தந்தைக்கு குழந்தை பிறந்தது

அக்பர், பீர்பாலிடம் ‘நான் மருந்து சாப்பிட்டு வருகிறேன்; காளை மாட்டுப்பாலில் கலந்து சாப்பிடுமாறு மருத்துவர் கூறுகிறார் ஆகையால், எனக்குக் காளை மாட்டுப் பால் வேண்டும், என்று கூறினார்.

அப்படியே ஏற்பாடு செய்வதாகவும் அதற்கு ஒரு வாரம் அவகாசம் தேவைப்படும் எனவும் கூறினார் பீர்பால்.

‘எத்தனை நாளானாலும் சரி, எனக்குக் கிடைத்தால் போதும்’ என்றார் அக்பர்.
வீட்டுக்கு வந்தார் பீர்பால்; தம் மகளை அழைத்து ஏதோ சொல்லிவிட்டு, யார் என்ன கேட்டாலும் பதில் சொல்ல வேண்டாம் எனவும் அரசர் கேட்பதற்கு மட்டும் பதில் கூறுமாறும் சொல்லி அனுப்பினார்.

அக்பர் அரண்மனைக்கு அருகிலுருந்த யமுனை ஆற்றங் கரைக்குச் சென்று, துணிகளைப் படார், படார் என அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தாள். துவைக்கும் சத்தத்தில் அக்பரின் நித்திரை கலைந்தது; சேவகர்களை அனுப்பி துணிதுவைக்கும் நபரைக் கைது செய்து வருமாறு கட்டளையிட்டார்.

சேவகர்கள் சென்று பார்த்தார்கள்; பெண்ணொருத்தி துணிதுவைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். ‘இந்த அகால வேளையில், துணிதுவைத்து அரசரின் நித்திரையைக் கெடுத்து விட்டாயே நீ யார்’ என விசாரித்தார்கள்.
பதில் ஏதும் சொல்லாமல் அந்தப் பெண் மெளனமாயிருந்தாள். அவளைக் கைது செய்து அரசர் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

கோபத்தோடு இருந்த அக்பர் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அமைதியாக, ‘உன்னைப்பார்த்தால் வண்ணாத்தி போலத் தோன்றவில்லையே? ஏன் இந்த இரவு வேளையில் இங்கே வந்து துவைக்கிறாய்? நீ யார்? எங்கே வசிக்கிறாய்?’ எனப் பலவாறு கேட்டார் அரசர்.

பதில் கூறாமல் நின்று கொண்டிருந்த பெண்ணை நோக்கி, ‘நீ செய்த குற்றத்தை மன்னித்து விடுகிறேன்; வாய் திறந்து பேசு; உண்மையைக் கூறு’ என வற்புறுத்திக் கேட்டார் அரசர்.

‘அரசே, என் தகப்பனாருக்கு இன்று ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது; அதனால், பகல் முழுதும் எனக்கு வீட்டில் வேலை அதிகமாக இருந்தபடியால், இப்பொழுதுதான் எனக்கு ஓய்வுகிடைத்தது; அதனால் இங்கே வந்து துவைத்தேன்’ என்றாள் அந்தப்பெண்.

‘என்ன சொன்னாய்? உன் தகப்பனாருக்குக் குழந்தை பிறந்ததா?’ என வியப்போடு கேட்டார் அரசர். ‘காளை மாட்டுப் பால் கிடைப்பது சாத்தியமானால், ஆணுக்குக் குழந்தை பிறக்க முடியாது என எவ்வாறு கூறமுடியும்?’ என்று திருப்பிக் கேட்டாள் அவள்.

இந்தப்பெண் பீர்பால் மகள் என்பது, அவள் சொற்களிலிருந்து புலப்படுகிறது என்பதை அக்பர் உணர்ந்து விட்டார்.

காளை மாட்டுப் பால் கொண்டு வரும்படி பீர்பாலைக் கேட்டதை நினைவுகூர்ந்தார். மேலும் அந்தப் பெண்ணைப் பார்த்து ‘நீ பீர்பாலின் மகள்தானே?’ எனக் கேட்டார்.

‘ஆம், அரசே! என் தந்தையின் சொற்படியே நான் இங்கே வர நேர்ந்தது’ என்பதை விவரமாகக் கூறினாள்.

அக்பர் தன் தவறை உணர்ந்ததோடு, தந்தையையும் மகளையும் வியந்து புகழ்ந்தார்.

0 comments:

Post a Comment

Flag Counter