பீர்பாலும் அக்பரும்


டில்லி வந்து சேர்ந்த பீர்பால், புரோகிதர் தொழில் செய்து பிழைப்பு நடத்தினார்.
நாளடைவில் நகைச்சுவை கலந்த தன் பேச்சுத் திறத்தாலும், அறிவாற்றலாலும் டில்லி மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றார்.

இவரது புகழ் அக்பர் சக்கரவர்த்தியின் காதிலும் விழுந்தது.
ஒரு நாள் அக்பரது பணியாள் அக்பருக்கு தாம்பூலம் கொடுக்கும் போது வெற்றிலையில் சுண்ணாம்பைச் சிறிது அதிகம் சேர்த்து விட்டான்.

அதை வாங்கி மென்ற சக்கரவர்த்தியின் வாயும், நாக்கும் எரிச்சலாகி புண்ணாகிவிட்டது. இதனால் கோபமடைந்த சக்கரவர்த்தி பணியாளுக்கு ஒரு விசித்திரமான தண்டனை வழங்கினார்.

பணியாளன் தானே கடைக்குப் போய் கால் படி சுண்ணாம்பு வாங்கி, அதை நீரில் கரைத்து முழுவதையும் வன் குடிக்க வேண்டும் என்பதே அவனுக்கிடப்பட்ட ஆணை.

மன்னரின் உத்தரவை மறுக்க வழியின்றி கண் கலங்கி, நொந்து போய் கடைக்குச் சென்று சுண்ணாம்பு வாங்கிக் கொண்டிருந்த பணியாளை அவ்வழியாக வந்த பீர்பால் கண்டார்.

அவனுடைய வருத்தமுற்ற முகத்தைக் கண்ட பீர்பால் அதற்கான காரணத்தை விசாரித்தார். அவனும் விபரம் கூறினான். அவனுக்கு ஆறுதல் கூறி அவனைத் தேற்றிய பீர்பால், மன்னரின் தண்டனை மிகக் கொடுமையானது என்றாலும் அதிலிருந்து மீண்டு விடுவதற்கான வழி ஒன்று இருக்கிறது என்று கூறி, அரசரின் எதிரில் சுண்ணாம்பு நீரைக் குடித்த பிறகு வெளியே வந்து, குடித்த நீரின் அளவுக்கு நெய்யைக் குடித்து விடும்படி யோசனை கூறி அனுப்பினார்.

பீர்பாலின் யோசனைப்படியே நடந்து கொண்டான் பணியாள். காரமான சுண்ணாம்பு நீரைக் குடித்த பின், அம்மா, அப்பா என்று அலறுவான்.

தன் நாக்கை வேக வைத்ததற்கு அதுவே தண்டனை என்றும் எண்ணிய அக்பருக்கு அவன் சிரித்த முகத்துடன் உலாவியதைக் கண்டு திகைப்பும், ஆச்சரியமும் ஏற்பட்டது.

அவனைக் கூப்பிட்டு, அவனுக்குச் சுண்ணாம்பு நீர் தீங்கு விளைவிக்காததன் காரணத்தைக் கேட்டார் அக்பர்.

அவனும் அரசர் முன் மண்டியிட்டு வணங்கி, பீர்பாலின் மதிநுட்பத்தால் தான் பெருந்துன்பத்திலிருந்து தப்பியதாகக் கூறினான்.

பீர்பாலின் மதிநுட்பத்தை உணர்ந்த அக்பர் அப்பணியாளை விட்டு பீர்பாலை அழைத்து வரச் செய்து, அவருக்குப் பாராட்டும் பரிசும் கொடுத்து, அவர் தன் அவையில் இருந்து பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அது முதல் பீர்பால் அக்பரின் அரசவையில் பணியாற்றியதுடன் அக்பரின் உற்ற நண்பராகவும்விளங்கினார்.

0 comments:

Post a Comment

Flag Counter