உங்களுக்கும் இதுவே!

 
பிரம்மதத்தன் காசியை ஆண்டபோது போதிசத்வர் ஒரு குடியானவனின் வீட்டில் பிறந்தார். அவரது பெற்றோர் அவரை அருமை பெருமையாக வளர்த்து வந்தார்கள். அவனை அவர்கள் ஆசையுடன் கூப்பிடுவதற்கு கமலாகரன் என்ற பெயரையும் வைத்தார்கள்.
 
கமலாகரன் சிறு வயதிலேயே மாபெரும் அறிஞனாகத் திகழ்ந்து வந்தான். அவனுக்குத் தன் தாத்தாவின் மீது அளவு கடந்த பாசம் இருந்தது. அந்தத் தாத்தா மிகவும் வயதானவர். அவரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. அவருக்கு மற்றவர்கள் பணிவிடை புரிய வேண்டி இருந்தது. அவ்வாறு அவனுக்குப் பணிவிடை செய்வது கமலாகரனின் தாய்க்கு மிகவும் தொல்லையாக இருக்கவே அவள் கிழவருக்குச் சாவு வராதா என்று தினமும் பலமுறை சொல்வாள்.
 
ஒருநாள் அவள் தன் கணவனிடம் "என்னால் இந்தக் கிழத்திற்குப் பணிவிடை செய்ய முடியவில்லை. இவர் எப்போதுதான் சாவாரோ? எனக்குத் தொல்லை கொடுக்கவே இவர் தம் உயிரைப் பிடித்துக் கொண்டு இன்னமும் பல வருடங்கள் இருப்பார் போலிருக்கிறது. எல்லாம் என் தலைவிதி" என்றாள்.
 
இதைக் கேட்டு கமலாகரனின் தந்தை "அப்படியானால் என்ன செய்வது? அவரைக் கொன்று போட்டு விடலாம் என்றா சொல்கிறாய்?" என்று கேட்டார்.
 
"அப்படிக் கொன்றால்கூட நல்லதுதான். என் தொல்லைகளுக்கு ஒரு விடிவு காலம் வரும்" என்றாள் கமலாகரனின் தாய்.
 
அந்தக் குடியானவன் அப்போது தன் தந்தையை எப்படிக் கொல்வது என்று தயங்கினான். ஆனால் அவனது மனைவி தினமும் அவனது தந்தையைப் பற்றிக் குறை கூறிக் கொண்டே இருந்தார்.
முடிவில் அவனது மனைவியின் போதனை தலைக்கு ஏறியது. தன் தந்தையை யாருக்கும் தெரியாத இடத்திற்கு அழைத்துப் போய் கொன்று புதைத்துவிட்டு வருவது என்று அவன் தீர்மானித்துக் கொண்டான்.
 
மறுநாள் அவன் தந்தையிடம் "அப்பா! அடுத்த ஊர்க்காரரிடம் நம் விவசாயத்திற்காகக் கடன் கேட்டுஇருந்தேன். நீங்கள் வந்து சொன்னால்தான் அவர் கொடுப்பாராம். ஆகையால் நீங்கள் என்னுடன் வரவேண்டும் வாருங்கள். நாம் இருவரும் நம் வண்டியில் போய் வரலாம்" எனக் கூறித் தன் வண்டியை ஓட்டி வந்தான்.
 
கிழவர் வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் கமலாகரனும் தன் தாத்தாவுடன் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டான். யார் என்ன சொல்லியும் அவன் கேட்கவில்லை. குடியானவன் வேறு வழியின்றி தன் தந்தையையும் மகனையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு சொன்றான்.
 
அவர்கள் போகும் வழியில் ஒரு காடு இருந்தது. குடியானவன் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தித் தன் தந்தையிடம் "இதோ ஒரு நிமிடத்தில் வருகிறேன்" எனச் சொல்லிவிட்டு வண்டியிலிருந்து ஒரு கடப்பாரையை எடுத்துக் கொண்டு சற்று தூரத்திலுள்ள ஒரு பெரிய மரத்தின் பின்னால் சென்றான்.
 
தன் தந்தை சென்றதும் கமலா கரனும் வண்டியிலிருந்து இறங்கி "தாத்தா! நானும் ஒரு நிமிடத்தில் வருகிறேன்" எனக் கூறி மற்றொரு கடப்பாரையை வண்டியில் இருந்து எடுத்துக் கொண்டு தன் தந்தை சென்ற மரத்தின் பின்னால் சென்றான்.
 
அங்கு அவர் தன் தந்தை குழி தோண்டுவது கண்டு சற்று தூரம் தள்ளித் தானும் குழி தோண்டலானான்.
 
அது கண்டு குடியானவன் "நீ ஏன் குழி தோண்டுகிறாய்?" என்று கேட்க அதற்கு அவன் "நீங்கள் எதற்காகத் தோண்டுகிறீர்களோ அது போன்ற வேலைக்காகத்தான்" என்றார்.
 
அதற்குக் குடியானவன் என் தந்தைக்கு வயதாகிவிட்து. அவர் திடீரென இறந்து விட்டால் அவரைப் புதைக்க வேண்டுமே என்பதற்காகத்தான் நான் இங்கு குழி தோண்டிக் கொண்டிருக்கிறேன்" என்றான்.
 
கமலாகரனும் "அவர் இன்னமும் இறக்கவில்லையே! உயிருடன் தானே இருக்கிறார்" என்று கேட்க, அதற்கு குடியானவன் "உயிர் என்றென்றும் நிலைத்து இருக்காது? எந்த நிமிடத்திலும் போய்விடுமே" எனவே போதிசத்வரும் "நீங்கள் உங்கள் தந்தையைப் புதைக்கக் குழி தயார் செய்வதுபோல நானும் உங்களைப் புதைக்க இந்தக் குழி தோண்டுகிறேன்" என்றார்.
 
குடியானவன் திகைத்துப் போனான். வெட்கத்தால் தலைகுனிந்து தன் மகனை அழைத்துக் கொண்டு வண்டியில் ஏறி அதைத் திருப்பித் தன் ஊருக்கே ஓட்டினான். வண்டி வீட்டு வாசலில் நின்றதும் குடியானவன் நடந்ததை தன் மனைவியிடம் கூறவே அவள் "நீங்கள் அருமை பெருமையாக வளர்த்த உங்கள் மகனா உங்களைப் புதைக்க குழி தோண்டினான்! என்ன அநியாயம்" என்றாள்.
 
அதற்குக் குடியானவன் "என்னை என் தந்தை ஆசையுடன் வளர்த்தாரே, அவருக்கு நான் குழி தோண்டவில்லையா? நம் மகன் எனக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுத்தான்" எனக் கூறி அன்றில் இருந்து அவன் கமலாகரன் கூறும் அறிவுரைகளை எல்லாம் ஏற்று நடந்து வரலானான்.
 

0 comments:

Post a Comment

Flag Counter