வேலைக்காரியின் மகன்


 

பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் ஒரு பெரிய பணக்கார வீட்டில் பிறந்தார். அவர் வளர்ந்து பெரியவராகி மணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அது சமயம் அவரது வீட்டு வேலைக்காரிக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு கடாஹகன் என்று பெயர் வைத்தார்கள்.

போதிசத்வரின் மகனோடு கடாஹகனும் சேர்ந்து இருக்கலானான். அவன் பள்ளிக்கூடம் போகும்போது கடாஹகனும் சென்று அவன் கற்றதை எல்லாம் கற்றுக் கொண்டான். கடாஹகனின் அறிவுக் கூர்மையை எல்லாரும் பாராட்டினர்.
ஆனால் கடாஹகனுக்கு தான் ஒரு வேலைக்காரனைப் போல இருப்பது பிடிக்கவில்லை. தானும் போதிசத்வரின் மகனைப் போல கௌரவமும் அந்தஸ்தும் பெற்று வாழ வேண்டும் என நினைத்தான். அதற்கு அவனுக்கு ஒரு வழி தெரிந்தது.

காசியிலிருந்து சற்று தொலைவில் பிரதியந்தம் என்ற நாட்டின் தலைநகரில் போதிசத்வரின் நண்பர் ஒருவர் இருந்தார். அவர் லட்சாதிபதி. தன் எசமானர் போதிசத்வர் எழுதியதுபோல கடாஹகன் அவருக்கு ஒரு கடிதம் எழுதினான். அது பின் வருமாறு இருந்தது.

"நான் என் மகனை உங்களிடம் அனுப்பி இருக்கிறேன். நாம் சம்மந்திகளாகலாம் என நான் விரும்புகிறேன். எனவே தாங்கள் தங்களது மகளை என் மகனுக்கு மணம் செய்து வைத்து அவனையும் தங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள். நான் பிறகு வந்து தங்களை சந்திக்கிறேன்." இப்படி எழுதிய கடிகத்தில் கடாஹகன் தன் எசமானரான போதிசத்வரின் முத்திரையிட்டு எடுத்துக் கொண்டான். தன் எசமானனின் இரும்புப் பெட்டியிலிருந்து தனக்கு வேண்டிய பணத்தையும் எடுத்துக் கொண்டு அவன் பிரதியந்த நாட்டின் தலைநகரை அடைந்து போதிசத்வரின் நண்பரான லட்சாதிபதியிடம் கடிதத்தைக் கொடுத்தான்.

 லட்சாதிபதியும் அக்கடிதத்தைப் படித்து விட்டு மகிழ்ந்து போனார். கடாஹகனுக்குத் தன் மகளை மணம் செய்து வைத்துத் தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டார்.

கடாஹகனுக்கு நல்ல உணவும் ஆடைகளும் கிடைத்தன. இவ்வளவு சுகபோகங்கள் இருந்தும் கடாஹகன் "சீச்சீ! இதென்ன சாப்பாடு! இவை என்ன ஆடைகள்! இவ்வளவு அநாகŽகமானவர்களை எங்குமே பார்த்ததில்லை" என கூறி எல்லார் மீதும் எரிந்து விழுவான்.

போதிசத்வர் திடீரென கடாஹகன் காணாமற்போனது கண்டு அவனைத் தேடப் பலரை அனுப்பினார். அவர்களில் ஒருவன் பிரதியந்த நாட்டின் தலைநகருக்கு வந்தான். அங்கு கடாஹகனைப் பற்றி கிடைத்த தகவலை அவன் போதிசத்வருக்குத் தெரிவித்தான். அவர் மிகவும் வருந்தினார்.

