மகான் சீலவாணர்


 

பிரம்மதத்தர் காசியின் மன்னராக இருந்தபோது, அவருக்குப் புதல்வராக போதிசத்வர் அவதரித்தார். அவருக்கு சீலவாணர் என்ற பெயரிடப்பட்டது.

சிறுவயது முதல் ராஜŽக விஷயங்களிலும் தர்மசாஸ்திரங்களிலும் நன்கு பயின்று தேர்ச்சி அடைந்திருந்த சீலவாணர் பிரம்மதத்தருக்குப்பின் காசியின் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். தனது குடிமக்களை உயிரினும் மேலாக நேசித்து, அவர்களுடைய நல்வாழ்வே தனது லட்சியமாகக் கொண்டு ஆட்சி புரிந்தார். குற்றவாளிகளைக் கூட கருணையுடன் நடத்தினார். அவர்களுக்குத் தண்டனை அளித்து மேலும் துன்புறுத்தாமல், அவர்கள் மனம் திருந்தி நல்வாழ்வு வாழ வகை செய்தார்.  தவறு செய்பவர்களுக்கு அறிவுரை கூறி அவர்கள் மீண்டும் தவறு செய்யாதவாறு நல்வழிப்படுத்தினார். இத்தகைய செயல்களினால், காசியில் குற்றம் புரிபவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

ஆனால் சீலவாணரின் இரக்க சுபாவத்தைக் கண்ட கோசல நாட்டு மந்திரி அது அவருடைய பலவீனத்தைக் காட்டுவதாகப் பொருள் கொண்டான். காசி ராஜ்ஜியத்தின் மீது படை எடுத்தால் எளிதில் வென்று விடலாம் என்று மனப்பால் குடித்த மந்திரி தன் மன்னரிடம் காசியின் மீது படைஎடுத்துக் கைப்பற்றுமாறு கூறி வந்தான்.

ஆனால் கோசல ராஜாவிற்கு மந்திரியின் வார்த்தைகளில் முழு நம்பிக்கை உண்டாகவில்லை. உண்மையை அறிவதற்காக தன்னுடைய சில வீரர்களை கிராமங்களில் கொள்ளை அடிக்க காசிக்கு அனுப்பி வைத்தான். அதன்படியே கோசல நாட்டு வீரர்கள் காசியின் கிராமங்களைக் கொள்ளைஅடிக்க முயன்ற போது கிராமத்து மக்கள் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து சீலவாணரின் முன்னே நிறுத்தினர்.

ஆனால் அவரோ அவர்களுக்கு அறிவுரைக் கூறி பணம் கொடுத்து அனுப்பினார். தகவல் அறிந்த கோசல ராஜா வியப்புற்றார். சீலவாணர் தைரியமற்றவர் என்று அவரும் தப்புக்கணக்குப் போட்டார்.

 இன்னொரு முறை சீலவாணரின் தைரியத்தை சோதிக்கலாம் என்று எண்ணி, மீண்டும் தனது வீரர்களை காசிக்கு கொள்ளைஅடிக்க அனுப்பி வைத்தார். அவர்கள் பொதுமக்களிடம் பிடிபட, இந்த முறையும் சீலவாணர் அவர்களை மன்னித்துப் பொருளுதவி செய்து அனுப்பினார்.  இதன் பிறகு, சீலவாணர் ஒரு கோழை என்று கோசல ராஜா முடிவாகத் தீர்மானம் செய்தார். காசியைக் கைப்பற்றத் திட்டமிட்டு ஒரு பெரும் படையுடன் முற்றுகையிட்டான்.

எதிரிகள் புகாமல் கோட்டை வாயிலை மூடிய பிறகு, காசி நாட்டு வீரர்கள் விரைந்து சென்று சீலவாணரிடம் "அரசே, கோசல மன்னர் நம்மீது படையெடுத்துள்ளார். நமது கோட்டையை முற்றுகையிட்டுஇருக்கிறார். தாங்கள் அனுமதி அளித்தால் அவர்களுடன் நேருக்கு நேர் மோதி சின்னா பின்னமாக்குவோம்," என்றனர்.

சீலவாணர் போரிட விரும்பவில்லை. தன் படைவீரர்களிடம் அமைதியாக "அவர்களுக்கு இந்த நாடு வேண்டுமெனில் அவர்களே எடுத்துக் கொள்ளட்டும். கோட்டை வாயிலைத் திறந்து விடுங்கள்" என்றார்.

உடனே ஒரு தூதுவன் மூலம், "காசி உங்களை வரவேற்கிறது. பகைவனாக இல்லை, நண்பனாக வாருங்கள்!" என்று செய்தி அனுப்பினார். போரிட பயந்து கோழையாக சீலவாணர் சரணாகதி அடைந்து விட்டார் என்று எண்ணிய கோசல ராஜா தன் படையுடன் அட்டகாசமாக காசி நகரில் நுழைந்தான். நேராக சீல வாணரின் சபையை அடைந்தான். சீலவாணரையும், மற்ற படைத்தலைவர்கள் மந்திரிகளைக் கைது செய்ய உத்தரவிட்டு அவர்களுடைய ராஜாங்க உடைகள் மணி முடி ஆகியவற்றைக் கைப்பற்றச் செய்தான்.

"உங்களை நண்பர்களாகவே கருதுகிறோம். ஆகவே நீங்கள் எங்களை இவ்வாறு நடத்துவது சரியல்ல. நாங்கள் நாட்டை விட்டுச் செல்கிறோம்!" என்று சொல்லிவிட்டு சீலவாணர், மந்திரிபிரதானிகள் புடைசூழ நாட்டை விட்டு வெளியேறினார்.

