பயன்? என எண்ணி இந்த சமாசாரத்தை இராமரிடம் தெரிவிக்கச் சென்றார். வானரர்களும் அவர் பின்னால் போகவே இந்திரஜித் யாகம் செய்ய நிகும்பலைக்கு சென்றான். இராமர் அனுமார் போர் புரியும் இடத்திலிருந்து ஒரே கூச்சல் வருவது கேட்டு ஜாம்பவானை  அங்கே அனுப்பினார். ஜாம்பவான் அங்கு செல்லும் வழியில் அனுமார் திரும்பி வருவதைக்  கண்டான்.

அனுமார் நேராக இராமரிடம் போ இந்திரஜித் சீதையை வெட்டியதைத் தானே கண்டதாகச் சொன்னார். அது கேட்ட இராமர் வேரறுந்த மரம்போல் விழுந்துவிட்டார். வானரர்கள் யாவரும் ஓடி  வந்தனர். இராமரது மயக்கத்தைப் போக்கினர். இலட்சுமணன் இராமருக்கு ஆறுதல்  மொழிகளைக் கூறித் தேற்றலானான்.

அப்போது அங்கு வந்த விபீஷணன் "இதென்ன. இதை  நீங்கள் நம்பி விட்டீர்களே. இது இந்திரஜித்தின் மாயவேலை. சீதையை உங்களிடம் ஒப்படைக்க விரும்பாத இராவணன் அவளது அழிவைச் சகிப்பானா? இப்போது அவன்  தனக்குப்போரில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக நிகும்பலைக்குப் போய் ஹோமம்  வளர்த்துக் கொண்டு இருக்கிறான். அதற்கு பங்கம் ஏற்படக்கூடாதென்பதற்காக உங்களை  ஏமாற்றி இப்படித் திட்டமிட்டிருக்கிறான்.

அந்த யாகம் முடிவுபெற்றால் அவனை யாராலும்  வெல்ல முடியாது. எனவே நிகும்பலைக்குப் போய் அந்த யாகம் பூர்த்தியாக விடாமல் செய்ய வேண்டும். நான் இலட்சுமணனை அழைத்துப் போகிறேன். இதில் தாமதம் செயக் கூடாது"  என்றான்.

0 comments:

Post a Comment

Flag Counter