பின்னர் தானே நேரில் போய் கடாஹகனை அழைத்து வரத் தீர்மானித்து அவர் பிரதியந்த நாட்டிற்குக் கிளம்பினார். தன் எசமானர் வருகிறார் என்ற செய்தி கேட்டு கடாஹகன் நடுநடுங்கினான். எங்காவது ஓடிப் போய் விடலாமா என எண்ணினான். அதனால் தனக்கு எவ்விதப் பயனும் இல்லை எனக் கண்டு தன் எசமானரிடமே எல்லாம் சொல்லி மன்னிப்பு கோருவது எனத் தீர்மானித்தான். அவன் தன் மாமனாரிடம் போய் "என் தந்தை இங்கே வரப் போகிறாராம். நான் போய் அவரை அழைத்து வருகிறேன்" என்றான். லட்சாதிபதியும் அவனை அனுப்பி வைத்தார்.

கடாஹகன் தன் எசமானரான போதிசத்வரை சந்தித்து அவரிடம் தான் செய்தது எல்லாம் தவறு என்றும் தன்னைக் காப்பாற்றும்படியும் வேண்டினான். போதிசத்வரும் அதற்கு சம்மதித்தார்.

கடாஹகனுடன் போதிசத்வரைக் கண்ட லட்சாதிபதி மிகவும் மகிழ்ந்து "தாங்கள் எழுதியபடியே தங்கள் மகனுக்கே என் மகளை திருமணம் செய்து வைத்து இங்கேயே வைத்துக் கொண்டேன்" என்றார். போதிசத்வரும் மிகவும் திருப்தி அடைந்தவர் போல காட்டிக் கொண்டார். கடாஹகனிடம் தன் மகனிடம் பேசுவது போலப் பேசினார்.

பின்னர் அவர் லட்சாதிபதியின் மகளிடம் தனிமையில் "என்னம்மா! என் மகன் உன்னை சரியாக கவனித்துக் கொள்கிறானா?" என்று கேட்டார். அவளும் "அவரிடம் ஒரே ஒரு குறைதான் உள்ளது. சாப்பாட்டிற்கு உட்கார்ந்தால் எதுவும் ருசியாக இல்லை என்று கோபித்துக் கொள்கிறார். அவரை எப்படித் திருப்தி படுத்துவது என்று தான் தெரியவில்லை" என்றாள். அப்போது போதிசத்வர் "கவலைப் படாதே. நான் ஒரு சமஸ்கிருத சுலோகம் சொல்லிக் கொடுக்கிறேன். அதை நீ மனப்பாடம் செய்து கொள். உன் கணவன் சாப்பிடும் போது கோபித்துக் கொண்டால் இந்த சுலோகத்தை உரக்கச் சொல். அவன் அடங்கிப் போவான்" எனக் கூறி ஒரு சுலோகத்தையும் சொல்லிக் கொடுத்தார்.

அந்த சுலோகத்தின் உட்கருத்து கடாஹகன் பல கட்டங்களில் வசைவுகள் பெற்று வேறு இடத்திற்கு ஓடிப்போய் பொய் சொல்லி பிறரைத் தூற்றிக் கொண்டே சகல சுகபோகங்களையும் உட்கார்ந்த இடத்திலேயே அனுபவிக்கிறான் என்று பொருள். அவன் மனைவிக்கு சமஸ்கிருதம் தெரியாததால் அதன் பொருள் தெரியவில்லை.

போதிசத்வர் சில நாள்கள் இருந்துவிட்டுக் காசிக்குக் கிளம்பிவிட்டார். கடாஹகன் முன்போல சாப்பிடும்போது கோபித்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யலானான். இரண்டு நாள்கள் பொறுத்த அவனது மனைவி மூன்றாவது நாள் தனக்கு போதிசத்வர் கற்றுக் கொடுத்த சுலோகத்தை உரக்கக் கூறினாள்.

அதைக் கேட்ட கடாஹகனின் சப்தநாடியும் ஒடுங்கி விட்டது. அதன் பொருளை அவன் அறிவான். எனவே போதிசத்வர் எல்லாவற்றையும் தன் மனைவியிடம் கூறி விட்டார் என நினைத்து அவன் தலைகுனிந்து கொண்டான். அதற்குப் பிறகு அவன் மனைவி எதைப் பரிமாறினாலும் அவன் கோபிக்காமல் திருப்தியுடன் சாப்பிட்டான்.

 

0 comments:

Post a Comment