காசியை விட்டு வெளியேறிய சீலவாணர், தன் மந்திரிகள் சூழ காட்டினை அடைந்தார். அன்றிரவு எதுவும் உண்ணாமல் களைப்புடன் அவர்கள் அனைவரும் காட்டிலேயே படுத்து உறங்கினர். திடீரென நடு இரவில் மனிதர்களின் கூக்குரல்களும் காலடிச் சத்தமும் கேட்டு, சீலவாணரும் உடனிருந்தவர்களும் விழித்துக் கொண்டனர். விழித்தவர்கள் கண்களில் ஒரு கொள்ளைக்கூட்டம் தென்பட்டது.

 கொள்ளையர் தலைவன் பணிவுடன் சீலவாணரை அணுகி, "மகாராஜா, நாங்கள் ஒரு காலத்தில் கொள்ளைக்காரர்களாக இருந்தோம். தங்களது ஒப்பற்ற கருணையினாலும், தாங்கள் எங்கள் மீது காட்டிய அன்பினாலும் மனம் திருந்தி திருட்டுத் தொழிலையே விட்டுவிட்டு அமைதியாக வாழ்க்கை நடத்தினோம்.

ஆனால் கயவனான கோசல மன்னன் அநியாயமாகத் தங்களை விரட்டி விட்டது குறித்து, எங்கள் உள்ளம் கொதிக்கிறது. நாங்கள் மீண்டும் கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டோம். இன்று அரண்மனையைக் கொள்ளையடித்து தங்களுடைய உடை, ஆபரணங்கள், மணிமுடி ஆகியவற்றை கவர்ந்து வந்துள்ளோம். கஜானாவில்இருந்து பணமும் கொள்ளையடித்தோம். நீங்கள் இவற்றை அணிந்து கொள்ளுங்கள். உங்களுக்காக நாங்கள் கொண்டு வந்துள்ள உணவை உண்ணுங்கள்," என்று கூறினான்.

"நீங்கள் செய்தது தவறு. கோசல மன்னர் இன்றுதான் நமது நாட்டில் பதவி ஏற்றுள்ளார். அவரிடம் உங்கள் துன்பங்களை எடுத்துரைத்தால், அவர் உங்களுக்கு உதவி செய்வார். அவருக்கு அந்த வாய்ப்பைத் தராமல், நீங்கள் பழைய தொழிலுக்குத் திரும்பியது சரியல்ல! அவரிடம் உங்கள் நிலைமையை எடுத்துக்கூறி உங்கள் நல்வாழ்விற்கு உதவி கேளுங்கள்" என்றார் சீலவாணர்.

"அவன் ஒரு கயவன். உங்களை நயவஞ்சகமாக நாட்டை விட்டுத் துரத்திய அவன் மீது நாங்கள் எப்படி நம்பிக்கை வைப்போம்? அவனை அரசனாக நாங்கள் மதிக்கவில்லை. நீங்கள் தான் எங்கள் மதிப்பிற்குரிய மன்னர்!" என்றனர் கொள்ளையர்கள்.

ஆனால் சீலவாணரோ, "அந்தப் பணத்தை என்னிடம் கொடுங்கள். நான் நாளைக்கே அவரிடம் சென்று திருப்பிக் கொடுத்து விடுகிறேன். உங்களுக்கு ஒரு நல்வாழ்வு அமைத்துத்தர அவரை  நானே வேண்டுகிறேன். நீங்களும் என்னுடன் வாருங்கள்" என்றார்.

மறுநாள் சீலவாணர், தனது மந்திரிகளும், கொள்ளைக்காரர்களும் புடைசூழ சபையை அடைந்தார். சீலவாணரைக் கண்டதும், கோசல மன்னன் வியப்படைந்தான். கஜானாப் பணத்தைத் திருப்பிக் கொடுத்த சீலவாணர் முதல் நாளிரவு நடந்த விஷயங்களை விளக்கி விட்டு, "கோசல மன்னரே! நீங்கள் என்னைவிட நேர்மையாகவும் நியாயமாகவும் அன்புடனும் கருணையுடனும் ஆட்சி நடத்துவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் என்னுடைய நாட்டின் ஆட்சிப் பொறுப்பைத் தங்களிடம் ஒப்படைத்தேன்.

ஆனால் பாவம் இந்தக் கொள்ளைக்காரர்கள் தங்களுடைய நல்ல இதயத்தை அறியாமல் அவசரப்பட்டு அரண்மனையில் கொள்ளையடித்து விட்டனர். அதைத் திருப்பிக் கொடுப்பதுடன், இவர்களுக்கு உதவி செய்து நல்வாழ்க்கை வாழ அனுமதியுங்கள். இதுவே என் பிரார்த்தனை!" என்றார்.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும், கோசல மன்னனின் இதயம் அனலிலிட்ட மெழுகாய் உருகியது. தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து சீலவாணரின் கால்களில் விழுந்து வணங்கினான். "சீலவாணரே! கொள்ளைக்காரர்கள் கூட உங்களை நேசிக்கிறார்கள் என்றால் நீங்கள் எவ்வளவு உத்தமமானவர்!

உங்களிடம் நான் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து விடுங்கள். உங்களது ராஜ்ஜியத்தை நீங்களே பெற்றுக் கொண்டு ஆட்சி செய்யுங்கள். எனக்கு உங்களுடைய ராஜ்ஜியம் வேண்டாம், உங்களுடைய நட்பு ஒன்றே போதும்!" என்று கண்ணீர் மல்கக் கூறினான் கோசல மன்னன். மீண்டும் சீலவாணர் காசிக்கு ராஜாவானார். கோசல மன்னனை சகல மரியாதைகளுடன் அவன் நாட்டிற்கு வழி அனுப்பினார்.

 

0 comments:

Post a Comment